அரசியல்வாதி கமல்!

கமல் நடிகர் சங்க தேர்தலில் ஒரு தரப்புக்கு ஆதரவு கொடுத்ததே அவரது அரசியல் நுழைவுக்கு ஒரு முன்னோட்டம் என்ற வகையில் தான் பார்க்கிறேன். அது பத்தாது என்று இந்த அரசு அவரை சோதித்துக்கொண்டே இருக்கிறது. ஏற்கனவே 2006 தேர்தலின் போது அதிமுக சார்பாக பரப்புரை செய்ய மிகப்பெரும் தொகையுடன் அவர் அணுகப்பட்டதாகவும் அதை மறுத்ததோடு, அந்த தொல்லையை தவிர்க்க தேர்தல் சமயத்தில் வெளிநாடு சென்றுவிட்டதாகவும் தகவல் கசிந்தது. இப்போது இந்த பிரச்சினை அடுத்த கட்டத்துக்குப் போய் கமல் vs அதிமுக என்றாகியிருக்கிறது. இதே போன்ற சூழல் தான் 1996ல் அதிமுகவுக்கு ரஜினியோடு நிலவியது. அதன் விளைவுகள் எல்லோரும் அறிந்ததே. ஆக, கமலுக்கு இருப்பது மூன்றே தெரிவுகள் தான்.
A) தேர்தலின் போது திமுகவுக்கு மறைமுக, அல்லது நேரடி ஆதரவு அளிப்பார்.
B) அவரே நேரடி அரசியலுக்கு வருவார்.
C) அல்லது பிரஸ்மீட் ஒன்று வைத்து அவர் பாணியில், "சாப்பாடு போடுங்க மெனு போடாதீங்க" எனப் பேசிவிட்டு கலைந்துவிடுவார்.
இதில் A மற்றும் C தெரிவுகளை விட்டுவிடுவோம். B தெரிவு தான் முக்கியமானது. அதைப் பற்றிப் பேசுவோம். ஒருவேளை கமல் நேரடி அரசியலுக்கு வந்து அவரை நான் ஆதரிக்கிறேன் என்றால் (நன்றாக கவனிக்கவும். ஆதரிப்பேன் ஏன் என்றால் எழுதவில்லை. ஒருவேளை ஆதரித்தேன் என்றால்) கீழுள்ள விஷயங்கள் காரணமாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் நேரடி அரசியலுக்கு அவர் வந்தால் என்னென்னவெல்லாம் அவருக்கு சாதகமாக இருக்கும் என்பதும்!

1) கமல் ஒரு Freethinker. தனது தனிப்பட்ட மற்றும் சினிமா வாழ்க்கையில் அதை நிரூபித்திருக்கிறார். எனக்குத் தெரிந்து இந்தியாவின் சாதி, மதம், கலாச்சாரம், மொழி, பெண்ணடிமைத்தனம் என சகல நோய்களுக்கும் Freethinking மட்டுமே மருந்து. (Freethinking-சுயசிந்தனை)

2) கமல் வெளிப்படையான பெரியாரியர் மற்றும் காந்தியவாதி. இரண்டுபேரும் ஒன்றுசேரும் புள்ளி என்பது மிகப்பெரிய நன்மைகளை பயக்கக்கூடியது. பெரியாரிடம் இருந்து கமல் வேறுபாடுகொள்ளும் இடம் கமலின் தேசபக்தி. இந்தியா என்ற கூட்டமைப்பில் அவருக்கு நம்பிக்கை இருக்கிறது. பெரியார் ஒரு சர்வதேசவாதி(Internationalist). கமல் தேசியவாதி(Nationalist). சமீபத்திய வெள்ள நிவாரணப்பணிகளைப் பார்த்தபோது இன்னும் ஒரு 100 ஆண்டுகளுக்காவது இந்திய கூட்டமைப்பில் நீச்சல் அடிப்பதுதான் தமிழ்நாட்டுக்கு நல்லது. கடலூர் தலித்துகளுக்கு உள்ளூர்காரன் தண்ணி கொடுக்க மாட்டான். ராணுவம் தான் கொடுத்தது. இந்திய கூட்டமைப்புக்கு வெளியில் இருந்து நம்மை நாமே ஆளும் தகுதி எல்லாம் பல நூற்றாண்டுகள் தள்ளித்தான் இருக்கிறது.

3) என்னதான் தேசபக்தி என்பது freethinkingக்கு முரணான விஷயமாக இருந்தாலும் கமலைப் பொறுத்தவரையில் freethinkingக்கு கீழ்தான் தேசபக்தி வருகிறது. அதனால் தான் கலாச்சாரம், மதத்திணிப்பு குறித்தெல்லாம் அவரால் கேள்விகள் எழுப்ப முடிகிறது. அதனால் மொழித்திணிப்பு, கலாச்சாரத் திணிப்பு போன்றவற்றில் அவருக்கு எள்ளளவும் நம்பிக்கை இருக்காது என்பதுடன் அதை புத்திசாலித்தனமாக எதிர்க்கவும் செய்வார்.

4)எப்பேர்ப்பட்ட சூழலிலும் தனக்குச் சேரும் கூட்டத்தை தவறாக உபயோகிக்க மாட்டார் என்பதை விஸ்வரூபம் விவகாரம் நிரூபித்தது. அவரது ஆழ்வார்பேட்டை அலுவலகத்தை சூழ்ந்து இரவெல்லாம் நின்றுகொண்டிருந்த ரசிகர்களிடம் அவர் பேசிய பேச்சு ஒரு சோறு பதம். இறுதிவரை அது தனது தனிப்பட்ட பிரச்சினை என்பதில் உறுதியாக இருந்தாரேயொழிய ரசிகர்களை அதில் இழுத்துவிடவில்லை.

5) ஊடகங்களை திருப்திப்படுத்தும் மிகப்பெரிய தகுதி ஒன்றும் அவருக்கு இருக்கிறது. பிறப்பால் பார்ப்பனர். அதுவும் பல முற்போக்காளர்களே பொது இடங்களில் 'பிராமணர்கள்' என நீட்டிமுழக்கும்போது, "பார்ப்பானை ஐயர் என்ற காலமும் போச்சே," என்ற பாரதியாரின் கூற்றை வெகுஜன தொலைக்காட்சிகளில் பலமுறை பார்ப்பனர்களை பார்ப்பனர் எனக் குறிப்பிட்டதன் மூலம் மெய்யாக்கியவர். A Dravidian friendly brahmin. How convenient for the rationalists and the brahminical media!

6)இதை எல்லாவற்றையும் விட கமல் பெரியார் திடலுக்கு நெருக்கமானவர். ஆக முற்போக்காளர்களுக்கும் நெருக்கமானவர். பார்ப்பனர்களுக்கு பிடித்த அப்துல் கலாம் போல திராவிடர்களுக்குப் பிடித்த பிறப்பால் மட்டும் பார்ப்பனர்.

7) கமல் அரசியலுக்கு வந்தால் சிவாஜியாவார் என்கிறார்கள் சிலர். ஆனால் எழுத்தும், பேச்சும் கலைஞர் மாதிரியும், பொலிவு எம்ஜிஆர் மாதிரியும் இருப்பதனால் கலைஞர்-எம்ஜிஆர் கலந்த காம்போவாக இருப்பார்.

8) முற்போக்கு முகமெல்லாம் இருந்தாலுமே கூட, கமலுக்கு இருக்கும் முக்குலத்தோர் செல்வாக்கு பெரிய ப்ளஸ்! ஓபிஎஸ்ஸும் கமலும் ஒரே தொகுதியில் போட்டியிட்டால் முக்குலத்தோரின் வாக்குகளை கமலே அதிகம் பெறுவார். ஏன் என்பதற்கு உலகறிந்த காரணம் உண்டு!

9) வருமானவரி விளம்பரத்தில் நடிக்கும் அளவிற்கு ஒரு நடிகருக்கு துணிச்சல் இருக்கிறதென்றால் இந்தியாவில் அது கமலுக்கு மட்டும் தான். நேர்மையாக இருப்பதைவிட ஒரு தகுதி என்ன இருக்க முடியும்? அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் நன்கொடைக்காக நடித்த போத்தீஸ் விளம்பரம் தவிர்த்து, அவர் தோன்றிய எல்லா விளம்பரங்களுமே எய்ட்ஸ் விழிப்புணர்வு போன்ற விளம்பரங்கள் தான்.

10) எப்படி யோசித்துப் பார்த்தாலும் திமுக நல்ல எதிர்க்கட்சியாக இருக்கும்பொழுது நல்ல ஆளுங்கட்சி இல்லையே என்பதும், திமுக ஆளுங்கட்சியாக இருக்கும்பொழுது நல்ல எதிர்க்கட்சி இல்லையே என்ற பொதுசனத்தின் ஏக்கத்தைப் போக்கும் வகையில் கமலின் அரசியல் கண்டிப்பாக கெட்டிக்காரத்தனமாய் இருக்கும். மற்றபடி இப்போது கமல் பல்டி அடித்துவிட்டதாக சிலர் சலித்துக் கொள்கிறார்கள். நானும் முதலில் அப்படித்தான் நினைத்தேன். கமலின் மன்னிப்பு, சமாளிப்பு மாதிரியான அறிக்கையெல்லாம், ஆக்சுவலி ஏற்கனவே கமல் பேசியதுதான். நம்மவர் படத்தில் கரணுக்கு இதே பாணியில் தான் மன்னிப்பு கேட்பார். மன்னிப்பு கேட்டும் செருப்பால் அடிக்க முடியும் என்பது கமல் ஸ்டைல். உதாரணம், "எப்போதாவது வரும் மின்வசதியும், தொலைதொடர்பும்...," போன்ற வரிகள்.
தனக்கான திரைக்கதையை தானே எழுதுபவர்கள் வெகுசிலர். சமகால தமிழ்ச்சூழலில் கமலைத் தவிர்த்து பார்த்தால், கலைஞர் மட்டுமே நினைவுக்கு வருகிறது.

நடிகன் என்பதால் அவர் அரசியலுக்கு வரக்கூடாது என்கிறார்கள் சிலர். நடிகன் என்பது தகுதிக்குறைவா. ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் வரலாம் அதுதான் ஜனநாயகம். நடிகர் என்று பார்த்தாலுமே கூட நாளைய முதல்வர் கனவில் மிதக்கும் அனைத்து நடிகர்களையும் விடவும் கமல் தகுதியானவர்.
இறுதியாக ஒன்றே ஒன்றைச் சொல்வதானால் அடுத்த நொடி ஒளித்து வைத்திருக்கும் ஆச்சரியங்கள் ஏராளம்!

-டான் அசோக்


Sent from my SM-G531F using Tapatalk