Results 1 to 10 of 3997

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19

Threaded View

  1. #11
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    293
    Post Thanks / Like
    Murali Srinivas

    திருடன்

    10.10.1969 அன்று வெளியாகி இன்றைக்கு 48 வருடங்களை கடந்து பயணிக்கும் நம் மனம் கவர்ந்த திருடன் பற்றி சில குறிப்புகள்.

    சிறு வயதில் அனாதையான சிறுவன் சந்தர்ப்ப சூழ்நிலையால் சில சமூக விரோதிகளால் திருடனாகப்பட்டு அவன் வளர்ந்து வாலிபனாவது வரை அந்த தொழிலை தொடர வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. விடுதலையாகும் அவன் திருந்தி வாழ நினைக்கிறான், அதற்கு அவனை பயன்படுத்திய கூட்டமும் சமூகமும் எதிர் நிற்க அதை சவாலாக ஏற்று வேலை செய்து தனக்கென ஒரு குடும்பத்தையும் அமைத்துக் கொண்டு வாழும்போது மீண்டும் பழைய கூட்டம் அவன் வாழ்வில் தலையிட, அவனை பின்தொடரும் போலீஸ் அவனுக்கு தொல்லை கொடுக்க எப்படி சிக்கலிலிருந்து மீள்கிறான் என்பதுதான் சுருக்கமான கதை.
    தங்கை படத்தின் போது முதன் முறையாக action படம் செய்ய ஆரம்பித்த நடிகர் திலகம், இந்த படத்திற்கு வரும்போது action கலந்த குடும்ப கதைகளை செய்வதில் தேர்ந்திருந்தார் என்றே சொல்ல வேண்டும். நாம் இங்கே பலமுறை சுட்டிக் காட்டியது போல அந்தக் காலகட்டத்தில் மாஸ் ரசிகர்கள் என்பவர்கள் நடிகர் திலகத்திற்கு மிக மிக அதிகமாக வளர்ந்திருந்த நேரம். எனவே அவர்களையும், தன் படங்களுக்கு எப்போதும் ஆதரவு கொடுக்கக் கூடிய மிடில் கிளாஸ்,அப்பர் கிளாஸ் மற்றும் தாய்க்குலத்தையும் ஒரே நேரத்தில் கவரக்கூடிய இது போன்ற கதைகளை படமாக்கினார்.
    என் தம்பி அளவிற்கு ஸ்டைல் சாம்ராஜ்யம் இல்லையென்றாலும் கூட இந்த படத்திலும் அது போதுமான அளவிற்கு இருந்தது. முதல் காட்சி அறிமுகமே பிரமாதமாக இருக்கும். நடந்து வரும் அவரின் கால்களை மட்டுமே சிறிது நேரம் காண்பித்து பிறகு முகத்தை காட்டுவார்கள். அதிலும் கீழே நடந்து வரும் மேஜர் அண்ணாந்து பார்ப்பது போல் காட்சிக் கோணம் அமைக்கப்பட்டிருக்க, நடிகர் திலகத்தின் முகம் தோன்றும் அந்த காட்சி மிகப் பெரிய ஹிட் [இந்த படத்திற்கு முன் வந்த தெய்வ மகனிலும் அவரது அறிமுகம் இது போலவே அமைந்திருக்கும். ஆக தொடர்ச்சியாக வந்த இரண்டு படங்களிலும் இப்படி அசத்தலான அறிமுகக் காட்சி இருந்ததால் அடுத்த படமான (ரசிகர்கள் வெகு ஆவலுடன் எதிர்பார்த்திருந்த) சிவந்த மண் படத்திலும் இப்படி ஒரு அறிமுக காட்சிக்காக காத்திருந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
    இந்த படமும் சிவாஜி வெகு காஷுவலாக செய்த படங்களில் இடம் பெறும். படத்தின் பெரும்பான்மையான காட்சிகளில் அவரது இயல்பு தன்மையை காணலாம். விடுதலையாகும் போது மேஜரிடம் பேசுவதாகட்டும், மீண்டும் தன் கூட்டத்தில் சேரச் சொல்லி மிரட்டும் ஜெகநாத்திடம் முடியாது என்று அமைதியாக ஆனால் அழுத்தமாக சொல்வதாகட்டும், ஆண் வேடம் போட்டு வரும் விஜயாவை இளமை துள்ளலோடு கிண்டல் அடிப்பதாகட்டும், தன் பழைய கதையை விவரிக்கும்போது காட்டும் முகபாவம் ஆகட்டும், ஜெகநாத்திடம் வேலை செய்த போது நடத்திய சாகச நிகழ்வுகள் ஆகட்டும் அதிலும் குறிப்பாக சினிமா இயக்குனர் போல் வந்து கொள்ளையடிப்பதிலாகட்டும் இவை அனைத்துமே இயல்பு + ஸ்டைல் வகையில் ரசிக்கக் கூடியவை. படத்தில் சிறுவனாக இருந்து வாலிபனாக மாறும் காட்சி- White பான்ட், ஜிப்பா போன்ற டைட் ஷர்டில் ரிவால்வர் வைத்து சுட்டுக்கொண்டே வரும் காட்சியும் குறிப்பிட வேண்டிய ஒன்று. குழந்தையை கடத்தி அதன் தாயின் மரணத்திற்கு காரணமாகி விட்டோமே என்ற குற்ற உணர்வில் தவிப்பை வெளிப்படுத்தும் போது உணர்ச்சிகரமான சிவாஜியை ரசிக்கலாம்.

    இந்த காலக்கட்டத்தில்தான் உணர்ச்சி பொங்க வசனம் பேசும் முறையை பின்பற்ற ஆரம்பித்தார் என்று சொல்லலாம். கே.ஆர்.விஜயாவிடம் நல்லவனாக வாழ இந்த சமூகம் அனுமதிக்கவில்லை எனவே மீண்டும் பழைய தொழிலுக்கு போகிறேன் என்று சொல்லும் காட்சியும் சரி, அதே போன்ற உணர்வை மேஜரிடம் வெளிப்படுத்தும் காட்சியிலும் சரி இந்த மானரிஸம் வெளிப்படும். ஒரு சாதாரண குடும்பத்தலைவன் மனைவியையும் குழந்தையையும் எப்படி நடத்துவான், எப்படி அவர்கள் மேல் அன்பு செலுத்துவான் என்பது இயல்பாக வெளிப்படுத்தியிருப்பார். சண்டை காட்சிகளில் நல்ல முன்னேற்றம் தெரியும். அதிலும் குழந்தையை கடத்தும் காட்சியில் வரும் சண்டைக் காட்சி அலப்பறையாக இருக்கும்.

    படத்தில் டூயட் பாடல் கிடையாது. ஒரு கமர்ஷியல் படத்திலும் கூட இது போன்ற சில முயற்சிகளை நாற்பது எட்டு வருடம் முன்பே செய்திருக்கிறார்கள்.

    கே.ஆர். விஜயா நாயகி. ஆனால் செய்வதற்கு பெரிதாக ஒன்றுமில்லை. விஜயா உடல் பெருக்க தொடங்கிய நேரம். அந்த கோலத்தில் ஒரு ஹோட்டல் டான்ஸ் ஆடி நிறைய கஷ்டப்படுவார்/படுத்துவார். ஜெகநாத் என்ற வில்லன் - பாலாஜிக்கு ஏற்ற வேஷம். அவரது பாணியிலே செய்திருப்பார். இன்ஸ்பெக்டராக மேஜர். அந்தக் காலக்கட்டத்தின் படங்களுக்கே உரித்தான [அதாவது இன்ஸ்பெக்டர் என்றால் கொஞ்சம் ஓவர் முறுக்கு போன்றவை] நடிப்பை வழங்கியிருப்பார். கிளீனர் பையனாக நடிகர் திலகத்தின் கூடவே முக்கால்வாசி படம் வருவார் நாகேஷ். ஜோடி அம்முக்குட்டி புஷ்பமாலா. ஆனால் சொல்லிக் கொள்ளும்படியான காமெடி படத்தில் மிஸ்ஸிங். குழந்தை மகாலட்சுமியாக பேபி ராணி. பாலாஜியின் கூட்டத்து பெண்ணாக விஜயலலிதா. இரண்டு பாடல்களுக்கு மட்டுமே பயன்படுவார். பாடல் இல்லாமல் பின்னணி இசை மட்டும் ஒலிக்கும் ஹோட்டல் டான்ஸ் காட்சியில் ஏ.சகுந்தலா தோன்றுவார்.


    தங்கை, என் தம்பி படங்களை போன்று பாசத்தை அடிப்படையாக கொள்ளாமல் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக வழி தவறி சென்ற ஒருவன் திருந்தி வாழ முற்படும் போது அவனுக்கு ஏற்படும் சோதனைகளே கதையின் களனாக அமைந்திருந்த படத்தை ஏ.சி.டி. இயக்கியிருந்தார். இந்த படத்தில் ஒரு முக்கியமான அம்சம் சென்னையின் முக்கிய தெருக்களில் அதுவும் நடிகர் திலகத்தை வைத்து படப்பிடிப்பு நடத்தியதை குறிப்பிட வேண்டும். அதுவும் மவுண்ட் ரோடில் ஸ்பென்சர் அருகே சினிமா ஷூட்டிங் நடத்துவது போல கொள்ளையடிக்கும் காட்சி, நன்றாக எடுத்திருப்பார்கள். அது போல் சென்னை சிறைச்சாலை, அண்ணா நகர் டவர் போன்ற இடங்களிலும் ஷூட்டிங் நடத்தியிருப்பார்கள்.


    கவியரசர்-மெல்லிசை மன்னர் கூட்டணி இந்த படத்திலும் தொடர்ந்தது. ஆனால் முந்தைய இரண்டு படங்களைப் போல் பாடல்கள் அவ்வளவு பிரபலமானது என்று சொல்ல முடியாது.

    1.பழனியப்பன் பழனியம்மாவா- டி.எம்.எஸ்.
    ஆண் வேடம் போட்ட பெண் என்று தெரிந்தவுடன் சிவாஜி விஜயாவை கிண்டல் செய்து பாடும் பாடல். இந்த பாடல் காட்சியை பார்த்தால் நடிகர் திலகம் ரொம்ப எனர்ஜிடிக்காக செய்திருப்பார், இது பிரபலமான பாடல்.

    2.கோட்டை மதில் மேலே ஒரு வெள்ளைப் பூனை- டி.எம்.எஸ். - எல்.ஆர். ஈஸ்வரி.

    சூப்பர் ஹிட் பாடல். படத்தில் நடிகர் திலகம் ஸ்டைலில் கலக்கியிருப்பார். ஹோட்டல் விருந்துக்கு வரும் சமஸ்தானத்து ராணியின் கழுத்திலிருக்கும் விலையுயர்ந்த நெக்லசை திருடும் காட்சி. நடிகர் திலகத்துடன் கூட விஜயலலிதா. பாடல் வேகம் பெற ஆட்டமும் வேகம் பெறும். ஒவ்வொருவருடன் ஆடி விட்டு இறுதியில் ராணியுடன் சேர்ந்து ஆடிக் கொண்டே நெக்லசை மாற்றி போலியை வைப்பதை த்ரில்லிங்காக எடுத்திருப்பார்கள்.

    3.என் ஆசை என்னோடு- சுசீலா.
    படத்தில் விஜயாவிற்கு இந்த ஒரு பாடல்தான். ஹோட்டலில் ஆடும் பாடல். சுசீலா அருமையாக பாடியிருப்பார். நல்ல மெட்டு. இருந்தும் பெரிய அளவில் பிரபலமாகவில்லை.

    4.நினைத்தபடி நடந்ததடி வராதவன் வந்து விட்டான் - எல்.ஆர்.ஈஸ்வரி.
    பாலாஜியின் கூட்டத்தில் மீண்டும் வந்து சேரும் சிவாஜியை வரவேற்று விஜயலலிதாவும் கூட்டத்தினரும் ஆடும் பாடல். நடிகர் திலகம் தன் Trade மார்க் நடை நடந்தே கைதட்டலை வாங்கி விடுவார்.

    தங்கை என் தம்பி படங்களுக்கு பிறகு நடிகர் திலகத்தை வைத்து மூன்றாவது படம் தயாரித்தார் பாலாஜி. அதுதான் திருடன். மீண்டும் தெலுங்கு படத்தின் உரிமையை வாங்கியிருந்தார் பாலாஜி. ஆனால் தெலுங்கு படமே Once a thief என்ற ஆங்கிலப் படத்தை தழுவி எடுக்கப்பட்டதாகும். என் தம்பியை போலவே இதுவும் ஜெகபதி ஆர்ட் பிக்சர்ஸ் தெலுங்கில் தயாரித்த படம். நடிகர் திலகம் என்றைக்குமே இமேஜ் பற்றி அலட்டிக் கொள்ளாதவர் என்பதற்கு மேலும் ஒரு உதாரணம் இந்த படத்தின் டைட்டில்.

    பாலாஜியின் படங்களுக்கு அன்று பைனான்சியராக இருந்தவர் சுதர்சன் சிட்ஸ் வேலாயுதன் நாயர், அதாவது கே.ஆர்.விஜயாவின் கணவர். இந்த படத்தின் வேலைகள் முடிந்து படம் பார்த்த வேலாயுதன் நாயருக்கு கோபம். காரணம் புன்னகை அரசியின் பெயர் தனியாக டைட்டிலில் வராமல் எல்லோருடனும் சேர்ந்து வந்து விட்டது. இது தயாரிப்பு நிர்வாகியின் கவனக்குறைவால் ஏற்பட்ட தவறு. ஆனால் வேலாயுதன் நாயர் சமாதானமாகவில்லை. இந்த படத்திற்கு பிறகு பாலாஜியின் படங்களுக்கு பைனான்ஸ் செய்வதை நிறுத்திக் கொண்டார். இந்த படத்திற்கு பிறகு வெகு காலம் பாலாஜியின் படங்களில் கே.ஆர்.விஜயாவும் இடம் பெறாமல் இருந்து பதினான்கு வருடங்களுக்கு பின் நீதிபதி படத்தில்தான் மீண்டும் நடித்தார்.

    இந்த படத்தின் பாக்ஸ் ஆபிஸ் பற்றி பேசுவதற்கு முன் பாலாஜி பற்றி ஓரிரு வார்த்தைகள். பாலாஜி என்ற நடிகர் எப்படியோ, பாலாஜி என்ற தயாரிப்பாளர் மிகவும் பிடிவாதக்காரர். தான் நினைத்ததை செய்துக் காட்ட வேண்டும் என்று இருந்தவர். நடிகர் திலகத்தை வைத்து action படமா என்று சிலர் தடுத்த போது பிடிவாதமாக நடிகர் திலகத்தை ஒரு ஸ்டைலிஷ் action ஹீரோவாக ரசிகர்களுக்கு பிடித்த முறையில் அவரை present செய்து நடிகர் திலகத்தின் ரசிகர்களுக்கு பிடித்தமானவராக மாறினார். ஆனால் தான் நிச்சயிக்கும் பட ரிலீஸ் தேதியை பொறுத்தவரை அதே பிடிவாதத்தில் உறுதியாக இருந்தவர். சிவாஜி படங்களே சிவாஜி படத்திற்கு போட்டியாக வந்தது பற்றி பலமுறை பேசியிருக்கிறோம். அந்த விஷயத்தில் பாலாஜியும் குற்றவாளியாக இருந்திருக்கிறார்.

    நடிகர் திலகத்தை வைத்து அவரது முதல் தயாரிப்பு தங்கை. அந்த படம் நடிகர் திலகத்தின் அதற்கு முன் வெளி வந்த பேசும் தெய்வம் வெளியாகி ஐந்து வாரங்களில் வெளியானது. சென்னை கெயிட்டியில் 14.04.1967 அன்று வெளியான பேசும் தெய்வம் 34 நாட்களில் நடைபெற்ற 100 காட்சிகளும் ஹவுஸ்புல் [100 Continuous House full Shows விளம்பரம் 17.05.67 அன்று சென்னை தினத்தந்தியில் வெளியானது]. ஆனால் அதற்கு அடுத்த நாட்களிலே [19.05.1967] தங்கை வெளியானது. இதனால் பேசும் தெய்வம் 100 நாட்கள் ஓடுவது பாதிக்கப்பட்டது.

    சென்னையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த ராமன் எத்தனை ராமனடி படம் பாலாஜியின் எங்கிருந்தோ வந்தாள் படத்திற்காக மாற்றப்பட்டது.
    ரோஜாவின் ராஜா வெளியாகி 30 நாட்கள், அவன் ஒரு சரித்திரம் வெளியாகி 11 நாட்களே ஆன நிலையில் தன் தீபத்தை 26.01.1977 அன்று வெளியிட்டார் பாலாஜி. விளைவு ரோஜாவின் ராஜா, அவன் ஒரு சரித்திரம்

    படங்களின் ஓட்டம் பாதிப்பு.

    வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த அண்ணன் ஒரு கோயில் சென்னையில் பாலாஜியின் தியாகத்திற்காக தூக்கப்பட்டது.

    கவரிமான் (06.04.1979) வெளிவந்து 4 வாரங்கள் கூட ஆகாத நிலையில் தன் நல்லதொரு குடும்பத்தை 03.05.1979 அன்று வெளியிட்டார்.

    வசந்தத்தில் ஓர் நாள் படத்திற்கு இரண்டே வாரங்கள் மட்டுமே இடைவெளி விட்டு தீர்ப்பு படத்தை ரிலீஸ் செய்தார்.

    சாதனை படத்திற்கு 15 நாட்கள் இடைவெளியில் மருமகள் வெளியானது.

    இவ்வளவு ஏன், நடிகர் திலகத்தை வைத்து பாலாஜி எடுத்த கடைசிப் படமான குடும்பம் ஒரு கோயில் கூட அதற்கு முந்தைய சிவாஜி படமான ராஜ மரியாதை வெளியான 11 நாட்களில் வெளியானது.

    இவ்வளவு பெரிய லிஸ்ட் எதற்கென்றால் திருடன் படத்திற்கும் இதுதான் நடந்தது. 1969-ம் வருடத்தை பொறுத்தவரை மாதம் ஒரு சிவாஜி படம் வந்துக் கொண்டிருந்தது.

    ஆகஸ்ட் மாதம் வெளியான நிறைகுடம் நான்கு வாரங்களே ஆன நிலையில் தெய்வ மகன் 05.09.1969 வெளியானது. தெய்வ மகன் வெளியான 35 நாட்களில் பாலாஜி திருடன் திரைப்படம் அக்டோபர் 10 அன்று வெளியாகும் என்று அறிவிக்கிறார்.

    ரசிகர்களும் மற்றவர்களும் அவரிடம் வேண்டாம் என்கிறார்கள். காரணம் ஏற்கனவே இரண்டு படங்கள் ஓடிக் கொண்டிருகின்றன. நவம்பர் 9 அன்று ரசிகர்கள் பேராவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சிவந்த மண் வெளியாகப் போகிறது. எனவே இதற்கு நடுவில் திருடன் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டாம் என்ற சொல்கிறார்கள்.

    மேலும் சென்னையில் திருடன் ஒப்பந்தம் செய்யப்பட்ட அரங்குகள் [பிளாசா,ராக்ஸி,பாரத், ராம்] 10 ந் தேதி ப்ரீயாக இல்லை. 17ந் தேதிதான் ரிலீஸ் பண்ண முடியும் என்ற சூழ்நிலை. இந்த நேரத்தில் செய்யாமல் சிவந்த மண் படத்திற்கு பின் ரிலீஸ் செய்யலாம் என்கிறார்கள். ஆனால் பாலாஜி யார் சொன்னதையும் கேட்கவில்லை. அவரது விருப்படியே சென்னை நீங்கலாக அக்டோபர் 10- ந் தேதியும், சென்னையில் 17-ந் தேதியிலும் படம் ரிலீஸ் ஆனது.


    சென்னையில் வெளியான நான்கு தியேட்டர்களிலும் தமிழகத்தின் முக்கிய ஊர்களிலெல்லாம் 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக 8 வாரங்கள் ஓடியது. ஆனால் தெய்வ மகன், சிவந்த மண் என்ற இரண்டு மலைகளுக்கு நடுவே சிக்கிகொண்ட திருடனால் அதற்கு மேல் ஒரு வெற்றியை பெற முடியவில்லை.

    ஆனால் இது போன்ற சிக்கல்களெல்லாம் எதுவும் இல்லாத இலங்கையில், வணிக ரீதியாக பெரிய வெற்றிப் பெற்ற திருடன், தலைநகர் கொழும்பில் சென்ட்ரல் திரையரங்கில் 100 நாட்களை கடந்து ஓடியது. 100 நாட்களில் பெற்ற வசூல் Rs 3,22,374/-
    .
    இது அந்த நேரம் வெளியான பல பெரிய படங்களின் வசூலை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. சற்று நிதானித்து பாலாஜி செயல்பட்டிருந்தால் தமிழகத்திலும் திருடன் அந்த 100 நாட்கள் என்ற இலக்கை எட்டிப் பிடித்திருக்கும் என்பது திண்ணம். முதல் வெளியீட்டில் லாபம் பார்த்த விநியோகஸ்தர்கள் மறு வெளியீடுகளிலும் லாபத்தை அள்ளிக் குவித்தார்கள்.

    மதுரையில் படம் ஸ்ரீதேவியை ரிலீஸ். படம் வெளியான மூன்றாம் நாள் (12.10.1969) படத்திற்கு மதியக் காட்சி போனோம். தர்மம் எங்கே பட விமர்சனத்தில் ஸ்ரீதேவி நீள வாக்கில் அமைந்த அரங்கம் என்பதை சொல்லியிருப்பேன். அது மட்டுமல்ல திரையரங்க வாசல் கேட் முதல் அரங்கம் அமைந்திருக்கும் இடம் வரை நீளமான வளாகம். படம் முடிந்து வரும்போது அடுத்த காட்சிக்கு நிற்கும் வரிசையை கவனிக்கிறேன். போய்க் கொண்டேயிருக்கிறது. கிட்டத்தட்ட வாசல் கேட் வரை வரிசை. மறக்கவே முடியாது. [அந்த வரிசையின் நீளத்தை முறியடித்தது சவாலே சமாளி வரிசை. அதையும் தாண்டியது தர்மம் எங்கே வரிசை]. முன்பே சொன்னது போல் சற்று இடைவெளி கிடைத்திருந்தால் பிரமாதமாக இருந்திருக்கும்.


    மீண்டும் தன்னால் எந்த வகைப் படமும் செய்ய முடியும் என்று நடிகர் திலகம் நிரூபித்த படம்.
    அன்புடன்



    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •