Results 1 to 10 of 1139

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 22

Threaded View

  1. #11
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    293
    Post Thanks / Like
    அனைவருக்கும் வணக்கம். ஒரு சிவாஜி ரசிகனின் சினிமா டைரி தொடர்கிறது.
    அந்த நாள் ஞாபகம் - பார்ட் 57
    எங்கள் தங்க ராஜா என்று சொன்னதுமே ஆர்வம் கொண்டது மட்டுமல்லாமல் அதை பற்றிய அனுபவ பதிவிற்கு மிக பெரிய வரவேற்பு அளித்த அனைவருக்கும் மனங்கனிந்த நன்றி. இனி பட்டாக்கத்தி பைரவன் என்ற Dr. ராஜாவிறகு கிடைத்த வரவேற்பு பற்றி பேசுவோம்.
    ஓபனிங் ஷோ முடிந்து நாங்கள் வெளியே வரும்போது கூட வரும் ரசிகர்கள் ஆவேசப்பூர்வமாக மாறியிருந்தனர். வாசலில் ஒரு 1000 வாலா சரம், தீ கொளுத்தப்பட ஏற்கனவே அது சின்ன தெரு, படம் முடிந்து வெளியே வரும் ஒரு ஆயிரம் பேர், அடுத்த காட்சிக்காக வரிசையிலும் அல்லாதும் ஆங்காங்கே நிற்கும் ஆயிரக்கணக்கானோர் இதற்கு நடுவே வெடித்து சிதறும் பட்டாசு என்று ஏரியாவே ரணகளமானது இதை தவிர ரசிகர்களின் வாழ்த்து முழக்கங்கள் அதிர வைக்கிறது. சில அதீத ரசிகர்களின் உணர்ச்சி முழக்கங்கள் வேறு. தியேட்டரை சுற்றி இருக்கும் பல ஏரியாக்களிருந்து படம் பார்க்க வந்த ரசிகர் கூட்டம் அவரவர்கள் ஏரியாவிற்கு அப்படியே ஊர்வலமாகவே சவுண்ட் கொடுத்துக் கொண்டே போகிறார்கள். படத்திற்கு மிக பெரிய பாசிட்டிவ் ரிப்போர்ட் வந்ததால் மாலை மற்றும் இரவு காட்சிகளுக்கு கட்டுக்கடங்காத கூட்டம். பிளாக் டிக்கெட் பயங்கரமான விலைக்கு விற்பனையாகிறது.
    மறுநாள் ஞாயிறு அதை விட கூட்டம். அன்றைய ஈவினிங் ஷோ கூட்டமெல்லாம் வர்ணிக்கவே முடியாத லெவல். முதல் நாள் ராத்திரியை விட பிளாக் இன்னும் அதிக விலைக்கு விற்கிறது. எங்களுக்கு ஒரே சந்தோஷம். 1973ல் மதுரையில் முதல் படமாக (நமது) தொடர் ஹவுஸ்புல் 100 காட்சிகளை தாண்டி விடும் என்பது தெளிவாக தெரிந்ததில் எனக்கு தனி சந்தோஷம். படம் திரையிடப்பட்ட மதுரையின் சுற்று வட்டார ஊர்களிலும் பிரமாதமாக போகிறது என்பது விநியோகஸ்தர் ஆபிசில் இருந்து தெரிய வந்தது. நகரில் மட்டுமல்ல அனைத்து ஊர்களிலும் நன்றாக போகிறது என்பது விநியோகஸ்தருக்கு மிக பெரிய சந்தோஷம் என்று அவர்கள் அலுவலகத்தில் சொல்கிறார்கள். காரணம் அதுவரை இல்லாத அளவிற்கு 9 பிரின்ட்கள் போடப்பட்டு இருக்கிறதே, ரிசல்ட் எப்படியிருக்குமோ என்ற பயம் அவர்களுக்கு உள்ளூர இருந்திருக்க வேண்டும். அந்த முயற்சி சக்ஸஸ் என்றதும் வரும் மகிழ்ச்சி.
    இரண்டாவது வாரம் தயாரிப்பாளர் விளம்பரம் வருகிறது. அது தவிர அன்றைய நாட்களில் மதுரை நகரில் ஓடும் அனைத்து படங்களுக்கும் விநியோகஸ்தர் தரப்பிலிருந்து தினசரி விளம்பரம் தினத்தந்தியில் வரும். நகர் மட்டுமின்றி M R ஏரியாவில் எங்கெல்லாம் ஓடுகிறதோ அதன் விவரங்களும் அதில் இடம் பெறும். படம் வெளியான இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை காலையில் தந்தியை பார்க்கிறோம். ஆச்சரியத்தில் அசந்து போகிறோம். காரணம் விநியோகஸ்தர் விளம்பரத்தில் 101 நாட்களுக்கு இலவச அனுமதி கிடையாது என்ற வரி விளம்பரத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது. இன்றைய தலைமுறையினருக்கு இலவச பாஸ் பற்றி தெரியுமா என்பது பற்றி தெரியவில்லை. அன்றைய நாட்களில் வெற்றிகரமாக ஓடிய படம் என்றால் 10 வாரத்திற்கு பிறகோ இல்லை சுமாராக போன படம் என்றால் 50 நாட்களுக்குள்ளாகவே தெரிந்தவர்களுக்கு பாஸ் (Pass) கொடுப்பது வழக்கம். இலவச அனுமதி. இதை லோக்கல் பாஷையில் ஓசி பாஸ் என்று சொல்லுவார்கள். இப்படி கொடுக்கப்படும் டிக்கெட்டுகளுக்கு தமாஷா வரி (entertainment tax) கிடையாது. 1980கள் வரை இருந்த இந்த நடைமுறை பிற்காலங்களில் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்து பின் வழக்கொழிந்து போனது. எங்கள் தங்க ராஜா படத்திற்கு இது போல விளம்பரத்தில் கொடுப்பதற்கு ஒரு காரணம் இருந்தது. மாற்று முகாமின் படத்திற்கு 100 நாட்களுக்கு இலவச அனுமதி கிடையாது என்று விளம்பரம் செய்து கொண்டிருந்தார்கள். ஆகவே 101 நாட்களுக்கு இலவச அனுமதி கிடையாது என்று வந்தவுடன் ரசிகர்களுக்கு உற்சாகம் கரை புரண்டு ஓடியது.
    படம் சர்வசாதாரணமாக அனைத்து காட்சிகளும் அரங்கு நிறைந்துக் கொண்டிருந்தது. எந்த காட்சிக்கு தியேட்டர் பக்கம் போனாலும் கூட்டம் இருந்தது. எப்போதும் பெரிய வரிசை இருந்தது. வீடு அருகாமையில் என்பதால் அடிக்கடி தியேட்டர் பக்கம் போய் பார்ப்பேன். படம் வெளியான மூன்று வாரத்தில் நானே மூன்று முறை பார்த்து விட்டேன். அப்போதும் காட்சிகள் அலப்பறையாகவே ரசிக்கப்பட்டது. எக்ஸ்ட்ரா ஷோ எதுவும் போடப்படாததால் நான்கு வாரங்கள் 28 நாட்களுக்கு 92 காட்சிகள் (23 * 4) தொடர் ஹவுஸ்புல் ஆனது. பொதுவாக சனிக்கிழமை காலைக்காட்சிகள் பிரச்சனையாக இருக்கும் என நான் இந்த தொடரில் பல முறை சொல்லியிருக்கிறேன். ஆனால் எங்கள் தங்க ராஜாவை பொறுத்தவரை அபப்டி பெரிய சிக்கல்கள் ஏதுமின்றி அரங்கு நிறைந்தது. 29வது நாள் 5 வது சனிக்கிழமை மார்னிங் ஷோ பற்றி ஒரு பயம் இருந்தது. ஆனால் அதுவும் சிக்கலின்றி புல் ஆகியவுடன் அதுவே ஒரு கொண்டாட்டமானது. 30வது நாள் ஞாயிற்றுக்கிழமை நைட் ஷோ 100வது ஷோ. அன்று ஈவினிங் மற்றும் நைட் இரண்டு காட்சிகளுக்கும் சரியான கூட்டம். ஈவினிங் ஷோ ஹவுஸ்புல் போர்டு மாட்டியவுடனேயே தியேட்டர் வாசலில் ஒரு பெரிய அலப்பறை நடந்தது. 5000 வாலாக்கள் அந்த பகுதியை தீபாவளியாக்கியது. நைட் 100வது ஷோவிற்கு என் கஸின் போயிருந்தார். உள்ளே ஒரே கொண்டாட்டம் என்றும் பைரவன் என்ட்ரி மற்றும் பாடல்களுக்கு ஆட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது என்றும் தியேட்டர் ஊழியர்கள் உள்ளே வந்து ஒரு சிலரை வெளியே கூட்டி சென்றதாகவும் அதனால் சலசலப்பு பரபரப்பு ஏற்பட்டது என்றும் பல்வேறு செய்திகளை மறுநாள் கஸின் மூலமாக அறிய நேர்ந்தது.
    வழக்கம் போல் நியூசினிமா தியேட்டருக்கு எதிரே இருந்த விளக்கு கமபத்தில் ஒரு தட்டி கட்டப்பட்டு அதில் தொடர்ந்து 100 காட்சிகள் அரங்கு நிறைந்த விவரம் எழுதப்பட்டு வைக்கப்பட்டது. சாதாரணமாக அதன் பிறகு ஒவ்வொரு காட்சி அரங்கு நிறையும்போதும் அந்த காட்சிகளின் எண்ணிக்கை மாற்றப்படும். அதாவது 101வது காட்சி ஹவுஸ்புல் ஆகும்போது 100 என்ற எண்ணில் 101 என்று ஓட்டப்படும். அதற்கு அடுத்த இரண்டு நாட்களும் எந்த சிக்கலுமின்றி 6 காட்சிகளும் அரங்கு நிறைந்தன. அப்படியாக 32 நாட்களில் நடைபெற்ற 106 காட்சிகளும் ஹவுஸ்புல். 33வது நாள் புதன்கிழமை ஆகஸ்ட் 15, சுதந்திர தினம். ஆகவே லீவு. அன்று சிறப்பு காட்சியாக மார்னிங் ஷோ போடப்பட்டது. அன்று காலை என் கஸின் மெம்பராக இருந்த கிரிக்கெட் டீம் ஒரு மாட்ச் விளையாடுகிறது. அதில் அவரும் விளையாடுகிறார். அரசரடி மைதானத்தில் மாட்ச். காலை 8 மணி முதல். நானும் அவருடன் அரசரடி மைதானத்துக்கு போய்விட்டேன். எட்டு மணிக்கு ஆரம்பிக்காமல் தாமதமாக ஆரம்பித்த மாட்ச் முடியும்போது 12.30 மணியை தாண்டி விட்டது. அதன் பிறகு நாங்கள் பஸ் பிடித்து சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் வந்திறங்கி வீட்டிற்கு வருகிறோம். நாங்கள் டவுன்ஹால் ரோடு வழியாக போகலாம் என்று வரும்போது சென்ட்ரல் சினிமா கடந்து வரும் நேரத்தில் அன்று அங்கே சூரிய காந்தி திரைப்படம் வெளியாகியிருக்கிறது. என் கஸினின் பெயரை சொல்லி யாரோ கூப்பிடுவது கேட்க திரும்பி பார்த்தால் அவர் நண்பர்கள் நமது ரசிகர்கள் சிலர் நிற்கின்றனர். அவர்கள் சென்ட்ரலில் மாட்னி பார்ப்பதற்காக நிற்கிறார்கள். பேசிக் கொண்டிருக்கும்போது கஸின் சரி மார்னிங் எப்படி போச்சு என்று கேட்க, விட்டு போச்சு என்று அவர்கள் பதில் சொல்ல எங்களுக்கு நம்ப முடியாத ஷாக். என்னய்யா சொல்றே என்று கஸின் மீண்டும் கேட்க ஹைகிளாஸ் டிக்கெட் கொஞ்சம் விட்டு போச்சு என்று சொல்கிறார்கள். மன்றக்காரங்க யாரும் வரலையா? அங்கே இருந்தவங்க ஏதாவது செஞ்சிருக்கலாமே என்று கேள்வி கேள்வி மேல் கேட்க நாங்களே அங்கே இல்லை. கேள்விப்பட்ட விஷயத்தை சொல்றோம் என்றார்கள். இவர்கள் உண்மையை சொல்கிறார்களா இல்லை விளையாடுகிறார்களா என்று சந்தேகம் வர, நாங்க சொல்றது உண்மைதான் என்கிறார்கள். நாங்கள் இருவரும் அப்செட் ஆகி நேரே வீட்டிற்கு கூட போகாமல் நியூசினிமா போகிறோம். அங்கே தெரிந்த ஆட்கள் இல்லை. தொடர் ஹவுஸ்புல் தட்டியில் 106 என்றே இருக்கிறது. சரி அவர்கள் சொன்னது உண்மைதான் என்று புரிய பெரிய வருத்தம். எப்படி வசந்த மாளிகைக்கு நடந்ததோ அது போல் இதற்கும் நடக்கிறது. அந்த மார்னிங் ஷோ புல் ஆகியிருந்தால் அந்த வார முடிவில் 116 காட்சிகள் தொடர்ந்து புல் ஆகியிருக்கும். சொல்லி வைத்தது மாதிரி அந்த மார்னிங் ஷோ தவிர்த்து புதன் வியாழன் வெள்ளி அனைத்து காட்சிகளும் (9 காட்சிகள்) அரங்கு நிறைந்தது. வழக்கம் போல் வருத்தப்படத்தான் முடிந்தது.
    அதன் பிறகு படம் ஸ்டெடியாக போனது. Down South என்று அழைக்கப்படும் மதுரைக்கு தென்பகுதிகளில் குறிப்பாக நெல்லை குமாரி மாவட்டங்களில் படம் பிரமாதமாக போனது. 51வது நாள் முழுப்பக்க விளம்பரம் வந்தது. அதன்பிறகும் படம் நன்றாகவே போனது. அந்த வருட தீபாவளி அக்டோபர் 25 வியாழன் அன்று வந்தது. அதற்கு நான்கு நாட்கள் முன்னதாக அதாவது அக்டோபர் 21 ஞாயிறு அன்று 100வது நாள் கொண்டாடியது எங்கள் தங்க ராஜா. சென்னையில் மூன்று, மதுரை திருச்சி, சேலம், நெல்லை, நாகர்கோவில் மற்றும் கோவையில் 100 நாட்கள் ஓடியது. தமிழ் மற்றும் இங்கிலீஷ் தினசரிகளில் அனைவருக்கும் நன்றி தெரிவித்து ராஜேந்திர பிரசாத் முழுப்பக்க விளம்பரம் கொடுத்தார். மதுரையில் நியூசினிமாவில் 103 நாட்களில் ரூபாய் 3,33,586.25 வசூல் செய்தது. படத்தை வெளியிட்ட RmS நிறுவனத்திற்கு கிட்டத்தட்ட ஒரு லட்ச ருபாய் ஷேர் மதுரை நியூசினிமாவில் மட்டுமே கிடைத்தது.
    இலங்கையிலும் மிகப் பெரிய வெற்றியை பெற்றது எங்கள் தங்க ராஜா. வசந்த மாளிகைக்கு பிறகு பிரும்மாண்டமான வெற்றி என்றால் எங்கள் தங்க ராஜாதான். 1975ல் இலங்கையில் திரையிடப்பட்டது யாழ்ப்பாணம் நகரில் மிகப் பெரிய திரையரங்கான ராஜாவில் 126 நாட்கள் ஓடி ஒரு புதிய சாதனை புரிந்தது. படம் மறுநாள் காலை 10.30 மணிக்கு முதல் காட்சி தொடங்குகிறது என்றால் முதல்நாள் இரவே கூட்டம் கூட ஆரம்பித்து நள்ளிரவில் அது கட்டுக்குக்கடங்காமல் போனதினால் நடு இரவு 1.30 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது. முதல் நாள் மட்டும் 7 காட்சிகள் திரையிடப்பட்டிருக்கின்றன. ஹவுஸ்புல் காட்சிகளிலும் அங்கே ஒரு புதிய சாதனை ஏற்படுத்தியது எங்கள் தங்க ராஜா. 55 நாட்களில் இலங்கை கரன்ஸியில் ரூபாய் 3 லட்சத்திற்கு மேல் வசூல் செய்து அதிலும் ஒரு புதிய சாதனை புரிந்தது. இலங்கை தலைநகரான கொழும்பிலும் வெற்றிக்கொடி நாட்டியது.கொழும்பு சென்ட்ரல் திரையரங்கில் 100 நாட்கள் ஓடிய எங்கள் தங்க ராஜா அதே கொழும்பில் மற்றொரு அரங்கான பிளாசாவில் 75 நாட்கள் ஓடியது. இலங்கையின் மற்ற சிறிய நகரங்களான மட்டு நகர், கண்டி திருமலை ஆகிய ஊர்களிலும் 6 வாரங்கள் ஓடியது. 1975ல் முதல் வெளியீட்டில் இப்படி என்றால் 1978 அக்டோபரில் இரண்டாவது வெளியீட்டின்போதும் யாழ் லிடோ திரையரங்கில் வெளியிடப்பட்டு 42 நாட்கள் ஓடியது. இப்படி திரையிட்ட அனைத்து இடங்களிலும் மாபெரும் வெற்றி பெற்ற படம் எங்கள் தங்க ராஜா.
    நடிகர் திலகம் நடித்துக் கொண்டிருந்த புதிய படங்கள் மற்றும் புதிதாக ஆரம்பிக்கப்படும் படங்களும் அவற்றை பற்றிய செய்திகளும் வழக்கம் போல் வந்துக் கொண்டிருந்தது. ரோஜாவின் ராஜா படத்தின் படப்பிடிப்பு தொடர்ச்சியாக நடந்து கொண்டிருந்தது. கெளரவம் படத்தின் ஷூட்டிங் துரித கதியில் நடப்பதாகவும் செய்திகள் வந்து கொண்டிருந்தது. மனிதரில் மாணிக்கம், ராஜபார்ட் ரங்கதுரை படங்களின் படப்பிடிப்பு செய்திகளும் அவ்வப்போது வந்தன. ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட படங்களான சிவகாமியின் செல்வன், என்னை போல் ஒருவன், தாய், அவன்தான் மனிதன் படங்களின் படப்பிடிப்பு பற்றியும் படமாக்கப்பட்ட காட்சிகள் பற்றியும் பத்திரிக்கைகளில் படித்தோம். வாணி ராணி படப்பிடிப்பு ஆரம்பித்து விட்டது. தங்கப்பதக்கம் படத்தில் நடிகர் திலகத்தின் வீடு செட் போடப்பட்டு படப்பிடிப்புக்கு தயாராகிறது என்றும் படித்தோம்.
    நீதி படத்திற்கு பின் தனது அடுத்த படத்திற்கு கதை தேடி அலைந்து கொண்டிருந்தார் பாலாஜி. இந்தி ரீமேக் என்று முடிவு செய்துவிட்டதால் பாம்பேக்கு ஓரிரு முறை சென்றும் திருப்தியான படம் கிடைக்கவில்லை. அதன் பிறகு பே இமான் என்ற படத்தின் உரிமையை வாங்கியிருப்பதாக செய்தி வந்தது. 1972ல் வெளியான இந்த படம் பிலிம்பேர் (Filmfare) பத்திரிக்கையின் பல விருதுகளை வென்ற செய்திதான் பாலாஜியின் கவனத்தை இந்த படத்தின் மீது திரும்ப செய்திருக்க வேண்டும். மனோஜ் குமார் மற்றும் பிரான் நடித்த அந்த படத்தின் தமிழ் பதிப்பில் அவர்கள் இருவரின் வேடத்தையும் நடிகர் திலகமே ஏற்க போகிறார் என்ற செய்தியும் வந்தது. சிவிஆர் இயக்க படத்தின் பூஜை போடப்பட்டது. சிவாஜி நாடக மன்றத்தில் தொடக்க காலம் முதல் பணியாற்றி வந்தவர் எஸ்.ஏ கண்ணன். நடிகர் திலகத்தின் ஏராளமான படங்களில் சிறிதும் பெரிதுமான பல வேடங்கள் செய்திருக்கிறார். சிவாஜி நாடக மன்றத்தின் ஆஸ்தான இயக்குனர். அன்னை இல்லத்தின் ஒரு அங்கம் என்றே அந்த காலத்தில் திகழ்ந்தவர். அவருக்கு ஒரு படம் செய்து கொடுக்க வேண்டும் என முடிவு செய்து சண்முககனி பிலிம்ஸ் என்ற நிறுவனத்தின் சார்பில் ஒரு வண்ணப்படம் அறிவிக்கப்பட்டது. நடிகர் திலகம், தேவிகா, மஞ்சுளா, ஜெயசித்ரா மற்றும் சசிகுமார் நடிப்பதாக செய்தி வந்தது. தீ விபத்தின் காரணமாக சசிகுமார் இறந்துவிட அந்த வேடத்தில் கமல் நடித்தார். சத்தியம் என்று அதற்கு பின்னர் பெயர் சூட்டப்பட்டது.
    அகில இந்திய சிகர மன்றத்தின் தலைவராக இருந்த சின்ன அண்ணாமலை விஜயவேல் பிலிம்ஸ் என்ற சொந்த நிறுவனத்தை துவங்கி நடிகர் திலகம் இரு வேடங்களில் நடிக்கும் ஒரு கலர் படம் தயாரிக்கிறார் என்று அறிவிப்பு வந்தது. முதலில் இதோ எந்தன் தெய்வம் என்று பெயரிடப்பட்டது.அதே நேரத்தில் ACT இயக்கத்தில் முத்துராமன் விஜயா நடிக்கும் ஒரு படத்திற்கும் இதே பெயர் வைக்கப்பட்டதாக செய்தி வரவே சின்ன அண்ணாமலை பெயரை மாற்றினார். தங்கத்திலலே வைரம் என்ற பெயர் வைக்கப்பட்டு பின்னர் அதுவும் மாறி மனிதனும் தெய்வமாகலாம் என்ற பெயர் சூட்டப்பட்டது. அதன் படப்பிடிப்பு நடைபெறுவதாகவும் செய்திகள். ஜேயார் மூவிஸ் மன்னவன் வந்தானடி, அமுதம் பிக்சர்ஸ் அன்பே ஆருயிரே படங்களின் படப்பிடிப்பும் தொடர்கிறது.
    பிலிம்பேர் (Filmfare) பத்திரிக்கையை பற்றி சொல்லும்போது அதன் தொடர்பான மற்றொரு விஷயத்தையும் குறிப்பிட வேண்டும். இந்தி திரையுலகை பற்றிய செய்திகளை தாங்கி வரும் பிலிம்பேர் இதழின் நிர்வாகத்தினர் வருடந்தோறும் அதற்கு முந்தைய வருடத்தில் வெளியான இந்தி படங்களில் சிறந்தவற்றை தேர்ந்தெடுக்க கூப்பன் ஒன்றை பத்திரிக்கையில் பிரசுரித்து அதை பூர்த்தி செய்து அனுப்பும் வாசகர்களில் பெரும்பான்மையோர் விருப்பப்படி விருதுகளை வழங்குவார்கள். தென்னிந்திய படங்களுக்கும் விருதுகள் உண்டு என்றாலும் இந்தி போன்று அனைத்து துறை விருதுகளும் கிடையாது. சிறந்த படம் மற்றும் இயக்குனர் போன்ற ஓரிரண்டு துறைகளுக்கு மட்டுமே இருந்தது. அந்த 1972ல்தான் முதன் முறையாக சிறந்த நடிகர் நடிகை போன்ற விருதுகளும் தென்னிந்திய மொழி திரைப்படங்களுக்கும் கொடுக்கப்பட்டது. அந்த முதல் சிறந்த நடிகர் விருதை நடிகர் திலகம் ஞான ஒளி படத்திற்காக பெற்றார். சிறந்த நடிகை விருது பட்டிக்காடா பட்டணமா படத்திற்காக ஜெயலலிதாவிற்கு கிடைத்தது. 1972ன் படங்களுக்கான விழா என்பதால் 1973ல்தான் நடைபெற்றது. (தொடர்ச்சியாக இரண்டாம் முறையாகவும் 1973 வருடத்திற்கான சிறந்த நடிகர் விருதையும் நடிகர் திலகம்தான் பெற்றார் என்பது சிறப்பு தகவல்). அது போல பல ஆண்டுகளாக இது போன்ற விருதுகளை கொடுத்துக் கொண்டிருந்த சென்னை சினிமா ரசிகர் சங்கமும் ஞான ஒளி படத்திற்காக நடிகர் திலகத்தை சிறந்த நடிகராக தேர்வு செய்தது. அதே போன்ற பாரம்பரியம் மிக்க பேசும் படம் இதழும் நடிகர் திலகத்தையே தேர்வு செய்தது.
    தமிழக அரசியல் மற்றும் இந்திய அரசியலை பொறுத்தவரை மிகப் பெரிய நிகழ்வுகள் நடைபெறவில்லை என்றாலும் அரசியல் களம் பரபரப்பாகவே இருந்தது. நாட்டிலே விலைவாசி உயர்வு என்பதே முக்கிய விஷயமாக (அன்றைய காலகட்டங்களில் விலைவாசி என்பது மிகவும் சென்சிட்டிவான ஒன்று). அதன் பேரில் பல போராட்டங்கள் நடைபெறுவது வழக்கம். அகில இந்திய அளவிலும் இது எதிரொலித்ததால் அந்த சமயத்தில் நடைபெற வேண்டிய இடை தேர்தல்கள் அனைத்துமே தள்ளி போடப்பட்டது. அவற்றில் கோவை, பாண்டிச்சேரி மக்களவை மற்றும் கோவை மேற்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்களும் அடங்கும். தமிழக அரசை எதிர்த்து நமபிக்கையில்லா தீர்மானங்கள் போன்றவை சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்டன. குறிப்பிட்டு சொல்ல வேண்டிய நிகழ்வுகள் என்று பார்த்தால் டாக்டர் ஹண்டேயின் கட்சி தாவல். சுதந்திரா கட்சியில் தமிழகத்தில் ராஜாஜி அவர்களுக்கு பிறகு அடுத்த தலைவராக பார்க்கப்பட்ட ஹண்டே, ராஜாஜியின் மறைவிற்கு பிறகு என்ன செய்ய போகிறார் என்ற கேள்வி எழுந்தது. சுதந்திரா கட்சியில் தொடர போகிறேன் என்று அவர் சொன்னாலும் பெருந்தலைவரின் தலைமையேற்று அவர் ஸ்தாபன காங்கிரஸில் இணைவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. 1973 மே மாதம் நடைபெற்ற திண்டுக்கல் இடைத்தேர்தலில் அவர் ஸ்தாபன காங்கிரஸிற்காக பிரச்சாரமும் மேற்கொண்டார். ஆனால் யாரும் எதிர்பாராதவிதமாக அவர் ஜூலை மாதத்தில் அதிமுகவில் சேர்ந்தது ஆச்சரியமாகவே இருந்தது. ஏன் என்றால் அவர் சேரும்போது என் நினைவு சரியென்றால் எம்ஜிஆர் ரஷ்யா போயிருந்தார். ஆகவே அது ஒரு எதிர்பாராத நிகழ்வு என்றே கூறலாம். மற்றொரு நிகழ்வு அன்றைய நாட்களில் அடிக்கடி நடைபெற்ற அரசியல் வன்முறை தாக்குதலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவரும் தொழிற்சங்க தலைவருமான வி பி சிந்தன் உள்ளானார். பொதுக்கூட்டத்திற்கு போவதற்காக டாக்ஸியில் போனவர் டாக்ஸி பிரேக்டௌன் ஆனதால் அரசு போக்குவரத்து பஸ்சில் பயணம் செய்ய, பஸ் ஒரு கும்பலால் தடுத்து நிறுத்தப்பட்டு அனைவரையும் இறக்கி விட்டு அந்த கும்பல் வி பி சிந்தனை குறிவைத்து தாக்கியது. அவர் உயிர் பிழைத்ததே பெரிய விஷயம். வழக்கம் போல் ஆட்சியாளர்கள் உடனே தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்து விட்டோம் விசாரணை நடக்கிறது என்று பூசி மெழுகினர்.
    திண்டுக்கல் இடைத்தேர்தல் யாருக்கு பாடம் கற்று கொடுத்ததோ இல்லையோ இந்திரா காங்கிரஸின் கண்களை திறந்து விட்டது. தமிழகத்தில் தங்களது சரக்கு போனியாகாது என்பதும் பெருந்தலைவர் தலைமையில் இயங்கும் காங்கிரஸ்ஸை மட்டுமே மக்கள் ஆதரிப்பார்கள் என்பதும் தெள்ளத்தெளிவாக புரிந்தது. குறிப்பாக இந்திரா அவர்களின் கவனத்திற்கும் இது போனதினால் அவரே தமிழகத்தில் தங்களது நிலையை மறு பரிசீலனை செய்ய முடிவெடுத்தார். தமிழகத்தில் இரண்டாக செயல்படும் காங்கிரஸ் ஒரே கட்சியாக மாற வேண்டும். அதற்கு முன் இருவரும் ஒரு அணியில் நின்று அரசியல் களமாட வேண்டும் என்பது இந்திராவிற்கு புரிந்தது. இதில் சிக்கல் எங்கேயென்றால் இந்திராவை பொறுத்தவரை அவருக்கு தமிழகத்திலும் புதுச்சேரியிலும் மட்டுமே இந்த நிலைப்பாட்டை எடுக்க விரும்பினார். மற்ற மாநிலங்களை பொறுத்தவரை அவருக்கு எந்த கவலையுமில்லை. காரணம் அங்கே அவரது கட்சிக்கு செல்வாக்கு இருந்தது. 1971 தேர்தலுக்கு பிறகு பல மாநிலங்களிளிலும் ஸ்தாபன காங்கிரஸில் பணியாற்றிய முக்கிய தலைவர்களுக்கு வலை வீசி தங்கள் கட்சிக்கு இழுத்துக் கொண்டார்கள். ஏன் தமிழகத்திலேயே இந்த முயற்சி நடைபெற்று சட்டமன்ற உறுப்பினர்களான அனந்தநாயகி, ஏ ஆர் மாரிமுத்து போன்றவர்களையும், ஈவிகே சம்பத் போன்றவர்களையும் இந்திரா காங்கிரஸில் சேர்த்துக் கொண்டனர் (அன்றைக்கு கட்சி தாவல் தடை சட்டம் இல்லை).
    இணைந்து செயல்படும் இந்த முயற்சிக்கு கட்சியில் இருக்கும் பழம் பெருச்சாளிகள் ஒத்துழைக்க மாட்டார்கள் என்பதை புரிந்த இந்திரா, மோகன் குமாரமங்கலத்திடம் அந்த பொறுப்பை ஒப்படைத்திருந்தாக கேள்வி. ஆனால் விமான விபத்தில் அவர் மறைந்து விடவே தமிழகத்தில் அந்த கட்சியில் பெருந்தலைவரோடு பேசுவதற்கு யாருமில்லை என்ற நிலை, எப்போதும் பெருந்தலைவருக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வந்திருந்த சி சுப்பிரமணியம் அந்த முறை ஆச்சரியமாக இந்திராவின் முயற்சியை ஆதரித்தார் என்று செய்தி வந்தது. ஆனால் அவரின் முன்கால நடவடிக்கைகள் காரணமாக அவர் பேசினால் சரியாக வராது என்பதால் இந்திரா தனது அமைச்சர்கள் உமாசங்கர் தீக்ஷித், கே ஆர் கணேஷ் போன்றவர்களை அனுப்பினார். அவர்கள் சென்னை வந்து பெருந்தலைவரை சந்தித்து பேசினார்கள். அவர்களை தொடர்ந்து ஒரிஸா முன்னாள் முதல்வர் நந்தினி சத்பதியும் சென்னை வந்து பெருந்தலைவரை சந்தித்தார். அதற்கு பின்னர் இந்திராவின் நேரடி தூதராக மரகதம் சந்திரசேகர் சென்னை வந்து மிக நீண்ட நேரம் உரையாடிக் கொண்டிருந்தார். இவையெல்லாம் பெருந்தலைவரின் பிறந்த நாளான ஜூலை 15ற்கு முன்னும் பின்னும் நடக்கிறது. அந்த வருடம் பெருந்தலைவரின் பிறந்தநாள் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. இயக்கம் பிளவுபட்ட பின் பெருந்தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லாத இந்திராவும் மற்ற இந்திரா காங்கிரஸ் தலைவர்களும் அந்த வருடம் அவருக்கு வாழ்த்து சொன்ன காட்சியும் அரங்கேறியது. இவையெல்லாம் நடந்த பிறகு இந்திராவின் அழைப்பின் பேரில் பெருந்தலைவர் டெல்லி சென்று இந்திராவை நேரில் சந்தித்து உரையாடினார்.
    பெருந்தலைவரை பொறுத்தவரை இந்திராவிடம் தனது நிலைப்பாட்டை மிக தெளிவாக எடுத்துரைத்தார். என்னவென்றால் இணைப்பு என்று ஒன்று நடக்க வேண்டுமென்றால் அது அகில இந்திய அளவிலே நடைபெற வேண்டும். தமிழகத்தில் மட்டும் இணைப்பு என்றால் அது சாத்தியப்படாது இணைந்து செயல்படுவதில் எதிர்ப்பில்லை ஆனால் எந்த காரணம் கொண்டும் அதிமுகவோடு கூட்டணி வைக்க கூடாது. இரண்டு கழகங்களும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்ற விஷயத்தில் தான் மிக தெளிவாக இருப்பதையும் ஆகவே ஒன்றை எதிர்க்க மற்றொன்றுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதையும் ஆணித்தரமாக எடுத்து சொல்லிவிட்டு வந்துவிட்டார். அதிமுகவுடன் கூட்டணி வைக்கவேண்டும் என்று தமிழக இந்திரா காங்கிரஸ் தலைவர்கள் முயற்சி எடுத்து வருவது அவருக்கு தெரிந்திருந்தது. ஆகவே இணைந்து செயல்படும்போது தன்னையும் ஸ்தாபன காங்கிரஸ்ஸையும் அதில் சிக்க வைத்துவிட கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். நடிகர் திலகத்திடம் ஒரு முறை இந்த இணைப்பு/இணைந்து செயல்படுவது பற்றி ரசிகர்கள் கேட்டபோது பெருந்தலைவர் எடுக்கும் முடிவிற்கு கட்டுப்படுவோம் என்று சொன்னது சிவாஜி ரசிகனில் செய்தியாக வந்தது.
    அரசியல் களம் இப்படியாக இருக்க நடிகர் திலகத்தின் அடுத்த வெளியீடாக தீபாவளியன்று கெளரவம் வெளியாவதாக அறிவிப்பு வந்துவிட்டது. கெளரவம் வியட்நாம் மூவிஸ் தயாரிப்பு. நடிகர் திலகத்தின் மிக நெருங்கிய குடும்ப நண்பர் இந்து பத்திரிக்கை குழுமத்தை சேர்ந்த எஸ்.ரங்கராஜன். ரங்கப்பா என்றே நடிகர் திலகம் அழைப்பார். நடிகர் திலகத்தை வைத்து ஒரு படம் எடுக்க வேண்டும் என்பது அவரின் நெடுநாள் விருப்பம். நடிகர் திலகத்தின் மனதில் எப்போதும் நாடகங்களின் மீதும் நாடக குழுக்கள் மீதும் தீராத ஆசை உண்டு. சென்னையில் அனேகமாக அனைத்து நாடக குழுக்களின் நாடகங்களை அவர் சென்று பார்ப்பதுண்டு. சில குழுக்கள் புதிய நாடகங்களை அரங்கேற்றும் போது நடிகர் திலகத்தை தவறாது அழைப்பார்கள் நடிகர் திலகம் ரெகுலராக சென்று பார்க்கும் நாடக குழு திரு. ஒய் ஜி பார்த்தசாரதி நடத்தி வந்த UAA எனப்படும் United Amateur Artists. 60 வருடங்களுக்கும் மேலாக இன்றும் நடைபெறும் குழு அது. அவர்களின் Oh! What a girl என்ற நாடகத்தை அறிவாளி என்ற பெயரில் படமாக்கி நடித்தார். அந்த குழுவின் பெற்றால்தான் பிள்ளையா நாடகம் நடிகர் திலகம் நடிக்க பார் மகளே பார் ஆனது. சிவாஜி நாடக மன்றத்திற்கு வியட்நாம் வீடு எழுதிய சுந்தரம் UAA குழுவிற்காக எழுதிய நாடகம் கண்ணன் வந்தான்.
    நாடகத்தை பற்றி கேள்விப்பட்டு பார்க்க வந்தார் நடிகர் திலகம். கதையில் வரும் பாரிஸ்டர் ரோலை மேடையில் செய்தவர் ஒய்ஜிபி மகன் கண்ணன் பாத்திரத்தை ஏற்றிருந்தவர் திரு ARS. நாடகம் பார்த்த நடிகர் திலகத்திற்கு மிகவும் பிடித்து போனது. மீண்டும் ஒரு முறை பார்த்திருக்கிறார். அந்த நேரத்தில் வெகு நாட்களாக தன்னை வைத்து படம் தயாரிக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கும் ரங்கராஜனையும் நாடகம் பார்க்க சொல்கிறார். அவருக்கும் பிடிக்கவே அந்த கதையை திரைப்படமாக்கும் உரிமையை வாங்குகிறார். அது வரை கதை வசனகர்த்தாவாக மட்டுமே இருந்த வியட்நாம் வீடு சுந்தரத்தை இயக்குனர் ஸ்தானத்திற்கு உயர்த்துகிறார் நடிகர் திலகம். தன்னால் முடியுமா என்று சுந்தரம் யோசிக்க உதவி இயக்குனராகவும் பின் இயக்குனராகவும் அதன் பிறகு குணசித்திர நடிகராகவும் விளங்கிய ரா.சங்கரனை உதவிக்கு வைத்து கொள்ள சொல்கிறார் நடிகர் திலகம். ரா.சங்கரனை அழைத்து நடிகர் திலகமே பேச அவர் ஒப்பு கொள்கிறார்.
    அந்த நாடகத்தை படமாக்க போகிறோம் என்றதும் நடிகர் திலகம் ஹோம் ஒர்க் செய்கிறார். முதலில் கதை. கதை பெரும்பாலும் கோர்ட் நடவடிக்கைளை மையப்படுத்துகிறது. ஆகவே அவற்றை எந்த தவறுமின்றி காட்சிப்படுத்த வேண்டும். திரு ஒய்ஜிபி அவர்களிடம் இதை பற்றி பேச, இந்த ஸ்கிரிப்ட் ரெடியானவுடன் பிரபல வக்கீல் திரு வி பி ராமன் அவர்களிடம் சென்று படித்து காண்பித்து அவர் சொன்ன சில கரக் ஷன்ஸ் ஏற்றுக் கொண்டு அதன்படி மாற்றி எழுதி முழுமைப்படுத்தினோம் என்று ஒய்ஜிபி அவர்கள் சொல்ல விபி ராமன் போன்ற ஒரு சட்ட நிபுணரின் மேற்பார்வையில் (Legally vetted) எழுதப்பட்ட ஸ்கிரிப்ட் என்றதும் நடிகர் திலகம் திருப்தி அடைந்தார். அதன் பிறகு காஸ்டிங் (casting). பாரிஸ்டர் ரோல் ஓகே. கண்ணன் ரோலை யார் செய்வது? பல பேர்களும் பரிசீலிக்கப்பட்ட து என்றாலும் ஒன்றும் சரி வரவில்லை. காரணம் கதைப்படி பாரிஸ்டர் ரோல் டாமினேட் செய்யும் காட்சியமைப்புகள். கண்ணன் கொஞ்சம் அடக்கி வாசிக்க வேண்டும். வேறு ஒரு ஹீரோ கண்ணன் ரோல் செய்தால் அவர்கள் அதை எப்படி எடுத்து கொள்வார்கள் என்பது போன்ற சந்தேகங்கள் எழவே, நீண்ட யோசனைக்கு பின் இரண்டு வேடங்களையும் தானே செய்வது என்ற முடிவுக்கு வந்தார் நடிகர் திலகம். இந்த படத்தில்தான் முதன் முறையாக நடிகர் திலகத்தின் பக்தர் ஒய் ஜி மகேந்திரா அவருடன் இணைந்து நடித்தார். உனக்கு சீன் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஷூட்டிங் நடக்கும் அனைத்து நாட்களிலும் நீ வர வேண்டும் என்று நடிகர் திலகம் மகேந்திராவிடம் சொல்லியிருக்கிறார். காரணம் நாடகத்தில் அவரும் நடித்திருந்தார். ஆகவே ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால் உடனே அதை தீர்த்துக் கொள்ளலாம் என்பதற்காக..
    1971 நவம்பர் 12 அன்று படப்பிடிப்பு துவங்கியது. இயக்குனர் ஸ்ரீதர் கிளாப் அடித்து துவக்கி வைத்தார். சொன்னால் பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும். முதல் நாள் எடுக்கப்பட்ட காட்சி எதுவென்றால் கிளைமாக்ஸ். கதவை திறந்து முழுக்கை சட்டை பட்டனை கழட்டி டைம் பார்ப்பாரே அங்கிருந்து ஆரம்பிக்கப்பட்டது. யோசித்து பார்த்தால் எந்தளவிற்கு அவர் பாத்திரத்தை உள்வாங்கியிருந்தால் அந்த கிளைமாக்ஸ் காட்சியை அவரால் அவ்வளவு சிறப்பாக காட்சிப்படுத்த முடிந்திருக்கிறது என்று நினைத்தால் உண்மையிலே பிரமிப்புதான். படம் வளர்ந்து வளர்ந்து 1973 தீபாவளி ரிலீசிற்கு ரெடியாக நிற்கிறது. படம் வெளியாவதற்கு ஒரு மாதம் முன்பே படப்பிடிப்பு முடிந்து விட்டது, ஒரே ஒரு பாடல் காட்சியை தவிர. பாலூட்டி வளர்த்த கிளி பாடல் காட்சி மட்டும் எடுக்கப்பட வேண்டும். சிக்கல் என்னவென்றால் டிஎம்எஸ் இசை பயணமாக தென்னாபிரிக்கா நாட்டிற்கு சென்றிருக்கிறார் அவர் வருவதற்கு 15 நாட்கள் ஆகும் என்ற நிலை. அவர் வந்து பாடல் பதிவு செய்யப்பட்டு, பின் படப்பிடிப்பு நடத்தி சென்சார் செய்து தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய வேண்டும் என்றால் அது முடியுமா என்பது பெரிய கேள்விக்குறியாக நிற்கிறது. காரணம் இடையில் இருக்கும் நாட்கள் குறைவு. சுந்தரம் மற்றும் எம்எஸ்வி ஆகியோரை அழைத்து அந்த பாடலை ட்ராக் பாடி படப்பிடிப்பை நடத்தி விடலாம் என்ற யோசனையை சண்முகம் சொல்கிறார் (ட்ராக் என்றால் பாட வேண்டிய பாடகருக்கு பதிலாக வேறு ஒருவரை வைத்து பாட வைப்பது. பின்னர் யார் பாட வேண்டுமோ அவர்கள் வந்து பாடியவுடன் அதை ஒரிஜினல் பாடலாக மாற்றி விடுவார்கள்). வேறு யாரும் அந்நேரம் கிடைக்கவில்லை என்பதால் மெல்லிசை மன்னர் எம்எஸ்வியே அந்த ட்ராக் பாடி பதிவு செய்து படப்பிடிப்பை நடத்தினார்கள். அதுவே நன்றாக இருக்கிறது என்று நடிகர் திலகமே சொன்னார் என்று கேள்வி. ஆனால் எம்எஸ்வி அது சரியாக வராது என்று முடிவு செய்து டிஎம்எஸ் சென்னை வந்தவுடன் அவரை வைத்து மீண்டும் பாடலை பதிவு செய்து படத்தில் சேர்த்தார்கள். படமாக்கப்பட்ட பின் பாடியதால் அந்த பாடல் காட்சி டிஎம்எஸ்க்கு போட்டு காட்டப்பட்டது. எதற்கு என்றால் லிப் சிங்க் எனப்படும் வாயசைப்பு மாட்ச் ஆக வேண்டும் என்பதற்காக,
    இப்படிப்பட்ட விஷயங்களை உள்ளடக்கிய கெளரவம் 1973 அக்டோபர் 25 வியாழன் தீபாவளியன்று வெளியாகிறது. மதுரையில் சிந்தாமணியில் ரிலீஸ். முதன் முறையாக ஒரு கலர் படத்தில் நடிகர் திலகம் இரட்டை வேடத்தில் பாரிஸ்டராகவும் கண்ணனாகவும் திரையில் விஸ்வரூபம் எடுத்த அந்த கோலாகலம், அந்த செல்லுலாய்டு காவியத்தை அன்றே காண நாங்கள் எடுத்த முயற்சிகள் அதை பற்றி அடுத்த வாரம்
    (தொடரும்)
    அன்புடன் .

    siva-617.jpg

    siva-616.jpg


    Thanks Murali Srinivasan
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •