கமல்ஹாசன் என்னும் சினிமா யானை! #1 (
http://www.vikatan.com/news/article.php?aid=53355)
எப்போது பார்த்தாலும் கண் விலகாமல் ஆச்சர்யம் தரும் யானை, ரயில், அருவி, குழந்தை போல எனக்கு ஆச்சர்யம் தரும் இன்னொரு விஷயம் கமல். பார்வையற்றவன் யானையின் உருவத்தை சொல்ல முயற்சித்தது போல முயற்சி செய்திருக்கிறேன்.
தமிழ் சினிமா 75-ல் இருந்து 80-களின் பெரும்பகுதி வரை 'கரகர' கரம் மசாலாவாகவே இருந்தது. இதில் பாலச்சந்தர், பாரதிராஜா போன்றவர்கள் நல்ல படங்களை கொடுத்துக்கொண்டிருந்தார்கள். எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்ற சினிமா சீனியர்களின் ஓய்வுக்கு பிறகு தமிழ் சினிமாவில் மசாலா மணத்தை குறைக்க முற்பட்டதில் முதலிடம் கமலுக்கு கொடுக்கலாம். ரஜினிக்கு மிகப்பெரிய புகழை பெற்றுத்தந்த 'முள்ளும் மலரும்' மூலமாக பாலுமகேந்திராவை தமிழுக்கு கொண்டு வந்தது கமல் என்பது பலருக்கும் தெரியாத செய்தி. அதுவரை டாக்கியாக இருந்த சினிமாவை மூவியாக மாற்ற முயற்சித்தவர்கள் மகேந்திரன், பாலுமகேந்திரா. அவர்களை ஒத்த அலைவரிசையில் இருந்தவர் கமல். "கமல் மலையாள படங்களில் பிசியாக நடித்து கொண்டிருந்தபோதே தமிழ் சினிமாவின் நிறத்தை மாற்றும் எண்ணம் இருந்தது. இத்தனைக்கும் அப்போது அவர் வயது 25க்குள் இருந்தது" என எழுத்தாளர் சுஜாதா கூறியிருக்கிறார்.
கமல் ஆரம்ப காலத்தில் ரொமான்டிக் ஹீரோவாக இருந்தாலும், பின்பு ஆக்சனுக்கும் மாறியவர்தான். நிறைய மசாலா படங்கள் மூலம் வெற்றியை சுவைத்தவர்தான். 'குரு', 'சகலகலா வல்லவன்' அதில் சிகரம் என சொல்லலாம். தன்னுடைய 100வது படமான 'ராஜபார்வை'யில் நடித்தபோது கமலின் வயது 25. தன்னுடைய 100வது படம் என்பது ரிஸ்க் இல்லாமல் வெற்றி படமாக இருக்க வேண்டும் என்றுதான் எல்லா ஹீரோக்களும் விரும்புவார்கள். (இதில் விதிவிலக்காக ஜெயித்தவர்கள் எம்.ஜி.ஆர்., சிவாஜி, விஜயகாந்த் ஆகியோர்தான். ரஜினி, சத்யராஜ், பிரபு எல்லோருக்கும் 100வது படம் தோல்விப்படங்களே). கமல் சினிமாவின் நிறத்தை மாற்றவேண்டும் என்ற ஆர்வத்தில் தெரிந்தே 'ராஜபார்வை' என்ற தீயில் கையை வைத்தார். "ராஜபார்வைக்காக விருது வாங்கியபோது மட்டும்தான் கை 'ஜில்' என்று இருந்தது" என கமல் குறிப்பிட்டார்.
கமலும் சகலகலா வல்லவன், தூங்காதே தம்பி தூங்காதே மூலம் உச்சபட்ச வெற்றியை சுவைத்தார். ஆனால், அதில் சிக்கிக்கொள்ளாமல் எழுத்தாளரை சினிமாவுக்கு கொண்டு வரவேண்டும் என்ற ஆவலில், சுஜாதாவுடன் இணைந்து எடுத்த படம்தான் 'விக்ரம்'. எனக்கு தெரிந்து கம்ப்யூட்டர் முதன்முதலில் காண்பிக்கப்பட்டது விக்ரமில்தான். ஏவுகணையின் ஆபத்தை தமிழர்கள் அறிய செய்த படம். 'ப்ளூ மேட்' டெக்னாலஜியில் உருவான முதல் தமிழ்ப்படம். ராஜஸ்தானுக்கு தமிழர்கள் சுற்றுலா சென்றுவந்தது போல் அழகாக படம் பிடிக்கபட்ட படம். சத்யராஜ் வில்லனாக நடித்த கடைசி படம் என பல விஷயங்கள் இதில் உண்டு. இயக்குனர் ராஜசேகர் இடையில் மாவீரனை இயக்க போய்விட சந்தானபாரதியும், கமலும் செய்த 'பேட்ச் ஒர்க்' படத்துக்கு செட்டாகவில்லை. இதனால் விக்ரம் தோல்விப்படமாக அமைந்தது. அதுவரை நடித்து சம்பாதித்த அனைத்து பணத்தையும் அதில் போட்டிருந்தார் கமல் என்ற தகவலும் உண்டு. 'மன்னாதி மன்னன்' தோல்வி அடைந்திருந்தால் என்னவாகியிருக்குமோ, அது கமலுக்கு நடந்தது எனத்தகவல். ஆனாலும், வித்தியாசமான முயற்சிகளை விடவில்லை.
தொடர்ந்து பிசியாக நடிக்க வேண்டிய சூழல், இல்லையென்றால் 'பேர் சொல்லும் பிள்ளை'யும், 'மங்கம்மா சபதமும்' வந்திருக்காது. கமலின் பேனா கமர்சியல் வெற்றி பெற்றது 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில்தான். மூன்று வேடங்கள், மூன்று பாடி லாங்குவேஜகள் என கமல் தன்னை வருத்தி ரசிகனை குதூகலப்படுத்திய படம். கிரேசி மோகன், கமலுக்கு 'பக்கா'பலம் ஆனார். அப்பு கேரக்டருக்கு கமல் பட்ட சிரமங்கள் ஏராளம். அதில் பின்புறமாக கால்களை கட்டிக்கொண்டு நடித்ததும் ஒன்று. அதில் அப்பு கேரக்டரை சற்று மனநிலை பாதித்தவனாக காட்டியிருந்தாலும் கூட (வில்லன் படம் மாதிரி) இந்த படம் வெற்றி பெற்றிருக்கும். ஏனெனில் திரைக்கதை அவ்வளவு நன்றாக இருந்தது. இப்படி மெனகெட்டிருக்க தேவையில்லை. ஆனால், ரசிகனுக்கு புதிய விஷயத்தை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காக கமல் அவ்வளவு மெனக்கெட்டார் என்பதுதான் நிதர்சனம். கமல், அபூர்வ சகோதர்கள் வரையிலும், ரஜினி, பாட்ஷா வரையிலும் ரசிகர்கள் தங்களை எப்போது வேண்டுமானாலும் வீட்டில் உட்காரவைத்து விடுவார்கள் என்ற மனநிலையில் இருந்தார்கள் என்பது தகவல். சிவாஜியையே ஒதுக்கியவர்கள் அல்லவா தமிழர்கள்.
Bookmarks