வாதாபி

தமிழக சரித்திரத்தில் முக்கியமான இடம் பெற்ற வாதாபி நகரம் நம் கண் முன்னே விரிந்து பரந்து இருக்கிறது. பழம் பெருமை வாய்ந்த வாதாபி நகரத்தை சளுக்க சாம்ராஜ்யத்தின் தலைநகராக மாற்றிய பெருமை முதலாம் புலிகேசியையே சாரும். கடம்பர்களை முறியடித்த அம்மாவீரன் தனது சளுக்க சாம்ராஜ்யத்திற்க்காக இழைத்து இழைத்து கட்டிய நகரம் வாதாபி. அவனது காலத்திலும், அவனது தம்பி மங்களேசன் காலத்திலும், அவனது மகன் இரண்டாம் புலிகேசியின் காலத்திலும் ஒப்புயர்வற்ற நகரமாக விளங்கிய வாதாபி இன்று தனது பழம் பெருமையை இழந்து சற்று மங்கிய நிலையில் காட்சியளித்தது. மாமல்ல சக்ரவர்த்தியால் முழுதும் எரிக்கப்பட்ட வாதாபி இந்த 15 வருடத்தில், 12 வருடங்கள் பல்லவ அரசரின் பிரதநிதியாக இருந்த புத்தவர்மன் பெரிதாக ஒன்றும் வாதாபியை புனரமைக்க முயற்சி எடுத்து கொள்ளவில்லை. வேங்கியில் இருந்த புலிகேசியின் புதல்வர்கள் ஐவரும் தம்முள் அரியணை ஏற போட்டியிட்டதில் மிகுந்த காலம் சென்று விட்டது. ஒரு வழியாக தனது அமைச்சரின் உதவியோடும், தாய் மாமன் கங்க மன்னனான துர்விநீதனின் உதவியோடும் சளுக்க மன்னனாக முடி சூட்டிய விக்ரமாதித்தன் செய்த முதல் காரியம் வாதாபியை மீண்டும் அடைவது தான். 3 வருடங்களுக்கு முன் அவனுக்கு ஏதுவாக மூப்படைந்த புத்தவர்மன் உடல் நல குறைவினால் காஞ்சி செல்ல நேரிட்ட போது ஒரு பெரும் படையுடன் வாதாபியை மீண்டும் தனதாக்கிக் கொண்டான் விக்ரமாதித்தன். வாதாபிக்கு திரும்பிய விக்ரமாதித்தன் செய்த முதல் காரியம் மாமல்ல சக்ரவர்த்தியால் நிறுவப்பட்ட ஜயஸ்தம்பத்தை உடைத்தெறிந்தது தான். 3 வருடங்களாக நகரை புனருத்தாரணம் செய்தும் வாதாபி இன்னும் களையிழந்தே தான் காணப்பட்டது.

நகரை சுற்றிய பெரும் மதில் சுவரும், கோட்டை வாசலில் மீண்டும் நிறுவப்பட்ட கணபதியும் பழைய வாதாபியை நமக்கு மீண்டும் நினைவு படுத்துகிறது. மிக கடுமையான காவலிடையே கோட்டைக்குள் நுழைந்து வெளியேறும் மக்களுடன் நாமும் சற்று நகர் வலம் வருவோம். நகரை ஒட்டி பாயும் மலப்பிரபா நதி கரையோரத்தில் மன்னனின் ஆணைப்படி விரூபாக்ஷருக்கு கோவில் கட்ட முனைப்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. அகஸ்திய ஏரியின் கரையில் அமைந்த பூதநாதர் ஆலயத்தில் அர்த்தஜாம பூஜைக்கான மணி அடித்து கொண்டிருந்தது.