http://www.dailythanthi.com/2014-02-...re-Sports-News

டாக்டராக இருந்தாலும் எனது மனைவியின் கையெழுத்து அழகாக இருக்கும் சென்னை விழாவில் தெண்டுல்கர் ருசிகரம்

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நடந்த அழகான கையெழுத்தை ஊக்கப்படுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர், கடந்த காலங்களில் தனது மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு எழுதிய கடிதங்களை நினைவு கூர்ந்தார். அவர் பேசுகையில், ‘கிரிக்கெட் பந்தை அடித்து ஆடுவது எனக்கு இயல்பான ஒன்றாகும். ஆனால் எனது மனைவி அஞ்சலிக்கு கடிதம் எழுதினால் என்ன எழுதினேன் என்பதை இரண்டு முறைக்கு மேல் சரிபார்ப்பேன். அந்த காலங்களில் செல்போன் கிடையாது. இதனால் ஒருவருக்கு தகவல் அனுப்ப வேண்டும் என்றால் டெலிபோன், அல்லது கடிதம் மூலம் தான் தொடர்பு கொள்ள முடியும். எனக்கு கடிதம் எழுதுவது குறித்து எனது பெற்றோர் சொல்லி கொடுத்தனர். குடும்பத்தை விட்டு வெளியில் தங்கி இருக்கையில் நான் முதலில் எனது பெற்றோருக்கும், பின்னர் என்னுடைய மனைவிக்கும் கடிதம் எழுதினேன். பொதுவாக டாக்டர்களின் கையெழுத்து தெளிவாக இருக்காது. ஆனால் எனது மனைவி டாக்டராக இருந்தாலும் அதற்கு விதிவிலக்கு. அவரது கையெழுத்து அனைவரையும் கவரும் விதத்தில் அழகாக இருக்கும். கிரிக்கெட் வீரர்களில் கும்பிளேவின் கையெழுத்து நன்றாக இருக்கும்’ என்று தெரிவித்தார். கிரிக்கெட் மற்றும் அரசியல் குறித்த கேள்விகளுக்கு தெண்டுல்கர் பதில் அளிக்க மறுத்து விட்டார்.

முன்னதாக சென்னையை அடுத்த பொன்னேரியில் உள்ள அறிவு பூங்காவில் நடந்த நிகழ்ச்சியில் தெண்டுல்கர் கலந்து கொண்டு விளையாட்டு போட்டியில் சாதனை படைத்த வேலம்மாள் தொழில்நுட்ப கல்லூரி மாணவ–மாணவிகளை பாராட்டினார். அத்துடன் ‘டைஸ் 2016’–க்கான பேனரை வெளியிட்டார். விழாவில் தெண்டுல்கர் பேசுகையில், ‘மாணவர்கள் எதிர்காலத்தில் என்னவாக ஆக வேண்டும் என்பதை தீர்மானித்து அதற்காக கடினமாக உழைக்க வேண்டும். இளைய தலைமுறையினர் தங்கள் கனவை நனவாக்க ஒருபோதும் குறுக்கு வழியை நாடக்கூடாது’ என்று அறிவுரை வழங்கினார். வேலம்மாள் கல்வி குழும தலைவர் எம்.வி.முத்துராமலிங்கம், தெண்டுல்கருக்கு சால்வை அணிவித்து வரவேற்றார்.