Results 1 to 10 of 1139

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 22

Hybrid View

  1. #1
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    293
    Post Thanks / Like
    அனைவருக்கும் வணக்கம். ஒரு சிவாஜி ரசிகனின் சினிமா டைரி தொடர்கிறது.
    அந்த நாள் ஞாபகம் - பார்ட் 71
    என் மகன் முதல் நாள் பார்த்தது, அதன் ஓட்டம், அது பெற்ற வெற்றி, மதுரை நியூ சினிமாவில் 100 நாள் ஓடியது அனைத்தும் பேசினோம். பயணத்தை தொடர்வோம்.
    முதல் நாள் இரவு படம் பார்த்துவிட்டு மறுநாள் காலை விடிந்து பத்திரிக்கை பார்த்தால் அதிர்ச்சி மற்றும் சோகம் தாக்குகிறது. ஆம், முதல் நாள் மாலை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் தேசிய நடிகர் சசிகுமாரும், அவரது மனைவியும் சிக்கி ஆபத்தான நிலையில் ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தி வந்திருக்கிறது.
    மந்தவெளி ராமகிருஷ்ணா மட் ரோட்டில் ஒரு இடைதெருவாக அமைத்திருக்கக்கூடிய ராணி அண்ணாதுரை தெருவில்தான் அவர் வீடு இருந்தது. ஆகஸ்ட் 21ந் தேதி மாலை 5 மணி அளவில் சசிகுமார் வெளியே போவதற்கு கிளம்பிக் கொண்டிருக்கிறார், அன்றைய தினம் மாலையில் ஒரு காங்கிரஸ் பொதுக் கூட்டம். அதில் பேசுவதற்கு ஒப்புக் கொண்டிருந்த சசிகுமார் கூட்டத்திற்கு போவதற்கான ஆயத்த வேலைகளில் ஈடுப்பட்டிருக்க, அவருக்கு காபி போடுவதற்கு ஸ்டவ் அடுப்பை மூட்டியிருக்கிறார் அவரது மனைவி திருமதி சசிகலா. பம்பிங் ஸ்டவ் அதாவது பிஸ்டன் போல் இருக்கக்கூடிய அமைப்பு. அதில் காற்று அடிப்பது போல பம்ப் செய்ய வேண்டும். அப்படி செய்தபோது பட்டென்று பற்றிக்கொண்ட நெருப்பு அருகில் நின்றிருந்த அவர் புடவையில் பற்றிக் கொண்டது. எளிதில் தீப்பற்றக்கூடிய நைலான் வகை துணியாலான புடவை என்பதால் தீ மளமளவென்று பரவியதாக சொல்கிறார்கள். அவரின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த சசிகுமார் தீயை அணைக்க முற்பட அவர் அணிந்திருந்த உடைகளிலும் தீ பற்றி பரவியதாக சொல்கிறார்கள். தீயை அணைப்பதற்க்காக இருவரும் தரையில் உருள அப்படியும் தீ அணைய நேரம் எடுத்திருக்கிறது. சசிகுமாரின் சகலை அந்நேரம் வீட்டிற்கு வந்தவர் இருவரையும் காரில் ஏற்றி ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றிருக்கிறார். கிட்டத்தட்ட 70 முதல் 80% தீக்காயம் என்பதால் டாக்டர்கள் அப்போதே அபாயக்கட்டம் என்று சொல்லி விட்டார்கள். இந்த செய்தியை படித்தவுடன் மனசுக்கு மிகவும் வருத்தமாக போய்விட்டது.
    அன்று மாலை தினசரிகளில் வந்த செய்தியை பார்க்கும்போது நிலைமை எவ்வளவு கவலைக்கிடம் என்பது புரிந்தது. 80% தீக்காயம் என்பதால் வாழை இலையில் படுக்க வைக்கப்பட்டிருக்கிறார் என்றும் டாக்டர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் செய்தி வந்திருந்தன. அனைத்து திரைத்துறையினரும் மருத்துவமனைக்கு வந்து பார்த்தார்கள் என்று செய்தி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவுடன் உடனே பெருந்தலைவரை பார்க்க வேண்டும் என்று சசிகுமார் சொல்ல அதை கேள்விப்பட்டவுடன் பெருந்தலைவரும் பா.ராமச்சந்திரன் அவர்களும் உடனே வந்து விட்டனர். தலைவரை பார்த்தவுடன் அந்த நிலையிலும் எழ முற்பட்டிருக்கிறார் சசிகுமார். நீங்கள் வரும்போது எழுந்து நிற்க முடியவில்லை. மன்னித்து விடுங்கள் என்றாராம். பெருந்தலைவருக்கு துக்கம் தாள முடியாமல் கண்ணீர் பெருக்கெடுக்க அங்கே நின்றால் சசிகுமார் மேலும் உணர்ச்சிவசப்படுவார் என்று அறைக்கு வெளியே வந்து விட்டாராம். நடிகர் சங்க செயலாளர் மேஜர், ஸ்ரீகாந்த், ஏவிஎம் ராஜன் போன்றோர் அங்கேயே இருந்து பார்த்துக் கொண்டுள்ளனர்.
    நடிகர் திலகம் அந்த நேரம் சென்னையில் இல்லை. ஆகஸ்ட் 15 முதல் அரசாங்கம் கொண்டு வந்த புதிய வரி விதிப்பை எதிர்த்து திரையுலகம் போராட்டத்தில் இறங்கியதால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன என்பதை பார்த்தோம். 18ந் ஞாயிறு வரை அரசாங்கத்துடன் பேசிச்சு வார்த்தை நடக்கவில்லை. 19ந் தேதி அன்று நடிகர் சங்க தலைவர் நடிகர் திலகம், பிலிம் சேம்பர் தலைவர் ,திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர் சங்கத்தை சேர்ந்தவர்கள், தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் முதல்வர் கருணாநிதியை சந்தித்து விவாதிக்க புதிய சட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது என்ற அறிவிப்பு வந்தது. அதன்படி மறுநாள் ஆகஸ்ட் 20 அன்று திரையரங்குகள் திறக்கப்பட்டன. இந்த செய்திகளெல்லாம் இந்த தொடரில் முன்பே பார்த்தோம். இதெல்லாம் முடிந்து படப்பிடிப்பும் ஒத்தி வைக்கப்பட்டதால் சில நாட்கள் ஓய்வு எடுத்து வரலாம் என்று நினைத்து நடிகர் திலகம் கமலா அம்மாளுடன் சூரக்கோட்டை சென்று விட்டார். விபத்து நடந்த அன்றே அவருக்கு தகவல் சொல்லப்பட அவர் உடனே தனது செயலாளர் குருமூர்த்தியையும் தயாரிப்பு நிர்வாகி மோகன்தாஸையும் அனுப்பி வைக்க அவர்கள் இருவரும் மருத்துவமனையில் இருந்து சிகிச்சைக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தர சொல்லியிருந்தார். மறுநாள் காலை வி சி சண்முகம் அவர்களும் நேரில் சென்று பார்த்திருக்கிறார்.
    தீவிபத்து சசிகுமார் உடலை மட்டுமல்ல அவரது மனதையும் பாதித்த விட்டது. இனிமேல் தன்னால் சினிமாவில் நடிக்க முடியுமா என்று மேஜரிடம் மற்றும் ஏவிஎம் ராஜனிடம் கேட்டிருக்கிறார். நிச்சயமாக முடியும் என்று அவர்கள் ஆறுதல் சொல்லியிருக்கிறார்கள். நடிகர் திலகத்தின் டாக்டர் ஒருவரின் நண்பரான பிளாஸ்டிக் சர்ஜன் வெளிநாட்டில் வசிப்பவர் ஒருவர் சென்னை வந்து ஒரு வாரம் தங்கியிருந்திருக்கிறார். விபத்திற்கு முதல்நாள்தான் தமிழகத்தின் மற்ற ஊர்களை காண்பதற்காக கிளம்பி போயிருக்கிறார். அவரை எங்கேயிருந்தாலும் தேடி கண்டு பிடிக்க நடிகர் திலகம் சொல்ல அந்த டாக்டரும் முயற்சித்திருக்கிறார். இன்றைய நாட்கள் போல் தொடர்பு கொள்ளும் வசதிகள் அன்றைய நாட்களில் வெகு குறைவு என்பதால் அவரை கண்டு பிடிக்கவே முடியவில்லை என்ற செய்தியும் வந்தது. அவருக்கு ரத்தம் செலுத்த வேண்டும் என்றபோது பலரும் முன் வந்து ரத்தம் கொடுத்திருக்கிறார்கள். மாலையில் கோவில் பிரசாதங்களை கொண்டு கொடுத்த ஏவிஎம் ராஜனிடம் அய்யப்ப கானங்கள் பாடும்படி சசிகுமார் கேட்டிருக்கிறார். வருடந்தோறும் மாலை அணிந்து விரதம் இருந்து சபரிமலை போகும் வழக்கம் உடையவர் சசிகுமார். ராஜன் பாட சற்று ஆசுவாசம் அடைந்தாராம். சற்று முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது என்று டாக்டர்கள் சொல்ல அனைவரும் சந்தோஷப்பட இந்த தகவல் நடிகர் திலகத்திற்கு சொல்லப்பட்டிருக்கிறது.
    ஆனால் சில மணி நேரங்களில் நிலைமை மோசமானது. அதை அவரே உணர்ந்தார் என தோன்றுகிறது. காரணம் சாமி பாடல்களை பாடிக் கொண்டிருந்த குடும்பத்தினரிடம் தேசிய கீதம் பாட சொல்லியிருக்கிறார். அவர்களும் பாட கூடவே தானும் சேர்ந்து பாடியிருக்கிறார். பாடி முடிக்கையில் ஜெய்ஹிந் என்ற முழக்கத்தோடு அந்த கடமை தவறாத தாய் நாட்டு பற்றுடைய அந்த ராணுவ வீரனின் உயிர் பிரிந்திருக்கிறது. கணவர் இறந்த சில மணி நேரங்களிலேயே அந்த தகவல் தெரியாமலேயே அவரது மனைவி திருமதி சசிகலாவின் உயிரும் பிரிந்தது. செய்தி கேட்டு திரையுலகமே மொத்தம் திரண்டு வந்தது. அஞ்சலி செலுத்தியது. இருவரின் உடல்களும் நடிகர் சங்க வளாகத்தில் இறுதி மரியாதைக்கு வைக்கப்பட்டது.
    காலையில் செய்தி கேள்விப்பட்டு 9 மணி சுமார் சூரக்கோட்டையிலிருந்து புறப்பட்ட நடிகர் திலகம் 1 மணிக்கு சென்னை வந்து சேர்ந்து விட்டார். நடிகர் சங்க வளாகத்திற்கு சென்றவர் நிலை குலைந்து கண்ணீர் விட்டு அழுதார். தான் சசிகுமார் மேல் மிகுந்த பாசம் வைத்திருந்ததை சொல்லி சொல்லி அழுதிருக்கிறார். சசிகுமாரும் அவரை குருவாகவே எண்ணி வாழ்ந்தவர். அவர் மேல் அளவற்ற அன்பு வைத்திருந்தவர். மறைவதற்கு ஒரு மாதம் முன்பு சசிகுமார் நடித்த ஒரு நாடகத்திற்கு தலைமை தாங்கிய நடிகர் திலகம் அவரை மனந்திறந்து பாராட்டியதை தனது வாழ்நாள் பரிசாக கருதினார் சசிகுமார். அந்த சம்பவத்தை சொல்லி சொல்லி மகிழ்ந்ததாக அவரது தனிப்பட்ட ஒப்பனையாளர் சொல்லியிருந்தார். நடிகர் சங்கத்திலிருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டபோது சசிகுமார் உடலை தோளில் தாங்கி வண்டியில் ஏற்றினார் நடிகர் திலகம். அனைத்து நடிகை நடிகையரும் (ஒருவரை தவிர) கலந்து கொண்டனர் என்ற செய்தி பத்திரிக்கைகளில் வந்தது.
    சசிகுமார் தம்பதியினரின் முழு மருத்துவ செலவுகளையும் இறுதி சடங்கிற்கிற்கான அனைத்து செலவுகளையும் நடிகர் திலகமே ஏற்றுக் கொண்டார். நடிகர் சங்கம் சார்பில் ஒரு குறிப்பிட்ட தொகை சசிகுமாரின் மகள் நந்தினி மற்றும் மகன் விஜயசாரதி ஆகியோர் பெயரில் வங்கியில் வைப்பு தொகையாக (FD) போடப்பட்டு அவர்கள் மைனர் என்பதால் கார்டியன் பொறுப்பை நடிகர் திலகமும் மேஜரும் ஏற்றுக் கொண்டனர். சசிகுமாரின் மனைவியின் நகைகளும் அந்த வங்கியில் வைக்கப்பட்டது. இந்த ஏற்பாட்டிற்கு சசிகுமாரின் பெற்றோரும் அவர் மனைவியின் தாயாரும் ஒப்புக் கொண்டார்கள். ஒரு வாரத்திற்கு பின் அகில இந்திய சிகர மன்றமும் ஸ்தாபன காங்கிரஸும் இணைந்து ஒரு இரங்கற்கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் நடத்தியது. பலரும் தங்களது குடும்பம் பிள்ளைகள் அவர்கள் நலன் என்றே நினைக்கும் காலத்தில் நாட்டையும் மண்ணையும் தான் ஏற்றுக் கொண்ட தலைவனையும் இறுதி மூச்சில் கூட எண்ணி வாழ்ந்த ஒரு கடமை வீரனை தேச தொண்டனை இழந்து வாடுகிறோம் என்று நடிகர் திலகம் பேசினார். அவர் அதோடு நிறுத்தவில்லை. ஒரு மாதத்திற்குள்ளாகவே செப்டம்பர் மாதத்தில் செங்கல்பட்டு மாவட்ட சிவாஜி ரசிகர் மன்ற கூட்டமைப்பின் ஒரு நாள் மாநாட்டை நடத்தி கூட்ட அரங்கிற்கு சசிகுமார் பெயரையும் வைத்தார். அதில் பேசும்போது சசிகுமாரை தனது கலையுலக வாரிசாகவே நினைத்திருந்ததாக நடிகர் திலகம் பேசினார்.
    ஒரு நல்ல நடிகனை, அதை விட ஒரு நல்ல மனிதனை, ஒரு தேசியவாதியை பெருந்தலைவரின் தொண்டனை நடிகர் திலகத்தின் அன்பு தம்பியை இழந்தது காங்கிரஸ் இயக்கத்திற்கும் சிவாஜி ரசிகர் மன்றத்திற்கும் பேரிழப்பானது. ஒவ்வொரு சிவாஜி ரசிகனுக்கும் காமராஜ் தொண்டனுக்கும் ஏற்பட்ட வேதனையை அதே போன்ற ரசிகன் மானசீக தொண்டன் என்ற முறையில் தான் இங்கே இதை தொடரில் பகிர்ந்து கொண்டேன்.
    நடிகர் திலகம் நாம் இப்போது பயணப்பட்டு வரும் காலகட்டத்தில் அரசியல் நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தார் என்றே சொல்ல வேண்டும். சென்னையிலும் சரி வெளியூர் காங்கிரஸ் கூட்டங்களிலும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் பழம் பெரும் காங்கிரஸ் தியாகி கோமதி சங்கர தீட்சிதர் குடும்பத்திற்கு நிதி உதவி அளிக்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு நிதி உதவி வழங்கினார். அப்படியே நெல்லை மற்றும் தூத்துக்குடி நகரங்களில் ஸ்தாபன காங்கிரஸ் கூட்டங்களிலும் கலந்து கொண்டார். இத்தனைக்கும் சென்னை சினிமா ரசிகர் சங்கம் 1973ல் சிறந்த படங்களுக்கான பரிசளிப்பு விழாவை நடத்தியது பம்பாயிலிருந்து நடிகர் திலகத்தின் நெருங்கிய நண்பர் ராஜ்கபூர் தலைமை தாங்கி பரிசளித்தார். கெளரவம் படத்திற்காக சிறந்த நடிகர் பரிசை பெற்றிருந்தார். இயக்க கூட்டங்களுக்காக சுற்றுப்பயணம் போய்விட்டதால் அந்த விழாவில் அவர் கலந்து கொள்ளவில்லை. அதே போல் அதே காலகட்டத்தில் நடிகர் ஜெய்சங்கர் 100 படங்களை நடித்து முடித்ததற்காக ஒரு விழா நடைபெற்றபோது அப்போதும் வெளியூரில் இருந்ததால் நடிகர் திலகம் தனது மகன் பிரபுவை விழாவில் கலந்து கொள்ள சொல்லி அனுப்பினார். நடிகர் திலகம் சார்பாக பிரபு ஜெய்சங்கருக்கு மரியாதை செய்தார். தென் தமிழகம் மட்டுமல்லாமல் தஞ்சை குடந்தை போன்ற நகரங்களிலும் கூட்டங்களில் கலந்து கொண்டு பேசினார். இதை தவிர கோவை நகராட்சியின் சார்பாக ஒரு கலையரங்கம் (ஆடிட்டோரியம்) கட்டப்பட்டு அதையும் நடிகர் திலகம்தான் திறந்து வைத்தார்.
    அன்றைய நாட்களில் நடிகர் திலகம் அவர்களுக்கும் அதிமுக பொது செயலாளர் அவர்களுக்கும் அறிக்கை மற்றும் மேடை பேச்சில் நிறைய விவாதங்கள் நடந்தது. திரையுலக போராட்டத்தை முடிவிற்கு கொண்டு வர இறுதியாக கருணாநிதியை வீட்டில் சந்தித்து பேசியது பற்றி (தனியாக சந்திக்கவில்லை. அனைத்து சங்க பிரதிநிதிகளோடுதான் சந்தித்தார்) அதிமுக பொது செயலாளர் விமர்சனம் செய்தது இந்த விவாதங்களுக்கு ஆரம்ப புள்ளியானது. அதுவும் தவிர பெருந்தலைவரை சுயநலவாதி என்று அதிமுக பொது செயலாளர் குறிப்பிட அது நடிகர் திலகத்தையும் ரசிகர்களையும் ஸ்தாபன காங்கிரஸ் தொண்டர்களையும் மிகுந்த கோபமுற்ற செய்தது. அனைத்து கூட்டங்களிலும் தமிழகம் மீண்டும் தன் பெருமையை திரும்ப பெற இரண்டு கழகங்களையும் புறக்கணித்து மீண்டும் பெருந்தலைவர் தலைமையில் ஆட்சி மலர வேண்டும் அதற்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்ற கருத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி கூறினார். நான் இந்த தொடரில் முன்பே குறிப்பிட்டது போல் பல தேர்தல் தோல்விகள் தந்த பாடத்தினால் திமுக அரசு மதுக்கடைகளை 1974 செப்டம்பர் 1 முதல் மூடியது. மதுவிலக்கை ரத்து செய்வதை ஆரம்பம் முதல் எதிர்த்த ஸ்தாபன காங்கிரஸ் இதை தார்மீக வெற்றியாக கொண்டாடியது.
    செப்டம்பர் முடிந்து அக்டோபர் ஆரம்பிக்க நமது பாட்டுடை தலைவனின் பிறந்த நாள் அக்டோபர் 1 அன்று மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. கட்டுக்கடங்காத கூட்டம் அன்றைய தெற்கு போக் ரோடை ஸ்தம்பிக்க வைத்தது. மாலைகளும் சால்வைகளும் துண்டுகளும் மலை போல் குவிந்து விட்டதாக பத்திரிக்கை செய்தி கூறியது. திரையுலகை சேர்ந்தவர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் நடிகர் திலகத்திற்கு வாழ்த்து சொல்ல குவிந்து விட்டனர். நடிகர் திலகத்தை நேரில் சந்தித்து வாழ்த்து சொல்ல பெருந்தலைவர் அன்னை இல்லம் வந்தார். 1975ல் அவர் மறைவதற்கு முதல் நாள் நடந்த நடிகர் திலகத்தின் பிறந்த நாள் விழாவில் மட்டுமே அவர் கலந்து கொண்டார் என்று சிலர் சொல்வது தவறான தகவல். நாம் இப்போது கடந்து வந்து கொண்டிருக்கும் 1974லிலும் நடிகர் திலகத்தின் பிறந்த நாளன்று நேரில் அன்னை இல்லம் வந்தவர் கூடவே பா.ரா அவர்களையும் அழைத்து வந்தார். இன்னும் சொல்ல போனால் அன்னை இல்லத்தில் ஒரே சோபாவில் பெருந்தலைவரும் நடிகர் திலகமும் அமர்ந்திருக்கும் புகைப்படம் 1974ல் எடுக்கப்பட்டதுதான்.
    நடிகர் திலகத்தின் பிறந்தநாள் விழாவை எங்கே கொண்டாடுவது என்ற கேள்வி எழுந்தபோது இந்த முறை சேலம் நகரில் நடத்துவது என முடிவானது. இது அகில இந்திய சிகர மன்றத்தின் நான்காவது மாநில மாநாடு என்று அறிவிக்கப்பட்டது. (1970ல் தொடங்கி இடையில் 1973ல் மட்டும் விட்டு போனது) முதலில் அக்டோபர் 12,13 என்று முடிவு செய்யப்பட்டு வழக்கம் போல் முதல் நாள் அரசியல் மாநாடு அடுத்த நாள் கலையுலக திருவிழா என்று அறிவிக்கப்பட்டது. முதல் நாள் பெருந்தலைவர் தொடங்கி ஸ்தாபன காங்கிரஸின் அனைத்து தலைவர்களும் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில் அதற்கு முந்தைய ஞாயிறு அக்டோபர் 6 அன்று பாண்டிச்சேரியில் பெருந்தலைவர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட அதற்கும் நடிகர் திலகம் தலைமையேற்றார். அது கிட்டத்தட்ட புதுவை மாநில மாநாடு போல நடந்தது. மாபெரும் ஊர்வலம் ஒன்றை நடிகர் திலகம் தொடங்கி வைத்து ஊர்வலத்தை ராஜா தியேட்டர் அருகே ஒரு மேடையி இருந்து பார்வையிட்டார். மிக பிரம்மாண்டமான அந்த ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டமும் பரபரப்பான செய்தியாயிற்று. அந்த கூட்டத்தில் பேசும்போது நடிகர் திலகம் சென்ற முறை செய்த தவறை செய்து விடாதீர்கள். அந்த கட்சியினரால் ஒரு மாதம் கூட ஆட்சி நடத்த முடியாமல் கவிழ்ந்து போனது. ஆகவே இணைந்து தேர்தல் களம் காணப்போகும் காங்கிரஸ் அணிகளை வெற்றி பெற செய்யுங்கள் என்று வேண்டுகோள் விடுத்து பேசினார்.
    சேலம் மாநாடு தவிர்க்க முடியாத காரணங்களினால் 12,13 தேதிக்களுக்கு பதிலாக 19,20 தேதிகளை மாற்றப்பட்டது. அப்போதும் போஸ் மைதானத்தில் நடைபெற்ற விழாவில் அங்கே அமைக்கப்பட்ட பந்தலுக்கு சசிகுமார் பேர்தான் சூட்டப்பட்டது. இன்றைய நாட்களில் நாம் நடிகர் திலகத்தின் முடிவுற்ற வயதை குறிப்பிட்டு சொல்கிறோம். உதாரணமாக கடந்து போன அக்டோபர் 1 நடிகர் திலகத்தின் 93வது பிறந்த நாள் என அறிவிக்கப்பட்டது (1928 - 2021). ஆனால் அன்றைய நாட்களில் அக்டோபர் 1 அன்று துவங்கும் பிறந்த நாளே எண்ணிக்கையாக அறிவிக்கப்பட்டது. அதன்படி 1974 அக்டோபரில் நடிகர் திலகத்தின் 47வது பிறந்த தின விழா என்றே அதிகாரபூர்வமாக சொல்லப்பட்டது. அதன்படி 47 புறாக்கள் பறக்க விடப்பட்டு 47 அடி உயர கம்பத்தில் காங்கிரஸ் கோடி ஏற்றப்பட்டது. 47 தியாகிகளுக்கு மரியாதை செய்யப்பட்டது. அதில் முதலாவதாக சிறப்பு செய்யப்பட்டது சசிகுமார் அவர்களின் தந்தையார். சேலத்திலும் மிக பெரிய ஊர்வலம். தாரை தப்பட்டை மேளம் முழங்க ஏராளமான வாகனங்களில் மற்றும் நடந்தும் அணி அணியாக ரசிகர்கள் வந்து கொண்டேயிருந்தனர் என பத்திரிக்கை செய்திகள் கூறின. சேலம் மாநகரில் உள்ள தீயணைப்பு நிலையம் அருகே மேடை அமைக்கப்பட்டு நடிகர் திலகம் அங்கேயிருந்து ஊர்வலத்தை பார்வையிட்டார். அவருடன் பிரபல இந்தி நடிகர் சஞ்சீவ் குமார் அவர்களும் கூட நின்று ஊர்வலத்தை பார்வையிட்டார். கூட்டத்தையும் அவர்களின் ஆவேசத்தையும் அவர்கள் நடிகர் திலகத்தின்பால் கொண்ட அன்பையும் கண்டு சஞ்சீவ் குமார் பிரமித்து விட்டார். மாநாட்டு மேடையில் பேசும்போது அவரே இதை குறிப்பிட்டார். நடிகர் திலகத்துடன் ,தமிழக ஸ்தாபன காங்கிரஸ் தலைவர் பா.ரா அவர்களும் ஊர்வலத்தை பார்வையிட்டார்.
    மாலையில் அரசியல் மாநாட்டு மேடை. முதலில் 12ந் தேதி விழா என்றபோது பெருந்தலைவர் ஒப்புக் கொண்டு தேதி கொடுத்திருந்தார். பின்னர் அது சட்டென்று மாற்றப்பட்டு 19ந் தேதி மாநாடு என்று அறிவிக்கப்பட்டதால் ஏற்கனவே வேறு ஒரு நிகழ்வுக்கு தேதி கொடுத்திருந்த காரணத்தினால் அவரால் வர இயலவில்லை. இதை போனில் கூட சொல்லியிருக்கலாம். ஆனால் மாநாட்டு அமைப்பாளர் அகில இந்திய சிகர மன்ற தலைவர் சின்ன அண்ணாமலைக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தி தனது வருத்தத்தையும் தெரிவித்து கொள்கிறார். பெருந்தலைவர் நடிகர் திலகத்தை எந்தளவு நேசித்தார் என்பதற்கு இதுவும் ஒரு சான்று. அவர் மட்டும்தான் வரவில்லையே தவிர, பா.ரா, குமரி அனந்தன், நெல்லை ஜெபமணி, மணி வர்மா, ரமணிபாய், குடந்தை ராமலிங்கம், தண்டாயுதபாணி, நேதாஜி, அப்பன்ராஜ் போன்ற பலர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். பா.ரா. பேசும்போது சிவாஜி மன்றமும் காங்கிரஸும் வேறு வேறு அல்ல. அதே போல் சிவாஜி வாழ்க என்றாலும் காமராஜ் வாழ்க என்றாலும் இரண்டும் ஒன்றே என்றார். மிக பெரிய போராட்டத்திற்கு இந்த தொண்டர்கள் தயாராக இருக்க வேண்டும் என்றும் கூறினார். எதிர்க்கட்சியினர் காங்கிரஸை காமராஜர் சிவாஜி மன்றமாக ஆக்கி விட்டார் என்று பழி சொன்னதை ரமணிபாய் போன்றவர்கள் கடுமையாக விமரிசித்து நடிகர் திலகத்தின் தொண்டை அவரது ரசிகர்களின் பங்களிப்பை பாராட்டி பேசினார். இறுதியில் நடிகர் திலகம் நிறைவுரை நிகழ்த்தும்போது தானும் தனது பிள்ளைகளும் தமிழகத்திலே ஒரு மாற்றத்தை கொண்டு வந்து பெருந்தலைவர் தலைமையிலே ஆட்சி அமைப்போம் என்று சூளுரைத்தார். பா.ராவிடம் நீங்கள் இடும் கட்டளையை எங்களது மன்றத்தினர் சிரமேற்கொண்டு செயல்படுவார்கள் என்று வாக்குறுதி கொடுத்தார். நடிகர் திலகத்தை ஏனைய ஸ்தாபன காங்கிரஸ் தலைவர்கள் மதிக்கவில்லை என்பது எனக்கு தெரிந்தவரை உண்மையில்லை என்றே கூறுவேன்.
    மறுநாள் காலை கலை நிகழ்ச்சிகள். குன்னக்குடி அவர்களின் வயலின் கச்சேரி. காலையிலே கட்டுக்கடங்காத கூட்டம். காவல் துறையினராலும் தொண்டர் படையினாலும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. செல்லும் இடமெல்லாம் நடிகர் திலகத்திற்கு திருவிழா போல் கூட்டம் கூடுவதை கண்டு ஆத்திரத்தில் பொருமிக் கொண்டிருந்தவர்கள் இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி உள்ளே நுழைந்து கல் வீசி தாக்கி ஒரு குழப்பத்தை உருவாக்க அதில் நிறைய ரசிகர்களும் தொண்டர்களும் காயம் அடைந்து அதில் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சூழல். தொடர் சுற்றுப்பயணத்தினாலும்[/B]இடைவிடாத படப்பிடிப்பினாலும் முதல் நாள் நடந்த ஊரவலத்தை பல மணி நின்று பார்வையிட்டது, அதன் பிறகு சேலம் நகரில் பல இடங்களில் காங்கிரஸ் கொடியேற்றி வைத்தது என்று ஓய்வில்லாமல் சுழன்ற நடிகர் திலகத்திற்கு இரவில் காய்ச்சல். ஹோட்டல் அறையில் ஒய்வு எடுத்துக் கொண்டிருந்தவர் விஷயம் கேள்விப்பட்டு மாநாட்டு பந்தலுக்கு வந்து அனைவரையும் அமைதிப்படுத்தி பேசினார். மருத்துவமனைக்கும் சென்று காயம் பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மாலை வழக்கம் போல் தமிழ் திரையுலக நட்சத்திரங்கள் கலந்து கொண்ட விழாவாக நடந்தது. அதில் முத்துராமன், மேஜர், ஸ்ரீகாந்த், மனோகர், விகேஆர், சுருளிராஜன், விஜயகுமார், மனோரமா, விஜயகுமாரி, பாலமுருகன், பி மாதவன், ஏஸிடி, இயக்குனர் மகேந்திரன் முதலியோர் கலந்து கொண்டு நடிகர் திலகத்தை வாழ்த்தி பேசினார்கள்.
    மிக சிறப்பாக அந்த நான்காவது மாநாடு நடைபெற்று முடிந்தது. மாநாடு முடிவதற்கு முன்பாகவே சின்ன அண்ணாமலையையும் மற்ற சிகர மன்ற நிர்வாகிகளையும் எங்கள் மதுரை ரசிகர்கள் முற்றுகை இட்டுவிட்டனர். சென்னை, திருச்சி, கோவை, சேலம் என்று எல்லா ஊர்களிலும் சிகர மன்றத்தின் சார்பாக விழா நடத்தி விட்டீர்கள். ஆனால் அனைத்து ஊர்களையும் விட நடிகர் திலகத்தின் புகழ் பாடும் கோட்டையான மதுரையில் இதுவரை ஒரு விழா கூட நடத்தவில்லை. உடனே அதற்கு ஒரு முடிவு சொல்ல வேண்டும் என்று வற்புறுத்த அடுத்த வருடம் பிறந்த நாள் விழா மதுரையில் நடத்தப்படும் என்று சொல்கிறார்கள். இன்னும் ஒரு வருடம் இருக்கிறது. அதுவரை காத்திருக்க முடியாது என்று ரசிகர்கள் விடாப்பிடியாக வற்புறுத்த வி சி சண்முகம் அவர்களிடமும் பேசிவிட்டு சரி, நடிகர் திலகத்தின் 175வது படமாக அவன்தான் மனிதன் வெளியாக இருக்கிறது. அந்த 175வது பட விழா மதுரையில் நடத்துவோம் என உறுதி கூறினார்கள் 173வது படமாக அன்பை தேடி தீபாவளிக்கு வெளியாகிறது. ஆகவே 175 விரைவில் வந்து விடும் என்றும் சொல்கிறார்கள். மதுரை ரசிகர்களோ 175வது பட விழாவையும் மதுரையில் நடத்த வேண்டும். அடுத்த அக்டோபர் 1 பிறந்த நாள் விழாவையும் மதுரையில் நடத்த வேண்டும் என்று நிர்பந்திக்க இந்த இரண்டு அறிவிப்புகளும் மேடையில் வைத்து மேஜரால் அறிவிக்கப்பட்டது. (ஆனால் அதில் ஒன்றை கூட நடத்த காலம் அனுமதிக்கவில்லை என்பது மதுரை ரசிகர்களின் தீராத வருத்தங்களில் ஒன்றாக ஆகிப்போனது. அதனால்தான் சிறிது கால இடைவெளிக்கு பிறகு அகில இந்திய சிகர மன்றம் 200வது பட விழாவை நடத்த முடிவெடுத்தவுடன் வேறு எந்த சிந்தனையும் இல்லாமல் மதுரை முடிவு செய்யப்பட்டது). மாநாட்டு நிகழ்வுகள் வழக்கம் போல் படமாக்கப்பட்டன. அந்த விழா சுருள், தான் தயாரித்து பொங்கலுக்கு வெளி வர இருக்கும் மனிதனும் தெய்வமாகலாம் படத்துடன் காண்பிக்கப்படும் என்று சின்ன அண்ணாமலை அறிவித்தார். (ஆனால் அது காட்டப்பட்டதா என்பது என்னால் உறுதியாக சொல்ல முடியவில்லை. நான் பார்த்ததில்லை).
    தொடரின் இந்த பதிவில் படங்களை தாண்டிய பல்வேறு நிகழ்வுகளை பார்த்தோம். அதில் மேலும் ஒரு தகவலையும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 1974 ஆகஸ்ட் மாதம் இந்திய குடியரசு தலைவர் தேர்தல் நடைபெற்றது. 1969ல் எவ்வளவுக்கு எவ்வளவு பரபரப்பாக நடைபெற்றதோ அதற்கு நேர்மாறாக இந்த முறை அமைதியாக நடைபெற்று மத்திய அமைச்சராக இருந்த பக்ருதீன் அலி அஹமத் ஜனாதிபதியாக தேர்வானார். கர்நாடகத்தின் முன்னாள் முதல் முதல்வர் ஜாட்டி துணை ஜனாபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இரு காங்கிரஸ் இணைப்பு தமிழகத்தில் நடைபெறுமா என்ற விவாதம் தொடர்ந்தது. ஆனால் தமிழகம் வந்தபோதெல்லாம் இந்திரா அம்மையார் பெருந்தலைவரை சந்தித்து பேசிக் கொண்டிருந்தார்.
    அந்த 1974 ஆகஸ்ட் இறுதி செப்டம்பர் முதல் வாரங்களில் அதுவரை பார்க்க வாய்ப்பில்லாதிருந்த மனோகரா படத்தை பார்த்தேன். மதுரை ஸ்ரீதேவியில் மீண்டும் திரையிடப்பட்ட படத்தை ஒரு ஞாயிறு மாலை காட்சியில் செம அலப்பறையோடு நானும் என் கஸினும் பார்த்தோம். படம் ஆரம்பம் தொட்டு முடிவு வரை ரசிகர்கள் ஆரவாரத்தோடு பார்த்தது இப்போதும் நினைவில். அதே ஸ்ரீதேவியில் தொடர்ந்து சுமதி என் சுந்தரி திரையிடப்பட அதற்கும் போயிருந்தோம். ஆனால் அதற்கு ஞாயிறு ஈவினிங் போக முடியவில்லை. வேறொரு நாள் ஈவினிங் ஷோ பார்த்தோம். என் மகன் படத்தில் நடிகர் திலகத்தின் உடைகள் மற்றும் அதன் கலர் பற்றி சரியாக அமையவில்லை என்று சொல்லியிருந்தேன். என் மகன் படம் வெளியான இரண்டு மூன்று வாரங்களிலேயே சுமதி என் சுந்தரி படத்தை மீண்டும் தியேட்டரில் பார்த்தது அந்த படத்தில் நடிகர் திலகத்தின் உடைகளை மீண்டும் ரசிக்கும் வாய்ப்பு கிடைத்தது கூட என் மகன் பட உடைகளை ரசிக்க முடியாதபடி செய்துவிட்டது நடிகர் திலகம் நடிக்க ஆரம்பிக்கப்பட்ட புதிய படங்கள் என்று பார்த்தால் அருணபிரசாத் மூவிஸின் பெயரிடப்படாத புதிய படம் படப்பிடிப்பு ஆரம்பமானது (பாட்டும் பாரதமும்). அது தவிர ஏஎல்எஸ் தயாரித்து முக்தா சீனிவாசன் இயக்கிக் கொண்டிருந்த சினிமா பைத்தியம் படத்தில் வாஞ்சி நாதன் வேடத்தில் சிறப்பு தோற்றமாக நடிகர் திலகம் தோன்றுகிறார் என்ற செய்தியும் வந்தது.
    அடுத்த படமாக தீபாவளிக்கு அன்பை தேடி வெளியாகிறது என்ற செய்தி வந்து விட்டது. சிறிது நாட்களில் முக்தா பிலிம்ஸ் சார்பில் விளம்பரமும் வந்துவிட்டது. முக்தா பிலிம்ஸின் முதல் கலர் படம். பாமிலி சப்ஜெக்ட் என்று செய்திகள். கலைஞானம் கதை. முக்தா பிலிம்சில் ஆஸ்தான திரைக்கதையாசிரியர்களில் ஒருவரான தூயவன் வசனம் என்று தெரியும். படத்தில் ஒரு காட்சியில் நடிகர் திலகம் கௌதம புத்தர் வேடம் போட்டிருக்கிறார் என்ற செய்தியும் அந்த ஸ்டில்லும் வெளிவந்து ஆவலை தூண்டியிருந்தது. பாடல்கள் தாமதமாகவே வெளியானது. அந்த வருடம் நவம்பர் 13 புதனன்று தீபாவளி மதுரை சிந்தாமணியில் படம் ரிலீஸ். மன்ற டோக்கன்தான் வாங்க வேண்டும் என்று இருக்கையில் வேறொரு சிக்கல் வந்தது. என் கஸின் அந்நேரம் டிகிரி முடித்து விட்டு வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருந்தார் என சொல்லியிருந்தேன் அல்லவா, அவர் சில நேர்முக தேர்வுகளுக்காக சென்னை சென்றிருந்தார். முதல் வாரமே வந்துவிடுவேன் என்று சொல்லி சென்றவர் வர முடியவில்லை. எப்போது வருகிறார் என்றும் தெரியவில்லை. அவர் இல்லாமல் நான் தனியே போய் மன்ற டோக்கன் வாங்குவது என்பது நடக்காது. ஆஹா! இதன் காரணமாக படத்தின் ஓபனிங் ஷோவை மிஸ் பண்ண போகிறோமோ என்று கவலை.
    ஸ்கூலில் சக வகுப்பு மாணவன் ஒருவனிடம் இதை பற்றி பேசிக் கொண்டிருக்க சிந்தாமணிதானே, நான் வாங்கி தருகிறேன் என்றான். எப்படிடா என்று கேட்டால் அவன் தந்தை அங்கம் வகிக்கும் யூனியன் கிளப் (தமுக்கம் மைதானத்திற்கும் காந்தி மியூசியத்திற்கும் நடுவில் அமைந்திருக்கும்) அங்கே சிந்தாமணி டாக்கீஸ் ஓனர் வருவார். அப்பாவின் நண்பர், எனக்கும் நல்லா தெரியும். நான் கேட்கிறேன் என்று சொன்னான். (அவன் அங்கே டேபிள் டென்னிஸ் விளையாட போவான்). அது நடக்குமா என்பதை விட எப்படியாவது டிக்கெட் கிடைத்து படம் பார்த்தால் போதும் என்ற நிலையில்தான் நான் இருக்கிறேன். சரி வாங்கு என்று சொல்லி விட்டேன். அவன் அவரை கிளப்பில் பார்த்ததாகவும் சரி என்று சொல்லி விட்டதாகவும், ஒரு பேப்பரில் எழுதி தந்து விடுகிறேன்.அதை கொண்டு போய் தியேட்டரில் கொடுத்தால் டிக்கெட் கொடுத்து விடுவார்கள் என சொன்னதாகவும் சொன்னான். படம் புதன் ரிலீஸ். சனிக்கிழமை மேற்கண்ட தகவலை சொல்கிறான். திங்கள் ஸ்கூலில் முதலில் அவனை பார்த்தவுடன் கேட்டது இது பற்றித்தான். நேற்று அவர் வரவில்லை என்கிறான். இன்று எப்படியும் வாங்கி விடுவேன் என்று சொல்ல மறுநாள் செவ்வாய் காலையிலும் அதே பதில் வருகிறது. இல்லை. இன்னிக்கு எப்படியும் வாங்கி விடுகிறேன் என்று சொல்ல அவர் வரவில்லை என்றால் என்று நான் கேட்க, வரலைன்னா அவர் வீட்டிற்கே போன் பண்ணி பேசி விடுகிறேன் என்றான். வேறு வழியில்லை. மறுநாள் காலையில் தீபாவளி. நான் உன் வீட்டிற்கு வந்துறேன். அங்கிருந்து சேர்ந்து போயிரலாம் என்கிறான். முதல் நாள் தீபாவளியன்று 5 ஷோ. ஓபனிங் ஷோ காலையிலே 9 மணிக்கு. நான் ஒரு எட்டு மணிக்கு வந்துறேன் அப்படின்னு சொல்கிறான். எங்க ரெண்டு பேருக்குமே டிக்கெட் கன்பர்ம் ஆகவில்லை. அதுக்குள்ளே டிக்கெட் இருக்கு நீ வரியா நீ வரியான்னு இன்னும் மூணு பேரை வேற சேர்த்துட்டோம். மொத்தம் அஞ்சு பேர். அஞ்சு பேரும் தீபாவளி காலையில் 8 மணிக்கு எங்க வீட்டிற்கு வந்து அங்கேயிருந்து சிந்தாமணி போவதாக பிளான் .
    ஐந்து பேர்களும் வந்தார்களா? அதை விட முக்கியமா நண்பனால் சிந்தாமணி டாக்கீஸ் அதிபரை பார்த்து லெட்டர் வாங்க முடிந்ததா? ஓபனிங் ஷோ அனுபவம் எப்படி இருந்தது? அடுத்த வாரம் பேசுவோம்.
    (தொடரும்)
    அன்புடன்


    Thanks Murali Srinivasan ( நடிகர்திலகம் சிவாஜி ரசிக நந்தவனப்பூக்கள். ( One and Only Sivaji)
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •