
Originally Posted by
esvee
courtesy - thiru balaganesh- minnal varigal
மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் 1956ம் ஆண்டு வெளிவந்த முதல் தமிழ் (கேவா) கலர்ப் படம் அலிபாபாவும் 40 திருடர்களும். எம்,ஜி.ஆர்., பானுமதி, பி.எஸ்.வீரப்பா, தங்கவேலு ஆகியோர் நடித்த இந்தப் படத்தின் பாடல்களைக் கேட்டு ரசித்திருக்கிறேன். இதுவரை படம் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்ததில்லை என்பதால் சமீபத்தில் அந்த வாய்ப்புக் கிட்டியபோது ஆர்வமுடன் பார்க்கத் துவங்கினேன்.
படத் துவக்கத்தில் அழகான பொண்ணு நான் என்று பானுமதி ஆடிப் பாடுகிறார். அழகான பொண்ணு என்றால் ஆபத்து வராமல் இருக்குமா? பாடி முடித்ததும், குறுநில மன்னன் ஷேர்கானின் ஆட்கள் அவரை இழுத்துச் செல்லப் பார்க்கிறார்கள். அவர் மறுக்கவே சவுக்கால் அடிக்கின்றனர். ஜனங்களெல்லாம் (வழக்கம்போல்) வெறுமனே வேடிக்கை பார்க்க, பானுமதியுடன் இருக்கும் குட்டையான காமெடியன் தடுக்கப் பார்க்க, தள்ளி விடுகின்றனர். பாவம்... கல்கியின் ஆழ்வார்க்கடியான் சைஸில் இருக்கும் அவரால் என்னதான் செய்துவிட முடியும்..? காப்பாத்துங்க என்று கதறுகிறார். இப்படி ஒரு அநியாயம் நிகழ்வதைக் கண்டு இயற்கை பொறுக்குமா? அது அவரின் அபயக்குரலை புரட்சித்தலைவரின் திருச்செவிகளில் விழச் செய்துவிட, அவர் என்ட்ரியாகி அனைவரையும் சண்டையிட்டுத் துரத்துகிறார். ஆஹா... எத்தனை படங்களில் பார்த்தாலும் சலிக்கவே சலிககாதது வாத்யார் போடும் வாள் சண்டை. (நாம படம் பாக்கக் கொடுத்த 50 ரூபாய் -டிவிடிக்கு- இதுக்கே செரிச்சுடுச்சு போ என்றது மனஸ்.)
அப்புறமென்ன... பானுமதிக்கு வாத்யாரின் மேல் இன்ஸ்டன்ட் காதல் வந்துவிட, அவர் வீட்டிலேயே அடைக்கலமாகின்றனர். காட்டுக்கு விறகு வெட்டச் செல்லும் எம்.ஜி.ஆர்., ஒரு கழுதை வழி தவறியதால் அதைப் பிடிக்கப் போய், பி.எஸ்.வீரப்பா தலைமையிலல்39 திருடர்கள் சங்கேத வார்த்தையைச் சொல்லி குகையிலிருந்து வெளிவருவதையும், வேறொரு சங்கேத வார்த்தையைச் சொல்லி குகையை மூடிவிட்டுச் செல்வதையும் பார்க்கிறார்.
அவர்கள் சென்றதும், அதே சங்கேத வார்த்தையைச் சொல்லி, அவரும் காமெடியனும் உள்நுழைகின்றனர். கதவை மூடும் சங்கேதச் சொல்லை வாத்யார் சொல்ல, அந்த சங்கேதச் *சொல் கேட்டதும், உள்ளே சங்கிலியால் பிணைக்கப்பட்ட அடிமைகள் வட்டமாக இருக்கும் ஒரு சக்கரத்தை இயக்க, அது ஒரு லீவரை இயக்க, அதன் மூலம் ஒரு இரும்புச் சலாகை இயங்கி பாறையை அசைத்து குகையை மூடுகிறது. (யப்பா... என்னா டெக்னாலஜி மூளை இந்தத் திருடனுங்களுக்கு! இதை நல்ல வழியில நாட்டுல பயன்படுத்தியிருந்தா நாடு வெளங்கியிருக்குமே... என்றது மனஸ். அதை தலையில் தட்டினேன்.).
உள்ளே இன்னொரு ரகசிய லீவரை இயக்கியதும் சிங்கத்தின் வாய் போல பிளந்திருக்கும் இரண்டு குகைகளு்க்கும் இடையே மேலே தூக்கியிருக்கும் பலகைப் பாதை இறங்கி இரண்டையும் இணைக்கிறது. இரண்டு குகைகளுக்கும் நடுவே கொதித்துக் கொண்டிருக்கும் வெந்நீர் நதி(?) ஓடுகிறது. (யாத்தே... 24 அவர்ஸும் தண்ணியக் கொதிக்க வைக்க அத்தனை பெரிய நெருப்பை எங்கருந்து ஏற்படுத்தினாங்க திருடய்ங்க? -மனஸ்). இவர்கள் உள் குகைக்குள் சென்று பார்க்க, பத்துத் தலைமுறைக்கு வேண்டிய அளவு தங்க நகைகளும், பொற்காசுகளும், இன்னபிற ஆடை ஆபரணங்களும் குகை முழுக்க நிரம்பியிருக்கின்றன. (இவ்வளவு செல்வத்தை வெச்சுக்கிட்டு ஜாலியா லைஃபை அனுபவிக்காம அந்த 40 கூமுட்டைங்களும் என்னத்துக்கு இன்னும் திருடப் போவுதுங்களோ தெரியலையே... -மனஸ். தே.. கம்னு கெட. -நான்)
அப்புறம் என்ன... ரெண்டு கழுதைகள் சுமக்கற அளவுக்கு (ஐயய்யோ! வாத்யாரையும், காமெடியனையும் சொல்லலீங்க... நிஜக் கழுதைகள்) பொன், பொருளை மூட்டை கட்டிக்கிட்டு வந்துடறாங்க. பெரிய அளவு செல்வம் வந்துச்சுன்னா... நாமல்லாம் ஜாலியா செலவு பண்ணிட்டு திரிவோம். ஆனா செல்வம் கிடைச்சது யாருக்கு? பொன்மனச் செம்மலுக்காச்சே...! அவர் அதை நிறைய தானதர்மம் பண்றார்.
அலிபாபா பெரிய பணக்காரனாயிட்டான்னு *ஷேர்கானுக்குத் தெரிய வந்ததும் -- சொல்ல மறந்துட்டேனே.. அவர் வாத்யாரோட அண்ணன்தான் -- தம்பியைக் கூப்பிட்டு விருந்துல்லாம் வெச்சு, எப்படி இவ்வளவு செல்வம் வந்ததுன்னு நைஸா விசாரிக்கிறாரு. அண்ணனோட வற்புறுத்தலால வாத்யார் உண்மையச் சொன்னதும், அவரைக் கைது பண்ண உத்தரவிடறாரு வீரர்கள் ஆயுதங்களுடன் சூழ்ந்து வாத்யாரை மடக்கிவிட, பானுமதி தன் புத்தி சாதுர்யத்தினால வாத்யாரை விடுவிக்க, அவர் சண்டை போட்டு எல்லாரையும் காப்பாத்தி தானும் தப்பிச்சுடறாரு.
சண்டையில வாத்யாரோட அண்ணி இறந்துட, பேராசைக்கார அண்ணன் அதைப்பத்தி கவலையே படாம அந்த குகைக்கு ஓடிப் போறாரு. சங்கேதச் சொல்லைச் சொல்லி உள்ளே போனவருக்கு பணத்தைப் பார்த்த ஆனந்தத்துல வெளிவர்றதுக்கான சொல் மறந்துவிட, திருடர்கள் வந்துவிட, அவரைப் பிடித்து தலையையும் உடலையும் தனித்தனியாகப் பிரித்து விடுகின்றனர். அவர்கள் மீண்டும் திருடச் சென்றுவிட, அண்ணனைத் தேடி அங்கே வரும் வாத்யார், அந்த முண்டத்தையும் தலையையும் எடுத்துட்டு நாட்டுக்கு வந்துடறாரு. ரெண்டையும் தைச்சு, அண்ணனுக்கு இறுதிக் காரியங்களும் பண்ணிடறாரு.
திருடர்கள் புத்திசாலி(!)களாச்சே... யார் வந்துட்டுப் போறதுன்னு கண்டுபிடிக்க, நாட்டுக்குள்ள வந்து சமீபத்துல பணக்காரரானது யாருன்னு விசாரிக்க, அலிபாபா பற்றித் தெரிய வருகிறது. பி.எஸ்.வீரபபா ஒரு எண்ணெய் வியாபாரியா மாறுவேஷம் போட்டுக்கிட்டு, எண்ணெய் பீப்பாய்கள்ல 39 திருடர்களையும் ஒளிஞ்சுக்கச் சொல்லி வாத்யாரை நட்பாக்கிக்கிட்டு, அவர் வீட்டுக்குள்ள எல்லா பீப்பாய்களோடயும் வந்துடறாரு. அவர் பீப்பாய்ல ஒளிஞ்சிருக்கற திருடங்க கிட்ட பேசறதை பானுமதி பாத்துடறாங்க.
அந்த வீரப்பா தான் தன் அப்பா, அம்மாவை கொன்னு தன்னை அனாதை ஆக்கினவன்றதையும் புரிஞ்சுக்கிட்டு, அவனை பழிவாங்க திட்டம் போடறாங்க. என்னா திட்டம்...! வாத்யாருக்கும், வீரப்பாவுக்கும் முன்னால பாட்டுப் பாடி, நடனமாடியபடியே அவர் காலால் தாம்பாளத்தை தட்டி சத்தம் எழுப்ப, ஒவ்வொரு சத்தத்துக்கும் ஒரு பீப்பாயை நீர்வீழ்ச்சிலருந்து உருட்டி விட்டுடறாங்க பானுமதியோட இருக்கற காமெடியனும் அவன் ஜோடியும். (ஏம்ப்பா... நகரத்துல சாலையப் பாத்திருக்கற எம்.ஜி.ஆரோட வீட்டுக் கொல்லைப் புறத்துல நீர்வீழ்ச்சி எங்கருந்து வந்தது? அவர் என்ன மலையுச்*சியிலயா குடியிருக்காரு? என்று சிரித்தது மனஸ். த பாரு... ஜனங்களே வாத்யார் படத்துல லாஜிக் எதிர்பார்த்ததில்லை. நீ பேசின *பிச்சுப்புடுவேன் பிச்சு... என்றேன் நான்.)
பிறகென்ன... தன் சகாக்களை பானுமதி கொன்னது தெரிஞ்*சதும் வீரப்பா அவரைக் கடத்திட்டு தன் குகைக்கு ஓட, அவரை துரத்திப் பிடித்து, சண்டையிட்டு, ஒரு வழியாக கொன்று தீர்க்கிறார் புரட்சித் தலைவர். (ஆமா... 39 திருடங்களை அந்தம்மாவே காலி பண்ணிட்டாங்க. ஒரே ஒரு திருடனை மட்டும் கொல்றது வாத்யாருக்குப் பெருமையாக்கும்? -மனஸ். சனியனே... அடங்க மாட்ட நீயி? -நான்) வாத்யாரும், பானுமதியும் டூயட் பாட, படம் நிறைவடைகிறது.
படத்தில் பாடல்கள் ஒவ்வொன்றும் அருமையாக வந்திருக்கின்றன. எல்லாக் கதாநாயகிகளையும் தொட்டுத் தூக்கி, சுற்றி புகுந்து விளையாடும் வாத்யார், பானுமதியின் அருகில் பள்ளிக்கூட மாணவன் போல (பார்க்க: படம்) பாதுகாப்பான தூரத்தில் நின்று டூயட் பாடுவது (அதிகபட்சம் தோளை தொடுதல்தான்) பார்க்க ஆச்சரியமோ ஆச்சர்யம்! தங்கவேலுவின் காமெடி நிரம்பிய நடிப்பு அற்புதம். பானுமதி வழக்கம் போல் கம்பீரமான கதாநாயகியாக ரசிக்க வைக்கிறார். பி.எஸ்.வீரப்பா ஆர்ப்பாட்டமான வில்லன் நடிப்பில் அவருக்கு நிகர் வேறொருவர் இல்லை என்று சொல்ல வைக்கிறார். வாத்யாரின் அண்ணனாக வரும் (நிஜ அண்ணன்) எம்.ஜி.சக்ரபாணி குகையில் மாட்டிக் கொண்டு வெளியே வர வழி தெரியாமல் வாயில் வந்த வார்த்தைகளையெல்லாம் சொல்லி, குகையைத் திறக்க வழி தெரியாமல் தவிப்பது நகைச்சுவைக்கு உத்தரவாதமான நடிப்பு.
படத்தில் இந்த மனஸ் என்னதான் குற்றம் குறைகளைக் கண்டுபிடித்தாலும் அதையெல்லாம் யோசிப்பதற்கு நேரம் இல்லாதபடி படம் விறுவிறுப்பாகச் செல்கிறது. அதுதான் எம்.ஜி.ஆரின் திறமை + பலம். ரசிகர்களுக்கு அதைத் தவிர வேறென்ன வேண்டும்?
த்தோ பாரு மனஸ்... நீ படுத்தின பாட்டுக்கு அடுத்த தடவை படம் பாக்கறப்ப உன்னை கிட்ட சேர்க்கப் போறதில்லை என்றேன் நான். அதுசரி... ஏற்கனவே எம்.ஜி.ஆர். படத்தை மூளையக் கழட்டி வெச்சுட்டு, என்னை வெச்சுட்டுத்தான் ரசிச்சுட்டிருக்கே... என்னையும் துரத்திட்டேன்னா, நீ படம் பாக்கவே முடியாது என்று மனஸ் சிரிக்க... நான் அவ்வ்வவ்!
Bookmarks