-
19th August 2016, 12:18 PM
#11
Junior Member
Regular Hubber

இன்று அய்யா ஜி.கே.மூப்பனார் பிறந்த நாள். பெருந்தலைவர் காமராஜரின் சீடர். 1965-ம் ஆண்டிலேயே ஒன்றிணைந்த தஞ்சாவூர் மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்தவர். பெருந்தலைவர் காமராஜருக்குப் பிறகு தமிழக காங்கிரஸின் தூணாக இருந்தவர். காமராஜர் மறைவுக்குப் பிறகு காங்கிரஸ் இணைப்பு விழாவில் மூப்பனார் அய்யாவைத்தான் அன்னை இந்திரா காந்தி தமிழக காங்கிரஸ் தலைவராக அறிவித்தார்.
1977-ம் வருஷம் பார்லிமென்ட் தேர்தலில் அதிமுக காங்கிரஸ் கூட்டணியின்போது புரட்சித் தலைவருடன் ஒரே மேடையில் மூப்பனார் அய்யா பிரசாரம் செய்தார்.
காங்கிரசுக்கு என்று தமிழகத்தில் பாரம்பரியமான ஓட்டு வங்கி உண்டு. எங்கள் குடும்பமே பரம்பரையாக காங்கிரஸ் குடும்பம்தான். நான்தான் முதல் தலைமுறையாக புரட்சித் தலைவர் படங்களைப் பார்த்தும் அவரது மனிதாபிமானத்தைக் கண்டும் அவரிடம் அன்பு கொண்டும் புரட்சித் தலைவர் தொண்டனாக மாறினேன். காங்கிரசுக்கு என்றே உள்ள அந்த ஓட்டு வங்கியும் உண்மையான கட்சித் தொண்டர்களும் மூப்பனார் அய்யா பின்னால் நின்றார்கள். 1989-ம் வருஷம் தேர்தலில் மூப்பனார் அய்யா தலைமையில் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டு 26 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸை சேதாரம் இல்லாமல் கட்டிக் காத்தார். கபிஸ்தலம் தொகுதியில் மூப்பனார் அய்யா வெற்றி பெற்றார்.
புரட்சித் தலைவர் மேல் அன்பும் மரியாதையும் கொண்டவர் மூப்பனார் அய்யா அவர்கள். 1984-ம் வருஷம் புரட்சித் தலைவர் உடம்பு சரியில்லாமல் அமெரிக்காவில் இருந்தபோது அன்னை இந்திரா காந்தி கொல்லப்பட்டார். காங்கிரஸ் பொதுச் செயலாளராக இருந்த மூப்பனார் அய்யா, ராஜீவ் காந்தியை பிரதமர் பதவிக்கு முன்மொழிந்தார். அப்போதைய தேர்தலின்போது அதற்கு முன் ராஜிவ் காந்தி புரட்சித் தலைவரை நேரில் பார்த்தது கூட இல்லை. தமிழகத்தில் புரட்சித் தலைவர் பற்றியும் அதிமுக பற்றியும் அவரிடம் எடுத்துச் சொல்லி கூட்டணி அமைய மூப்பனார் அய்யா பின்புலமாக இருந்தார்.
தமிழ் மாநில காங்கிரஸ் ஆரம்பித்தபோதும் தமிழ்நாட்டில் அவர்தான் காங்கிரஸ் என்று நிரூபிக்கப்பட்டது. சத்தியமூர்த்தி பவனை அகில இந்திய காங்கிரஸால் மீட்க முடியவில்லை. காங்கிரஸ் அலுவலகமாக இருந்த சத்தியமூர்த்தி பவன் தமாகா அலுவலகமாக மாறியது. 1996-ம் ஆண்டு அரசியலால் அணி மாறியபோதும் 2001-ம் வருஷம் மறுபடியும் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தார். மறையும்போது அதிமுக கூட்டணியில்தான் இருந்தார்.
திரண்ட செல்வம் இருந்தபோதும் மூப்பனார் அய்யா எளிமையாக இருந்தார். புரட்சித் தலைவர் போலவே சொந்தப் பணத்தை அரசியலுக்கு செலவு செய்தார். புரட்சித் தலைவர் போலவே அரசியலில் அவர் எந்த சொத்தும் சம்பாதிக்கவில்லை. புரட்சித் தலைவர் மாதிரியே யாரையும் மரியாதைக் குறைவாக மூப்பனார் அய்யா பேசியது இல்லை. எல்லா தலைவர்களிடமும் கண்ணியத்தோடு பழகினார். புரட்சித் தலைவரின் நண்பராக விளங்கிய மூப்பனார் அய்யா பிறந்தநாளில் அவர் நினைவை போற்றுவோம்.
.
Last edited by MAHALINGAM MOOPANAAR; 19th August 2016 at 12:23 PM.
-
19th August 2016 12:18 PM
# ADS
Circuit advertisement
Bookmarks