பீஷ்மர் போரில் தனக்கு பதவி அளிக்காமல் கூட்டத்தோடு கூட்டமாக போர் புரிய கட்டளையிட்டு அவமானப் படுத்தும்போது சிம்மமெனப் பொங்கியெழுந்து உறையிலிருந்து வாளை உருவி அவரை தனியாகத் தன்னுடன் போர் செய்ய அழைத்தவுடன் துரியோதனன் சமாதானப் படுத்தி "முதலில் உறையில் வாளைப் போடு" என வேண்டிக்கொள்ள அடுத்த கணம் அந்த வாள் உறைக்குள் போகும் வேகம் இருக்கிறதே! தலைவா! உன்னால் மட்டுமே அது சாத்தியமாகும்.

பாண்டவர்கள் போரை விரும்புவதில்லை என சபையில் கண்ணன் கூறும்போது "அர்ஜுனன் இருக்கும் போதுமா" என்று அழுத்தமாக உச்சரித்து நையாண்டி செய்வது.

சபையில் பீஷ்மர் உயிருடன் இருக்கும் வரை போர் புரிவதில்லை என சபதம் செய்து தன் அரண்மனை வந்தவுடன் துரியோதனன் "அவரவர்கள் பாடு அவர்களுக்கு... இடையில் ஏன் பாடு இடிபாடாகிறது. இது எவருக்கேனும் புரிகிறதா? என்று இடித்துரைத்தவுடன் "நண்பன் உனக்கு நான்" என்று ஆத்திரமும்,கோபமும் கொப்பளிக்க துரியோதனனிடம் "பேசாதே" என்று பொங்குவது.

"பீமா, சாப்பாட்டு ராமா!.. உன் இடம் சமையலறை", என்று பீமனிடம் கேலி பேசி போரிடுவது.

கண்ணன் தன்னைப் பார்த்து கள்ளத்தனமாக சிரிக்கும் போது தன் முடிவை தெரிந்து கொண்டு "இந்தச் சிரிப்பு எமது முடிவைக் குறிப்பதா? என்று சிரித்துக் கொண்டே புரிந்து கொள்வது...

ஆஹா... ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

முகம் காட்டும் இடமெல்லாம் முத்திரை பதிக்கும் இடங்கள்.

இருந்து சரித்திரம் படைத்தவரே !

இறந்தும் சரித்திரம் படைக்கின்றவரே !


அன்புடன்,

நெய்வேலி வாசுதேவன்.