-
6th March 2016, 05:06 PM
#11
Junior Member
Senior Hubber

"பிடித்தவரைப் பார்த்ததும் வரும்
புன்னகை போல்
தவிர்க்க முடியாதவள்...
பெண்."
உன்னதமான பெண் குலத்தைப்
போற்றும் "உலக மகளிர் தினம்" சமீபித்துக் கொண்டிருக்கிற சமயத்தில்
"பெண்ணின் பெருமை"
பார்த்தேன்.. முதல் தடவையாக.
"பார்த்தேன் " என்ற சொல்லுக்குக் கீழே பல நூறு
"டிட்டோ"க்கள் இனிவரும்
காலங்களில் கண்டிப்பாகப்
போட வேண்டிய வருமென்பது
உறுதி.
-------------------------------
குடித்து விட்டுக் கூத்தாடுகிறவனை...
மட்டு மரியாதையில்லாமல்
முகத்தில் சிகரெட் புகை
ஊதுகிறவனை..
சக மனித உயிர்களின் மீது
அன்பு பாராட்டுகிற குணம்
என்பது கொஞ்சமும் இல்லாதவனை...
யாருக்குமே பிடிப்பதில்லை.
யாருக்குமே பிடிக்காத ஒரு
மனிதனின் வேடமேற்று,
தீயவனாகத் திறம்பட நடிக்கிற
தைரியம்..
நடிகர் திலகம் தவிர யாருக்கும்
வராது.
------------------------------
மனநிலை சரியில்லாத அண்ணனின் கூச்சல் பொறுக்காத சிடுசிடுப்புடன்
மாடிப்படியிலிருந்து இறங்கி
வருவதில் அறிமுகம்.
ஆடிய ஆட்டத்தின் கோர விளைவாய், தன் அன்னையே
கையில் துப்பாக்கி எடுக்க..
தவறுணர்ந்து திருந்துவதில்
முடிவு.
திருந்துகிற கடைசிக் காட்சி தவிர்த்த எந்தக் காட்சியிலும்
பார்வையாளனின் நன்மதிப்பைப் பெறவியலாத
ஒரு கதாபாத்திரத்தை வைத்துக்
கொண்டு, தன்னை நிரூபிக்கிற
சாமர்த்தியம் நடிகர் திலகத்தினுடையது.
புரிதல் வந்து திருந்தும் வரைக்கும் ஒரு மனிதனை
ஆட்டி வைக்கும் புரியாத்தனங்களைக் கொஞ்சமும் மிகையில்லாமல்
செய்திருப்பது வியப்பு.
ஒரு வில்லனுக்கான அலட்டல்கள் எதுவுமில்லாமல்,
வெகு அலட்சியமான அந்தப்
பேச்சு, அந்த அலட்சியத்துடன்
கைகோர்க்கும் வேகம்..
இவற்றைக் கொண்டே ஒரு
மகாவில்லனைக் காட்சிப்படுத்துவது சிறப்பு.
----------------------------
சத்தியபுரத்தில் நிலத்தை ஆர்ஜிதப்படுத்தும் துவக்கக்
காட்சியில் வெளிப்படுத்தும்
அந்த மிடுக்கை,
அண்ணனை அடிக்க, அண்ணியை முறைத்தபடி
நடந்து வரும் அந்த நடை வேகத்தை,
ஆட்டக்காரக் காதலியின்
உறவுக்காரர்களையும் தன்
கட்டுப்பாட்டுக்குள் வைக்கும்
கம்பீரத்தை,
தன்னை நம்பாத தந்தையிடம்
காட்டும் அலட்சியத்தை,
தன்னை மிக நம்பும் அன்னையிடம் பணம் வாங்க
செய்கிற நைச்சியத்தை,
தன் சுயரூபம் புரிந்து கொண்ட
தாயாரிடம், பணப் பெட்டியின்
சாவியை வாங்குவதற்காக,
கெஞ்சுதலாகத் துவக்குகிற
சம்பாஷணையை கொஞ்சங்
கொஞ்சமாக கோபமாக
மாற்றுகிற பாவனையை...
பார்த்து முடித்த நள்ளிரவில்,
என் கண்களில் தூக்கத்திற்குப்
பதிலாக மிரட்சியிருந்தது.
அற்புதத்தை உள்வாங்கிய
ஆனந்த மிரட்சி.
-----------------------------
"அழுவதா..இல்லை சிரிப்பதா?"
என்று இந்தப் படத்தில் ஒரு பாடல் வருகிறது.
காதலையும், காமத்தையும்
குறித்த தங்களது கருத்துகளைக்
கொண்டு, ஒரு ஆணும், பெண்ணும் சமூகத்தைக் கிண்டலாய்ச் சாடுகிற பாட்டு.
ஆர்மோனியம் வாசித்துக்
கொண்டு,புன்னகை மாறாமல்
பாடுகிற தலைவர் அத்தனை
கோணங்களிலும் அழகாயிருக்கிறார்.
அதுவும்,
"காமத்தைப் புயலென்றும்,
காதலைத் தென்றலென்றும்"
என்கிற வரி வரும் போது
செய்யும் பாவனையையும்,
"உங்கம்மாளைப் போல பழுத்து
விட்டா அதுக்கும் ஒரு மதிப்புத்
தாங்க" என்று பாடும் போது
வீட்டின் உட்புறமாய் ஒரு
குறும்புப் பார்வை பார்க்கும்
பாவனையையும் பார்த்த
பின்பும், நடிகர் திலகத்தை
மிகை நடிப்பென்று சொல்வோரைப் பார்த்து...
அழுவதா... இல்லை.. சிரிப்பதா?
-
Post Thanks / Like - 1 Thanks, 7 Likes
-
6th March 2016 05:06 PM
# ADS
Circuit advertisement
Bookmarks