Results 1 to 1 of 1

Thread: கஸ்தூரி !

  1. #1
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    Chennai
    Posts
    0
    Post Thanks / Like

    கஸ்தூரி !

    வருடம் 1960 :

    அப்போது நான்செ, ரங்கநாதன், செங்கல்ல்பட்டிற்கு அருகே ஒரு கிராமத்தில் இருந்தேன். இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள் வீடு எல்லைக் காளியம்மன் கோவில் தெருவில். எனது பக்கத்து வீட்டில் கஸ்தூரி குடி இருந்தாள். அவளுக்கு என்னை விட இரண்டு வயது அதிகம். நான் படிக்கும் அதே மிஷன் பள்ளியில் அவளும் நான்காவது வகுப்பு. இரண்டு பேரின் குடும்பமே நடுத்தர வர்க்கம் தான்.

    நல்ல நட்பின் உதாரணம் நாங்கள்.! இருவரும் ஒன்றாகத்தான் பள்ளிக்கு போவோம். வருவோம்.. மூடியிருக்கும் காளி கோவில் அருகில், சின்ன ஐயனார் சிலைக்கு பக்கத்தில் , மணிக்கணக்காக விளையாடுவோம்.

    கஸ்தூரி கொஞ்சம் குண்டு. கொஞ்சம் முரட்டு சுபாவம். அடிக்கடி கோபம் வரும். கோபத்தில் அவளுக்கு கண் மண் தெரியாது. ஒரு நாள், நான் கொஞ்சம் ஓவராக அவளை கேலி பண்ணப் போக, அவளுக்கு கோபம் வந்து விட்டது. என்னை அடிக்க வந்து விட்டாள். நான் அவளை விளையாட்டாக தள்ளி விட்டேன். அது வினையாக முடிந்தது. நிலை தடுமாறி கீழே விழுந்த அவள், விளக்கு கம்பத்தில் முட்டி மோதி, "அம்மா!" என்றபடியே மூர்ச்சையானாள் . தலையில் சரியான அடி. மண்டையிலிருந்து ரத்தம் வழிந்தது.

    அடித்து பிடித்து கொண்டு, அவளது பெற்றோர், அவளை, அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். வைத்தியம் பார்த்தனர். கஸ்தூரியின் தலை அடி சரியாகிவிட்டது. ஆனால் அவளது பெற்றோர் தலையில் தான் , ஒரு பேரிடி இறங்கியது. டாக்டர் சொன்னது தான். கஸ்தூரிக்கு மூளை கட்டியின் ஆரம்ப நிலையாம் . அதற்கு அஸ்ட்ரோசிடிக் டியுமர் என்று பெயர் வேறு சொன்னார்கள். ஒரு வித மூளை புற்றுநோயின் தாக்கம் ஆரம்பமாம். உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமாம்.

    அவளது பெற்றோர் ஆடிப்போய் விட்டனர். நாள் கடத்தாமல், அவளை செங்கல் பட்டிலிருந்து சென்னைக்கு கொண்டு வந்து, ஒரு அறுவை சிகிச்சை மூலம் அந்த கட்டியை அப்புறப் படுத்திவிட்டனர். நான் மட்டும் அவளை விளையாட்டாக கீழே தள்ளியிருக்காவிட்டால், இந்த புற்று நோயை ஆரம்பத்திலேயே கண்டு பிடித்திருக்க முடியாதாம். அதுவே, பின்னாளில் பெரிய பிரச்னையாக உருமாறியிருக்கும் என்று டாக்டர்கள் சொன்னதால், அவள் பெற்றோருக்கு என் பேரில் கொள்ளை பிரியம் ஏற்பட்டு விட்டது. அவர்களுக்கு நான் மிகவும் செல்லமாகி விட்டேன்.

    மீண்டும், நானும் கஸ்தூரியும் ஒன்றாக செங்கல் பட்டில், பள்ளி, வீடு, விளையாட்டு, அய்யானர் கோவில் என்று சந்தோஷமாக இருந்தோம்.

    வருடம் 1970:

    பத்து வருடம் ஓடியது. கஸ்தூரி பெரியவளாகி விட்டாள். இப்போது அவளுக்கு வயது 19. பள்ளி படிப்பு முடிந்து வீட்டோடு இருந்தாள். வீட்டில் அவளுக்கு கல்யாணத்திற்காக மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

    அப்போது தான் விதி விளையாடியது, அவள் வாழ்க்கையில். மீண்டும் அவள் தலையில், சிலந்தி , தன் தலை தூக்கியது. மூளைக்கட்டி அவளை தாக்கியது. வலியால் மயக்கமானாள். மீண்டும் சென்னைக்கு அவளை அழைத்து போனார்கள்.

    ஆனால், என்ன ஒரு கொடுமை? இந்த முறை, அவளது கட்டியை வெட்டி எடுக்க டாக்டர்கள் தயங்கினர். டாகடர் சொன்னார் இதை பாருங்கம்மா ! இந்த மூளை அறுவை சிகிச்சையை, இந்தியாவில் செய்வது உசிதம் இல்லை. நிறைய ரிஸ்க் இருக்கு. மீறி செய்தால், வேறு பிரச்னைகள் வரக்கூடும். உங்க பெண்ணை பக்கவாதம் தாக்கலாம். இல்லை கண் பார்வை போகலாம், ஏன் அவளுடைய உயிருக்கே கூட உத்திரவாதம் இல்லை . டாக்டர்கள் கறாராக சொல்லிவிட்டனர். கஸ்தூரியின் பெற்றோருக்கும் , அமெரிக்காவுக்கு அழைத்து சென்று , ஆபேரஷன் செலவு செய்ய வசதி இல்லை.

    அதனால், டாக்டர்கள் கஸ்தூரியின் மூளைக் கட்டியின் வலியைக் குறைக்க , நோயின் தாக்கத்தை குறைக்க மருந்து கொடுத்தனர். அறுவை சிகிச்சை வேண்டாமென விட்டு விட்டனர். கஸ்தூரியை மீண்டும் செங்கல்பட்டுக்கே அழைத்து வந்து விட்டார்கள். நான் தான் அவளுக்கு உற்ற துணை. அவளுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தேன். நானும் , செங்கல்பட்டிலேயே ஒரு கல்லூரியில் பீ காம் சேர்ந்து விட்டேன்.

    இப்படியே இரண்டு வருடம் ஓடியது. நாளாக நாளாக , கஸ்தூரியின் மூளைக் கட்டி அவளது மண்டைக்குள் பிராண்டியது. அவளால், மூளையின் அதிர்வுகளை தாங்க முடியாமல், அடிக்கடி வலிப்பு வர தொடங்கியது.

    ஆனால், வலிப்பு வரும் வேளையில் , கஸ்தூரி தன் நினைவை இழக்கவில்லை. அவள் வாய் கோணவில்லை. கண் சொருகவில்லை. அச்சமயங்களில் , தான் ஏதோ வேறு உலகில் இருப்பது போல உணர்வதாக சொல்வாள். ஏதேதோ ஞாபகங்கள், வித்தியாசமான எண்ணங்கள். அந்நேரங்களில் மிகவும் அமைதியாக இருப்பாள்.

    அந்த நேரங்களில், அவள் பேச்சும் செயலும் வித்தியாசமாக இருக்கும். தான் ஒரு தீர்கதரிசி போல, ஒரு சாமியார் போல, முற்றும் துறந்த முனிவர் போல பேசுவாள். சில சமயம் அவள் பார்க்காத ஏதோ ஒரு கிராமத்தில் இருப்பதாக சொல்வாள். சில சமயம், மக்களுக்கு ஏதோ சொல்வது போல, அரங்கத்தில் பாடுவது போல, சில சமயம் தான் நாட்டியம் ஆடுவது போல, பொதுவாக எல்லாமே இனிமையான நினைவுகள் தான் அவளுக்கு வரும்.

    வலிப்பு தாக்கும் போது, ஒரு தடவை, தான் மாதா கோவிலில் இருந்ததாக சொல்வாள். இன்னொரு முறை, தான் ஒரு மசூதியில் இருப்பாதாக சொல்வாள். மூன்றாம் முறை, காளி மாதா தன்னை கட்டி அணைத்துக் கொண்டதாக , முகத்தில் ஒரு மெல்லிய புன்னகையுடன் சொல்வாள். அடிக்கடி அவள் சொல்வது 'தான் ஒரு சவக்குழியில் படுத்திருப்பது போல' தோன்றுகிறதாம். சொல்லிவிட்டு கல கல என சிரிப்பாள்!

    நாங்கள் பயந்து போய், மீண்டும் டாக்டர்களிடம் அழைத்துப் போனோம். சென்னையில் பெரிய மன நல மருத்துவர்கள் , நரம்பியல் நிபுணர்கள் இவளை பல் வேறு பரிசோதனை செய்தனர். அவளது ஈ.ஈ.ஜி அவளுக்கு வலிப்பு வருவதை உறுதி செய்தது.

    ஆனாலும், மருத்துவர்களுக்கு, இவளது கேஸ் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது.

    பொதுவாக வலிப்பு வந்தால், நோயாளிகள் நடத்தையில் கொஞ்சம் வன்முறை தெரியும். கட்டுப்பாடு இல்லாமல், பதற்றமாக இருப்பார்கள். ஆனால் இவளோ ரொம்ப அமைதியாக இருக்கிறாளே ! மலர்ந்த முகத்துடன் இருக்கிறாளே? இது ஏன்?

    இன்னொரு விஷயமும் டாக்டர்களுக்கு புதிராக இருந்தது. வலிப்பு வரும் நேரங்களில், ஒரே எண்ணமாகத்தான் இருக்கும். எப்போது வந்தாலும் , திரும்ப திரும்ப அதே எண்ணமாகத்தான் இருக்கும் ஆனால், இவளுக்கு வலிப்பு (seizure) வருகையில், கஸ்தூரியின் எண்ணங்கள் வேறு வேறாக வருகிறதே ! ஒரு வேளை இது மருந்தின் வேகமோ? மருந்தை மாற்றி பார்க்கலமா? இல்லை குறைக்கலாமா?

    டாக்டர் கேட்டார் கஸ்தூரி, இந்த மருந்து உனக்கு கஷ்டமாக இருக்கா ? வேனால், வேறே மருந்து கொடுத்து, உனக்கு ஏற்படும் கனவுகளை வராமல் தடுத்து விடலாமா.? கஸ்தூரி மெல்லிய புன்னகையுடன் மறுத்து விட்டாள். இல்லே இல்லே டாக்டர், வேண்டாம், இப்படியே இருக்கேன் ! எனக்கு இதுதான் ரொம்ப பிடிச்சிருக்கு. இது கனவில்லை! என் நினைவு ! என்று பிடிவாதமாக சொல்லி விட்டாள். டாக்டர்களும், இது ஒன்றும் பெரிய பிரச்சினை இல்லை , தானே சரியாகி விடும் என்று விட்டு விட்டனர்,

    வருடம் 1980

    வருடங்கள் ஓடியது. மூளைக் கட்டி பெரிதாக ஆரம்பித்து விட்டது போல. ஸ்கேன் காட்டிக் கொடுத்தது. அவளிடம் நிறைய மாற்றங்கள். இப்போதெல்லாம் , பொழுதும், அவள் தன்னிலை மறக்க ஆரம்பித்தாள். மோன நிலை. எப்போதும் தளர்ந்த உடல், மலர்ந்த முகம்.! இதழ்கடையோரம் , மெல்லிய புன்சிரிப்பு.

    எனக்கு கஸ்தூரியை பார்க்கும் போதெல்லாம் , அவள் ஏதோ ஆழ்ந்த தியான நிலையில் இருப்பது போல தோன்றியது. பசி தூக்கம் தெரியாது , கண்களை மூடியபடியே உட்கார ஆரம்பித்தாள். சில சமயம் கண்களை திறந்த படியே மணிக் கணக்கில் அமர்ந்திருப்பாள். ஆனால், யாரையும் பார்ப்பது போல இருக்காது. நேர்குத்து பார்வை. யாராவது அவளருகில் போனால், உடனே பதில் சொல்வாள், சிரித்தபடி, பணிவாக, வாத்சல்யத்துடன்.

    மெதுவாக ஊரில் அவளைப் பற்றி பேச ஆரம்பித்து விட்டனர். அவள் ஒரு தெய்வீகப் பிறவி, காளியின் அவதாரம், சந்நியாசி , அவள் சொல்வது நடக்கும் என மக்கள் நம்ப ஆரம்பித்து விட்டனர். அவளைத்தேடி வர ஆரம்பித்து விட்டனர். தங்கள் குறை தீர, காளி கோவிலுக்கு வந்து , காத்திருந்து , அவளிடம் குறி கேட்க ஆரம்பித்து விட்டனர்.

    கஸ்தூரியும் , தனது பெற்றோரிடமிருந்து விலக ஆரம்பித்தாள். எப்போதும் காளி கோயிலில் , சம்மணமிட்டு தியானத்தில் அமர்ந்திருப்பாள். கஸ்தூரியின் வாழ்க்கை பாழ், இருள் என்று நினைத்தேன். இல்லை, அவள் வாழ்க்கை காளியின் அருள் என்றே ஆனது !

    தன்னை தேடி வந்தவர்களிடம், கஸ்தூரி குறி சொல்லுவாள். விட்டத்தை வெறித்து பார்த்தபடி, கவலைப் படாதே ! உன் பெண்ணுக்கு கல்யாணம் ஆகும் , இன்னும் மூன்று மாதங்களில் என்று சொல்வாள். கல கல என நகைப்பாள். இன்னொருவரிடம், உன் பையனுக்கு வேலை கிடைக்கும். அவன் நன்றாக இருப்பான் கவலைப் படாதே போ ! என்று ஆறுதல் சொல்வாள்.

    கஸ்தூரி சொன்னது பலித்தது. அதனால் அக்கம் பக்க கிராம மக்கள் மேலும் மேலும், கூட்டமாக வர ஆரம்பித்து விட்டனர். அவளை கன்னி கஸ்தூரி காளி மாதா " என பூசிக்க ஆரம்பித்து விட்டனர். மாதா தன்னைகூப்பிட்டு , தன் குறை கேட்க மாட்டாளா என கியூ வரிசையில் காக்க ஆரம்பித்து விட்டனர். அவள் பார்வை தங்கள் மேல் படாதா என ஏங்க ஆரம்பித்து விட்டனர். அவள் கை பட்டதால், தங்கள் தீராத வியாதி குணமானதாக சொல்லி அவள் காலில் விழுவார்கள். காணிக்கை செலுத்துவார்கள். அவள் கால் தூசியை விபூதியாக எடுத்து பூசிக் கொள்வார்கள். பார்க்கையில் எனக்கு வேடிக்கையாக இருக்கும்.

    இந்த கால கட்டத்தில், நான் படிப்பை முடித்து விட்டு அரசாங்க குமாஸ்தா பணியில் இருந்தேன். ஒரு நாள், என்னை பார்த்து, நீ நன்றாக வருவாய்.! ஐஸ்வரியம் உன்னை தேடி வரும்! என்று சொன்னாள். எனக்கு சிரிப்பு தான் வந்தது.

    இப்படியே இன்னும் ஒரு வருடம் போனது. கஸ்தூரியின் நோய் முற்றியது. அவளை தேடி வந்த பக்தர் கூட்டம் அலைமோதியது. கஸ்தூரியும், எப்போதும், 24 X 7 , வஜ்ராசனம் அல்லது சித்தாசனத்தில் அமர்ந்து , ஒரு சிலரை மட்டும் தேர்ந்து எடுத்து , அவள் அருள்வாக்கு சொன்னாள். எப்போதும் ஒரு மந்தகாச புன்னைகை. கையில் ஒரு ஞான முத்திரை . எனக்கு எல்லாம் தெரியும் போங்கடா என்பது போல. அவள் சாப்பிடுவது குறைவு , தூங்குவதும் மிக மிக குறைவு. உடல் வற்றி, இன்றோ நாளையோ என்ற ஒரு நிலை.

    ஒரு நாள் திடீரென, அவள் கூடியிருந்த ஜனங்களை பார்த்து , சிரித்துக் கொண்டே சொன்னாள் நான் நிர்விகல்ப சமாதி ஆகப் போகிறேன்! நான் என் ஊருக்கு போகப் போகிறேன்! எங்கேயிருந்து வந்தேனோ அங்கேயே போகப் போகிறேன் ! எனக்கு இங்கேயே என் பீடத்தின்மேலே கோயில் கட்டுங்க ! உங்க எல்லோரையும் நான் பார்த்துக் கொள்கிறேன்! என்று சொல்லி விட்டு, கண்களை மூடி ஒரு ஆழ் தியான நிலைக்கு போய் விட்டாள். அவள் உதட்டோரம் ஒரு சிரிப்பு. முகத்தில் ஒரு பரவசம். அதற்கப்புறம், கஸ்தூரியிடம் பேச்சு மூச்சு இல்லை. இதயம் மெதுவாக துடித்துக் கொண்டிருந்தது. டாக்டர்கள் என்ன செய்தும் பலனில்லாமல், மூன்று நாள் கழித்து அவள் இறையுடன் கலந்து விட்டாள்.

    அவளை கலி கால சித்தர் என ஊர் மக்கள் கொண்டாடினர். அவளுக்கு ஒரு பீடம் எழுப்பப் பட்டது. அதன் மேல் மீண்டும் ஒரு காளி சிலை வைக்கப் பட்டு, கோவிலும் புனரமைக்கப் பட்டது. கன்னி கஸ்தூரி காளி கோவில் என்று இன்றும் அந்த கோவில், சுற்று வட்டாரத்தில் எல்லோருக்கும் பிரசித்தம். நன்கொடை, காணிக்கை, உண்டியல், சிறப்பு தரிசனம் என கோவிலுக்கு எக்கச்சக்க வருமானம் .

    கன்னி கஸ்தூரியின் எலுமிச்சம் பழ பிரசாதம் வாங்கி வீட்டில் வைத்தால், சூனியம் எல்லாம் விலகி விடுமாம். அவள் பீடத்தில் வைத்த திருநீறு அணிந்தால், நோய் குணமாகுமாம். அவள் கோயிலில் விற்கும் தாயத்தை, காளித்தாய் பாதத்தில் வைத்து கட்டிக் கொண்டால், காற்று கருப்பு எதுவும் அண்டாதாம். மக்களின் நம்பிக்கை. மாறாத நம்பிக்கை.

    ****
    இன்று : 19 நவம்பர் 2017

    ஐயா ! ஐயா ! யாரோ என்னை கூப்பிட்டது போல இருந்தது. விழித்துக் கொண்டேன். பழைய நினைவலைகள். வாசலில் கோவில் மேனேஜர் எனக்காக காத்து கொண்டிருந்தார். ஐயா ! மன்னிக்கணும்! நேரமாயிடுச்சு !! நீங்க வந்து தான் காளி ஆத்தாவுக்கு, லாக்கரிலிருந்து நகைகள் எடுத்து கொடுக்கணும். இன்னிக்கு கன்னி கஸ்தூரி தாய் சமாதி ஆன நாள் ஆச்சுங்களே ! சிறப்பு பூஜை செய்யணும்! நிறைய பக்தர்கள் வந்து காத்து கொண்டிருக்கிறார்கள்! . என்றார் மேனேஜர் .

    இதோ வந்துவிட்டேன். ஏதோ வேலையாக இருந்து விட்டேன் என்றபடியே படி இறங்கினேன். நான் தானே இந்த தனியார் கன்னி கஸ்தூரி காளிகோவில் நிர்வாக ட்ரஸ்ட்டீ! ஆனால், எனக்கு ஒன்று மட்டும், புரியாத புதிர். இந்த சக்தி எங்கேயிருந்து வந்தது அவளுக்கு ? கஸ்தூரி உண்மையில் சித்தரா? அல்லது பித்தரா? அவள் யார்? புரியவில்லை ! அவள்காளியா ? இல்லை போலியா? கூடவே இருந்த எனக்கு , விடை தான் தெரியவில்லை. அறையை விட்டு வெளியே வந்தேன் .

    காளிகோவில் வாசலில் , பக்தர்கூட்டம் அலை அலையாய் , நீண்ட வரிசைகளில் ! கஸ்தூரியின் பீடத்தை கும்பிட ! தங்கள் குறைகளை, அவள் பாதங்களில் சமர்ப்பிக்க ! தீர்ந்தவர் , காணிக்கைகளை அவள் காலடியில் கொட்ட ! குறை தீராதவர் , மீண்டும் வேண்டிக் கொள்ள !

    கோவிலுக்கு எதிரே, பிரசாதம் , திருநீறு, தாயத்து நல்ல சேல்ஸ். எல்லாம் என் கடைகள் தான். இரண்டு கடைகளை என் முதல்மகன் பார்த்துக் கொள்கிறான். மற்ற இரண்டு கடைகள், தேங்காய், பூ, பழம், எலுமிச்சை பழ மாலைக்கென ,இதை என் இரண்டாம் மகன் கவனித்துக் கொள்கிறான்.

    ஒன்று மட்டும் நிஜம். அன்று கஸ்தூரி, என்னைப் பார்த்து நீ நன்றாக வருவாய்.! ஐஸ்வரியம் உன்னை தேடி வரும்! என்று சொன்ன அருள் வாக்கு , இன்று பலித்து கொண்டிருக்கிறது !


    *****முற்றும்



    Last edited by Muralidharan S; 14th February 2018 at 09:02 AM.

  2. Likes mappi liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •