Results 1 to 1 of 1

Thread: நான் யார் ?

  1. #1
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    Chennai
    Posts
    0
    Post Thanks / Like

    நான் யார் ?

    டாக்டர் கோவிந்தன் ஒரு சிறந்த மருத்துவர். நரம்பியல் சம்பந்தமான அறுவை சிகிச்சைகளுக்கு அவருக்கு நிகர், இந்தியாவில் அவர் தான், என்ற பெயர் பெற்றவர்.

    யாரும் செய்ய தயங்கும் மூளைக் கட்டிகளையும் அவர் எளிதில் அறுவை சிகிச்சை மூலம் துல்லியமாக சரி செய்துவிடுவார். ஒன்றில் கூட அவர் தோற்றதில்லை. வெற்றி வெற்றி வெற்றி தான் ! பணமும், சொத்தும் கோடி கோடியாகஅவரிடம் சேர்ந்தது. சமூகத்தில் அவருக்கு பெரிய அந்தஸ்து, மதிப்பு, மரியாதை.

    பாரத பூஷன் பட்டம், ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் கவுரவ பட்டம். சக டாக்டர்கள் பலர் அவரை போற்றினர். சிலர் காழ்ப்புணர்வோடு பாரா முகம் காட்டினர். இரண்டையும் அவர் சமமாக பாவித்தார்.

    ஒரு நாள், ஒரு அறுபது வயது மூதாட்டியின் மூளைக் கட்டியை நான்கு மணி நேர போராட்டத்திற்கு பிறகு , வெட்டி எடுத்து விட்டு, தனது அறைக்கு வந்து கண்களை மூடிக் கொண்டார். அசதி, தன்னை அறியாத ஒரு உறக்கம்.

    ****

    யாரோ தன்னை தட்டி எழுப்புவது போல இருந்தது.

    கோவிந்தன் தன் கண்களை மெதுவாக திறந்தார். அவரை சுற்றி சுற்றி, அவரது செல்ல நாய் தன் கால்களால் அவரை தட்டிக் கொண்டிருந்தது. மெதுவாக . எழுந்து உட்கார்ந்தார். இங்கே எப்படி வந்தது ? தன் கைகளால் முகத்தை துடைத்துக் கொண்டார். அதிர்ச்சி ! அவரது இரண்டு கைகளும் முன்னங்கால்களாக மாறியிருந்தது. ஒரு வால், எக்ஸ்ட்ரா பிட்டிங்காக. அவரிடம் பெரும் மாற்றம்.
    கோவிந்தனுக்கு ஒன்றும் புரியவில்லை. கண்ணாடிக்கு முன்பு போய் நின்றார். அட ! இது என்ன ? தான் காண்பது என்ன கனவா? அல்ல நினைவா? தான் இப்போது ஒரு நாய் ! மனிதனல்ல ! இந்த மாற்றம் ஏன்? இது என்ன மாயை? இது நிஜமா அல்லது பொய்யா ? அவருக்கு ஒன்றும் புரியவில்லை.

    “ஐயோ! இது என்ன ? எனக்கு பைத்தியம் பிடித்து விட்டதா ?” அறையை விட்டு வெளியே ஓடினார். அப்போது எதிரே வந்த கோவிந்தனின் உதவியாளர் டாக்டர் மணிமேகலை கூவினார். “செக்யூரிட்டி ! இங்கே பார் ! டாக்டர் அறையிலிருந்து ஒரு நாய் வெளியே ஓடுது! இந்த நாய் இங்கே எப்படி வந்தது? அடித்து துரத்து !”

    கோவிந்தன், மருத்துவமனையை விட்டு வெளியே ஓடி வந்தார், நான்கு கால் பாய்ச்சலில். தான் முழுக்க முழுக்க நாயாக மாறி விட்டது இப்போது நன்றாக தெரிந்தது. இது என்ன விந்தை ? என்ன செய்யலாம்? தனது வீட்டிற்கு செல்லலாமா? ஆனால், அது இருபது கிலோ மீட்டர் அப்பால் உள்ளதே? யாராவது மிருக டாக்டரை பார்க்கலாமா? ஆனால், என்னென்று சொல்வது ? லொள் லொள் என்ற பாஷை அவருக்கு என்ன புரியும்?”

    கோவிந்தனுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. அப்போது, யாரோ ஒரு பையன், இவரைப் பார்த்து ஒரு கல்லை, விளையாட்டாக ,விட்டெறிந்தான். இவரது தலையில் அது விண்கல்லாக இறங்கியது. தலையில் ரத்தம், ஓட ஆரம்பித்தார். இப்போது அந்த பையனுடன் இன்னும் நான்கு சிறுவர்கள் சேர்ந்து கோவிந்தனை, ஆர்வத்துடன் துரத்த ஆரம்பித்தனர். இப்போது ஒவ்வொருவரிடமும் ஒரு கல். அவர்களுக்கு , நாயின் மண்டை தான் குறி! .

    “இது என்ன கொடுமை?” என்று வருந்திக் கொண்டே, கோவிந்தன் ஓட ஆரம்பித்தார். நான்கு மணி நேர ஆபரேஷன் செய்த களைப்பு, பசி, தாகம், மயக்கம், எல்லாம் அவரை ஒரு சேர தாக்கின. பின்னால் ஓடி வந்த பசங்கள், ஆளாளுக்கு ஒரு கல்லை இவரை நோக்கி வீசினார்கள். எல்லாம் இலக்கு பிசகாமல், இவர் மேல் சர் சர் என்று விழுந்தது. அடி மேல் அடி. . அவரது ஆபரேஷன் போது கூட இவ்வளவு ரத்தத்தை அவர் பார்த்ததில்லை. இன்று , இவர் உடலில் இருந்து ரத்தம் பெருகிக் கொண்டிருந்தது. மரணாவஸ்தை என்பது இதுதானோ? அப்படியே மயக்கமானார்.

    ****

    யாரோ தன்னை தட்டி எழுப்புவது போல இருந்தது.

    டாக்டர் கோவிந்தன் மெதுவாக கண்ணை திறந்தார். “ டாக்டர் ! டாக்டர் !! “ அவரது உதவியாளர் , டாக்டர்மணி மேகலை ,அவரை கைத்தாங்கலாக எழுப்பி, அவரது இருக்கையில் அமரவைத்தார்.

    சுற்றி, சக டாக்டர்கள் கூட்டம். “ என்ன ஆச்சு டாக்டர் ?என்ன ஆச்சு ? ” ஆளாளுக்கு அவரை விசாரித்தனர். அவருக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. தான் நாய் தானே ? தனக்கு எப்படி இவர்கள் பேசுவது புரிகிறது ? மெதுவாக சுதாரித்துக் கொண்டார். “நான் எங்கேயிருக்கேன்? எனக்கு என்ன ஆச்சு? “

    டாக்டர் மணிமேகலை சொன்னார் “ ஒண்ணுமில்லை டாக்டர்! ஆபரேஷன் பண்ண களைப்பிலே நீங்க சேரிலேயே உக்காந்து தூங்கிட்டீங்க ! உங்களை அறியாம, கீழே சரிஞ்சி விழுந்தீட்டங்க போல ! யதேர்ச்சயா நான் வந்து உங்கள எழுப்பி உக்காரவச்சேன் ! இது தான் டாக்டர் நடந்தது ! இதோ இப்போ உங்களுக்கு சிற்றுண்டி வந்திடும் ! சாப்பிட்டு நீங்க ரெஸ்ட் எடுத்தா எல்லாம் சரியாயிடும்.

    டாக்டர் கோவிந்தனுக்கு ஒன்றும் புரியவில்லை ! “ அப்போ நான் நாயா இவ்வளவு நேரம் இருந்தது ? என்னை எல்லாரும் அடிச்சு, ரத்தம், வழிய நான் ரோடிலே கிடந்தந்து ? அதெல்லாம் என்ன ?”

    “ அது வெறும் கனவு டாக்டர்! சொல்லபோனா, ஒரு பயங்கர சொப்னம்! அதை மறந்திடுங்க! பேசாம ரெஸ்ட் எடுங்க ! நாங்க அப்புறமா வந்து பார்க்கிறோம் “ சொல்லிவிட்டு மணிமேகலையும் மற்ற டாக்டர்களும் அவரை அவரது அறையில் தனியே விட்டு விட்டு, கதவை மூடிக் கொண்டு வெளியே வந்து விட்டனர்.

    தனது அறையில் படுத்திருந்த டாக்டர் கோவிந்தனுக்கு குழப்பமாக இருந்தது. நான் யார் ? நான் டாக்டர் கோவிந்தனா? இல்லை நான்கு கால் நாயா? அடிபட்டு நாயாக , மயக்கமாக இருக்கும் என் கனவில் கோவிந்தனாக இருக்கிறேனா? இல்லை, டாக்டர் கோவிந்தன் கனவில் நாயாக , அலைந்து அடிபட்டு கிடக்கிறேனா ? எது நிஜம்? எது பொய்? கோவிந்தனாக நரம்பியல் நிபுணராக , பணம், காசு, பேர், புகழ் என ராஜபோகம் அனுபவித்ததும் நான் தான் ! நாயாக குப்பை மேட்டில் அலைந்து, ரத்தம் வழிய ஓடியதும், விழுந்ததும் நான்தான் ! நான் டாக்டரா? இல்லை நாயா ? இதில் எது நிஜம் ? எது பொய்? தலை சுற்றியது கோவிந்தனுக்கு . கண்ணை மூடிக் கொண்டார் !

    *****

    யாரோ தன்னை தட்டி எழுப்பியது போல இருந்தது.
    . ஒரு நர்ஸ் கோவிந்தனின் கையில் ஊசி போட்டுக் கொண்டிருந்தாள்.


    அவர் பக்கத்தில் இருந்த இன்னொரு நர்ஸ் சொல்லிக் கொண்டிருந்தாள். “ பாவண்டி ! இவர் பெரிய டாக்டர் . திடீர்னு மூளை பிசகிடிச்சு! யார் எது கேட்டாலும் “ இது நிஜமா ? இல்லை அது நிஜமா?” “அப்பிடின்னு திரும்பி திரும்பி கேக்கிறாராம்”! இன்னிக்கு பெரிய டாக்டருங்க வந்து இவருக்கே ஆபரேஷன் செய்யப் போறாங்க !"

    நர்ஸ் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே, வாசலில் நிழலாடியது. டாக்டர் கோவிந்தனின் உதவியாளர் டாக்டர் மணிமேகலை உள்ளே நுழைந்தாள். இரண்டு நர்ஸையும் வெளியே போகச்சொல்லி சைகை காட்டினார். டாக்டர் கோவிந்தனின் கை பிடித்து பல்ஸ் பார்த்தாள். அவரை பார்த்து "இப்போ எப்படி இருக்கு டாக்டர்?" என்று கேட்டாள்.

    கோவிந்தன் கேட்டது இதுதான் " மணிமேகலை!. நான் இப்போது நாயின் கனவில் டாக்டராக இங்கே படுத்துக் கொண்டிருக்கிறேனா? இல்லை , டாக்டரின் கனவில் நாயாக அலைகிறேனா? எது நிஜம் ? இது நிஜமா ? அல்லது அது நிஜமா? "

    மணி மேகலையும் ஒரு டாக்டர் தானே ! அவள் கேட்டாள். " டாக்டர் ! எனக்கு இதுக்கு பதில் சொல்லுங்க ! நீங்க டாக்டராக இருந்தபோது, நாய் மாதிரி அலைஞ்சு அடி பட்டிங்களா? "

    கோவிந்தன் யோசித்தார் " இல்லே ! "

    மணிமேகலை கேட்டாள் " சரி ! நீங்க நாய் மாதிரி அலையும்போது, நரம்பியல் நிபுண டாக்டர் அந்தஸ்தும், மதிப்பும் உங்களுக்கு இருந்ததா? "

    கோவிந்தன் உடனே பதில் சொன்னார் " நிச்சயமா இல்லே!"

    மணிமேகலை தொடர்ந்தாள் " அப்போ, நீங்க டாக்டரா இருக்கும் போது, நாயாக இல்லை, நாயாக அலையும் போது டாக்டராக இல்லை. சரிதானே ! அதாவது, இதுவும் நிஜம் இல்லை , அதுவும் நிஜம் இல்லை . டாக்டர் உங்களுக்கு தெரியாதது இல்லை ! யோசனை பண்ணி பாருங்க ! உங்களுக்கே தெரியும் ! நீங்க மட்டும் தான் நிஜம்.! "

    அப்போது டாக்டர் மனதில் தோன்றிய கேள்வி இதுதான் ! "டாக்டரின் கனவில் நான் நாய் . நாயின் கனவில் நான் டாக்டர் ! நாயின் துன்பத்தையும் நான் அனுபவிச்சேன் . டாக்டரின் செல்வாக்கையும் நான் தான் அனுபவிச்சேன்! ஆனால், நான் இதுவும் இல்லை ! அதுவும் இல்லே ! நான் நிஜமென்றால், அப்போது , உண்மையில் நான் யார் ?"

    டாக்டர் கோவிந்தன் மண்டையை குடைந்து கொண்டார். விடை நாடினார். தேடினார். தேடியே ஓடினார். அவர் தெளிந்த பாடில்லை. நான் யார் - இதற்கு விடை தெரிந்தபாடில்லை.

    இன்றும் , அவரது தியானத்தின் போது, மெடிடேஷன் டாபிக் அதுதான் !


    *** முற்றும்



    ** Adapted from king Janak and saint Ashatavakra discussion on 'Who am I' ?

    “நான் யார் ?” பற்றி மேலும் அறிய, தத்துவ விளக்கம் இந்த விடியோ திரியில் :

    "சுவாமி சர்வப்ரியானந்தாவின் “Who Aam I ?”



    Last edited by Muralidharan S; 29th December 2017 at 02:55 PM.

  2. Likes mappi liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •