Dear Raghul Ram,

Nice write-up about 'Vaira Nenjam', a movie close to my nenjam. I feel I can re-produce my previous write-up abput plus and minus of this film. Here is the 'meel padhivu'....

‘வைர நெஞ்சம்’ படத்தின் ப்ளஸ் பாயிண்ட்டுகள்:

1) ஸ்மார்ட்டான நாயகன், நாயகி மற்றும் வில்லி. ஸ்ரீதரின் படங்களிலேயே நடிகர்திலகத்துக்கு மிக அருமையான மேக்கப் மற்றும் ஹேர்ஸ்டைல். (ஸ்ரீதரின் படங்களிலேயே நடிகர்திலகம் விக் வைத்து நடித்த ஒரே படம் இது. விடிவெள்ளி, நெஞ்சிருக்கும்வரை, ஊட்டி வரை உறவு, சிவந்தமண் அனைத்திலும் ஒரிஜினல் முடி).

2) அருமையான பாடல்கள் மற்றும் இசை. மெல்லிசை மன்னரின் அற்புத உழைப்பில் 'ஏஹே மைஸ்வீட்டி', 'செந்தமிழ் பாடும் சந்தன காற்று', 'நீராட நேரம் நல்லநேரம்', 'கார்த்திகை மாசமடி', 'அம்மான் மகன் எங்கே அவன் என்னோடு சேர்ந்தாட' என அனைத்துப் பாடல்களும் இனிமையோ இனிமை.

3) உடையலங்காரம் (Costumes): நட்சத்திரங்கள் அனைவருக்கும் அளிக்கப்பட்ட உடையலங்காரம் வெகு நேர்த்தி. நடிகர்திலகம், பத்மப்ரியா, முத்துராமன், பாலாஜி, சகுந்தலா மற்றும் வில்லனின் கையாள் என அனைவருக்கும் அழகான உடைகள். நடிகர்திலகம் அணிந்து வரும் உடைகளனைத்தும் கண்களுக்கு விருந்தோ விருந்து. எல்லா வித உடைகளும் SUPER MATCH.

4) கிளுகிளுப்பு: நடிகர்திலகமும் பத்மப்ரியாவும் கொஞ்சலும், சிணுங்கலுமாக காதல் செய்யுமிடங்கள் நல்ல இளமை விருந்து. பத்மப்ரியா இந்தப்படத்தில் இருந்த இளமையும், அழகும், கவர்ச்சியும் அவர் நடித்த வேறெந்தப் படத்திலும் இல்லை. அதுபோலவே வில்லன்கூட்டத்தின் கையாளாக வரும் சி.ஐ.டி.சகுந்தலாவும் சரியான செக்ஸ் பாம். பாலாஜியின் பிறந்தநாளில் சேலையழகில் ஷோபா ராமநாதன் என்ற பொய்ப்பெயருடன் அறிமுகமாகும் இடமும், தொடர்ந்து பார்ட்டியில் நடனமாடிக்கொண்டே நடிகர்திலகத்துடன் வைர வியாபார பிஸினஸ் பேசும் காட்சியும் செம க்யூட். 'நீராட' பாடல் காட்சியின்போது சரியான இளமை விருந்து. ஒருகாட்சியில் பாலாஜி, சகுந்தலாவை வெறுமனே ஒரு டவலில் சுற்றி அள்ளிக்கொண்டு போகும் காட்சி பலரை கனவில் வந்து தொல்லைப்படுத்தியிருக்கும். அவ்வளவு அட்டகாசம். மற்றும் கிளுகிளுப்பு.

5) ஒளிப்பதிவு: படம் முழுவதும் யு.ராஜகோபால், பெஞ்சமின் இருவரின் ஒளிப்பதிவு சூப்பரோ சூப்பர். கண்ணைக்கவரும் வண்ணக்கோலம். 'செந்தமிழ் பாடும் சந்தனக்காற்று' பாடலில் கடற்கரை ஓய்வுக்குடில்களை படம்பிடித்த அழகு. இரவுக்காட்சிகளைப்படம் பிடித்த அழகும் அப்படியே. நைட்ஷோ சினிமாவுக்குப் போய்த்திரும்பும் பத்மப்ரியா பேங்கில் கொள்ளை அடிக்கவந்த கும்பலால் வாட்ச்மேன் கொல்லப்படும் காட்சியைக்கண்டு அலற, துரத்திவரும் கொள்ளைக்கும்பல் ஆளிடம் இருந்து தப்பி ஓடும் காட்சிகளில் ஒளிப்பதிவும், பின்னணி இசையும் மிக அருமை. ஸ்டுடியோ செட்களும் 'ஹோ'வென்று பெரிதாக இல்லாமல் கனகச்சிதம். பத்மப்ரியா வீடு செட் மிக அழகு என்றால், சகுந்தலா வீடு கலைநயம். (வேடிக்கை என்னவென்றால், கதாநாயகன் நடிகர்திலகத்துக்கு படத்தில் வீடு கிடையாது).

6) சண்டை காட்சிகள்: நடிகர்திலகத்தின் அறிமுகக்காட்சியைத் தொடர்ந்து ஏர்ப்போர்ட்டிலிருந்து வரும் வழியில் முதல் சண்டைக் காட்சி. வைரங்களடங்கிய பெட்டியைப் பறித்துக் கொண்டு ஓடும் வில்லனின் ஆட்களோடு நடிகர்திலகமும் முத்துராமனும் சூட்கேசை தூக்கி தூக்கிப் போட்டு பிடித்தபடி மோதும் சண்டை அபாரம் எனினும் அதில் மெல்லிசை மன்னர் 'ராஜா' பாணியில் வோகல் எஃபெக்ட் கொடுக்க நினைத்து சற்று சொதப்பி விட்டார். இரண்டாவது சண்டைதான் டூப்ளிகேட் போலீஸுடன் ஜீப்பில் போடும் அபார சண்டைக்காட்சி. முன்னால் சென்று கொண்டிருக்கும் லாரியிலிருந்து ரெயில்கள் இறங்க அதன் வழியே ஜீப் லாரிக்குள் ஏற்றப்பட்டு நடக்கும் சண்டை மிக அற்புதம். மூன்றாவது சண்டை, நல்லவராக நடிக்கும் சகுந்தலாவினால் வைரவியாபாரத்துக்காக அழைத்து செல்லப்படும் பாழடைந்த கட்டிடத்தில் நடக்கும் சண்டை. இதனிடையே ஓடும் காரில் நடக்கும் மினி சண்டை, அத்துடன் பாலாஜியுடன் ஒரு துப்பாக்கி சண்டை. முடிவாக கிளைமாக்ஸ் சண்டை. அனைத்து சண்டைக்காட்சிகளிலும் நடிகர்திலகம் தூள் கிளப்புவார். தன்னை நூற்றுக்கு நூறு பொருத்தமானவர் என்று நிரூபித்திருப்பார். ஒரு ஜேம்ஸ்பாண்ட் படத்துக்கான அட்டகாசமான சண்டைக்காட்சிகள்.

7) பாத்திரப்படைப்பு :
பத்மப்ரியா: அவருடைய முதல்படம். அதிகம் நடிக்க வாய்பில்லை எனினும் அழகாக வளைய வருகிறார். நடிகர்திலகத்தை காதலித்தபோதிலும், அவர் அண்ணன் மீது காதலன் கொலைப்பழி சுமத்தும்போது, அண்ணனின் பக்கம் நின்று வாதிடுவது அவர் பாத்திரத்தை உயர்த்துகிறது அவர் உடல்வாகைப் பார்க்கும்போது (அவரது மட்டுமல்ல நடிகர்திலகம் உள்பட அனைவரின் உடல்வாகை நோக்கும்போது) இப்படம் அதிகநாட்கள் தயாரிப்பில் இருந்ததாக நம்ப முடியாது.

முத்துராமன்: சூழ்நிலையின் காரணமாக கொள்ளைக்கு உடந்தையாக இருந்துவிட்டு, அதைவிட்டு விலகமுடியாமல் தவிக்கும் தவிப்பை நன்றாக பிரதிபலிக்கிறார். தனியார் நிறுவனத்தில் வேலை செய்வதாக நம்பிய தன நண்பன், ஒரு வைரகடத்தல் வியாபாரி என அறிய வரும்போது காட்டும் அலட்சியம், அதே நண்பன் ஒரு துப்பறியும் அதிகாரி, அதிலும் தன வங்கிக்கொள்ளையைக் கண்டுபிடிக்க ஸ்பெஷலாக நியமிக்கப்பட்டவர் என அறியும்போது காட்டும் அதிர்ச்சி, பேங்க் கொள்ளைக்கு தான் உடைந்தையாக இருந்ததை சாதகமாக்கி தன்னை பிளாக்மெயில் செய்யும் வில்லனின் போதனைப்படி தன் நண்பனையே கொல்ல பாத்ரூம் பைப்பில் கரண்ட் கனெக்ஷன் செய்துவிட்டு, பின்னர் (நட்பின் உந்துதலால்) நண்பனுக்கு எலெக்ட்ரிக் ஷாக் அடித்த அதே வினாடியில் மெயின் ஆப்செய்து காப்பாற்றுவது என, தன் ரோலை திறம்பட செய்துள்ளார். முதல் சண்டையிலும் கிளைமாக்ஸ் சண்டையிலும் ஹீரோவுக்கு சமமான வாய்ப்பு. நன்கு பயன்படுத்திக் கொண்டுள்ளார். 'பைனல் ஆடிட்டிங்' என்ற வார்த்தையைக் கேட்கும்போதே அப்பாவும் பின்னர் மகனும் கதிகலங்குவது நன்கு எடுக்கப்பட்டுள்ளது.

8) சுவாரஸ்யமான காட்சிகள் என்றால் பலவற்றைச் சொல்லலாம். வங்கி அதிகாரியாக இருந்த அப்பாவின் கையாடலைச் சொல்லி மிரட்டியே கொள்ளைக்கும்பல், வங்கியின் பிரதான சாவிகளை மெழுகில் பிரதியெடுத்து அதன்மூலம் கொள்ளையை சுலபமாக்குவது. பாலாஜியின் பிறந்தநாள் விருந்துக்காட்சி. நடிகர்திலகத்திடம் பத்மப்ரியாவின் செல்லமான கோபங்கள், சிணுங்கல்கள் என நிறைய அங்கங்கே தூவப்பட்டுள்ளன. .

9) இது போன்ற ‘கிரைம்’ படங்களுக்கு. வேகத்தடைகளாக அமையக்கூடிய அம்மா செண்டிமெண்ட்கள் இப்படத்தில் இல்லாதது மிகப்பெரிய ஆறுதல். யாருக்குமே அம்மா இல்லாததால் சீனியர் நடிகைகளுக்கு வேலையே இல்லை. (தங்கசுரங்கத்திலும், ராஜாவிலும் நாயகனின் அம்மாக்கள் தேவையான பாத்திரங்கள். ஜெயலலிதாவின் அம்மா காந்திமதி ஒரே சீன் என்பதால் மன்னிக்கலாம்)

மைனஸ் பாயிண்ட்ஸ்:

1) இம்மாதிரி க்ரைம் மற்றும் துப்பறியும் படங்களுக்கு தேவையான ஸ்டார் வால்யூ மிகவும் குறைவு. வெறும் ஐந்து பேர் மட்டுமே படத்தில். நடிகர்திலகம், பத்மப்ரியா, முத்துராமன், பாலாஜி, சகுந்தலா அவ்வளவுதான். ராஜா, என்மகன் போன்ற படங்களில் இருந்த நட்சத்திரகூட்டம் வைர நெஞ்சத்தில் இல்லை.

2) மந்தமான ஆரம்பம், வலுவான கதை இருந்தும் அதைத் தூக்கி நிறுத்தும் அளவு வலுவில்லாத மெதுவான திரைக்கதை. ஆனால் நடிகர்திலகத்தின் அறிமுகத்துக்குப்பின் படம் வேகம் பிடிக்கிறது. லவ்ஸ்டோரி கதைகளை மட்டுமே படமாக்கி வந்த ஸ்ரீதருக்கு கிரைம் சப்ஜக்டில் அனுபவமின்மை. (அவர் சிஷ்யரான சி.வி.ஆர். இதில் கில்லாடி).

3) சண்டைக்காட்சிகளில் யாரோ முன்பின் தெரியாத ஆட்களுடன் சண்டையிடுவதற்கு மாறாக ராமதாஸ், கே.கண்ணன், ஜஸ்டின் போன்றவர்களுடன் சண்டையிடுவதாக அமைத்திருக்கலாம். முத்துராமனின் அப்பா ரோலில் செந்தாமரை, முத்துராமனை மிரட்டும் வில்லனாக மனோகர் என்றெல்லாம் போட்டு, திரைக் கதையையும் ஸ்பீட் அப் பண்ணியிருந்தால் படம் எங்கேயோ போயிருக்கும் (முத்துராமனின் தந்தை இறந்தபின், அவரை வந்து மிரட்டுவதில் துவங்கி படம் முழுதும் வில்லில் பிரதான கையாளாக வரும் அந்த நடிகர் யார்?. அதுபோல படத்தின் துவக்கத்தில் முத்துராமன், பத்மப்ரியா இவர்களின் தந்தையாக வந்து தற்கொலை செய்துகொள்ளும் நடிகர் யார்?)

4) ஏர்போர்ட்டில் நடிகர்திலகத்தின் அறிமுகக்காட்சி, தியேட்டரில் படம் முடிந்து மக்கள் வெளியேறும் காட்சிகளில் எல்லாம் ரிச்னஸ் மிகக்குறைவு. பிரதான வில்லனின் இருப்பிடமாக காண்பிக்கப்படும் இடமும் மிகச்சிறியது. ஒரு சிறிய ஹால். அதில் ஒரு மேஜையும் சுழல் நாற்காலியும் மட்டுமே. போதாக்குறைக்கு அந்த இடமும் ஒரே இருட்டு வேறு. இதன் காரணமாகவே அட்டகாசமான கிளைமாக்ஸ் சண்டை கொஞ்சம் சுவைக்குறைவாக தெரிகிறது. (ஓ.ஏ.கே.தேவரின் இன்ப நிலையம் போலவோ அல்லது ரங்காராவின் மாளிகை போலவோ பிரமாண்டாமோ வெளிச்சமோ இல்லை). வில்லனின் இரண்டு பக்கமும் ரேகா, ரீட்டா என்ற பெயர்களில் தொடை காட்டும் அழகிகள் இருந்தும் சரிவர பயன்படுத்திக்கொள்ளவில்லை.

5) காமெடி ட்ராக் அறவே இல்லை. இது கிரைம் படத்துக்கு மைனஸா அல்லது பிளஸ்ஸா தெரியவில்லை. ரங்கூனில் கட்டபொம்மன் தெருவில் குடியிருந்த நாகேஷும், 'ட்ரிபிள் ராம்' சகோதரர்கள் சந்திரபாபுவும் அப்படங்களின் ஓட்டத்துக்கு எவ்வகையில் துணையிருந்தார்கள் என்பது தெரியவில்லை. ஸ்ரீதர் படம் என்பதால் சச்சு மட்டும் ஒரேஒரு காட்சியில் வந்து போகிறார்.

6) இம்மாதிரி ஜாலியான படங்களிலாவது நடிகர்திலகம் அதிக சீன்களில் ‘கூலிங்கிளாஸ்’ அணிந்து நடித்திருக்கலாம். அவுட்டோர் காட்சிகளிலாவது முடிந்தவரை அணிந்து ரசிகர்கள் ஆவலை பூர்த்தி செய்திருக்கலாம். அதேபோல துப்பறியும் அதிகாரி ரோல் அமைந்த இப்படத்தில் அதிக காட்சிகளில் ரிவால்வருடன் தோன்றியிருக்கலாம். (மக்கள் கலைஞர் ஜெய், ஜேம்ஸ்பாண்ட் படங்களில் ஒப்பந்தமானதுமே கையில் ரிவால்வரை பெவிகால் போட்டு ஒட்டிக்கொள்வதை நடிகர்திலகமோ ஸ்ரீதரோ பார்த்ததில்லையா).

ஆனால் இத்தனை மைனஸ்களையும் தாண்டி படம் விரும்பக் கூடியதாக அமைந்துள்ளதுதான் ‘வைர நெஞ்ச’த்தின் சிறப்பு.