Results 1 to 10 of 1139

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 22

Threaded View

  1. #11
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    293
    Post Thanks / Like
    சவாலே சமாளி- நடிப்பு தெய்வத்தின் 150 ஆவது காவியம்- 1971.(july 3 rd 1971)
    By Gopal
    1970 களில், 1971 ஆரம்பத்தில்,நடிகர்திலகத்திற்கு, எங்க மாமா ,வியட்நாம் வீடு,ராமன் எத்தனை ராமனடி, எங்கிருந்தோ வந்தாள் , சுமதி என் சுந்தரி தவிர்த்து , மிக மிக சுமாரான சராசரியான படங்களே அமைந்து ,அவருடைய youthful ,smart ,trim and handsome காலகட்டத்தை வீணடித்து கொண்டிருந்தன.இந்த நேரத்தில்,சரியான நேரத்தில், எங்களுக்கு full meals என்று சொல்லத்தக்க முறையில் அமைந்த landmark படம்தான் சவாலே சமாளி. சிவாஜி இந்த படத்தில் வேட்டி கட்டிய மன்மதனாக ,அவ்வளவு அழகாக தோற்றமளிப்பார். விவசாயமும்,தொழில் துறையும் நாட்டின் இரு கண்கள்.தொழில் துறையில் இரும்புத்திரை வந்ததால், அதே பாதையில் விவசாயிகளின் பிரச்சினையை கையிலெடுத்தது சவாலே சமாளி. கதாநாயகனுக்கு அதே பெயர்-மாணிக்கம்,அப்பா-மகன் எதிர்-நிலை, இறுதி காட்சி தீ பந்தம் ,வீண் பழி என்ற பல ஒற்றுமைகள். வேற்றுமைகள்- இரும்பு திரை தொழிலாளர் பிரச்சினையை முன் நிறுத்தியது. சவாலே சமாளி ,வர்த்தக ரீதியாக குடும்ப பிரச்சினைகளை முன் நிறுத்தியது(தொட்டு கொள்ள ஊறுகாயாய் விவசாய பிரச்சினை). ஒரு சராசரி ரசிகனின் பார்வையில் ஈர்ப்பு அதிகம் நிறைந்தது சவாலே சமாளி.
    மல்லியம் ராஜ கோபால் ,மிக சுவாரஸ்ய திரைக்கதைக்கு, K .S .கோபாலகிருஷ்ணனின் மனிதம் நிறைந்து வழியும் இயல்பு வசனங்களையும்,கே.பாலச்சந்தரின் twist நிறைந்த sharp ,contemporary appeal நிறைந்த வசனங்களையும் கலந்து ,புது பாதை போட்டிருந்தார்.
    விவசாய கூலி குடும்பத்தை சேர்ந்த மாணிக்கம்,சுய மரியாதை நிறைந்த, தலைமை பண்புகள் கொண்ட , சக-விவசாயிகளின் பிரச்சினையை புரிந்து கொண்ட ஒரு கிராமத்து(புளியன்சேரி ) வாலிபன்.அப்பா ஐயா கண்ணு, பெரிய பண்ணைக்கு விசுவாசமான வேலையாள்.தங்கை காவேரி ,மாரிமுத்து என்ற கொல்லன் பட்டறை வாலிபனை மணந்து, அவன் இன்னொரு பெண்ணுடன் வாழ்வதால் ,பிறந்த வீட்டிற்கு விரட்ட பட்டவள். மாணிக்கத்தின் ,விவசாய கூலி சார்பு நிலையும், பண்ணை வீட்டிற்கு அருகில் இருக்கும் சிறு நிலத்தில் போடபட்ட கொட்டகையும், பெரிய பண்ணை கண்ணை உறுத்த, தான் காவேரி கல்யாணத்திற்காக கொடுத்த பணத்திற்காக, அந்த நிலத்தை கொடுக்க வற்புறுத்தி, தவறினால், மாணிக்கத்தை பெரிய பண்ணைக்கே வேலையாளாய் சேர சொல்லி ,அந்த முயற்சியில் வெற்றியும் அடைகிறார் பெரிய பண்ணை.(சின்ன பண்ணை,மகன் ராஜவேலு ஆலோசனைகளோடு).பட்டணத்தில் படித்து விட்டு ,நாகரிக மிடுக்கோடு வரும் ,பெரிய பண்ணையின் மகள் சகுந்தலாவை ,ரயில் நிலையத்தில் அழைத்து வர சென்று, அவள் பேசும் பேச்சால் ஆவேச பட்டு,நடு வழியில் சென்று விடுகிறான் மாணிக்கம். ராஜவேலு விற்கும், மாணிக்கத்திற்கும் ,ஒரு கை கலப்பு ஏற்பட, மாணிக்கம் வேலையை விட்டு நீக்க படுகிறான்.
    இதற்கிடையில்,சகுந்தலாவை அழைத்து கொண்டு ,அவளுக்காக பார்த்திருக்கும் மாப்பிள்ளை,அவர்கள் வீட்டாரை அழைத்து வர ராஜவேலு சென்றிருக்கும் போது , சின்ன பண்ணை சூழ்ச்சியால்,பஞ்சாயத்து தேர்தலில் தனக்கு எதிரே நிற்கும் மாணிக்கம் தோற்றால் ஊரை விட்டு ஓட வேண்டும் எனவும்,தான் தோற்றால் தன பெண்ணை கல்யாணம் செய்து கொடுப்பதாகவும், மாணிக்கத்துடன் ஒப்பந்தம் போடுகிறார் பெரிய பண்ணை. இதன் படி தேர்தலில் தோற்கும் பெரிய பண்ணை ,தன மகளை மாணிக்கத்திற்கு கல்யாணம் செய்து வைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ள பட்டு ,சகுந்தலாவின் ஒப்புதல் இன்றி,வற்புறுத்த பட்டு கல்யாணம் நடந்தேறுகிறது.
    வேண்டா வெறுப்பாய் கல்யாணத்திற்கு உடன் படும் சகுந்தலா, மாணிக்கத்துடன் தாம்பத்ய வாழ்க்கையில் ஈடு பட மறுப்பதால், அவளே மனமொப்பும் வரை அவளை தொடுவதில்லை என்று சத்தியம் செய்கிறான். தனக்கேற்ற மனைவியாக அவளை மாற்ற முயல்கிறான் சிறிது அதிக பட்ச குதர்கத்துடன். சகுந்தலா பிறந்த வீடு சென்று, வர மறுக்க மாணிக்கம், விடியும் வரை கெடு விதித்து,திரும்பி வரவில்லையேல் தாலி தன கையில் வந்து சேர வேண்டும் என்கிறான். அம்மாவின் ,வற்புறுத்தலால்,சகுந்தலா மீண்டும் ,மாணிக்கம் வீட்டுக்கு வருகிறாள். ஆனால் மாணிக்கம் அவளை நாற்று நட வற்புறுத்த,அந்த உழைப்பினால், நோய் வாய் படுகிறாள்.தற்கொலை முயற்சியில் ஈடு படும் சகுந்தலாவை காப்பாற்றி மனம் திறக்கிறான் மாணிக்கம். வீட்டுக்கு வந்து, சகுந்தலாவை ,அழைத்து செல்ல முயலும் ராஜவேலுவை,காவேரி கடுமையாய் பேசி விட, கோப பட்டு ,ராஜவேலு ,நாயை வைத்து ஆடையை பறிக்க, காவேரி ,அம்மனுக்கு சார்த்திய புடவையை தன மேல் போர்த்து , தீபந்தம் ஏந்தி வயலுக்கு நெருப்பு வைக்கிறாள். அவளிடம் இருந்து, அதை பிடுங்கி மாணிக்கம் பழியை ஏற்று, உண்மையை சொல்லாமல்,பெரிய பண்ணை வீட்டில் சவுக்கடி படுகிறான். மனம் மாறி வந்த காவேரி கணவன் ,மாரிமுத்து, ராஜ வேலுவை பழி வாங்க எண்ணி ,அவன் தாயின் வேண்டுகோளால் விட்டு விடுகிறான்.மனைவியை அழைத்து செல்கிறான். சகுந்தலா தன கணவன் உள்ளமறிந்து, தாம்பத்யத்திற்கு உடன் பட எல்லாம் சுகமே.
    சவாலே சமாளியை பொறுத்த வரை, சிவாஜியை அதிகம் சிரம படுத்தாத பாத்திரம். அவ்வளவு இலகுவாய் கையாள்வார். அப்பாவுடன் செல்லமான முரண்பாடு, ஆதிக்க வர்கத்திடம் இயல்பான ஒரு எதிர்ப்புணர்வு,அதனால் ,அவர்களுடன் சவால் விடும் தோரணை,சுய மரியாதையை விட்டு கொடுக்காத ஒரு பிடிவாதம். அந்த பாத்திரத்திடம் ஈர்க்க பட்டு விடுவோம். ஜெயலலிதா தகாத வார்த்தை பேசும் போது ,பதில் பேசாமல், வண்டியை ஓட்டி அவரை விட்டு செல்லும் ரோஷம்,அம்மா சின்ன வயசில பால் வடியும் மொகம்னு சொல்லுவியே,மோர் வடியுது என்னும் கிண்டல்,சேரான துணியை துவைத்து போட சொல்லும் ஜெயலலிதாவை ,நீ என்ன என் பொண்டாட்டியா என்னும் நக்கல்,ராஜவேலு விடம் காட்டும் சீற்றம், கல்யாணம் ஆன இரவில் வர்க்க பேதம் பற்றி பேசி, அவருடன் தனக்கு முதல் பார்வையில் ஏற்பட்ட ஈர்ப்பு பற்றி பேசி, முரண் படும் போது , தொடுவதில்லை என்று சத்யம் செய்வது, சாப்பிட மாட்டேன் என்று சொல்லி,பசி தாளாமல் பழைய சோற்றை அள்ளி தின்னும் மனைவியை மற்றோர் எதிரில் காட்டி அவமான படுத்தும் நக்கல், உன்னோட வயல்தானே மிதி என்று மனைவியை நாற்று நட சொல்வது,ஜுரம் வந்து அவதி படும் மனைவியிடம் உருகுவது, அதனை மறைந்து நின்று பார்க்கும் அவள் தந்தையிடம் தனக்கும் தகப்பனின் மனம் புரியும் என்று உணர்த்துவது, தற்கொலை பண்ண முயலும் மனைவியை காப்பாற்றி தன உள்ளம் திறப்பது,இறுதி காட்சியில் உண்மையை மறைத்து,தண்டனை அனுபவிப்பது(தந்தை கையால்) என்று அதகளம் பண்ணுவார்.
    வீ.எஸ்.(ராக)வன் ,அடிமை ரோலுக்கு படு பொருத்தம்.மகன் விறகு வெட்டி காய்த்த கைகளை பார்த்து உருகுவது, சவாலில் ஜெயித்த சிவாஜியை ஒன்றும் பண்ண முடியாமல், தன்னை துன்புறுத்தும் ராஜவேலு விடம் விசுவாசம் காட்டுவது,உன்னை வெட்டி போட்டுடுவேண்டா என்று மகனை திட்டி, மருமகளை பார்த்து அதற்கும் வழியில்லாம பண்ணிட்டியே என்று உருகுவது,இறுதி காட்சியில் தன கையாலேயே மகனை சவுக்கால் அடித்து விட்டு வருந்துவது எல்லாம் அருமை.
    பகவதி ,பெரிய பண்ணையின் கம்பீரம்,குரூரம் எதுவும் காண்பிக்க இயலாமல் miscast ஆக தெரிவார்.நம்பியார் கூட இருந்து அதனை ஈடு செய்வார்.
    நாகேஷ் ,கொடுத்த பாத்திரத்தில் பிய்த்து வாங்குவார். இவர் பாத்திரம் படத்திற்கு பெரிய பலம். ஜெயா மேடம், எங்கிருந்தோ வந்தாளுக்கு அடுத்த ,அருமையாய் நடிப்பில் score பண்ணிய படம்.அந்த பாத்திரத்தில் நமக்கு அனுதாபம் வரும் அளவு அருமையாய் நடிப்பார். தந்தையென்று அறியாமல் செருப்பை கழுவி விட ,பிறகு ஒருவரை ஒருவர் அறிந்து உள்ளுக்குள் மருகும் காட்சியில் இருவருமே அபாரமாய் நடித்திருப்பார்கள். முத்து ராமன்,விஜய குமாரி அவர்கள் பங்கிற்கு ,மறுமணம் பற்றி கேள்வி பட்டு முத்து ராமன் கேள்வி மேல் கேள்வி கேட்க , எல்லாவற்றுக்கும் ஆமாம் சொல்லி, அதுக்கு நீ சம்மதிச்சியா என்று கேட்டிருந்தால் இல்லைன்னு சொல்லியிருப்பேனே என்று கணவனை உருக்கும் இடம் அருமை.
    supporting cast ,பாத்திர வார்ப்புகள் அருமை. நடித்தவர்களும் அருமை. வரலக்ஷ்மி உட்பட.
    சவாலே சமாளியை A ,B ,C எல்லா centre க்கும் பிடிக்கும் வகையில் திரைகதை வசனம் எழுதி இயக்கி,தயாரித்திருப்பார் மல்லியம் ராஜகோபால். இதற்கு முன் தெய்வ பிறவி கதை தன்னுடையது என்று கிருஷ்ணன்-பஞ்சு,K .S .G முதலியோருடன் பிணங்கியவர் .பிறகு அதே கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் ,N T படமான இளைய தலை முறைக்கு திரைகதை,வசனம் எழுதினார் . லட்சுமியை அறிமுகம் செய்த இயக்குனர்.(ஜீவனாம்சம்).திறமை இருந்தும் சவாலே சமாளி என்ற one movie wonder வகையில் சேர்ந்தது அவர் துரதிர்ஷ்டமே.இன்னும் நிறைய சாதித்திருக்க வேண்டியவர்.திறமை மிக்கவர்.
    வின்சென்ட் காமரா பிரமாதம். கிராமம், இயற்கை, இரவு காட்சிகள் எல்லாம் அவ்வளவு அழகு. சிவாஜிக்கு கூடுதல் அழகு வின்சென்ட் படங்களில்.கமல் நடன உதவியாளராய் பணியாற்றிய N T படங்களில் இதுவொன்று.(மற்றது எங்கிருந்தோ வந்தாள்.சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே பாட்டில் சிவாஜியின் கமல் பாணி நடன அசைவுகளை ரசிக்கலாம். )
    இந்த படத்தில் சொதப்பியவர் விஸ்வநாதன். தெலுங்கு பட dubbing range ல்தான் அத்தனை பாட்டும்.அன்னை பூமியென்று,சிட்டு குரூவிகென்ன(சுசிலா மட்டும் உழைத்து பாடுவார்),ஆனைக்கொரு காலம் வந்தா,நிலவை பார்த்து, என்னடி மயக்கமா எல்லாமே படு மோசமான நாலாந்தர பாடல்கள். 150 வது படத்தில் இசை ,பாடல்கள் நன்கு அமைந்திருந்தால் ,வெள்ளி விழாவே கண்டிருக்கும்.
    ஆனால்,பெண்ணுரிமையாளர்கள் ,இந்த படத்தை பார்த்தால் ,மூர்சசையே போட்டு விடுவார்கள்.பெண்ணை பணயம் வைப்பது,விரும்பாத பெண்ணை மணந்து சித்திரவதை செய்வது(வார்த்தையால்),என்று கதாநாயகனின் வீரம் முடக்க பட்டு, விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு பெப்பே காட்ட பட்டு விடும்.
    நேர்மையான திரைகதையமைப்பில், எடுத்து கொண்ட கருவில் என்று பார்த்தால் இரும்பு திரை ஒரு காவியம். சுவாரசியம் என்று பார்த்தால் சவாலே சமாளிதான்.(ஜன ரஞ்சகம்)
    எல்லா ஊர்களிலும் நன்கு ஓடி ,வசூல் புரட்சி செய்த காவியம். 150 வது படம் என்ற நற்பெயரை காப்பாற்றி கொடுத்தது.சவாலே சமாளியில் ஆரம்பித்த வெற்றி சுனாமி, பாபுவில் கரை கடந்து ,1972 இல் தொடர்ந்து தமிழகம் முழுதும் ஆனந்த அலைகளை தொடர்ந்து பாய்ச்சி நடிகர்திலகம் மட்டுமே திரையுலக வசூல் சக்கரவர்த்தி என்பதை கல்வெட்டாய் எழுதி சென்றது. மயிரிழையில்(??) சிறந்த நடிகர் பட்டம் (பாரத்) சிவாஜிக்கு பெற்று தர வேண்டிய வாய்ப்பை இழந்தது.காரணம் இன்று வரை புரிந்த மர்மம்தான்.
    By Gopal


    Thanks Gobalakrishnan Sundararaman
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •