உமையிடம் ஞானப்பால் பருகிய ஆளுடைய பிள்ளைக்கு என்ன ஆயிற்று..

கானகத்தில் காரிருளில் கலங்கிநின்ற புள்ளிமான்
…கடகடத்து வானகத்தில் கண்முன்வந்த மின்னலால்
ஆனபடி மரமருகே அன்னைமானும் நிற்கவும்
…அலறித்தாவிச் தஞ்சமென அடைந்ததுபோல் அங்குதான்
ஊன உடல் உளத்திடையே ஒளிந்திருந்த கருமையும்
.,..உணர்வுகளைப் பெருக்கவிட்டு ஓடியோடிச் சென்றிட
ஞானமனம் பெற்றவராய் நாவதிலே கலைமகள்
…நன்குவந்து குடியிருக்க விழியுமொளி கண்டதே..

சேக்கிழார் என்ன சொல்றார்..

எண்ணரிய சிவஞானத் தின்னமுதம் குழைத்தருளி
உண்ணடிசில் எனஊட்ட உமையம்மை எதிர்நோக்கும்
கண்மலர்நீர் துடைத்தருளிக் கையில்பொற் கிண்ணம்அளித்(து)
அண்ணலைஅங்கு அழுகைதீர்த்து அங்கணனார் அருள்புரிந்தார்.

சிவஞான அமுதத்தை பொற்கிண்ணத்தில் எடுத்து குழந்தை ஆளுடைய பிள்ளைக்கு உமையமை அளித்தாள்ங்கறார்..

அப்புறம் இன்னமும் சொல்றார்..

சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம்
பவமதனை அறமாற்றும் பாங்கினில்ஓங் கியஞானம்
உவமையிலாக் கலைஞானம் உணர்வரிய மெய்ஞ்ஞானம்
தவமுதல்வர் சம்பந்தர் தாமுணர்ந்தார் அந்நிலையில்

அப்புறம் தான் ஆளுடைய பிள்ளை ஞான சம்பந்தரா மாறினார்ங்கறார் சேக்கிழார்....
ஆனா இது அவர் அப்பாக்குத் தெரியாதே..!

*
குளிச்சு முடிச்சுட்டு வந்து பார்க்கிறார் சிவபாதர்.. பையன் சமர்த்தான்னா ஒக்காந்துக்கிட்டிருக்கான்.. ஆனா என்ன இது..கிண்ணம்..பொன் போலத் தெரியறதே..கோவிலுக்குள்ள போய் எடுத்துக்கிட்டு வந்துட்டானா என்ன..வாயோரம் என்ன..

”பிள்ளை.. என்னடா..இது..இந்தக் கிண்ணம் ஏது.. உள்ள போய் யார்கிட்டயாவது எடுத்துக்கிட்டு வந்தயா..சொல்லுப்பா.. போய்க் கொடுத்துடலாம்..அது என்னடாப்பா அது..வாயோரம்..யார் ஒனக்கு என்ன கொடுத்தா..”

சிரித்தது ஞானம்..

ஆர்ப்பரித்து அலைபோலேக் கேட்கின்ற அப்பா
..அலைமகளே இன்னமுதப் பாலினையே தந்தாள்
கார்குழலும் விரிந்திருக்கக் கருணைவிழி அங்கே
..கணக்கிலாத மழைபோலே எனைசற்று நோக்கி
சேர்த்தெடுத்து மடிமீதே தான்வைத்தே அப்பா
..சோர்வினையும் போக்குவண்ணம் உணவினையே தந்தாள்
தேர்போலே ஓரிடத்தில் நின்றுவிட்ட அறிவும்
…தெளிந்தேதான் சிவபாதம் நாடுதப்பா இன்று..

பார்த்தார் சிவபாதர்.. நெக்குருகினார்.. பையன் பேசின பேச்சுல்லாம் அவருக்கு சந்தேகம் எல்லாம் வரலை.. ஏனெனில் வா தா போ எனப் பேசிய பிள்ளை.. இன்று விருத்தம்போலப் பேசிப் பார்க்கிறது..