-
2nd October 2022, 03:05 PM
#11
Senior Member
Devoted Hubber
நடிகர் திலகம், நடிப்புச் சக்கரவர்த்தி, சிம்மக்குரலோன் என்று மக்களால் அழைக்கப்படும்
விழுப்புரம் சின்னையா மன்ராயா் கணேசமூர்த்தி எனும் சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்த நாளில் அவரை நினைவு கூர்ந்து வணங்கி
மகிழ்கின்றது நம் குழு
சிவாஜி கணேசன் அவர்கள்,
சின்னையா மன்றாயருக்கும்,
ராஜாமணி அம்மாளுக்கும் 4 வது மகனாக விழுப்புரத்தில் 1928 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி பிறந்தார்.
சிவாஜி கணேசனின் பூர்வீகம் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வேட்டைத்திடல் என்ற கிராமம். ராஜாமணி அம்மாளின் பூர்வீகம் விழுப்புரம். அங்குதான் 1928 இல் சிவாஜிகணேசன் பிறந்தார். சிவாஜியின் தந்தை சின்னையா மன்றாயர் இரயில்வே துறையில் பணியாற்றிக் கொண்டிருந்தார் மேலும் அவர் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபாடு கொண்டவர். ஒருமுறை வெள்ளைக்கார சிப்பாய்கள் செல்லும் இரயிலுக்கு சின்னையா வெடி வைத்ததற்காக அவருக்கு ஆங்கிலேய அரசால் 7 வருடம் சிறை தண்டனை வழங்கப்பட்டது. சின்னையா மன்றாயர் கைது செய்யப்பட்ட அதே நாளில்தான்
சிவாஜி பிறந்தார்.
மேடை நாடக வாழ்க்கை :
சிறுவயதில் வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்தைப் பார்க்க தந்தையுடன் சென்றபோது தானும் நடிகனாக வேண்டும். கட்டபொம்மனாக நடிக்க வேண்டும் என்ற எண்ணம், சிவாஜி கணேசன் மனதில் ஆழமாகப் பதிந்தது. நடிப்பின் மீது எற்பட்ட ஈர்ப்பின் காரணமாக தனது ஏழு வயதில் பெற்றோருக்கு தெரியாமல் திருச்சியில் முகாமிட்டு இருந்த மதுரை ஸ்ரீபாலகான சபா என்ற நாடகக்குழுவில் சேர்ந்தார். அந்த நாடகக் குழுவில் இருந்த சின்ன பொன்னுசாமி படையாச்சி என்பவர் தான் சிவாஜி கணேசனுக்கு நடிப்புப் பயிற்சி அளித்தார்.
ஏழு வயது சிறுவனாக சிவாஜி கணேசன் நடித்த முதல் மேடை நாடகம் ராமாயணம் அதில் அவர் போட்ட வேடம் சீதை. ஆரம்பத்தில் பெண் வேடங்களில் நடித்த இவருக்கு பிறகு பரதன், சூர்ப்பனகை, இந்திரஜித்
என பல வேடங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சிறுவனாக நாடகங்களில் நடித்த போதே, மாறுபட்ட வேடங்களில் நடிக்கும் ஆற்றலைப் பெற்ற்றிருந்தார்.
திராவிட கழக மாநாட்டில் (1946), பேரறிஞர் அண்ணா எழுதிய சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்த கணேசனின் நடிப்புத்திறனை மெச்சிய தந்தை பெரியார், அவரை 'சிவாஜி' கணேசன் என்று அழைத்தார். அன்றிலிருந்து அந்த பெயரே நிலைத்தது.
செய்த உதவிகள் :
கல்வி கூடங்கள் கட்டுவதற்கும், இயற்கை சீற்றங்களின் போதும்,போர் கால சமயங்களிலும் பல நிதி உதவிகளை சிவாஜி கணேசன் செய்துள்ளார். 1959ல் மதிய உணவு திட்டத்திற்கு அன்றைய பாரத பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களிடம் ரூபாய் ஒரு லட்சம் (இன்றைய மதிப்பில் ஒரு கோடி) வழங்கியுள்ளார். அது மட்டுமின்றி , 1961ல் தாம்பரத்தில் காசநோய் மருத்துவமனை கட்டுவதற்காக ரூபாய் ஒரு லட்சம் வழங்கி உள்ளார். 1960ல் பெருவெள்ளம் சென்னையை சூழ்ந்தபோது காமராஜர் முன்னிலையில் 1 லட்சம் உணவு பொட்டலங்களை அவரது இல்லத்தில் தயாரித்து கொடுத்ததோடு 800 மூட்டை அரிசியும் கொடுத்துள்ளார்.
1965ல் இந்தியா-பாகிஸ்தான் போரின் போது அன்றைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியிடம், திருமதி. கமலா அம்மையாரின் 400 பவுன் தங்க நகைகளையும், பெங்களூரில் தனக்கு பரிசாக கிடைத்த 100 பவுன் தங்க பேனாவையும், மொத்தம் 500 சவரன் போர் நிதியாக கொடுத்தார். கயத்தாரில் கட்டபொம்மன்
தூக்கிலிடப்பட்ட இடத்தை விலைக்கு வாங்கி, அதில் தனது செலவில் கட்டபொம்மனுக்கு சிலை வைத்தார் அது இப்போதும் நினைவு சின்னமாக திகழ்கின்றது.
1968-ல் உலகத்தமிழ்மாநாடு பேரறிஞர் அண்ணா தலைமையில் நடைபெற்றபோது சென்னை கடற்கரையில் திருவள்ளுவருக்கு தானே முன்மாதிரியாக நின்று சிலை அமைத்து கொடுத்தார். மேலும் உலக தமிழ் மாநாட்டிற்கு நிதியாக ரூபாய் 5 லட்சம் நிதியாக அளித்தார். தனக்கு சொந்தமான கோடம்பாக்கம் நிலத்தை நலிந்த நடிகர் நடிகைகள் வீடு கட்டிக்கொள்ள இலவசமாக வழங்கினார்.
திரைப்பட வாழ்க்கை :
சிவாஜி கணேசன் 1952 இல்
பி. ஏ. பெருமாள் முதலியார்
என்பவர் தயாரித்த பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். இது கிருஷ்ணன்-பஞ்சு என்ற இரட்டையரால் இயக்கப்பட்டது. இந்த திரைப்படம் வணிக ரீதியாக பெரிய வெற்றியைப் பெற்றது, பல திரையரங்குகளில் 175 நாட்களுக்கு மேல் ஓடியது, மேலும் அது வெளியிடப்பட்ட 62 மையங்களிலும் 50 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி பெற்றது.
சக்தி நாடகசபா நடத்திய நூர்ஜஹான் என்ற நாடகத்தில், நூர்ஜஹானாக நடித்த சிவாஜியின் நடிப்பு நேஷனல் பிக்சர்ஸ் பி.ஏ.பெருமாள் அவர்களை வெகுவாகக் கவர்ந்தது. எனவே பராசக்தி திரைப்படத்தில் சிவாஜி கணேசனை கதாநாயகனாக நடிக்க வைக்க வேண்டும் என்று தீர்மானித்தார். இதற்காக திருச்சியிலிருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்து வரப்பட்ட கணேசனைப் புகைப்படமெடுத்து வசனம் பேசச் செய்தனர். அவர் திரைப்படத்தில் வரும் "சக்ஸஸ்" என்ற வசனத்தைப் முதல் முதலாக பேசி நடித்தார்.
இதற்குப் பல வித எதிர்ப்புகள் கிளம்பின. படத்துக்குப் பண உதவி செய்த ஏ.வி.எம். செட்டியாரும், புதுமுகத்தை வைத்துப் படமெடுப்பதை விரும்பவில்லை. ஆனால் பி.ஏ. பெருமாள் மட்டும் கணேசன் தான் நடிக்க வேண்டும் என்று உறுதியாக இருந்ததால் பராசக்தி படத்தில் சிவாஜி நடித்தார். இப்படத்தில் நடித்ததற்காக கணேசனுக்கு மாத சம்பளமாக ₹250 வழங்கப்பட்டது. தமிழ்நாட்டின் பிற்கால முதல்வர் மு. கருணாநிதி இப்படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதினார்.
நீளமான மற்றும் ஆழமான வசனங்களும் சிவாஜி கணேசனின் ஒப்பற்ற நடிப்பும் ஒரே படத்தில் இவருக்கு மாபெரும் கலைஞன் அந்தஸ்து கொடுத்தது. 'சிவாஜி' கணேசன் 275 தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். ஒன்பது தெலுங்குத் திரைப்படங்கள், இரண்டு ஹிந்தித் திரைப்படங்கள் மற்றும் இரண்டு மலையாளத் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
சரித்திர மற்றும் புராண படங்கள் :
இவர் நடித்த சரித்திர வீரா்களின் கதாபத்திரங்களான மனோகரா, ராஜ ராஜ சோழன், வீரபாண்டிய கட்டபொம்மன், கர்ணன் போன்ற திரைப்படங்கள் வசனத்திற்காகப் பெயர் பெற்றவை.
விடுதலைப் போராட்ட வீரர்களின் வேடங்கள்
அதே போல் சுதந்திரத்திற்காக பாடுபட்ட கட்டபொம்மன், வ. உ. சி போன்ற தேச தலைவர்களின் பாத்திரங்களை ஏற்றுத் திறம்பட நடிக்க செய்தார். 1959 ஆம் ஆண்டு வெளியான வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் நடித்ததிற்காக ஆப்பிரிக்க - ஆசியத் திரைப்பட விழாவில் (கெய்ரோ,1960), சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. கப்பலோட்டிய தமிழன் திரைப்படத்தில் வ. உ. சிதம்பரம் பிள்ளையாகவும் , ராஜபார்ட் ரங்கதுரை படத்தில் பகத்சிங், திருப்பூர் குமரன் போன்றோரின் வேடங்களிலும் , சினிமா பைத்தியம் படத்தில் வாஞ்சிநாதனாகவும் நடித்து திரைப்படங்களின் மூலம் சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தை மக்களுக்கு உணர்த்தினார்.
புராண படங்கள் :
மேலும் சிவாஜி கணேசன் பல புராண கதாபாத்திரங்கள் மற்றும் கடவுளின் கதாபாத்திரங்களில் தோன்றி நடித்துள்ளார். திருவிளையாடல் திரைப்படத்தில் சிவபெருமானாக நடித்தபோது சிவபெருமானுக்கே உருவம் கொடுத்தவர் சிவாஜி கணேசன் என்று மக்களால்
புகழ பெற்றவர்.
சரஸ்வதி சபதம் திரைப்படத்தில்
நாரதராகவும் ,
திருவருட்செல்வர் திரைப்படத்தில்
சேக்கிழார், சுந்தரமூர்த்தி நாயனார், திருநாவுக்கரசு நாயனார், திருக்குறிப்புத் தொண்ட நாயனார் போன்ற நாயன்மார்களின் வேடங்களிலும் நடித்து புகழ் பெற்றார். மேலும் கந்தன் கருணை திரைப்படத்தில்
வீரபாகுவாகவும் , திருமால் பெருமை திரைப்படத்தில் பெரியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார், திருமங்கை ஆழ்வார் போன்ற ஆழ்வார்களின் கதாபாத்திரங்களில் தத்ரூபமாக தனது நடிப்பை வெளிப்படுத்தினார். சம்பூர்ண ராமாயணம் படத்தில் பரதனாக நடித்தார். அத்திரைப்படத்தைப் பார்த்த மூதறிஞர் ராஜாஜி அவர்கள் 'நான் பரதனைக் கண்டேன்' என்று பாராட்டினார்.
குடும்ப மற்றும் சமூக திரைப்படங்கள்
’பா’ வரிசைப் படங்கள் :
’பா’ வரிசைப் படங்கள் எடுப்பவர் என்று பேரெடுத்தவர் இயக்குநர் ஏ. பீம்சிங். சிவாஜியை வைத்து இவர் இயக்கிய பல படங்களின் முதல் எழுத்து ‘பா’ என்றே ஆரம்பிக்கும். இவர்கள் கூட்டணியில் வந்த முதல் திரைப்படம் ராஜா ராணி. பின்னர் பதிபக்தி, பெற்ற மனம், படிக்காத மேதை போன்ற பல படங்களை ஏ. பீம்சிங் இயக்கினார். இவரது இயக்கத்தில் வெளிவந்த பாகப்பிரிவினை திரைப்படம் 1960 இல் சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது பெற்றது.
1961ம் ஆண்டு வெளியான பாசமலர், பாவ மன்னிப்பு, பாலும் பழமும் என மூன்று படங்களும் ‘பா’ வரிசைப் படங்களாக, சிவாஜி - பீம்சிங் கூட்டணியில் அமைந்தன. மூன்று படங்களும் ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாமல் வெவ்வேறு கதைக்களத்துடன் வந்து ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றன. அண்ணன் தங்கை பாசத்திற்கு உதாரணமாக இன்றும் பாசமலர் திரைப்படம் திகழ்கின்றது.
பாவ மன்னிப்பு திரைப்படத்தில் இஸ்லாமிய இளைஞராகவும், பாலும் பழமும் திரைப்படத்தில் மருத்துவராகவும் தனது சிறந்த நடிப்பு திறனை சிவாஜி கணேசன் வெளிப்படுத்தி இருப்பார். மேலும் சிவாஜி-பீம்சிங் கூட்டணியில் வெளிவந்த பார்த்தால் பசி தீரும், படித்தால் மட்டும் போதுமா, பந்த பாசம், பார் மகளே பார், பச்சை விளக்கு போன்ற படங்கள் பெரிய வெற்றியை பெற்றன.
வித்யாசமான கதாபாத்திரங்கள் :
ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய கதாபாத்திரம் வித்யாசமாக இருக்க வேண்டும் என்பதில் சிவாஜி கணேசன் தனி கவனம் செலுத்தினார். அதற்கேற்றவாறு உடல்மொழி, ஒப்பனை, நடை, நடிப்பு போன்றவற்றை மாற்றியமைத்து கொள்வது இவரின் தனிச்சிறப்பாகும். பலே பாண்டியா, ஆலயமணி, குலமகள் ராதை, இருவர் உள்ளம், புதிய பறவை, ஆண்டவன் கட்டளை, சாந்தி, பழநி, மோட்டார் சுந்தரம் பிள்ளை, செல்வம், நெஞ்சிருக்கும் வரை, தில்லானா மோகனாம்பாள், உயர்ந்த மனிதன், தங்கச் சுரங்கம், தெய்வமகன், சிவந்த மண், எங்க மாமா,
வியட்நாம் வீடு, எங்கிருந்தோ வந்தாள், சொர்க்கம், சவாலே சமாளி, ஞான ஒளி , பட்டிக்காடா பட்டணமா, வசந்த மாளிகை, பாரத விலாஸ், கௌரவம் , ராஜபார்ட் ரங்கதுரை போன்ற திரைப்படங்கள் மற்றும் பல படங்கள் இவரது உணர்ச்சிப்பூர்வமான நடிப்புக்காகப் பேசப்பட்டவை.
நகைச்சுவை திரைப்படங்கள்
கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி, சபாஷ் மீனா, பலே பாண்டியா, ஊட்டி வரை உறவு, கலாட்டா கல்யாணம், மூன்று தெய்வங்கள், சுமதி என் சுந்தரி, எமனுக்கு எமன் போன்ற திரைப்படங்கள் இவரின் நகைச்சுவை நடிப்புக்காக போற்றப்பட்டவை.
பிற நட்சத்திரங்களுடன் இணைந்த படங்கள் :
கூண்டுக்கிளி திரைப்படத்தில் சிவாஜி மற்றும் எம் ஜி ஆர்
தாம் ஒரு முன்னணிக் கதாநாயகனாக இருந்தபோதும், பிற நட்சத்திரங்களுடன் இணைந்து நடிக்க சிவாஜி தயங்கியவர் அல்லர். சிவாஜி கணேசன் முதன்மைப் பாத்திரம் ஏற்றிருந்த பல படங்களில் "பாசமலர்", "பாவ மன்னிப்பு", "பார்த்தால் பசி தீரும்", "வீரபாண்டியக் கட்டபொம்மன்" போன்ற பல படங்களில் ஜெமினி கணேசன் நடித்துள்ளார். மேலும் சிவாஜியுடன் மேஜர் சுந்தரராஜன் பல குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். சிவாஜி கணேசன் கூண்டுக்கிளி எனும் ஒரு திரைப்படத்தில் மட்டுமே எம்ஜிஆருடன் இணைந்து நடித்துள்ளார்..
புகழ் :
எகிப்து அதிபர் கமால் அப்தெல்நாசர் இந்தியாவிற்கு வருகை தந்த போது, அவர் வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஆங்கிலேயர்களை விரட்டி அடிக்கும் ஆவேசமான கதாபாத்திரத்தில் நடித்த சிவாஜி கணேசனை நேரில் காண வேண்டும் என்பதற்காக அப்போதைய இந்திய பிரதமர் ஜவகர்லால் நேரு அனுமதி வழங்கப்பட்ட தனி நபர் சிவாஜி கணேசன் ஆவார். 1962 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் அமெரிக்க அரசாங்கத்தின் கலாச்சார பரிமாற்றம் திட்டத்தின் கீழ் அமெரிக்காவுக்கு இந்தியாவில் இருந்து சென்ற முதல் நடிகர் என்ற பெருமைக்கு உரியவர் சிவாஜி கணேசன், இந்திய கலாச்சார தூதர் பாத்திரத்தில் அங்கு அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜான் எப் கென்னடியை சந்தித்தார். அப்போது அவரை கவுரவப்படுத்தும் விதமாக அவரை ஒரு நாள் நயாகரா நீர்வீழ்ச்சியின் கௌரவ மேயராக நியமித்து அவரிடம் அதற்கான சாவியையும் கொடுத்தனர்.
பெற்ற விருதுகளும், சிறப்புகளும் :
சர்வதேச விருதுகள் :
ஆப்பிரிக்க - ஆசியத் திரைப்பட விழாவில் (கெய்ரோ,1960), சிறந்த நடிகருக்கான விருது.
செவாலியர் விருது, 1995
இந்திய விருதுகள் :
பத்ம ஸ்ரீ விருது, 1966
பத்ம பூஷன் விருது, 1984
தாதாசாகெப் பால்கே விருது, 1996
தமிழக விருதுகள் :
கலைமாமணி விருது, 1962
சிறந்த நடிகருக்கான தமிழக அரசு திரைப்பட விருது 1969. (தெய்வமகன்)
சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது – தமிழ், 1972. (ஞான ஒளி)
சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது – தமிழ், 1973. (கௌரவம்)
சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது – தமிழ், 1985. (முதல் மரியாதை)
மற்ற விருதுகள் :
அண்ணாமலை பல்கலைக்கழகத்தின கௌரவ டாக்டர் பட்டம் 1986
என். டி. ஆர் தேசிய விருது (1998)
சிறப்புகள் :
1962 இல் அமெரிக்கா நாட்டின் சிறப்பு விருந்தினராக சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, நயாகரா மாநகரின் 'ஒரு நாள் நகரத்தந்தையாகக்' கௌரவிக்கப்பட்டார்.
தியாகராய நகரில் சிவாஜி கணேசனின் வீடான ‘அன்னை இல்லம்’ இருக்கும் சாலைக்கு 1995 ஆம் ஆண்டு தமிழக அரசு செவாலியே சிவாஜி கணேசன் சாலை என்று பெயரிட்டது.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கலைத்துறைக்கு ஆற்றிய சேவையை போற்றும் வகையில் அவரது பிறந்த தினமான அக்டோபர் 1 ஆம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று 2018 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் அறிவிக்கப்பட்டது.
சிவாஜி கணேசனின் 93வது பிறந்தநாளான அக்டோபர் 1 2021 இல் கூகுள் தனது தேடுபொறியின் முகப்பு பக்கத்தின் அவரின் டூடுலை (Doodle) வெளியிட்டு சிறப்பு செய்தது..
வாழ்த்த வயதில்லை
வணங்குகின்றோம் ஐயா
நன்றி Prabu llaya ( Dr சிவாஐி கணேசன் சுயசரிதை.)
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
2nd October 2022 03:05 PM
# ADS
Circuit advertisement
Bookmarks