ரீமிக்ஸும் தமிழ் சினிமாவும் பிரிக்க முடியாத சமாச்சாரம் எனும் அளவுக்கு இன்று எல்லாப் படங்களில் ஏதாவது ஒரு ரீமிக்ஸ் பாடல் இடம்பெற்று விடுகிறது.
பெரும்பாலும் இளையராஜாவின் பாடல்களைத்தான் ரீமிக்ஸ் என்ற பெயரில் போட்டு குதறி வைப்பார்கள்.
இதைவிட, அந்தப் பாடலை அப்படியே அதன் ஒரிஜினல் வடிவிலேயே போட்டுவிடலாமே… மனம் குளிர ரசித்துவிட்டுப் போகலாம் என பல ரசிகர்கள் ஏங்கியிருக்கிறார்கள்.
இப்படி ஏங்கியவர்களில் புதிய இயக்குநர் சுந்தரபாண்டியும் ஒருவர் போலிருக்கிறது. தான் முதன்முதலில் இயக்கும் ‘வைகை’ படத்தில் இசைஞானியின்ஒரு இனிய பாடலை அப்படியே அதன் ஒரிஜினாலிட்டி கெடாமல் ஒலிக்கவிட்டு அதற்கேற்ப காட்சிகளை அமைத்துள்ளார் (அந்தப் பாடல் காட்சியை படமாக்கிய இயக்குநரும் சாதாரணமானவரில்லை… அதை மனதில் வைத்துக் கொண்டு படமாக்கியிருந்தால் நல்லது!).
இதுகுறித்து சுந்தரபாண்டி கூறியதாவது:
இசைமேதை இளையராஜாவின் இசையில் ஒரு பாடலை கேட்கும்போதே, முடிவு செய்துவிடலாம், இந்தப் பாடலின் முதலும் முடிவும் இப்படித்தான் இருக்கும் என்பதை. அதை இப்படி அப்படி சின்ன மாற்றம் செய்தால்கூட பாடலின் ஜீவன கெட்டுவிடும். அந்த அளவு கச்சிதமான இசைக் கோர்வைதான் அவரது ஆர்மோனியத்திலிருந்து பிறக்கும்.
ராஜா சாரின் இசையில் ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் இடம்பெற்ற ‘ஆயிரம் தாமரை மொட்டுக்களே…’ பாடலை, ‘வைகை’ படத்தில் ரீமிக்ஸாக வைக்க நினைத்தோம்.
‘ஆயிரம் தாமரை மொட்டுக்களே…’ பாடலை எப்போது யார் எங்கே கேட்டாலும், பாடல் முடியும் வரை அங்கேயே நின்று கேட்டுவிட்டுத்தான் நகர்வார்கள்.
உலகின் உயர்தரமான எந்த இசைக் கருவிகளைக் கொண்டு மாற்றி இசையமைத்தாலும் கூட இப் பாடலை ரீமிக்ஸ் வடிவில் நம்மால் ரசிக்க முடியாது என்பதே உண்மை.
ராஜாவின் இசையை மீறி எந்த ஒரு சாதனையையும் எங்களால் செய்துவிட முடியாது என்பதால், அவரது பாடலை சிறு சேதாரமும் இல்லாமல் அப்படியே படத்தில் பயன்படுத்தியிருக்கிறோம். ரீமிக்ஸ் என்ற பெயரில் அந்தப் பாடலைக் கெடுக்க விரும்பவில்லை. அதுதான் இந்த மண்ணுக்குப் உலக கவுரவம் தந்த இளையராஜாவுக்கு நாங்கள் செய்யும் மரியாதை…” என்றார்.
Bookmarks