உங்களுக்கு இந்தத் தீபாவளி தலை தீபாவளியாக இருக்கலாம். ஆனால், அதை இணையத்தில் எங்கும் சொல்லிவிடாதீர்கள். சொன்னால், அடுத்த இரண்டு நாட்கள் உங்கள் வாழ்நாளின் உச்சபட்ச மன உளைச்சலைச் சந்திக்க நேரிடும்; உங்கள் ஃபேஸ்புக் பக்கம் வசை மழைகளால் நிரம்பக்கூடும். ட்விட்டரில் நிறையப் பேர் உங்களை ரவுண்டு கட்டிவிடுவார்கள்.
சும்மா சொல்லவில்லை, உதாரணத்தோடுதான் சொல்கிறோம்... சில வாரங்களுக்கு முன் நடிகர் மாதவன், ஆவணி அவிட்டம் அன்று தனது மகனுடனான புகைப்படத்தை 'தல ஆவணி அவிட்டம்’ என ட்விட்டரில் அப்லோடினார். பாய்ந்து ஓடிவந்த அஜித் ரசிகர் ஒருவர் ''தல’ன்ற வார்த்தையை அஜித்தைத் தவிர வேற யாருக்கும் எதற்கும் பயன்படுத்தாதீர்கள்’ என்றார். இதைக் கண்ட சின்மயி, அதை 'ஓ... மை காட்!’ என சிரித்துக்கொண்டே ட்விட்டரில் ஷேர்செய்ய, அந்த ஒரு அஜித் ரசிகர், நூறு அஜித் ரசிகர்கள் ஆனார்கள். நூறு பேர் ஆயிரமாகப் பெருகினார்கள். அனைவரும் சின்மயியை வறுத்தெடுக்க, அதில் சிலரிடம் சின்மயி சற்று கோபமாகப் பதில் அளிக்க... ஆரம்பமானது போர். அடுத்த சில நாட்கள் பல ஐ.டி-க்களில் வந்து சின்மயியைக் கலவரப்படுத்தினார்கள். அதில் 99 சதவிகிதம் பேர், அஜித் புகைப்படத்தை டிஸ்ப்ளே படமாக வைத்திருந்தனர். அவர்களின் நிஜப் பெயர் என்ன, எந்த ஊர் எதுவும் தெரியாது. அங்கே அவர்களின் அடையாளம் அஜித் ரசிகர்... அவ்வளவுதான்.
இது அஜித் ரசிகர்களின் செயல்பாடு மட்டுமல்ல... இணையத்தில் விஜய் ரசிகர்களும் இப்படித்தான் செயல்படுகின்றனர். மற்ற மொழிகளிலும் இதுபோன்ற நீயா... நானா போட்டிகள் இருந்தாலும், விஜய் - அஜித் ரசிகர்கள் மோதல்போல இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் நடப்பது இல்லை. சமீபத்தில் வெளியான 'புலி’ பட ரிலீஸ் அன்று விஜயையும், 'புலி’ படத்தையும் வரைமுறை இல்லாமல் கலாய்த்து மீம்கள் முளைத்தன. பதிலுக்கு விஜய் ரசிகர்கள், அஜித்தைக் கலாய்த்து மீம்கள் போட்டாலும் வந்தவர்கள் போனவர்கள் எல்லோரும் இறங்கி அடிக்கும் அளவுக்கு 'புலி’ இரையானது.
'புலி’ படத்தைப் பற்றி இத்தனை நெகட்டிவ் விமர்சனங்கள் பரவியதற்கு மிக முக்கியமான காரணம், அஜித் ரசிகர்களும் அவர்கள் உருவாக்கிய மீம்களும்தான் என்பது விஜய் ரசிகர்களின் கோபம். அதனால் 'புலி’ படத்தைக் கலாய்த்த ட்விட்டர் ஐ.டி-க்களை முடக்க, போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கே சென்று புகார் கொடுத்தார்கள். விஜயைக் கலாய்க்கும் ட்விட்டர் ஐ.டி-க்களில் முதல் இடம் 'கொக்கி குமார்’ என்ற ஐ.டி-தான். இவர்கள்தான் 'விழுப்புரம் ரன்’ என்ற பெயரில் மொபைல் கேம் எல்லாம் உருவாக்கியவர்கள். இவர்களை, விஜய் தரப்பு புகார் கொடுத்து பிளாக் செய்தது. ஆனால், புதுப்புது ஐ.டி-க்களில் கொக்கி குமார் ஐ.டி-க்கள் உருவாகிக்கொண்டே இருக்கின்றன. விஜய் தரப்போ, 'அஜித்துக்கு நெருக்கமானவர், கொக்கி குமாருக்கு காசு கொடுத்து விஜயை அவமானப்படுத்தி எழுதவைக்கிறார்’ என்கிறது.
கொக்கி குமாரை ஃபேஸ்புக் சாட்டில் பிடித்தோம். 'நாங்க ஒருத்தர் இல்லை. ஆறு பேர் இருக்கிறோம். இன்ஜினீயரிங் படிக்கிறோம். ஆரம்பத்துல ஆன்லைன்ல அஜித்தை ஓவரா கலாய்ச்சாங்க. அது பொறுக்க முடியாமத்தான் நாங்க உள்ளே வந்தோம். 'விழுப்புரம் ரன்’ கேமுக்கு புரோகிராம் எழுதினது எங்க குரூப்ல இருக்கிற ஒரு பொண்ணுதான். இந்த கேமை உருவாக்க எங்களுக்கு 2,000 ரூபாய் செலவாச்சு. இது எங்களோட அப்பா-அம்மா கொடுத்த பாக்கெட் மணி. யாரும் எங்களுக்கு காசு தரலை. ஒவ்வொரு மாசமும் நெட் பேக்குக்கு மட்டும் 1,000 ரூபாய் செலவுசெய்றோம். 'அஜித்தைக் கலாய்ப்பதை நிறுத்தினால்தான் நாங்கள் விஜயைக் கலாய்ப்பதை நிறுத்துவோம். இல்லை என்றால், வேறு வேறு பெயர்களில் வந்துகொண்டே இருப்போம்’ என சாட்டில் மெசேஜ் சொன்னது கொக்கி குமார் ஐ.டி.
விஜய்-அஜித் இணையச் சண்டை குறித்து இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் பேசியபோது, ''சமூக வலைதளங்கள்ல நடக்கிற இதுபோன்ற செயல்பாடுகள், ஆரோக்கியமற்ற சூழ்நிலையைத்தான் உருவாக்கும். ஒரு படம் வெளியான அன்றே கண்டபடி மீம்ஸ் போட்டு அந்தப் படத்தைக் காலிபண்ணும் வேலையைச் சிலர் செய்கிறார்கள். இது ரொம்ப ரொம்பத் தப்பான விஷயம். வெளிநாடுகள்ல பிராட் பிட் படம் ரிலீஸ் ஆகும்போது, டாம் குரூஸ் ரசிகர்கள் இப்படிப் பண்றதில்லை. ஜாக்கி சான் படம் ரிலீஸ் ஆகும்போது ஜெட்லி ஃபேன்ஸ் இப்படிப் பண்றதில்லை. தமிழ்நாடு மட்டும்தான் சமூக வலைதளங்கள்ல ரொம்ப மோசமா போய்க்கிட்டிருக்கு. மற்ற மாநிலங்களில் இருக்கும் ரசிகர்கள், எந்த ஒரு ஹீரோவையும் தனிப்பட்ட முறையில் சோஷியல் மீடியாக்களில் கிண்டல் செய்வதில்லை. முன்பெல்லாம் இந்த மாதிரி ட்ரெண்டு கிடையாது. பட விமர்சனத்தோடு முடிஞ்சுபோயிடும். நாள் முழுக்க உட்கார்ந்து, தாறுமாறாக எழுதி, படம் பார்க்க வர்றவங்களை பயமுறுத்தி, தியேட்டருக்கு வரவிடாமப் பண்றதுக் கான வேலை இது. இதைச் செய்ய தனியா ஒரு குரூப்பே செயல்படுது. இதனால இண்டஸ்ட்ரியோட பொருளாதாரம் ரொம்பவே பாதிக்குது. ஒரு படத்தோட ஒட்டுமொத்த உழைப்பும் இதனால் வீணாகுது.
படம் ரிலீஸ் ஆகும்போது, முதல் மூன்று நாட்களுக்கு ஃபேன்ஸ் கூட்டம்தான் அதிகமா இருக்கும். அப்புறம்தான் குடும்பம் சகிதமா வருவாங்க. இந்த கமென்ட்டுகளைப் பார்க்கிறவங்களுக்கு, படத்தைப் பற்றி தப்பான இமேஜ்தான் வரும். இதைக் கட்டுப்படுத்தவும் முடியாது. அஜித், விஜய் வந்து சொன்னாலும் இவங்க திருந்த மாட்டாங்க. ஒருகட்டத்தில், பெரிய ஸ்டார்கள் எல்லாம், 'நம்ம வேலையைப் பார்ப்போம். யாரோ என்னமோ பண்ணிட்டுப் போகட்டும்’னு கண்டுக்கிறதே இல்லை. நாகரிகமே இல்லாத அளவுக்கு இந்த ட்ரெண்டு போயிட்டு இருக்கு. இதுக்கு என்னதான் தீர்வுனு எவ்வளவு யோசிச்சாலும் புரியலை!' என்கிறார் நொந்துபோய்.
ட்விட்டரில் இன்னும் ஒரு படி அதிகம். தமிழின் ஆக மோசமான கெட்ட வார்த்தையுடன்தான் ஆரம்பிப்பார்கள். பிளாக் செய்யும் வசதி இருந்தாலும், புற்றீசல்போல புதிய புதிய ஐ.டி-க்களில் வருவார்கள். மேலும், பிளாக் செய்வது என்பது, அவர்களைப் பொறுத்தவரை இன்சல்ட். இன்னும் வேகமாக, இன்னும் வீரியமாகத் தாக்குவார்கள். இப்படியெல்லாம் செய்வது, ஏதோ வேற்றுக் கிரகவாசிகள் அல்ல; நம்முடன் அலுவலகத்திலும் கல்லூரியிலும் உடன் இருப்பவர்கள்தான். அங்கே இயல்பாக இருக்கும் இவர்கள், இணையத்துக்கு வந்துவிட்டால் மட்டும் 'ஏழு எட்டு தலைமுறையைத் தோண்டி எடுத்து’த் திட்டுவார்கள்.
சமூக வலைதளங்கள் உருவாக்கி இருக்கும் மெய்நிகர் மாய உலகம் சுவாரஸ்யமானது. மனித இனம் இத்தனை ஆயிரம் ஆண்டுகளாக உருவாக்கி வந்த சமூக மதிப்பீடுகள், வரையறைகள் எதுவுமே அங்கே செல்லுபடி ஆகாது. மனதின் ஆழ்மன ஆசைகள், வக்கிரங்கள் உள்ளன உள்ளபடியே வெளிப்படும் இடம் அது. நம் முகத்தை வைத்துக்கொண்டு அவற்றைச் செய்ய முடியாதபோது முகமூடிகளைச் சூடிக்கொள்கின்றனர்.
எப்போதும் பிஸியாகவே இருக்கிறார்கள் இளைஞர்கள். ஆனால், 'நிஜத்தில் 40 சதவிகித இளைஞர்களை வாட்டும் விஷயம் தனிமைதான்’ என்கின்றன பல சர்வேக்கள். இதில் இருந்து தங்களை விடுவித்துக்கொள்ள பெரும்பாலானோர் கையில் எடுப்பது மொபைல். அதில் இருக்கும் இணையம் உருவாக்கித் தரும் இன்னோர் உலகை தங்கள் ஆழ்மன ஆசைப்படி பல வகைகளில் வடிவமைத்துக்கொள்கிறார்கள். இவர்கள் விஜய், அஜித்துக்கு என அதை டெடிகேட் செய்கிறார்கள். அந்த உலகில் விஜயும் அஜித்தும் அவர்களின் கடவுள். அதை எதிர்ப்பவர் யாராக இருந்தாலும் போர்தான்.
இந்த நிலைமைக்கு, ஒருவகையில் இரண்டு நடிகர்களுமே காரணம்தான். சினிமாவில் ஒருவரை ஒருவர் பல காலமாகவே சீண்டிவருகிறார்கள். 'அட்டகாசம்’ படத்தில் 'ஹிட்லராக வாழ்வது கொடிது. புத்தனாக வாழ்வது கடிது. ஹிட்லர், புத்தர் இருவருமாய் நான் இருந்தால் உனக்கென்ன?’ என அஜித், விஜயைச் சீண்டினார். பதிலுக்கு, விஜய் 'ஹிட்லர் வாழ்க்கையும் வேண்டாம். புத்தன் வாழ்க்கையும் வேண்டாம். உன்னை என்னைப்போல் வாழ்ந்தால் போதும் உலகம் ரொம்ப அழகு’ என்றார். (இவர்களின் சீண்டலை கொம்பு சீவிவிடும் வார்த்தைகளைப் போட்டு பாடல் எழுதித் தரும் நம் கவிஞர்களுக்கும் இதில் பங்கு உண்டு). விஜய் படத்தில் வில்லன்களை 'தல’ என அழைத்தது உண்டு. இப்படி ஆரம்பகாலத்தில் தெரிந்தோ தெரியாமலோ தொடங்கிவைத்ததுதான் இப்போது இந்த அளவுக்கு அசுர வடிவம் எடுத்து நிற்கிறது. இருவரும் இணைந்து முயற்சி செய்தால்தான் இதைத் தடுத்து நிறுத்த முடியும். அதற்கான சமூகப் பொறுப்பு விஜய், அஜித் இருவருக்குமே உண்டு. ஏனென்றால், அவர்கள் தொடங்கிவைத்ததை அவர்கள்தான் முடித்துவைக்க வேண்டும்!
ஃபேஸ்புக்கில் மீம்ஸ், ட்விட்டரில் ஹேஷ்டேக் என்பதுபோல, யூடியூபிலும் இவர்கள் அட்டகாசம் நடக்கிறது. அஜித்தின் டீஸரோ டிரெய்லரோ வெளியானால், அதை விஜய் ரசிகர்கள் டிஸ்லைக் செய்வார்கள். அதேபோல அஜித் ரசிகர்களும் செய்வார்கள். 'வேதாளம்’ டீஸர் வெளியான ஒரே மணி நேரத்தில் 25,000 லைக்குகளும், 12,000 டிஸ்லைக்குகளும் விழுந்தன. தவிர, அதிக முறை பார்க்கப்பட்ட டிரெய்லர் யாருடையது என்ற ரெக்கார்டுக்காக மீண்டும் மீண்டும் பார்க்கவும் செய்கிறார்கள்.
விஜய், அஜித் மோதலில் பெரிய காமெடியே ஹேஷ்டேக்தான். ட்விட்டரில் மொத்தமே 140 எழுத்துக்கள்தான் எழுத முடியும். இவர்கள் எழுதும் ஹேஷ்டேகே அனுமார் வால்போல 30, 40 எழுத்துக்கள் நீளும். அதையும் நிறைய ட்வீட்டுகள் எழுத வேண்டும் என்பதற்காக 1, 2 என எண்களை மட்டுமேகூட ட்வீட்டுவார்கள். உதாரணத்துக்காக விஜய், அஜித் ரசிகர்கள் உருவாக்கிய ஹேஷ்டேக் சில:
#VijayThecurseofTamilCinema
#GetwellSoonMentalAjithFans
#twoyearsofBlockbusterArrambam
#OneyearofKathisupermacy
#VedalamAlbumWithAnirudhBdayBash
#ArrestAjith4AntiSocialActivity
#Veeram_thecheckmatefromSunTv
#MakeWayToTrollVedalam
இந்த ஆபாச அர்ச்சனையில் பெண்களுக்கும் பங்கு உண்டு. சென்ற வாரம் வெளியான வாட்ஸ்அப் ஆடியோ ஒன்று விஜய் ரசிகர்களின் பிபி-யை ஏகத்துக்கும் ஏற்றிவிட்டது. 'நான் தல ரசிகைடா’ என ஆரம்பிக்கும் அந்த ஆடியோவில், விஜயையும் அவர் ரசிகர்களையும் அர்ச்சிக்கும் வார்த்தைகள் ஆபாசத்தின் உச்சம். அது வெளியான ஓரிரு நாட்களிலே பேசியவரின் ஃபேஸ்புக் பக்கம் கிடைக்க, விஜய் ரசிகர்கள் புலனாய்வில் அவரின் மொபைல் எண்ணும் கிடைத்துவிட்டது. தன் அடையாளம் தெரியாது என்ற தைரியத்தில் இப்படிச் செய்ததாகச் சொல்லி, அந்தப் பெண் மன்னிப்பு கேட்டதால் விஷயம் முடிவுக்கு வந்தது என்கிறார்கள்.
Bookmarks