16 மணி நேரத்தில் தூங்காவனம் டிரைலரை 4 லட்சம் ரசிகர்கள் பார்த்தனர்
கமலஹாசனின் ‘தூங்காவனம்’ படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாகிறது. இந்த படத்தில் திரிஷா, பிரகாஷ்ராஜ், கிஷோர், யூகிசேது, சம்பத், மது ஷாலினி, சோமசுந்தரம், சந்தானபாரதி, உமா ரியாஸ்கான், ஜெகன் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
கமலின் திரைக்கதையில் உருவாகி இருக்கும் இந்த படத்தை ராஜேஷ் செல்வா இயக்கி இருக்கிறார். ஒளிப்பதிவு–சானு ஜான்வர்கீஸ். இசை–ஜிப்ரான், பாடல்கள்–வைரமுத்து, வசனம்–சுகா, ஸ்டண்ட்–ரமேஷ், நடனம்–ஷோபி, தூங்காவனத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் பேசிய கமலஹாசன், இந்த படம் இரண்டு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இதுவரை ராஜ்கமல் நிறுவனம் 24 படங்களை ஒரே நேரத்தில் 2 மொழிகளில் தயாரித்து வெளியிட்டுள்ளது.
இரு மொழிகளிலும் உள்ள 14 கோடி ரசிகர்களை திருப்திப்படுத்தும் வகையில் இந்த படம் நன்றாக வந்திருக்கிறது. நல்ல படங்களை தொடர்ந்து விரைவாக தர வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறோம். அடுத்த படத்துக்கு தயாராகி விட்டோம். படப்பிடிப்புக்கு இடங்கள் எல்லாம் தேர்வு செய்யப்பட்டு விட்டது. இனி அடுத்தடுத்து படங்கள் வெளியாகும் என்றார்.
திரிஷா, ‘நான் கமலுடன் 2–வது முறை நடித்தது பெருமை’ என்று கூறினார். கவுதமி இந்த படத்துக்கு ஆடைகளை வடிவமைத்துள்ளார். விழாவில் பேசியவர்கள் அதை சுட்டிக்காட்டினார்கள். யூகிசேது 13 வருடங்கள் கழித்து கமலுடன் சேர்ந்து நடிப்பதாக கூறினார். இயக்குனர் ராஜேஷ் தனக்கு கமல் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது பெருமை என்றார்.
விழாவில் பட தயாரிப்பாளர்கள் சந்திரஹாசன், ஜார்ஜ் பயாஸ், சித்தாரா சுரேஷ்பாலாஜி மற்றும் இந்த படத்தில் நடித்தவர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக ‘டிரைலர்’ திரையிடப்பட்டது. இதில் முழுவதும் கமல் கோர்ட்–சூட் அணிந்து அமைதியாக வந்து அமர்க்களப்படுத்தி இருக்கிறார்.
கிஷோர், பிரகாஷ்ராஜ் ஆகியோருடன் கமல் மோதும் காட்சிகள் ஆவேசமாக இருந்தன. 10 வயது மகனுக்கு தந்தையாக வந்த கமல், ‘என் மகனுக்கு ஏதாவது ஒன்று என்றால் உங்களை தொலைத்து விடுவேன்’ என்ற வசனம் இடம் பெற்றுள்ளது. ‘நான் சொன்னா அதை செய்வேன்’ என்று பேசும் ‘பஞ்ச்’ டைலாக்கும் இருக்கிறது.
திரிஷா வரும் காட்சிகளில் கமலை காதலிப்பவராகவும், அதை வெளிப்படுத்த முடியாதவராகவும் நடித்து இருக்கிறார். சம்பத், கிஷோர், ஆஷா ஷரத் ஆகியோரும் டிரைலர் காட்சிகளில் வருகிறார்கள். இசை பொருத்தமாக அமைந்திருக்கிறது. கமலுக்கு சமமாக பிரகாஷ்ராஜ் வருகிறார். ஒரு கார் விபத்துடன் டிரைலர் காட்சி நிறைவு பெறுகிறது.
நேற்று வெளியான தூங்காவனம் டிரைலர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. டிரைலர் வெளியான 16 மணி நேரத்தில் 4 லட்சத்து 13 ஆயிரத்து 421 பேர் யூடியூப்பில் பார்த்து ரசித்துள்ளனர்.
http://cinema.maalaimalar.com/2015/0...am-4-lakh.html
Bookmarks