ஐ பார்த்தாச்சி.. தொழில்நுட்ப பிரமாண்டத்தில் ஷங்கர் அசத்துகிறார். குறைவே வைக்கல. ஒவ்வொரு காட்சியும் இழைத்திருக்கிறார். அந்த ஒரு விஷயத்தை கவனத்தில் கொண்டே அவரது கதை, திரைக்கதை, இயக்கத்தில் வெளிச்சமாக தெரிகிற பல பிழைகளை மன்னித்துவிடலாம் போல இருக்கு. ஒருவரிடம் இருக்கும் பிழைகளை பெரிதுபடுத்தி விமர்சனம் செய்யாமல் மற்ற இயக்குனர்களை ஒப்பிடுகையில் ஷங்கரிடம் இருக்கும் தனித்துவ தொழில்நுட்பம் சார்ந்த பிரமாண்டத்தை மெச்சனும்னு நினைக்கிறென். எதிர்மறையான விமர்சனங்களை வாசித்து வாசித்து, எதிர்பார்ப்பு இல்லாத நிலையில் ஐ படம் பார்த்தது ஒருவகையில் படத்தை ரசிக்க உதவியது.
விக்ரம் - வழக்கமா ஷங்கர் படத்தில் இருக்கும் நாயகத் தன்மையை விட, இதில் பல மடங்கு அதிகமான வாய்ப்பு. இந்த அளவுக்கு நீள அகலங்களோடு நாயகப் பாத்திரம் ஷங்கர் படத்தில் அமைத்ததில்லை. விக்ரமும் தன்னை முழுதாகவே அர்ப்பணித்திருக்கிறார். கதையோட்டத்தில் இருக்கும் பிழைகளை மீறியும் லிங்கேசன் பாத்திரம் தனியாக தெரிகிறது. நாயகியின் பாத்திரம் இதுவரை வந்த ஷங்கர் படங்களில் இல்லாதவண்ணம் செதுக்கப்பட்டிருப்பதும் ஆரோக்யமான விஷயம். ஆமி ஜாக்சன் அதை சரியாக பயன்படுத்தி இருக்கிறார். காதல் காட்சிகளில் ஷங்கர் தனது எல்.கே.ஜி நிலையிலிருந்து முன்னேறி வந்திருக்கிறார் என்பதும் பாராட்டப்படவேண்டியது. காதலன்-காதலி உருக்கமான காட்சிகள் சிலபல நன்றாக வந்திருக்கிறது. காதல் படம் என்றாலே நாயகன்-நாயகி பாத்திரங்களின் மீது படம் பார்ப்போர்களுக்கு ஒரு இனம் புரியாத அன்புவரனும்.. இவ்வளவு மசாலாக் காட்சி பிராமாண்டங்களுக்கு இடையில் அந்த ரசவாதம் கொஞ்சமாவது இப்படத்தில் நிகழ்ந்தேறி இருக்கிறது என்பதே கொஞ்சம் ஆறுதலான விஷயம். எனக்கு இதுபோல ஒன்னு ஆகியிருந்தால் நீ இப்படிதான் அம்போன்னு விட்டுட்டு போயிருப்பியா என தியா லிங்கேசனைப் பார்த்து கேட்பது ரசிக்கும்படியாக இருந்தது. காதல் காட்சிகள் தவிர்த்துப் பார்த்தால் கூட தியா பாத்திரத்தை ரொம்பவே சிறப்பாக செய்திருக்கிறார் ஆமி. ஆரம்பக் காட்சிகளில் சக விளம்படப் பட மாடல் ஜானிடம் காட்டும் வெறுப்புணர்ச்சிகள், விளம்பரத் துறை மேனஜர் பெண்மணியிடம் புலம்பும் காட்சிகள், லிங்கேசனோடு சென்னைத் தமிழில் கலாய்க்கும் காட்சிகள் என ஆமி ஸ்கோர் செய்யும் இடங்கள் பல.
சண்டைக் காட்சிகளின் காதலர் ஷங்கர் என்பது ஐ படத்திலும் பறைசாற்றப் படுகிறது. ரொம்பவே மெனக்கெட்டு ஒவ்வொரு சண்டைக் காட்சியும் உருவாக்கப் பட்டிருக்கிறது. ரயில்வண்டி சண்டை அற்புதம். ஆனால் அதை ரசிக்கக் கூடிய மனநிலையில் தியேட்டரில் மக்கள் ஒருவரும் இருக்க மாட்டார்கள் என நினைக்கிறென். ஏனெனில் படம் ரொம்பவே நீளம் என்பதை அதுபோன்ற தருணங்களில் மட்டுமே உணர்கிறார்கள். பெரிய மரக் கட்டைகள் சரிந்து விழும் பிரமாண்டத்தை எல்லாம் என்னால் பொறுமையாக அமர்ந்து ரசிக்கவே முடியல.
லிங்கேசன்-தியா பாத்திரங்களோடு சரிக்கு சமமாக சில நேரங்களில் அதையும் தாண்டி நம்முடன் பேசுவது பிசிஸ்ரீயின் ஒளி ஓவியம். பாடல்கள் - இசை மிககப்பெரிய பக்கபலம். பின்னணி இசையின் ஒலி பல இடங்களில் அளவுக்கு அதிகமாக இருப்பதாக தோன்றியது. அந்தக் காரணத்திற்காகவே பின்னணி இசையை அந்த அளவுக்கு ரசிக்கக் முடியல. ஒரு இடத்தில் ஒரு பாடலை அப்படியே சோகமான ரசத்தில் வாத்தியக் கருவியில் வாசிக்க விட்டிக்கிறார் ரஹ்மான். அது எந்த இடம் என சொல்லத் தெரியல. மறந்துவிட்டேன். ஆனால் அதுபோன்ற சில இடங்களில் மட்டும் ரஹ்மானின் பின்னணி இசையை அனுபவித்து கேட்க முடிந்தது.
ஷங்கரையும் பிசிஸ்ரீ-யையும் பாராட்டும் விஷயங்கள்..
1) ஆணழகன் போட்டி மற்றும் விளம்பர உலகம். பிரமாண்டங்களின் நடுவிலும் இந்த இருவிஷயங்களையும் இதுவரை பார்க்காத அளவிற்கு காட்சிகளில் கொண்டுவந்தது.
2) ரொம்ப அழகான இடங்களை மட்டுமே கேமராவில் க்ளிக் செய்யாமல் அழுக்கான சென்னைக் காட்சிகளையும் போறபோக்கில் பதிவு செய்ய நினைத்தது. உதாரணத்திற்கு ஒரு சென்னை ஹவுசிங் போர்டு இரு தொடர் கட்டிடங்களுக்கு இடைப்பட்ட இடத்தை ஒரே ஒரு காட்சியில் காட்டிச் சென்றிருக்கிறார். அவ்விடத்தின் தூய்மையின்மை நம் நிதர்சன வாழ்க்கையின் ஒழுங்கின்மையை கன்னத்தில் அறைந்து உணர்த்துகிறது.
3) சீனா நாட்டுக் காட்சிகள். எதோ கனவுலகத்திற்கு சென்றது போல இருக்கு.
4) பாடல்காட்சிகள் ஒவ்வொன்றிலுமே யுத்தி-இயக்கம் - கேமரா இரண்டின் கூட்டணி பல சிக்சர்களை தொடர்ந்து அடித்திருக்கிறது.
ஷங்கரிடம் காணப்படுகிற பிழைகள்:
1) திருநங்கை பாத்திர சித்தரிப்புகள். ஊரோரம் புளியமரம் என ஆடுவது, உடலை மட்டுமே நினைத்துக்கொண்டிருக்கும் பாத்திரமாக திருநங்கை செதுக்கப்பட்டது மலிவான எண்ணங்களுக்கு ஷங்கர் தீனி அளித்திருக்கிறார். திருநங்கை தான் இந்தியாவின் மிகத் திறமையான அலங்கார நிபுணர் என தியா அறிமுகப் படுத்தும் போது நான் கூட திருநங்கையின் திறமையான குணங்களை குவியப் படுத்தும் படமாகத் தெரிகிறதே என ஆவலுடன் எதிர்கொண்டேன். ஆனால் போகப் போக, ஷங்கர் மிகவும் மலிவாக அப்பாத்திரத்தை கடைசி வரையில் எடுத்துச் சென்றிருக்கிறார்.
2) நாலு வில்லன்கள் - அப்படியே அபூர்வசகோதர்கள் படத்தை பார்ப்பதுபோலவே தெரிந்தது. அதுவும் அந்த நான்குபேரும் ஒரே இடத்தில் லிங்கேசனுடன் உரையாடுவது நாடகத் தன்மையின் உச்சக் கட்டம். பிரமாண்டத்தில் எங்கேயோ பலமடங்கு முன்னேறிச் செல்லும் ஷங்கர் இதுபோன்ற 80களின் காட்சிப்படுத்தலில் அக்கறை செலுத்துகிறார்.
3) காம உணர்ச்சிகளை மையப்படுத்தியே டாக்டர் பாத்திரம் தியாவிடம் பற்று கொண்டது என சித்தரிப்பது.
4) சென்னைத் தமிழ் நாகரிமான தமிழ் அல்ல என்பதுபோல படத்தை அமைத்தது. சீனப் பயணத்திற்கு அப்புறம் சென்னைத் தமிழில் லிங்கேசன் பேசுவதில்லை. கொஞ்ச காலம் தொழில் சம்பதமாக ஒருவர் தனது வட்டாரமொழியை தவிர்த்திருந்தாலும், அதற்கு பிறகான காட்சிகளிலும் சென்னைத் தமிழில் லிங்கேசன் பேசாதது ஆக்கத்தில் அமைந்த தொடர்பு-பிழை. உடல்மாற்றம் அடைந்தபிறகும் சென்னைத் தமிழில் பேசியிருந்தால் லிங்கேசன் பாத்திரத்தில் இன்னும் ஈர்ப்பு கூடியிருக்கும்.
ஷங்கரின் காதல் படங்கள் - காதலன், ஜீன்ஸைக் காட்டிலும் ஐ முந்துகிறது. மற்றபடி பழிவாங்கல் படங்களில் மற்ற எல்லாப் படங்களைக் காட்டிலும் ஐ - பின்னைடைவே. தொழில்நுட்பம் சார்ந்த இயக்கம் , அரங்க அமைப்புகள், ஒளி ஓவியம் இவற்றில் ஷங்கரின் இதுவரையிலான படங்களை விட பல மடங்கு முன்னேற்றம். என்னோடு நீ இருந்தால் காட்சி அமைப்புகள் ஒரு சோறு பதம்.
ஐ = லிங்கேசன் - தியா - பிசிஸ்ரீ - ரஹ்மான் - உடைகள் / அரங்க வடிவமைப்பு / காட்சி அமைப்புகளில் காணப்படும் பிரமாண்டம்

ஷங்கர்!
Bookmarks