http://tamil.thehindu.com/cinema/tam...cle5787630.ece

உத்தம வில்லன்: இரட்டை வேடத்தில் கமல்

உத்தமன் மற்றும் மனோரஞ்சன் என்ற இருவேடத்தில் 'உத்தம வில்லன்' படத்தில் நடித்து வருகிறார் கமல்ஹாசன்.

'விஸ்வரூபம் 2' படத்தினைத் தொடர்ந்து கமல் நடிக்க திட்டமிட்ட படம் 'உத்தம வில்லன்'. இப்படத்தின் கதை, திரைக்கதை கமல்ஹாசன் எழுத, ரமேஷ் அரவிந்த் இயக்க திட்டமிட்டார்கள். 'விஸ்வரூபம் 2' படத்தின் பணிகள் இறுதிகட்டத்தில் இருக்கும் நிலையில், 'உத்தம வில்லன்' படத்தின் படப்பிடிப்பு பெங்களூரில் தொடங்கியது.

கமலுடன் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியானாலும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் இருந்தார்கள்.

இந்நிலையில் 'உத்தம வில்லன்' படக்குழு, யாரெல்லாம் என்ன பாத்திரத்தில் நடித்து வருகிறார்கள் என்பதை அதிகாரப்பூர்வமாக இன்று (சனிக்கிழமை) அறிவித்து இருக்கிறது.

அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பது,"உத்தமன் என்ற 8ம் நூற்றாண்டுக் கூத்துக் கலைஞன் பாத்திரத்திலும், மனோரஞ்சன் என்ற 21ம் நூற்றாண்டின் சினிமா உச்ச நட்சத்திரமாக மற்றொரு பாத்திரத்திலும் கமல் நடித்து வருகிறார்.

மனோரஞ்சனை கண்டெடுத்து நட்சத்திர அந்தஸ்திற்கு உயர்த்திய, குருவாக சினிமா இயக்குநர் கே.பாலசந்தர் நடிக்கிறார். மனோரஞ்சனின் மனைவியாக ஊர்வசியும், மனோரஞ்சனின் மாமனாராக இயக்குநர் விஸ்வநாத்தும் நடிக்கின்றனர்.

8ம் நூற்றாண்டில் நடக்கும் உத்தம வில்லனின் கதையில் மனநோயால் பாதிக்கப்பட்ட இளவரசியாக பூஜா குமாரும், 21ம் நூற்றாண்டுக் கமலின் ரகசியக் காதலியாக ஆண்ட்ரியாவும் நடிக்கின்றனர்.

முத்தரசன் என்ற 8ம் நூற்றாண்டுக் கொடுங்கோல் சர்வாதிகாரியாக நாசரும், ஜோசப் ஜக்காரியா என்ற பாத்திரத்தில் ஜெயராமும், ஜெயராமின் வளர்ப்பு மகளாக முக்கிய பாத்திரத்தில் பார்வதி மேனன் நடிக்கிறார்கள். எம்.எஸ்.பாஸ்கர் சொக்கு செட்டியார் என்ற நினைவில் நிற்கக் கூடிய ஒரு பாத்திரத்தில் நடிக்கிறார்.

இப்படத்தின் கதை, திரைக்கதையை கமல்ஹாசன் எழுத, இயக்கி வருகிறார் ரமேஷ் அரவிந்த். ஒளிப்பதிவு ஷாம்தத், படத்தொகுப்பு விஜய் சங்கர், பாடல்கள் கமல்ஹாசன் மற்றும் விவேகா, இசை ஜிப்ரான் உள்ளிட்டோர் பணியாற்றி வருகிறார்கள். இப்படத்தினை தயாரித்து வருகிறார் சுபாஷ் சந்திரபோஸ்" என்று கூறியுள்ளார்கள்.