http://www.dailythanthi.com/2014-02-...edia-Interview
எங்கள் காதல் முறிந்தது ‘‘நானும், ஹன்சிகாவும் பிரிந்து விட்டோம்’’ நடிகர் சிலம்பரசன் பரபரப்பு பேட்டி
‘‘நானும், ஹன்சிகாவும் பிரிந்து விட்டோம். எங்கள் காதல் முறிந்து விட்டது’’ என்று நடிகர் சிலம்பரசன் அறிவித்து இருக்கிறார்.
காதல்
நடிகர் சிலம்பரசனுக்கு முதலில் நடிகை நயன்தாராவுடன் காதல் இருந்தது. இருவரும் ‘வல்லவன்’ படத்தில் ஜோடியாக நடித்தபோது காதல் மலர்ந்தது. பின்னர் அந்த காதல் சில காரணங்களால் முறிந்து போனது. நயன்தாராவுக்கு பிரபுதேவாவுடன் காதல் ஏற்பட்டது. அந்த காதலும் சில பிரச்சினைகளால் தோல்வி அடைந்தது.
சிலம்பரசனுக்கு நடிகை ஹன்சிகாவுடன் காதல் துளிர்த்தது. இருவரும் ‘வாலு,’ ‘வேட்டை மன்னன்’ ஆகிய 2 படங்களில் ஜோடியாக நடித்தார்கள். அப்போது இரண்டு பேர் இடையேயும் காதல் மலர்ந்தது. இந்த காதலுக்கு ஹன்சிகா தரப்பில் கடும் எதிர்ப்பு உருவானது.
நெருக்கம்
அந்த எதிர்ப்பையும் மீறி இருவரும் அடிக்கடி சந்தித்து தங்கள் காதலை வளர்த்துக் கொண்டார்கள். சிலம்பரசன் பிறந்தநாளுக்கு ஹன்சிகாவும், ஹன்சிகா பிறந்தநாளுக்கு சிலம்பரசனும் வாழ்த்துக்களையும், பரிசு பொருட்களையும் பரிமாறி கொண்டார்கள்.
அதைத்தொடர்ந்து ஹன்சிகாவுடன் காதல் இருப்பது உண்மைதான் என்றும், அவரையே அடுத்த வருடம் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் சிலம்பரசன் அறிவித்தார். ஹன்சிகாவும் அதை ஒப்புக்கொண்டார். இதுதொடர்பாக ஹன்சிகா அளித்த பேட்டியில், ‘‘சிலம்பரசனை காதலிப்பது உண்மைதான். ஆனால் 5 வருடங்கள் கழித்துதான் திருமணம் செய்து கொள்வேன்’’ என்று கூறினார்.
கருத்து வேறுபாடு
அதில் இருந்து இரண்டு பேருக்கு இடையேயும் முதன்முதலாக கருத்து வேறுபாடு உருவானது. சிலம்பரசனுடனான காதலை ஹன்சிகா குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ளாததுடன், அவரிடம் இருந்து ஹன்சிகாவை பிரிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஹன்சிகாவை திடீரென்று அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தார்கள். அமெரிக்கா சென்று வந்தபின், ஹன்சிகாவின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டது. இதற்கிடையில், ‘இது நம்ம ஆளு’ என்ற படத்தில் சிலம்பரசனும், நயன்தாராவும் மீண்டும் ஜோடி சேர்ந்தார்கள். இது, ஹன்சிகாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
சிலம்பரசன் அறிக்கை
இந்த நிலையில், ஹன்சிகாவுடனான காதல் முறிந்து போனது என்று சிலம்பரசன் நேற்று அறிவித்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
‘‘ஹன்சிகாவுடனான என்னுடைய உறவு முறிந்து விட்டது. இந்த உறவில் நான் போதும் என்ற அளவுக்கு அனுபவப்பட்டு விட்டேன். நன்றாக சிந்தித்த பிறகே இந்த முடிவுக்கு வந்து உள்ளேன். இனிமேல் ஹன்சிகாவுக்கும், எனக்கும் எதுவும் இல்லை.
நான் கடந்ததை பற்றி வருந்தவோ, அல்லது இந்த முடிவை பற்றி பேசவோ தயாராக இல்லை. இந்த அறிவிப்பு கூட என்னுடைய நண்பர்களுக்கும், நலம் விரும்பிகளுக்கும், ரசிகர்களுக்கும் என் மீது கொண்டுள்ள அன்பினால் கேட்கும் கேள்விகளுக்கும் நான் தரும் விளக்க உரைதான். இப்போதைக்கு நான் என்னுடைய தொழில் மீது கவனம் செலுத்தப்போகிறேன். நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன்.’’
இவ்வாறு அந்த அறிக்கையில் சிலம்பரசன் கூறியிருக்கிறார்.
பேட்டி
இதுதொடர்பாக, ‘தினத்தந்தி’ நிருபரிடம் சிலம்பரசன் மேலும் கூறியதாவது:–
‘‘எனக்கும், ஹன்சிகாவுக்குமான காதலில் நிறைய பிரச்சினைகள் இருக்கிறது. எங்கள் காதலை இனிமேல் தொடர முடியாது. எங்களுக்குள் ஒத்து வராது. அதனால் இரண்டு பேரும் கலந்து பேசி, பிரிந்து விட்டோம்.
ஆனால், எங்களுக்குள் எந்த சண்டையும் இல்லை. எங்கள் காதல் முறிந்து போனாலும், ஹன்சிகாவுடன் நடிப்பதில் எனக்கு எந்த கருத்து வேறுபாடும் கிடையாது. நாங்கள் சேர்ந்து நடிப்போம். இப்போது கூட, ஐதராபாத்தில் ‘வாலு’ படப்பிடிப்பில் இருவரும் சேர்ந்து நடித்துக்கொண்டுதான் இருக்கிறோம். மறுபடியும் ஹன்சிகாவுடன் இணைய வாய்ப்பு இருக்கிறதா? என்று எனக்கு தெரியாது.’’
மேற்கண்டவாறு சிலம்பரசன் கூறினார்.
சிலம்பரசனின் இந்த பேட்டி தொடர்பாக ஹன்சிகாவுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர் கருத்து சொல்ல மறுத்து விட்டார்.
Bookmarks