-
4th July 2015, 10:29 AM
#11
Senior Member
Diamond Hubber
பாபநாசம் சிறப்புக்காட்சி பார்த்தாகிவிட்டது. உத்தமவில்லனின் பாய்ச்சலுக்குப்பிறகு சுயம்புலிங்கத்தோடையும் ஒன்றமுடிகிறது. ஆரம்பக் காட்சி முதல், கடைசி வரை ஒரு சுயம்புலிங்கமாகவே தென்படும் கமல் திருநெல்வேலி உச்சரிப்பில் கட்டிப்போடுகிறார். ஒரு அடிப்படை ரசிகனாக வெகு நாட்களுக்கு அப்புறம் லுங்கி கட்டிய, வேட்டி கட்டிய, திருநீறு பூசிய, கோயில் வளாகத்தினுள் செல்லும் நடுத்தர வர்க்க பாத்திரத்தில் கமலின் உடல் மொழியை ரசிப்பதில் கொள்ளை ஆனந்தம். கமல் சொன்னதுபோல, மகாநதியின் இன்னொரு வடிவத்தைத்தான் பார்க்கிறோம் என்ற உணர்வு ஏற்பட்டது நிறைய இடங்களில்.
சுயம்புலிங்கத்தைத் தவிர மற்ற துணைப்பாத்திரங்களும் சிறப்பாக நெய்யப்பட்டிருக்கின்றன. குறிப்பாக ஆஷா சரத். துடுக்கான உச்சரிப்பில் எளிதாக ஸ்கோர் செய்தாலும், பேசாமல் நடிக்கும் அந்தக் கடைசிக் காட்சி சிறப்பு. தேர்ந்த நடிகையின் அத்தனை இலக்கணங்களையும் அந்த இறுதிக் காட்சியில் ஒரு சேரப் பெற்றுவிடுகிறார். ராணி வேடத்தில் கௌதமி அவரது திரைப் பயணத்தில் முக்கியமானதொரு மைல்கல்லை அடைந்திருக்கிறார். மூத்த மகளாக நிவேதாவிற்கு கண்கள் பேசுகிறது. உத்தமவில்லனில் சொக்குசெட்டி, பாபநாசத்தில் டீக்கடை பாய்.. எம்.எஸ்.பாஸ்கர் பச்சோந்தியாய் பாத்திரத்தில் ஐக்கியமாகி விடுகிறார்.
உத்தமவில்லனில் கூட, இளையராஜாவை நினைக்கவில்லை. ஆனால் பாபநாசம் போன்ற உருக்கமான, நெகிழ்வான உணர்வுப் போராட்டங்களுக்கு ராஜாவைத் தவிர வேறு யார் இசையை தகுந்தவிதத்தில் சமைக்கமுடியும்? பார்த்து முடித்து வெளியெ வந்தும் எத்தனைப் படங்களில் ராஜாவின் பின்னணி இசைத் துண்டு மனதில் ரீங்காரமிட்டுக் கொண்டெ இருந்திருக்கிறது! அதுபோன்ற ஒன்றை ஜிப்ரானால் அடைய முடியவில்லை. சுயம்புலிங்கம் - ராணி குடும்பம், ஆஷா சரத்- ஆனந்த் மகாதேவன் குடும்பம் என தனித்தனியே ஒருசில மெலடிகளை அமைத்து அதை படம் முழுதும் இம்ப்ரோவைஸ் செய்திருந்தால் அதன் வீச்சே வேறுமாதிரி இருந்திருக்கும்.
விசாரிக்கிறேன் பேர்வழி என காவலர் பாத்திரத்தில் கலாபவன் மணி சுயம்புலிங்கம்-ராணி குடும்பத்தை கொடுமைப்படைத்தும் காட்சிகள் ஓரளவிற்குமேல் பார்க்க திகட்டிவிடுகிறது. தணிக்கைக் குழு இதற்கெல்லாம் U சான்றிதழ் கொடுப்பார்களா!
படம் முழுக்க, ஜெயமோகனின் வசனங்களில் அங்கதம் பளிச்சிடுகிறது. மண்புழு, இயற்கை சுற்றுப்புறத்தை பேணுதல் போன்றவற்றை சுயம்புலிங்கம் எடுத்துரைக்கையில் ஜெயமோகன்.இன் கட்டுரைகள் பல நினைவில் வருகிறது.
ஜீத்து ஜோசப் இயக்குனாராக, திரைக்கதையாளாராக ஒரு விறுவிறுப்பான குற்றப் படைப்பை செதுக்கியிருக்கும் விதத்திற்கு பாராட்டுக்கள். இரண்டே இரண்டு பாடல்களை மட்டுமே அதுவும் கதையோட்டத்தை நகர்த்தும் விதமாக படமாக்கிக்கொண்டு மூன்று மணிநேரத்திற்கு இக்கதையை நகர்த்திக் காட்டியதற்கு எத்தனை முறை வேண்டுமானாலும் மெச்சலாம். இதே கதையை மிஷ்கின் ஒருவேளை இயக்கியிருப்பின் எல்லா பாத்திரங்களுக்கும் இதுபோன்ற நடிப்பை வெளிப்படுத்த களம் அமைக்கப்பட்டிருக்குமா என்பது சந்தேகம். பிள்ளைகளுக்கு தெரிந்திடப்போகிறது என சுயம்புவை ஜாடையால் ராணி எச்சரிப்பதை ஒருநொடியில் புரிந்துகொண்டு புன்முறுவல்பூக்கும் மூத்தமகள். ஸோ கியூட்.
சுயம்புலிங்கமாக கமலைத்தவிர வேறு ஒருவர் செய்திருந்தால் இந்த அளவு மேன்மை அடைந்திருக்குமா? பதில் இல்லை. ஆனால் கமல் இதுவரை கடந்துவந்திருக்கும் பாத்திரப் பயணங்களை அசைபோட்டால், பாபநாசம் அப்படியொன்றும் பெரிதாய் கவரவில்லை. பலவித சுவாரஸ்யங்களை தன்னகத்தைக் கொண்டு ஒவ்வொருமுறை பார்த்து பரவசப்படக் கூடிய அளவிற்கு பாபநாசம் அப்படியொரு ஆகச்சிறந்த படைப்பாகவும் தோன்றவில்லை. உத்தமவில்லன் பார்த்தபிறகு எழுந்த அடுத்த முறை எப்போது பார்ப்பது என்ற ஈர்ப்பு பாபநாசத்தில் எழவில்லை. பார்த்த ஒரே முறையிலேயே திருப்தி கிடைத்துவிட்டது. கதை, திரைக்கதையில் கமலை விஸ்வரூபமாக பலபடங்களில் தரிசித்துவிட்டதால் அப்படி ஒரு நிலையை உணர்கிறேன்.
பாபநாசத்தைப் பார்த்துவிட்டு த்ரிஷ்யத்தை கண்டுகளிக்கலாம் என முடிவெடுத்திருந்தேன். ஆனால் த்ரிஷ்யத்தை முழுதும் பார்க்க பொறுமை இருக்குமா எனத் தெரியல. அதனால, லால்-கமல் நடிப்பில் யார் சிறப்பு என்ற வட்டத்திற்குள் போகவில்லை.
திருநெல்வேலித் தமிழுக்கு, கலாச்சாரத்திற்கு ஒரு அடையாளமாக இப்படம். வழங்கிய ஜீத்து ஜோசப், கமல், ஜெயமோகனுக்கு நன்றி.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
4th July 2015 10:29 AM
# ADS
Circuit advertisement
Bookmarks