-
10th March 2014, 03:19 PM
#11
Junior Member
Seasoned Hubber
http://www.dailythanthi.com/2014-03-...nikanth-speech
‘கோச்சடையான்’ படத்தின் ‘‘வெற்றி விழாவில் ரசிகர்களை சந்திப்பேன்’’ ரஜினிகாந்த் பேச்சு
சென்னை,
‘‘கோச்சடையான் படத்தின் வெற்றி விழாவில், ரசிகர்களை சந்திப்பேன்’’ என்று ரஜினிகாந்த் கூறினார்.
‘கோச்சடையான்’
ரஜினிகாந்த் நடித்து அவருடைய இளைய மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வின் டைரக்டு செய்துள்ள ‘கோச்சடையான்’ படம், கோடை விருந்தாக திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தின் கதை–திரைக்கதை–வசனத்தை கே.எஸ்.ரவிகுமார் எழுதியிருக்கிறார்.
ரஜினிகாந்த் ஜோடியாக பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோன் நடித்து இருக்கிறார். சரத்குமார், ஆதி, நாசர், ஜாக்கி ஷராப், ஷோபனா ஆகியோரும் படத்தில் நடித்துள்ளனர். கவிஞர்கள் வாலி, வைரமுத்து ஆகிய இருவரும் எழுதிய பாடல்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருக்கிறார்.
ரஜினிகாந்த் பேச்சு
இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை சத்யம் தியேட்டரில் நேற்று காலை நடந்தது. விழாவில் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:–
‘‘இந்த விழாவுக்கு நான் நன்றி சொல்வதற்காகவே வந்தேன். படத்தின் வெற்றி விழாவில் நிறைய பேசுவேன். எனக்கு ராஜா–ராணி கதை என்றால் ரொம்ப இஷ்டம். 150 படங்களில் நான் நடித்திருந்தாலும், ராஜா–ராணி கதையில் நடிக்கவில்லையே என்ற ஆதங்கம் எனக்கு இருந்தது. ஆண்டவன் புண்ணியத்தில் பணம்–புகழ் நிறைய சம்பாதித்து இருக்கிறேன். எல்லாமே தமிழக மக்கள் கொடுத்தது.
‘ராணா’
‘ராணா’ படத்தின் கதை இருபது வருடங்களாக எனக்குள் இருந்தது. அந்த கதையை படமாக்க முயன்றபோதுதான் எனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. ஆஸ்பத்திரியில் இருந்து திரும்பி வந்தபோது, ‘ராணா’ படத்தில் நடிக்கிற அளவுக்கு உடம்பு ஒத்துழைக்கவில்லை.
அப்போதுதான் ‘கோச்சடையான்’ படத்தின் கதையை கே.எஸ்.ரவிகுமார் என்னிடம் சொன்னார். அந்த கதை, ‘ராணா’வை விட, ரொம்ப பிடித்தது. இந்த படத்தை ‘மோஷன் கேப்சரிங்’ டெக்னாலஜியில் பண்ணலாம் என்றார்கள். எனக்கு ‘டெக்னாலஜி’ எல்லாம் தெரியாது. இதுவரை யாருமே செய்திராததை, தமிழ் மக்கள் என் மீது காட்டும் அன்புக்கு மாற்றாக ஏதாவது செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.
ரூ.200 கோடி
‘மோஷன் கேப்சரிங்’ டெக்னாலஜியில் படம் எடுக்க ஐந்தாறு வருடங்கள் ஆகும். ரூ.200 கோடி வரை செலவாகும் என்று சிலர் சொன்னார்கள். நாம் திட்டமிட்ட பட்ஜெட்டிலேயே படத்தை எடுத்து விடலாம் என்று நம்பிக்கையூட்டியவர், முரளி மனோகர். அதன்பிறகே முயற்சியில் இறங்கினோம்.
இந்த படம் எடுப்பதற்கு எவ்வளவு கஷ்டம் என்று வாயால் சொல்ல முடியாது. முழு படத்தையும் நான் பார்த்தேன். நிச்சயமாக படம் எல்லோருக்கும் பிடிக்கும் என்று நூறு சதவீதம் நம்பிக்கை இருக்கிறது.
ரசிகர்களுடன் சந்திப்பு
‘கோச்சடையான்’ படத்தின் வெற்றி விழாவில், ரசிகர்கள் எல்லோரையும் சந்திப்பேன். ஆண்டவன் புண்ணியத்தில் இது நடக்கணும். நடக்கும்.
ஐஸ்வர்யாவுக்கும், சவுந்தர்யாவுக்கும் கல்யாணம் பண்ணி வைத்து விட்டேன். இரண்டு பேரையும் அவர்களின் கணவர்களும், மாமனார்–மாமியார்களும் தங்கள் குழந்தைகளாக கருதி, ஊக்குவித்து வருகிறார்கள். அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
குடும்பத்துக்கு முன்னுரிமை
பெண்கள் முதலில் குடும்பத்தை கவனித்துக்கொள்ள வேண்டும். பெண்கள் தங்கள் குடும்பத்துக்கு முன்னுரிமை கொடுத்தால்தான் நல்ல குடிமக்களை உருவாக்க முடியும். திருமணமாகி இரண்டு குழந்தைகள் பெற்றபின், பத்து பதினைந்து வருடம் கழித்து படம் எடுங்கள்.
சவுந்தர்யாவை நான் குழந்தையாகவே பார்த்து விட்டேன். இந்த படத்துக்காக அந்த பெண் ரொம்ப கஷ்டப்பட்டு விட்டாள். அவள் முதன்முதலாக என் முன்னால் நின்று, ‘‘ஆக்ஷன்’’ என்று சொன்னபோது, எனக்கு சிரிப்பு வந்தது. அப்புறம் ரவிகுமார் வந்து, ‘‘ஆக்ஷன்’’ சொன்னார். சவுந்தர்யா, ‘‘கட்’’ மட்டும் சொன்னாள். இந்த படத்தின் வெற்றி விழாவில், உங்கள் அனைவரையும் மீண்டும் சந்திக்கிறேன்.’’
இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.
முன்னதாக, நிகழ்ச்சி தொகுப்பாளர் ரஜினிகாந்தை மேடைக்கு அழைத்தபோது தியேட்டரே அதிர்கிற அளவுக்கு ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள். அதைப்பார்த்து ரஜினிகாந்த் நெகிழ்ந்துபோய், கண்களை துடைத்துக் கொண்டார். கவிஞர் வைரமுத்து பேசும்போதும், ரஜினிகாந்தின் கண்கள் ஈரமானது.
ஷாருக்கான்
விழாவில், இந்தி நடிகர் ஷாருக்கான் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பாடல்களை வெளியிட்டு பேசினார். அவர் பேசியதாவது:–
‘‘25 வருடங்களுக்கு முன்பு ஒரு இந்தி படப்பிடிப்பில் ரஜினிகாந்தை முதன்முதலாக பார்த்தேன். அப்போது நான் ஒரு ரசிகனாக கூட்டத்தோடு கூட்டமாக நின்று கொண்டிருந்தேன். ரஜினியுடன் நடித்துக்கொண்டிருந்த நடிகர்–நடிகைகள் எல்லோரும் மதிய உணவு சாப்பிட போய் விட்டார்கள். இவர் மட்டும் சாப்பிடாமல், சிகரெட்டை ஸ்டைலாக தூக்கிப்போட்டு பிடித்துக்கொண்டிருந்தார்.
நான், ரஜினிகாந்தின் தீவிர ரசிகர். என்னுடைய ‘ரா–1’ படத்துக்கு ரஜினிகாந்த் உதவினார். அவருக்காகவே இந்த விழாவுக்கு வந்தேன். தமிழ் படங்கள் நாட்டுக்கு பெருமை சேர்க்கின்றன. நான் சென்னை வரும்போதெல்லாம் தமிழ் மக்கள் என் மீது அன்பு செலுத்துகிறார்கள்.’’
மேற்கண்டவாறு ஷாருக்கான் பேசினார்.
கவிஞர் வைரமுத்து
கவிஞர் வைரமுத்து பேசியதாவது:–
‘‘கோச்சடையான் என்ற தலைப்புதான் என் முதல் ஈர்ப்பு. கோச்சடையான் என்ற சொல்லுக்கு பொருள் என்ன? ‘‘மின்னார் செஞ்சடை மேல் மிளிர் கொன்றை அணிந்தவனே’’ என்று பதிகம் பாடுவதால், கோச்சடையான் என்ற சொல் சிவபெருமானைக் குறிக்கிறது. இன்னொரு வகையிலும் பொருள் கொள்ளலாம். மாறன், வழுதி, சடையன் என்ற பெயர்கள் பாண்டிய மன்னர்களின் பரம்பரையை குறிக்கின்றன.
எனவே இதை ஒரு தமிழ் மன்னனின் பெயர் என்றும் கருதலாம். ஆத்திகம், நாத்திகம் என்ற இரண்டுக்கும் பாலம் கட்டும் வகையில் இந்த பெயர் அமைந்திருப்பது, தனிச்சிறப்பு. பெயர் சூட்டியவர்களை பாராட்டுகிறேன்.
4 நிலைகளை தொட்டவர்
ரஜினிகாந்த் இந்த படத்தின் மூலம் நவீன தொழில்நுட்ப உலகத்திலும் தடம் பதித்து விட்டார். கறுப்பு–வெள்ளை, வண்ணம், முப்பரிமானம், சலனப்பதிவு தொழில் நுட்பம் என்ற நான்கு நிலைகளையும் தொட்டவர் என்ற பெருமை அவருக்கு வாய்த்திருக்கிறது.
ரஜினி 40 ஆண்டுகளாக தன் சிம்மாசனத்தில் அசைக்க முடியாமல் அமர்ந்திருக்கிறார். அதற்கு உழைப்பு மட்டுமே காரணமல்ல. இவரை விட உழைக்கிறவர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள். உழைப்பு ஒருவனுக்கு வீடு கட்டித்தருகிறது. நல்லெண்ணம்தான் சுற்றுச்சுவர் கட்டித்தருகிறது. அவர் மனிதாபிமானம் மிகுந்தவர்.
அவர் ஒரு அறிவாளி என்பதை பல நேரங்களில் கண்டிருக்கிறேன். ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு உச்சத்தில் இருந்தபோது, அவரைப் பார்த்து ஒரு கேள்வி கேட்கப்பட்டது. ‘‘தமிழ்நாட்டின் முதல்–அமைச்சராக ஒரு தமிழன்தான் வரவேண்டும் என்கிறார்களே, உங்கள் பதில் என்ன?’’ இந்த கடுமையான கேள்விக்கு அவர் அற்புதமாக பதில் சொன்னார். ‘‘நல்ல கருத்துத்தானே’’ என்றார்.
தமிழ்நாட்டின் முதல்–அமைச்சராக ஒரு முதலியாரோ, நாடாரோ, தேவரோ, பிள்ளையோ வரவேண்டும் என்று சொல்லாமல், ‘‘ஒரு தமிழன்தான் வரவேண்டும் என்பது நல்ல கருத்துத்தானே’’ என்று சாமர்த்தியமாக பதில் சொன்னார்.’’
இவ்வாறு கவிஞர் வைரமுத்து பேசினார்.
டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் பேசும்போது, ‘‘கோச்சடையான் படத்தின் வெற்றி விழாவை ரசிகர்களின் மாநில மாநாடாக நடத்தி, ரசிகர்கள் அத்தனை பேரையும் ரஜினிகாந்த் சந்திக்க வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டார்.
ஏவி.எம்.சரவணன்
விழாவில் பட அதிபர் ஏவி.எம்.சரவணன், தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் சரத்குமார், நடிகர் ஜாக்கி ஷராப், நடிகை தீபிகா படுகோன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், டைரக்டர்கள் கே.பாலசந்தர், ஷங்கர், கே.எஸ்.ரவிகுமார், பட அதிபர் டாக்டர் முரளி மனோகர் ஆகியோரும் பேசினார்கள்.
ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த், மூத்த மகள் ஐஸ்வர்யா, மருமகன் தனுஷ், நடிகர்கள் பிரபு, நாசர், ஆதி, நடிகை ஷோபனா, படத்தொகுப்பாளர் ரசூல் பூக்குட்டி, பட அதிபர்கள் ராம்குமார், டி.ஜி.தியாகராஜன், ஏ.எம்.ரத்னம், சிவசக்தி பாண்டியன், கதிரேசன், முரளி, டைரக்டர் கஸ்தூரிராஜா, வினியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம், ஆல்பர்ட் தியேட்டர் மாரியப்பன் உள்பட ஏராளமான திரையுலக பிரமுகர்கள் கலந்துகொண்டார்கள்.
-
10th March 2014 03:19 PM
# ADS
Circuit advertisement
Bookmarks