-
17th August 2015, 10:38 AM
#11
Senior Member
Seasoned Hubber
சுந்தர்ராஜன்
அருமை நண்பர் எத்திராஜ் அவர்களின் திரிசூலம் மலரைப் பத்திரமாக வைத்திருந்து இன்று பார் போற்றும் வண்ணம் இணையக் கோப்பாக மாற்றி எல்லோரும் உண்மையை உணரும் வண்ணம் அளித்துள்ள தங்களுக்கு என் உளமார்ந்த வாழ்த்துக்கள்.
இந்த மலரில் நீங்கள் பார்க்கலாம், நம்முடைய நண்பர்கள் சிவா எ சிவானந்தம், கதிர் காமநாதன், மற்றும் தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவின் மற்ற பகுதிகளிலிருந்து என உலகெங்கும் அந்நாட்களிலேயே இருந்த குறைந்த பட்ச வசதியான அஞ்சல் தலை மற்றும் உறைகளின் பயன்பாட்டுடன் தகவல் பரிமாற்றம் நடைபெற்றதும், அவற்றைத் தொகுத்து மலராய் வெளியிட்டதும் எத்துணை சிரமம் என்பதை அறியலாம்.
சிவாஜி ரசிகர் மன்ற மலர்களைப் பற்றி சொல்ல வேண்டுமானால் அதில் வசூல் நிலவரங்கள் 99 சதம் நம்பலாம். ஒரு சதவீதம் அச்சுக் கோப்பை சரிபார்க்க நேரமில்லாமல் வெளிவந்திருக்கக் கூடிய சந்தர்ப்பங்களினால் நிகழ்ந்திருக்கலாம்.
ஏனென்றால் இந்த வசூல் விவரங்களனைத்தும் திரையரங்குகளில் ரசிகர்கள் சென்று டிசிஆர் எனப்படும் ஆவணங்களிலிருந்து சேகரித்துக் கொண்டு வந்தவை. நாங்கள் இந்தப் பணிகளில் ஈடுபட்டு அவரவர் ஊர்களில் வசூல் விவரங்களைத் திரட்டி நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டு தொகுப்பாக அந்தந்த ஊர்களில் மலர்களாக வெளியிட பங்களிப்பு செய்துள்ளோம்.
தமிழ்நாட்டில் அனைத்து ஊர்களிலிருந்தும் எனக்கு மலர்கள் போஸ்டர்கள் போன்றவை வந்துள்ளன. நானும் அனுப்பியுள்ளேன். கால ஓட்டத்தில் பலவற்றை என்னால் பேண முடியாமல் போய் விட்டது. நான் முன்பே பலமுறை சொன்னது தான். தென்னக சிவாஜி கொள்கை பரப்பும் குழு ஆற்றியுள்ள பணி மகத்தானது. அதில் ஒவ்வொருவரின் உழைப்பும் ஈடு செய்ய முடியாததாகும்.
இதில் இவருடைய ரசிகர்கள் அவருடைய ரசிகர்கள் என பேதம் பார்க்க முடியாது. ஒரு படம் அவர்களது வசூல் அதிகம் என்றால் அடுத்த படம் நம்முடையது அதனை மிஞ்சுவது இயல்பு, நடந்த உண்மையும் கூட. இது எல்லா நடிகர்களுக்கும் பொருந்தும். பணமா பாசமா படம் இரு திலகங்களின் பட வசூலையும் முறியடித்ததும் நடந்துள்ளது. இவை யாவையுமே மக்களின் வரவேற்பு திரைப்படங்களுக்கு கிடைப்பதைப் பொறுத்தது.
ஆனால் இன்றைய கால கட்டத்தில் இந்த மலர்களில் உள்ள விவரங்களை நம்பாதவர்களுக்கு அதை நிரூபிக்கும் வண்ணம் ஆவணங்களை சான்றாகக் கொண்டு வருவது கடினம். திரையரங்குகளின் பல்வேறு விதமான கணக்கு வழக்குகள், ஒரே வளாகத்தில் பல்வேறு திரையரங்குகள், பல்வேறு காட்சிகள், பல்வேறு திரைப்படங்கள் என வளர்ந்து விட்ட காலத்தில் அவர்கள் அந்நாளைய ஆவணங்களை நாம் கேட்டாலும் தரக்கூடிய நிலையில் இருக்க மாட்டார்கள்.
இவற்றை அரசிடமும் நாம் கேட்டுப் பெற முடியாது. சுமார் 40 அல்லது 50 ஆண்டுகளுக்கு முந்தைய தகவல்களையோ ஆவணங்களையோ அரசுத்துறைகளிலிருந்தும் பெற முடியாது. அதை வைத்திருப்பார்கள் என்பதையும் உறுதியாகக் கூற முடியாது.
இவ்வாறான சூழ்நிலையில் விவாதங்கள் ஒரு அளவிற்கு மேல் நம்பகத்தன்மையை இழக்கும் வாய்ப்பு அதிகம்.
நடிகர் திலகத்தின் சாதனைகளைப் பொறுத்த மட்டில் பலவிதமாக அவற்றை அவர் படங்கள் புரிந்துள்ளன. வசூல் விஷயத்திலோ ஊதிய விஷயத்திலோ அவர் யாருக்கும் குறைந்தவர் அல்ல. அவரைக் குறைத்து எடை போட நினைப்பவர்கள், ஒன்று காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களாக இருக்க வேண்டும், அல்லது தமிழுணர்வு சிறிதும் இல்லாதவர்களாக இருக்க வேண்டும். அவர்களிடம் மனசாட்சி என்பது சிறிதும் இருக்காது. அதே போல மனசாட்சி உள்ளவர்கள் அவருடைய சாதனைகளை நிச்சயம் புரிந்து கொண்டி்ருப்பார்கள். எதையும் அலசி ஆராய்ந்து உண்மையை உணரும் மனம், நிச்சயமாக மனசாட்சி உள்ளவர்களுக்கு இருக்கும்.
நாளிதழ்களில் விநியோகஸ்தர்களோ அல்லது தயாரிப்பாளர்களோ தந்திருக்கக் கூடிய விளம்பரங்ளே இன்றைய கால கட்டத்தில் வசூல் சாதனைகளை நிரூபித்துக் காட்டக்கூடிய ஆவணங்களாகும்.
இந்த அடிப்படையிலேயே நாம் சாதனைகளைக் கூறுவதற்கான அணுகுமுறைகளை வகுத்துக் கொள்ள வேண்டும்.
தமிழ்த்திரைப்பட வரலாற்றில் அதுவரை இல்லாத சாதனையைச் செய்த திரிசூலம் வசூல் விவரங்களை மலராகத் தொகுத்து வெளிியிட்ட எத்திராஜ் அவர்களுக்கும் அதனைப் பேணிப் பாதுகாத்து இன்று நமக்களித்த தங்களுக்கும் மற்றும் நண்பர்களுக்கும் மீண்டும் என் உளமார்ந்த நன்றி.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
17th August 2015 10:38 AM
# ADS
Circuit advertisement
Bookmarks