Page 2 of 19 FirstFirst 123412 ... LastLast
Results 11 to 20 of 185

Thread: 'Vennira Aadai' SHREEKANTH

  1. #11
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2005
    Location
    Chennai
    Posts
    2,197
    Post Thanks / Like
    காங்கிரஸ் பேரியக்கத்தில் ஸ்ரீகாந்த்

    1969-வாக்கில் காங்கிரஸ் பேரியக்கம் பெருந்தலைவர் காமராஜ் தலைமையில் ஸ்தாபன காங்கிரஸ் என்றும் இந்திராகாந்தி தலைமையில் இந்திரா காங்கிரஸ் என்றும் பிளவுபட்டு நின்றபோது, தமிழகத்தைப்பொறுத்தவரை காங்கிரஸ் என்றால் அது பெருந்தலைவரின் ஸ்தாபன காங்கிரஸ்தான் என்றாகிப் போனது. வடமாநிலங்களில் இந்திரா காங்கிரஸ் வலுவாக இருந்தபோதிலும் தமிழகத்தில் அது ஒரு 'லெட்டர்பேட்' கட்சி என்ற அளவில்தான் இருந்தது. இ.காங்கிரஸுக்கு தொண்டர்கள் பலமில்லை.

    தமிழகத்தைப்பொறுத்தவரை திரைப்பட கலைஞர்கள் பெரும்பாலும் திராவிட இயக்கங்களில் பங்கெடுத்த அளவுக்கு காங்கிரஸில் பங்கேற்கவில்லை. இன்னும் பலர் எந்த அரசியல் இயக்கத்தின்பக்கமும் சாராமல் தானுண்டு தங்கள் சினிமா உண்டு என்றிருந்தனர். முத்துராமன், சிவகுமார், ஏ.வி.எம்.ராஜன் போன்ற பெரும்பாலோர் இந்த மூன்றாம் வகையைச்சார்ந்தவர்கள். அறுபதுகளில் துவங்கி காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட ஒரே கலைஞராக நடிகர்திலகம் மட்டுமே விளங்கினார். இந்நிலையில் ஸ்தாபன காங்கிரஸ் என்ற பெயரில் இயக்கம் பிளவுண்டபோது நடிகர்திலகமும் பெருந்தலைவர் பக்கம் துணை நிற்க, அவரோடு தோளோடு தோள் நின்று ஸ்தாபன காங்கிரஸ்காரர்களாக தங்களை வெளிப்படுத்திக்கொண்டவர்கள் மூவர். அவர்கள் சசிகுமார், ஸ்ரீகாந்த், பிரேம் ஆனந்த். இவர்களில் பிரேம் ஆனந்த் கட்சியில் இருக்கிறார் என்பதற்காகவே நடிகர்திலகம் தன் படங்களில் தொடர்ந்து வாய்ப்புக்கொடுத்தார்.

    இவர்களில் சசிகுமார், இந்திய விமானப்படையில் பணியாற்றியவராதலால் 'கேப்டன் சசிகுமார்' என்ற பெயரும் உண்டு. (இதே போல 'நீலமலைத்திருடன்' படத்தில் நடித்த ரஞ்சன், விமான பைலட்டாகப் பணியாற்றியதால் அவருக்கும் கேப்டன் ரஞ்சன் என்ற பெயர் உண்டு. இவர்களெல்லாம் 'ஒரிஜினல் கேப்டன்கள்'). சசிகுமார், இறுதிமூச்சுவரை பெருந்தலைவரின் தொண்டனாகவே இருந்து மறைந்தார். தீ விபத்தில் சிக்கிய தன் மனைவி சசிகலாவைக் காப்பாற்ற போராடியதில் இருவருமே உயிரிழந்தனர். பலத்த தீக்காயங்களுடன் மூன்று நாட்கள் போராடியபோது, வாழை இலையில் கிடத்தப்பட்டு, நடிகை கே.ஆர்.விஜயாவின் செலவில் ஒரே அறையில் ஆறு ஏர்-கண்டிஷன்கள் பொறுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டும் பலனின்றி அடுத்தடுத்து இருவரும் உயிரிழந்தனர். அந்நேரம் சின்னஞ்சிறுவனாக இருந்த அவர்களின் ஒரே மகன் விஜயசாரதி அப்போதைய நடிகர் சங்கத்தலைவராக இருந்த நடிகர்திலகம், செயலாளர் மேஜர், பொருளாளர் வி.கே.ஆர். ஆகியோரின் பராமரிப்பில் வளர்க்கப்பட்டார். (விஜயசாரதி இப்போது தொலைக்காட்சித் துறையில் நடிகர் மற்றும் அறிவிப்பாளராக புகழ்பெற்று விளங்குகிறார்).

    இவர்களோடு, ஸ்தாபன காங்கிரஸ் இயக்கத்தில் பெருந்தலைவரின் தொண்டனாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டு, மேடைப்பிரச்சாரங்களில் ஈடுபட்டு வந்தவர்தான் ஸ்ரீகாந்த். 1973-வாக்கில் தமிழ்நாட்டில் கடும் விலைவாசி உயர்வு ஆட்கொண்டபோது, பெருந்தலைவரின் ஆணைப்படி ஸ்தாபன காங்கிரஸ் தொண்டர்களும் தலைவர்களும் விலைவாசி உயர்வை எதிர்த்து சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தினமும் காலை சென்னை சத்தியமூர்த்தி பவனிலிருந்து போராட்ட ஊர்வலம் கிளம்பி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி கைதாவார்கள். தினமும் ஒவ்வொரு ஸ்தாபன காங்கிரஸ் தலைவர்கள் தலைமையில் ஊர்வலம் புறப்பட, தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு கைதாகினர். அப்படி நான்காம் நாள் தலைவர்களோடு தேசிய நடிகர் ஸ்ரீகாந்த் காங்கிரஸ் கொடிபிடித்து ஊர்வலம் போய் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். ஒவ்வொரு நாளும் ஊர்வலத்தைக்காண வழியெங்கும் மக்கள் பெருந்திரளாக நின்று வாழ்த்தினர். அதிலும் ஸ்ரீகாந்த் கலந்துகொண்ட அன்றைக்கு கடும் கூட்டம்.

    ஏழாம் நாள் திங்களன்று பெருந்தலைவர் காமராஜரே ஊர்வலத்தை தலைமையேற்று நடத்தப்போகிறார் என்ற செய்தியை அறிந்த அன்றைய கலைஞர் அரசு, முதல்நாள் மாலையே அதுவரை கைது செய்திருந்த அனைவரையும் விடுதலை செய்தது. இருந்தபோதிலும் பெருந்தலைவர் காமராஜ் திட்டமிட்டபடி மறுநாள் போராட்டத்தில் கலந்துகொண்டார். அன்றைக்கு யாரும் கைது செய்யப்படவில்லை. (கலைஞர்தான் நரியை நனையாமல் குளிப்பாட்டுபவராச்சே. தன் ராஜதந்திரத்தைக் கைக்கொண்டார்). ஆனாலும் பெருந்தலைவர் விடவில்லை. "என் நண்பர் கருணாநிதி என்னை கைது செய்யாமல் விட்டது எனக்கு மகிழ்ச்சியல்ல. விலைவாசியைக் கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை எடுத்தால்தான் மகிழ்ச்சி" என்று அறிக்கை விட்டார்.

    பெருந்தலைவரின் மறைவு வரை ஸ்தாபன காங்கிரஸில் இருந்த ஸ்ரீகாந்த், அவரது மறைவுக்குப்பின்னும் அங்கேயே தொடர்ந்தார். நடிகர்திலகம் போன்றோர் இந்திரா காங்கிரஸில் சேர முடிவெடுத்தபோதும் கூட அங்கே செல்லாமல், பா.ராமச்சந்திரன் தலைமையில் ஸ்தாபன காங்கிரஸிலேயே இருந்து வந்தவர், 1977-ல் ஸ்தாபன காங்கிரஸ், ஜனதா கட்சியாக மாறியபோதும் அங்கேயே இருந்து, 1977 பாராளுமன்ற தேர்தலில் மத்திய சென்னையில் பா.ராமச்சந்திரனை ஆதரித்தும், 1977 சட்டமன்ற தேர்தலில் ஜனதா கட்சி வேட்பாளர்களை ஆதரித்தும் பிரச்சாரம் செய்தார்.

    இதனிடையே காந்தி மண்டபத்தின் அருகே பெருந்தலைவரின் நினைவிடத்தின் மேலே வைக்கப்படுவதாக இருந்த பெரிய கைராட்டை, எமர்ஜென்ஸி காலத்தின்போது அகற்றப்பட்டது. கட்டிடம் வெறுமனே மொட்டையாகக் காட்சியளித்தது. அப்போது மீண்டும் கைராட்டையை அவரது நினைவிடத்தில் வைக்க வேண்டும் என்று கோரி கவர்னர் மாளிகைக்குச் சென்று மனுக்கொடுத்த ஸ்தாபன காங்கிரஸ் தலைவர்களோடு ஸ்ரீகாந்தும் சென்றிருந்தார். மத்தியில் ஜனதாகட்சி ஆட்சியமைத்தபின்னர் 'கைராட்டை' மீண்டும் பெருந்தலைவர் நினைவிடத்தில் இடம் பெற்றது. பின்னர் ஜனதா கட்சி உடைந்து சிதறுண்டபின், ஸ்ரீகாந்தும் அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொண்டார்.

    பெருந்தலைவர் மறைந்த பின் நடிகர்திலகம் எடுத்த அரசியல் முடிவுக்காக அவரை ஸ்ரீகாந்த் கடுமையாக விமர்சித்ததால், நடிகர்திலகத்தின் படங்களில் இடம்பெறும் வாய்ப்புக்கள் குறையத் தொடங்கின. (அப்போது நடிகர்திலகம் ஸ்தாபன காங்கிரஸிலேயே தொடரவேண்டும் என்பதே ரசிகர்களில் பெரும்பாலோரது எதிர்பார்ப்பாகவும் இருந்தது). ஏற்கெனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட படங்களில் மட்டுமே ஸ்ரீகாந்த் இருந்தார். ஒருகாலத்தில் ஸ்ரீகாந்த் இல்லாத நடிகர்திலகத்தின் படங்களே இல்லை என்றிருந்த நிலை மாறத்தொடங்கியது. இந்நேரத்தில் விஜயகுமார், ஜெய்கணேஷ் போன்றோர் நடிகர்திலகத்தின் படங்களில் துணைப்பாத்திரங்களில் இடம்பெறத்துவங்கவே, சிவாஜி படங்களில் ஸ்ரீகாந்த் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டார். (அதே சமயம் நடிகர்திலகத்தைப்பற்றி ஸ்ரீகாந்தை விட பல மடங்கு கடுமையாக விமர்சனம் செய்திருந்த எம்.ஜி.ஆர்.பக்தரான தேங்காய் சீனிவாசன், சிவாஜி படங்களில் தொடர்ந்து வாய்ப்புக்கள் பெறத்தொடங்கினார்).

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #12
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2005
    Location
    Chennai
    Posts
    2,197
    Post Thanks / Like
    இளைய தலைமுறை

    (ஸ்ரீகாந்த் போர்ஷன் மட்டும்)

    'ராகிங்' என்பது புதிதாக வரும் மாணவர்களுக்கு மட்டுமல்ல, புதிதாக வேலையில் சேரும் வார்டனுக்கும்தான், என்பதாக, முதல் நாளில் மாணவர்கள் செய்யும் ராகிங்கும் அதை வார்டன் சம்பத் (நடிகர் திலகம்) முறியடிப்பதும் சுவையான காட்சிகள். மாணவர்களாக வருபவர்களில் ஸ்ரீகாந்த், விஜயகுமார், ஜூனியர் பாலையா, பிரேம் ஆனந்த், ஜெயச்சந்திரன், ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோர் முக்கியமானவர்கள். இவர்கள் அனைவரும் வார்டனை, (அவர் விதிக்கும் கட்டுப்பாடுகள் தங்களுக்கு அடக்குமுறைகள் போல தோன்றுவதால்) தங்கள் எதிரிகளாக நினைத்து வெறுக்க, அவர்கள ஒவ்வொருவரையும் வார்டன் தன்னுடைய வழிக்கு கொண்டு வருவது ரொம்ப சுவாரஸ்யமான விஷயம்.

    ஒருகட்டத்தில் வார்டனை பழிவாங்குவதற்காக, தங்களுடன் எப்போதும் சேராமல் இருக்கும், குருக்கள் குடும்பத்து மாணவனுக்கு ஸ்ரீகாந்த் வலுக்கட்டாயமாக பெண் வேடம் போட்டு நள்ளிரவில் வார்டன் மேல் தள்ளிவிட்டு, அதை போட்டோ எடுத்து நோட்டீஸ் போர்டில் அம்பலப்படுத்த, அவமானம் தாங்காமல் அந்த மாணவன் தற்கொலை செய்து கொள்வது கொடூரம்.

    ஒவ்வொரு மாணவனும் வார்டனால் திருத்தப்பட்டு, அவரது தூய உள்ளம் கண்டு அவர் பக்கம் வந்துசேர, ஸ்ரீகாந்த் மட்டும் கடைசி வரை திருந்தாத வில்லனாகவே இருந்து விடுவார். கிளைமாக்ஸ் காட்சியில் வார்டன் மீது திராவகம் நிரப்பிய பல்பை வீச, அதை அவர் தாம்பாளத்தால் தட்டி விட, திராவகம் ஸ்ரீகாந்த் மீதே விழுந்து அவரைப்பழி வாங்கி விடும் கட்டம் நல்ல முடிவு.

  4. #13
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2005
    Location
    Chennai
    Posts
    2,197
    Post Thanks / Like
    நியூ-வேவ் படமாகப் பேசப்பட்ட

    'அவள்'

    எழுபதுகளில் இந்திய திரையுலகைக் கலக்கிய நியூவேவ் இந்திப்படம் 'தோரகா'. ராம்தயாள் தயாரித்த அப்படம் இளைஞர்களிடையே, குறிப்பாக கல்லூரி மாணவ மாணவிகளிடையே பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டது. அதன் கதை என்று பார்த்தால் மிகவும் ஆபாசமான, சர்ச்சைக்குரிய ஒன்று. மாற்றான் மனைவியை, அதுவும் தன் நண்பனின் மனைவியையே திட்டம்போட்டு குறி வைத்து சூறையாடும், மிக மோசமான கலாச்சார சீரழிவு கொண்ட கதை. 'கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும்' என்று முத்திரைகுத்தப்பட்டு வெளியான அந்தப்படம், இளைஞர்களின் இலக்காக மாறியதில் வியப்பில்லை. அந்தப்படத்தில் நடித்திருந்த நடிகை ராதா சலுஜாவும், நடிகர் சத்ருக்கன் சின்காவும் ஓவர்நைட்டில் பிரபலமாயினர்.

    இந்தியில் பரபரப்பாகப் பேசப்பட்ட அந்தப்படத்தை தமிழில் சுந்தர்லால் நகாதா தனது விஜயலக்ஷ்மி பிக்சர்ஸ் சார்பில் தயாரித்தார். (ஏ.பி.நாகராஜனின் விஜயலக்ஷ்மி பிக்சர்ஸ் அல்ல). சர்ச்சைக்குரிய கதாநாயகி ரோலில் நடிக்க அப்போதிருந்த லட்சுமி, உஷா நந்தினி போன்ற பிரபல நடிகைகள் பலரை அணுகியபோது, மறுத்து ஓடினர். பிரமீளா, ஜெயசித்ரா, ஜெயசுதா, ஒய்.விஜயா போன்றோர் அப்போது அறிமுகமாகியிருக்க வில்லை. (இப்போதைக்கு என்றால் அந்த ரோலில் நடிக்க 'நான், நீ' என்று போட்டிபோட்டிருப்பார்கள்). கடைசியாக வெண்ணிற ஆடை நிர்மலாவை அணுகி, அந்தப்படத்தில் நடித்தால் அபார புகழ்பெற்று அவரது மார்க்கெட் மேலும் உய்ர வாய்ப்புள்ளது என்று தயாரிப்பாளர் தரப்பில் கூறப்பட, அப்படியானால் அப்படத்தில் நடிக்க தனக்கு ஐம்பதாயிரம் ரூபாய் (???) தர வேண்டும் என்று டிமாண்ட் வைத்தார். தயாரிப்பாளருக்கு ஆச்சரியம். ஏனென்றால் அதுவரை ஐம்பதாயிரத்துக்கு மேல் சம்பளம் பெற்ற இரண்டே நடிகைகள் கே.ஆர்.விஜயாவும், ஜெயலலிதாவும்தான். (நந்தனார் படத்தில் நடிக்க கே.பி.சுந்தராம்பாள் ரூ. ஒரு லட்சம் வாங்கியதாக தகவல் உண்டு). இருப்பினும் அந்த இன்னஸண்ட் பாத்திரத்துக்கேற்ற அழகான நடிகையாக நிர்மலா கிடைத்ததில் திருப்தியடைந்த தயாரிப்பாளர் அவரையே புக் பண்ணினார்.

    கீதா (வெ.ஆ.நிர்மலா) கல்லூரி மாணவி. டி.கே.பகவதியின் (இவருடைய பாத்திரப் பெயர் நினைவில்லை) மகள். எழுத்தாளன் சந்திரநாத் என்பவரைக் (சசிகுமார்) காதலிக்கிறாள். இதையறியாத அவளுடைய தந்தை பெரிய பணக்காரனான பிரகாஷுக்கு (ஏ.வி.எம்.ராஜன்) மணமுடிக்க ஏற்பாடு செய்கிறார். ஆனால் கீதா, சந்திரநாத்தைக் காதலிப்பதை அறிந்த பிரகாஷ், ஒதுங்கிப்போகிறான். பிரகாஷுக்கும் சந்திரநாத்துக்கும் ஒரு நண்பன் பெயர் சதானந்தம் (ஸ்ரீகாந்த்). பெயருக்கேற்றாற்போல சகல தீய பழக்கங்களுடன் 'சதா ஆனந்தமாக' இருப்பவன். அவனுக்கு திருமணம், சம்பிரதாயம் இவற்றிலெல்லாம் நம்பிக்கையில்லாதவன். எத்தனை பெண்களுடன் உல்லாசமாக இருக்க முடியுமோ அப்படியிருப்பவன். அவனுக்கு நண்பனின் காதலி கீதாவின் மீது ஒரு கண்.

    இந்நிலையில் தன் மகள், அடுத்த வேளை சோற்றுக்கு வழியில்லாத ஏழை எழுத்தாளனைக் காதலிப்பதையறிந்து, காதலுக்கு தடை போடுகிறார். மகள் கேட்கவில்லை. வீட்டைவிட்டு வெளியேறி காதலனை மணந்து தனிவீட்டில் இருக்கிறாள். கீதாவை அடைவதற்காக சமயம் பார்த்திருக்கும் சதானந்தம் முதலில் சந்திரநாத்தை குடிப்பழக்கத்துக்கு ஆளாக்கி, அதற்கே அடிமையாக்குகிறான். கீதாவை அடைவதற்காக, நண்பனுக்கு கார் வசதியெல்லாம் செய்துகொடுக்கிறான். தன் மனைவியையும் குடிக்க வற்புறுத்தும் சந்திரநாத், அவள் மறுக்கவே காரைவிட்டு வழியில் இறக்கிவிட்டுப்போய்விடுகிறான். அவள் தனித்து விடப்பட்டதுமே, அவளைச்சூறையாடவும், அவளது வாழ்க்கையை சீரழிக்கவும் ஒரு கும்பல் முயற்சிக்க, இவர்கள் கையில் சிக்கி சீரழிவதைவிட கணவன் பேச்சைக்கேட்டு அவனுடன் இருப்பதுமேல் என்று முடிவெடுத்து அவனிடம் போய், அவன் இழுத்த இழுப்புக்கெல்லாம் ஆடுகிறாள். குடிப்பழக்கத்தை மேற்கொண்டு அதற்கு அடிமையும் ஆகிறாள். சதானந்தத்திடமும் சகஜமாகபழகுகிறாள்.

    சதானந்தம் எதிர்நோக்கியிருந்த அந்த சந்தர்ப்பமும் வருகிறது. கீதாவின் பிறந்த நாள் விழாவில் சந்திரநாத்தையும் கீதாவையும் மதுவில் மூழ்கடித்து, கீதாவின் படுக்கையறையில் அவளை சீரழித்துவிடுகிறான். காலையில் 'குமார்னிங்' என்ற குரலுடன் தன் மீது சதானந்தத்தின் கைவிழ, திடுக்கிட்டு எழுகிறாள். பக்கத்தில் படுத்திருக்கும் சதானந்தத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்து ஓடிப்போய்ப்பார்க்க, கணவன் சந்திரநாத் கீழே கூடத்தில் போதையுடன் சோபாவில் படுத்திருப்பதைப் பார்த்து தான் சதானந்தத்தால் சீரழிக்கப்ப்டுவிட்ட நிதர்சனத்தை அறிகிறாள். என்ன செய்வதென்று புரியாத நிலை. கணவனிடம் அவனது நண்பன் சதானந்தத்தின் நம்பிக்கை துரோகம் பற்றி அவள் சொல்ல, அவனோ அதை மிகவும் லைட்டாக எடுத்துக்கொள்கிறான். மீண்டும் வற்புறுத்தவே அவள் மீதே சந்தேகப்படுகிறான். கீதா முடிவெடுக்கிறாள். இந்தகேவலத்துக்குப்பின்னும் அந்த அயோக்கியனை உயிரோடு விடுவதில் அர்த்தமில்லை. எனவே அவனைக்கொல்வதற்காக, பல ஆண்டுகளுக்குப்பின் தந்தையின் வீட்டுக்குப்போகும் அவள், அப்பாவுக்குத்தெரியாமல் அவரது துப்பாக்கியை எடுத்துக்கொண்டு வருகிறாள்.

    நண்பன் வீட்டிலில்லாத நேரம் மீண்டும் சதானந்தம் கீதாவைச்சூறையாட வரும்போது அவனிடம் போராடும் அவள், தான் பீரோவில் ஒளித்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அவனைக் குறிவைக்கிறாள். அவன் அதிர்ச்சியடைகிறான். அவளுக்கு தலைசுற்றுகிறது. மயங்கிவிழப்போகும் நேரம், குளோசப்பில் துப்பாக்கி வெடிக்க, நெஞ்சைப்பிடித்துக்கொண்டே கீழே விழும் சதானந்தம் உயிரை விடுகிறான்.

    கோர்ட்டில் கேஸ் நடக்கிறது. தான் நிரபராதி என்று அவள் வாதாடவில்லை. ஆனால் அதே நேரம் 'யுவர் ஆனர், சதானந்தத்தைச் சுட்டது நான்தான்' என்ற குரல் கேட்கிறது. கோர்ட் மொத்தமும் திரும்பிப்பார்க்க வந்தவன் பிரகாஷ். நடந்த சம்பவத்தை அவன் சொல்லும்போது ப்ளாஷ் பேக், கீதா கையில் துப்பாக்கியுடன் மயங்கிவிழப்போகும் நேரம், ஒரு கைவந்து அவள் கையைப்பிடித்து துப்பாக்கியை வாங்குகிறது. கேமரா அப்படியே உயர வந்தவன் பிரகாஷ். குறி தவறாமல் சதானந்தத்தை சுட்டுத்தள்ளுகிறான். ப்ளாஷ்பேக் முடிய, தான் சுட்ட துப்பாக்கியையும் பிரகாஷ் கோர்ட்டில் ஒப்படைக்க, கீதா விடுதலை செய்யப்படுகிறாள். ஆனால், தான் புனிதத்தை இழந்துவிட்ட சோகத்தால் தவிக்கும் அவள் தூக்கமாத்திரைகள் உட்கொண்டு கணவனின் கைகளிலேயே உயிரை விடுகிறாள்.

    ஏற்கெனவே இந்திப்படம் ஏற்படுத்திய தாக்கத்தால், 'அவள்' படம் வருவதற்கு முன்பே இளைஞர்களிடையே ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. காரணம் அன்றைய சூழ்நிலைக்கு இம்மாதிரி கதை சற்று புதியது. சந்திரநாத் ஆக சசிகுமார், சதானந்தமாக ஸ்ரீகாந்த், கீதாவாக வெண்ணிற ஆடை நிர்மலா, பிரகாஷாக A.V.M.ராஜன், கீதாவின் தந்தையாக டி.கே.பகவதி, கீதாவை வளர்க்கும் ஆயாவாக பண்டரிபாய், பால்காரனாக சந்திரபாபு ஆகியோர் நடித்திருந்தனர். இம்மாதிரி ரோலில் நடித்திருப்பதால் தன் இமேஜ் பெண்கள் மத்தியில் என்னாகுமோ என்று நிர்மலா பயந்தது போல எதுவும் நடக்கவில்லை. மாறாக அவர்மீது அனுதாபத்தையே ஏற்படுத்தி இமேஜை உயர்த்தியது. அதுபோலவே, சிறிது காட்சிகளிலேயே வந்தபோதிலும் A.V.M.ராஜன் ஏற்றிருந்த பிரகாஷ் ரோல் ரொம்பவே அற்புதமாக அமைந்தது.

    இவர்களையெல்லாம் விட 'அவள்' படத்தின் மூலம் ஜாக்பாட் அடித்தவர் ஸ்ரீகாந்த் தான். இப்படத்துக்குப்பின் அவரது மார்க்கெட் எங்கோ எகிறிப்போனது. பயங்கர பிஸியானார். படங்கள் குவிந்தன. அதே சமயம் இன்னொரு பாதகமும் நிகழ்ந்தது. ஆம், 'கற்பழிப்புக்காட்சியா? கூப்பிடு ஸ்ரீகாந்தை' என்று இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் முத்திரை குத்தினர். இந்தியில் சத்ருக்கன் சின்கா ஏற்றிருந்த ரோலில் இவர் நடித்ததாக சிலர் சொல்வார்கள். அது தவறு. சத்ருக்கன் ரோலில் நடித்தவர் A.V.M.ராஜன்தான்.

    கண்ணைக்கவ்ரும் வண்ணப்படமான 'அவள்' படத்தை ஏ.சி.திருலோக்சந்தர் இயக்கியிருந்தார். கடற்கரையில் நீச்சல் உடையில் சசிகுமார் நிர்மலா இருவரும் பார்த்துக்கொள்ளும் அந்தப்பார்வையைப் பறிமாறிக்கொள்ள, சொல்லித்தந்த இயக்குனருக்கே பாராட்டுக்கள். 'இன்னிசை இரட்டையர்' சங்கர்-கணேஷ் இசையமைத்திருந்தனர். கல்லூரி மாணவர்கள் பாடும் "Boys and Girls வருங்காலம் உங்கள் கையில், வாருங்கள்" என்ற பாடலும், சசிகுமார் நிர்மலா பாடும் டூயட் பாடலான,
    "கீதா.... ஒரு நாள் பழகும் உறவல்ல
    காதல்.... நீரில் தோன்றும் நிழல் அல்ல"

    பாடலும் மனதைக்கவர்ந்தன என்றாலும்,

    நிர்மலா கிளப்பில் பாடும் (பி.சுசீலா தனிப்பாடல்).....
    "அடிமை நான் ஆணையிடு
    ஆடுகிறேன்... பாடுகிறேன்...
    மதுவை நீ ஊற்றிக்கொடு
    மயங்குகிறேன் மாறுகிறேன்"

    என்ற பாடலில் இசையை அள்ளிக்கொட்டியிருப்பார்கள் இரட்டையர்கள். தாங்கள் மெல்லிசை மன்னரின் மாணவர்கள் என்பதை அழுத்தமாக நிரூபித்திருப்பார்கள்.

    தொண்ணூறு சதவீதம் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் ஆதரவோடு 'அவள்' சுமார் பத்து வாரங்கள் வரை வெற்றிகரமாக ஓடியது.

  5. #14
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    When I was reading the review of the movie'AVAL' , my memories travelled to the past. I was school boy then.

    It has released in Devi Paradise at mount road. Those days Devi complex was merit theatres in madras. Mostly English movies will get released in Devi. Hindi and Tamil movies will get released in Devi Paradise. 'AvaL' was the fourth Tamil movie released in DP (after Sorkam, Rikshawkaran and Raja) and was followed by Needhi and U.S.Valiban.

    During the running of AvaL, the theatre was sorrounded by mostly college students and youths. As it was certified as 'Strictly for Adults only' they will not issue tickets for school boys. So first time in my life I was wearing 'vEshti' and drew mushtaq with eyebrow pencil and entered with five or six people together at a time. இப்போ நினைச்சா தமாஷா இருக்கு.

    Good thread ma'm. I am expecting your review about 'ராஜ நாகம்'.

  6. #15
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2005
    Location
    Chennai
    Posts
    2,197
    Post Thanks / Like
    வசந்த மாளிகையில் ஸ்ரீகாந்த்

    நடிகர்திலகத்தின் மாபெரும் வெற்றிப்படமான ‘வசந்தமாளிகை’யில் ஸ்ரீகாந்தும் நடித்திருக்கிறார். ஆனால் நடிகர்திலகத்தும் ஸ்ரீகாந்துக்கும் நேரடியாக சந்திக்கும் காட்சி ஒன்று கூடக் கிடையாது. கதாநாயகி வாணிஸ்ரீயின் அண்ணனாக வரும் ஸ்ரீகாந்த், தன் மனைவி குமாரி பத்மினி சொல்லும் வார்த்தைக்கெல்லாம் தலையாட்டும் பூம் பூம் மாடு போல. தனக்கு வேலை வெட்டி சம்பாத்தியம் எதுமில்லாத காலத்தில் தங்கையின் வருமானத்தில் தானும் தன் மனைவியும் வண்டியோட்டிக் கொண்டிருப்பவர் (அப்பவும்கூட தங்கை அனுப்பும் பணத்தில் கமிஷன்). தனக்கு ஜாக்பாட்டில் லட்சக்கணக்கில் பணம் கிடைத்ததும், அப்பா, அம்மா, தம்பி, தங்கைகளை ஒதுக்கி விட்டு தானும் தன் மனைவியும் மட்டும் பங்களாவாசியாக அனுபவிக்கும் சுயநலவாதி. தங்கையின் வேலை போய் குடும்பத்தோடு தன்னிடம் வந்தபோதும் தன் மாளிகையில் தங்க விடாமல், (மனைவியின் பேச்சைக்கேட்டு) தோட்டக்காரன் வீட்டில் தங்கவைக்கும் கல்நெஞ்சக்காரன். இந்தப்பாத்திரத்தில் ஸ்ரீகாந்த் ரொம்பவே சிறப்பாக நடித்திருந்தார்.

    தங்கைக்கு தான் பேசிமுடித்த சம்பந்தம் (சின்ன ஜமீன்தார் வரவால்) நின்று போய்விட, அதுதான் சமயமென்று தங்கையின் மேலிருந்த கோபத்தையெல்லாம், மணவறையில் அமர்ந்திருக்கும் தங்கை வாணிஸ்ரீயின் முன் கொட்டித்தீர்ப்பாரே, அந்த இடத்தில் வசனமும் ஸ்ரீகாந்தின் நடிப்பும் சூப்பர்.

    திருமணம் நின்று போன சோகத்தில் அழுதுகொண்டிருக்கும் மனைவி பண்டரிபாயிடம், மேஜர் வந்து, 'ஏன் அழுதுக்கிட்டு இருக்கே?. பொண்ணைப்பெத்தோம். அவளை மணக்கோலத்திலும் பாத்துட்டோம். அப்புறம் என்ன, ஏதாவது குளமோ குட்டையோ போய் விழ வேண்டியதுதான்' என்று சொல்லி முடித்ததும்....

    'இப்படி பெத்தவங்களையும், கூடப்பொறந்தவங்களையும் தலைகுனிய வைப்பதைவிட, பேசாம நீ செத்து தொலஞ்சிருக்கலாம். நாங்களாவது நிம்மதியா இருந்திருப்போம். பெரிசா சம்பாதிக்கிறோம்ங்கிற திமிர்ல பேசினியே, உன் அகம்பாவத்தாலே இப்போ என்ன ஆச்சு? நீ யாரை வாழ வச்சே?' என்ற ரீதியில் ஸ்ரீகாந்த் பேசிக்கிட்டே போவார்.

    அங்கே அரண்மனையில் கதாநாயகனுக்கு அவர் அண்ணனே வில்லன் என்றால், இங்கே கதாநாயகிக்கு இவர் அண்ணனே வில்லன். வசந்தமாளிகையில் நடிகர்திலகத்துக்கும் மேஜருக்கும் (வாணியைத்தேடி வரும் சீன்), நடிகர்திலகத்துக்கும் பண்டரிபாய்க்கும் (அரண்மனை நகையைத் திருப்பிக்கொடுக்கும் சீன்) கூட காம்பினேஷன் காட்சி உண்டு. ஆனால் நடிகர்திலகத்துக்கும் ஸ்ரீகாந்துக்கும் காம்பினேஷன் காட்சியே இல்லை.

    இருந்தபோதிலும், வசந்த மாளிகையில் சிறிய வேடமானாலும் சிறப்பாகச் செய்திருந்தார் ஸ்ரீகாந்த்.

  7. #16
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2005
    Location
    Chennai
    Posts
    2,197
    Post Thanks / Like
    ராஜ நாகம்

    ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடித்த படங்களில் 'ராஜ நாகம்' படத்துக்கு தனியிடம் உண்டு. காரணம் இதன் கதையமைப்பு பத்தோடு பதினொன்றாக வந்தது அல்ல. அன்றைய நிலையில் கொஞ்சம் வித்தியாசமானது. இன்றைக்கு அதுபோன்ற கோபக்கார இளைஞர்களின் கதைகளில் பல படங்கள் வந்து விட்டன என்பது உண்மை.

    கன்னடத்தில் 'நாகரகாவு' என்ற பெயரில் வெளிவந்து சக்கை போடு போட்ட படத்தின் கதையை தமிழில் ரீமேக் செய்திருந்தனர். மேஜர் சுந்தர்ராஜனின் சிஷ்யன் ஸ்ரீகாந்த். தன்னைச்சுற்றி நடக்கும் தவறுகளைப் பொறுத்துக்கொள்ளாத கோபக்கார மாணவன். தவறுசெய்த தலைமை ஆசிரியரை இரவோடு இரவாக தூக்கி வந்து தெருக்கம்பத்தில் கட்டி வைக்கும் அளவுக்கு கோபக்காரன். அவரது காதலி மஞ்சுளா, சகமாணவ நண்பனான தேங்காய் சீனிவாசனின் தங்கை. மஞ்சுளாவின் பெற்றோரால் அவர்களது காதல் முறிக்கப்பட்டு, வி.கோபாலகிருஷ்ணனுக்கு திருமணம் செய்து வைக்கப்படுகிறார். குரு மேஜரின் கட்டளைக்குப்பணிந்து ஸ்ரீகாந்த் பொறுமையாக அடங்கிப்போகிறார்.

    நாகப்பாம்பு, அடங்காப்பிடாரி என்ற பெயர்பெற்ற ஸ்ரீகாந்த், படிப்பு முடிந்ததும் வேலை கிடைக்காமல், அசோகனிடம் வேலைக்குச் சேர்த்துவிடப்படுகிறார். இதனிடையே மார்கரெட் என்ற கிருஸ்துவப் பெண்ணோடு (பட்டிக்காடா பட்டணமா சுபா) ஸ்ரீகாந்துக்கு காதல் ஏற்படுகிறது. ஒரு சமயம், முதலாளி அசோகனின் கார் டிரைவராக அசோகன் மற்றும் அவரது கூட்டாளிகளோடு வெளியூர் செல்லும் ஸ்ரீகாந்த் அங்கு தன் பழைய காதலி மஞ்சுளாவை சந்திக்கிறார். மஞ்சுளா தன் கணவனோடு சந்தோஷமாக வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்று எண்ணிக்கொண்டிருக்கும் ஸ்ரீகாந்துக்கு, மஞ்சுளாவின் சோகக்கதையைக் கேட்டதும் இடி விழுகிறது. ஆம், கணவன் என்ற பெயரில் ஒரு கயவனின் பிடியில் சிக்கிய அவளுடைய உடலையே மூலதனமாக வைத்து அவன் சம்பாதித்துக் கொண்டிருக்கிறான் என்பதை அறிந்ததும் அவளது பழைய காதலன் நொறுங்கிப்போகிறார்.

    இதனிடையே அவருக்கும் மார்கரெட்டுக்குமான காதலுக்கும் எதிர்ப்பு கிளம்புகிறது. இம்முறை தன் குருவின் பேச்சைக்கேட்பதாக இல்லை. அவருடைய பேச்சைக்கேட்டு பொறுமை காத்ததால் அவனுடைய காதலி மஞ்சுளாவின் கதி இப்போது என்ன என்பதை எடுத்துச்சொல்ல, அதைக்கேட்டு குருவுக்கும் அதிர்ச்சி. இருந்தபோதிலும் தன் சிஷ்யனின் செயலுக்கு எதிர்ப்புத்தெரிவிக்கிறார். மார்கரெட்டை இழுத்துக்கொண்டு மலைமேல் ஏறிக்கொண்டிருக்கும் தன் சிஷ்யனைத் தடுக்க அவன் அவரை தள்ளி விழ அவர் நிலைதடுமாறி உருண்டு விழுகிறார். இறுதியில் மலைஉச்சியில் இருந்து இருவரும் கீழே குதித்து தற்கொலை செய்துகொள்கின்றனர். (இது ஜஸ்ட் கதையின் அவுட்லைன் மட்டுமே).

    ஆனால் படத்தில் ஸ்ரீகாந்தின் பாத்திரப்படைப்பின் வேகத்தையும் விவேகத்தையும் உணர்த்தும் ஏராளமான சம்பவக்கோர்ப்புகள் நிறைந்துள்ளன. படம் வெளிவந்த அந்தகால கட்டத்தில் அந்தப்பாத்திரம் தமிழ்ப்பட உலகுக்குப்புதுமையாக இருந்தது. பத்திரிகை விமர்சனங்களில் அந்தப்பாத்திரமும், அதில் அவரது நடிப்பும் ரொம்பவே சிலாகித்துப் பேசப்பட்டன.

    கண்ணைக்கவரும் வண்ணப்படமாக வந்த இப்படத்தின் பாடல்களை கவிஞர் வாலி எழுத, வி.குமார் இசையமைத்திருந்தார். பாடல்கள் அனைத்தும் இனிமையாக இருந்ததுடன், படத்தின் சம்பவங்களுக்குப் பொருந்துவனவாகவும் அமைந்து சிறப்பூட்டின.

    ஸ்ரீகாந்துக்காக டி.எம்.சௌந்தர்ர்ராஜன் பாடியிருந்த...
    'மாணவன் நினைத்தால் நடத்திக்காட்டுவான்
    அவன் நெஞ்சம் ஒரு நெருப்பு... அவன் நேர்மையின் மறுபிறப்பு
    மதித்தால் மதிப்பான்... மிதித்தால் மிதிப்பான்'
    என்ற பாடல் மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப்பெற்றிருந்தது என்பதைச்சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

    தன்னை ஒரு அலங்கோல நிலையில் சந்திக்கும் தன் பழைய காதலன் ஸ்ரீகாந்த் முன், மஞ்சுளா தன் 'திருமண(???)' வாழ்க்கையைப் பிரதிபலித்துப் பாடும்.....
    'சமுதாய வீதியிலே நான் சிவப்பு விளக்கு
    தடுமாறி விலைபோகும் கடைச்சரக்கு
    என்ன சொல்ல ஏது சொல்ல... வெட்கக்கேடு வெளியில் சொல்ல'
    இந்தப்பாடலில் தன் கணவனாலேயே விலையாக்கப்படும் கதையை சொல்லச் சொல்ல நமக்கு மஞ்சுளாவின் பாத்திரத்தின் மீது ரொம்பவே பரிதாபம் ஏற்படும்.

    மார்கரெட்டாக வரும் சுபாவும், ஸ்ரீகாந்தும் டூயட் பாடல்
    'தேவன் வேதமும் கண்ணன் கீதையும்
    ஒரு பாதையில் இங்கு சங்கமம்
    ஒரு பாதையில் இங்கு சங்கமம்'
    அன்றைய காலகட்டத்தில் ரொம்பவே பாப்புலரான பாடல். வி.குமார் இசையில் உருவான சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்று. இப்பாடலின் வெளிப்புறக்காட்சிகளில் ஒளிப்பதிவு மிகவும் அருமை.

    ஸ்ரீகாந்த். மஞ்சுளா, சுபா, மேஜர் சுந்தர்ராஜன், தேங்காய் சீனிவாசன், அசோகன், எம்,என்,ராஜம், வி.கோபாலகிருஷ்ணன் ஆகிய நட்சத்திரங்களுடன் துணைப் பாத்திரங்ககளில் பலர் நடித்திருந்த 'ராஜ நாகம்' பெரிய வரவேற்பைப் பெறவில்லை என்ற போதிலும், சராசரிக்கும் அதிகமாகவே ஓடியது.

  8. #17
    Senior Member Veteran Hubber bingleguy's Avatar
    Join Date
    Jan 2006
    Location
    bengaluru, India
    Posts
    4,385
    Post Thanks / Like
    Quote Originally Posted by saradhaa_sn

    Quote Originally Posted by groucho070
    I won't call Srikanth underrated or underappreciated. He was there, part of the history, and for NT fans like me, he was the reason why NT's characters went ballistic in many notable films
    அந்த வகையில் சட்டென்று நினைவுக்கு வருவது 'தங்கப்பதக்கம்'.
    Right you are
    Click here to reach the Index page of http://www.mayyam.com/talk/showthrea...A-LEARNED-YES)... All Sagas could be accessed from this page...

  9. #18
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2005
    Location
    Chennai
    Posts
    2,197
    Post Thanks / Like
    'கோமாதா என் குலமாதா'

    தேவர் பிலிம்ஸ் படங்களில் கதாநாயகியின் வளர்ப்புப்பிராணி சம்மந்தப்பட்ட கதையென்றால், அப்படத்தில் கதாநாயகியும், அவளது வளர்ப்புப்பிராணியும் பிரதான இடம்பெறும் என்பது எல்லோர்க்கும் தெரிந்த விஷயம். கதாநாயன் இரண்டாம் படசம்தான். அவனைக்கூட கிட்டத்தட்ட ஒரு வில்லன் ரேஞ்சுக்கே காட்டுவர்கள். அந்த வகையில், வெள்ளிக்கிழமை விரதம், ஆட்டுக்கார அலமேலு வரிசையில் கோமாதா என் குலமாதாவும் அப்படியே. இந்தியில் 'கா(G)ய் அவுர் கௌரி' என்ற பெயரிலும் தமிழில் கோமாதா என் குலமாதா என்ற பெயரிலும் ஒரே நேரத்தில் தயாரிக்கப்பட்டு வெளியானது.

    கதாநாயகி பிரமீளா, அவர் வளர்க்கும் பசுமாடு இரண்டும்தான் முக்கிய பாத்திரங்கள். பிரமீளாவின் ஜோடி ஸ்ரீகாந்த். துவக்கத்தில் தன்ன்னிடம் வம்பு பண்ணும் நான்கு போக்கிரிகளிடம் மாட்டிக்கொள்ளும் பிரமீளாவை ஸ்ரீகாந்த் சண்டைபோட்டுக் காப்பாற்றுகிறார். சரிதான், பரவாயில்லையே ஸ்ரீகாந்துக்கு நல்ல கௌரவமான ரோல் கொடுத்திருக்கிறார்களே என்று நாம் எண்ணிய சில வினாடிகளில் நம் கற்பனை தவிடுபொடி. ஆம், தான் ரவுடிகளிமிருந்து காபாற்றிய பிரமிளாவை காருக்குள் இழுத்துச்சென்று, அவர் கற்பை சூறையாடிவிடுகிறார். (அதானே பார்த்தோம், நம் படவுலகத்தினர் திருந்த விட மாட்டாங்களே). தன்னைக்கெடுத்தவனைப்பழி வாங்க நேரம் பார்த்திருக்கிறார் பிரமீளா.

    ஸ்ரீகாந்துக்கு ஒரு பெரிய இடத்தில் திருமணம் நிச்சயம் ஆகிறது. ஸ்ரீகாந்தின் குணத்தைப் பற்றியறியும் மணப்பெண் திருமண மேடையில், அவரை உதாசீனப்படுத்தி விட்டு எழுந்து போக, ஸ்ரீகாந்த் அவமானத்தால் குன்றிப்போகிறார். இனிமேல் தன்னை யார் திருமனம் செய்ய சம்மதிப்பாள்? என்று தன் அம்மாவிடம் சொல்லியழ, சமயம் பார்த்திருந்த பிரமீளா, 'நான் அவரை கல்யாணம் பண்ணிக்கிறேன்' என்று முன் வருகிறார். ஸ்ரீகாந்தும் குடும்பத்தாரும் பிரமிளாவை நன்றியுடன் பார்க்கின்றனர். ஆனால் பிரமிளாவின் நோக்கம் வேறு.

    முதலிரவின்போது கணவனின் வேண்டுகோளூக்காக ஆடிப்பாடும் பிரமீளா, முதலிரவிலேயே தன் பழிவாங்கும் சொரூபத்தைக்காட்ட. ஸ்ரீகாந்த் அதிர்ச்சியடைகிறார். அதிலிருந்து பிரமீளாவின் பழிவாங்கும் படலம்தான். அதற்குப் பெரிதும் துணையாய் நிற்பது அவர் வளர்க்கும் பசுமாடு. இதனிடையே ஒரு ரயில் விபத்தையும் 'லட்சுமி' என்ற அந்தப்பசு தடுக்கிறது(?). ரயிலைக்கவிழ்க்க ரயில்பாதையில் நாச வேலை செய்துகொண்டிருக்கும், ஒரு சதிகாரக்கும்பலை பாயிண்ட்மேன் தடுக்க, அவர்கள் அவனை அடித்துப்போட்டு விட்டு தண்டவாளத்தைப் பெயர்த்துவைக்க, லட்சுமி, அந்த பாயிண்ட்மேன் வைத்திருந்த சிவப்பு விளக்கை வாயில் கவ்விக்கொண்டு ரயில் வரும் பாதையில் முன்னோக்கி ஓடி வர, சிவப்புவிளக்கைப் பார்த்து எஞ்சின் டிரைவர் வண்டியை நிறுத்தி அவரும், கார்டு சின்னப்பா தேவரும் மற்றும் பயணிகளும் பசுமாடு செல்லும் வழியே சென்று பார்க்க, தண்டவாளம் பெயந்து கிடக்கிறது. (நம் வீட்டுப்பசுக்களெல்லாம் புல்லும் புண்ணாக்கும் தின்று விட்டு பால் கறப்பதோடு சரி). லட்சுமியையும் அதன் வளர்ப்பாளி பிரமீளாவையும் அனைவரும் பாராட்டுகின்றனர்.

    ஆனால் ஸ்ரீகாந்துக்கு அந்த பசுமாட்டின் மீது கடும் கோபம், எரிச்சல். தன் மனைவியின் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்குத்துணை போவதால், அந்தப்பசுவை ஒழித்துக்கட்டினால் தான் தனக்கு நிம்மதி என்று அதை ஒழித்துக்கட்ட முயல்கிறார். இறுதியாக ஒருகட்டத்தில் பெரிய இக்கட்டிலிருந்து அந்தப்பசுவே ஸ்ரீகாந்தைக்காப்பாற்ற, பிரமீளாவும் அவரை ஏற்றுக்கொள்ள, தங்களைவிட்டுப் பிரிந்துபோகும் பசுவைத் தங்களோடவே வைத்துக்கொள்ள ஸ்ரீகாந்த் முடிவெடுக்க அப்புறம் என்ன?. தியேட்டர் காலி.

    இம்மாதிரி பிராணி செண்டிமெண்ட் படங்கள் பெண்களுக்கு ரொம்பவே பிடிக்கும் என்பதாலும், அவர்கள் பெரும்பாலும் இம்மாதிரிப் படங்களில் லாஜிக்கையெல்லாம் எதிர்பார்ப்பதில்லை என்பதாலும், அவர்களின் பர்ஸைக்குறிவைத்தே இம்மாதிரி படங்கள் எடுக்கப்பட்டன. சாண்டோ சின்னப்பா தேவர் கைக்கொண்ட இவ்வழியை பிற்காலத்தில் ராம நாராயனன் தொடர்ந்தார். அதில் வெற்றிகளும் கிடைத்தன. ஆனால் படுதோல்வி என்பதெற்கெல்லாம் இடமில்லை.

    வழக்கமாக தேவர் படங்களை இயக்கும் எம்.ஏ.திருமுகமோ, அல்லது ஆர்.தியாகராஜனோ இப்படத்தை இயக்கவில்லை. ஒருசில எம்.ஜி.ஆர். படங்களை இயக்கியிருந்த எம்.கிருஷ்ணன் இயக்கியிருந்தார். தனது தண்டாயுதபாணி பிலிம்ஸ் சார்பில் 'சாண்டோ' சின்னப்பா தேவர் தயாரித்திருந்தார்.

    சங்கர் - கணேஷ் இசையில், இரண்டு பாடல்கள் நினைவில் உள்ளன....

    பிரமீளா தன் தோழிகளுடன் மாட்டு வண்டியில் பாடிக்கொண்டு போகும் "பொழுதுக்கு முன்னே ஊருக்குப்போவோம் போடா தம்பி போ" பாடலையும்,

    தன் முதலிரவில் கணவன் ஸ்ரீகாந்த் வேண்டுகோளுக்கிணங்க பிரமிளா பாடும் "மணக்கோலம் பார்க்க வந்தேன் மணமகளானேன்" பாடலையும் பி.சுசீலா பாடியிருந்தார். ஸ்ரீகாந்துக்கு பாட்டு எதுவும் இருந்தமாதிரி நினவில்லை. இருந்திருக்குமோ?.

    மொத்தத்தில், 'கோமாதா பெண்களைக்கவர்ந்த குலமாதா'.

  10. #19
    Senior Member Platinum Hubber
    Join Date
    Apr 2006
    Location
    basically iyAm nArthiNdian
    Posts
    14,478
    Post Thanks / Like
    நம் வீட்டுப்பசுக்களெல்லாம் புல்லும் புண்ணாக்கும் தின்று விட்டு பால் கறப்பதோடு சரி

  11. #20
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2005
    Location
    Chennai
    Posts
    2,197
    Post Thanks / Like
    Quote Originally Posted by saradhaa_sn
    ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடித்த படங்களில் 'ராஜ நாகம்' படத்துக்கு தனியிடம் உண்டு.

    கன்னடத்தில் 'நாகரகாவு' என்ற பெயரில் வெளிவந்து சக்கை போடு போட்ட படத்தின் கதையை தமிழில் ரீமேக் செய்திருந்தனர்.
    ராஜநாகம் படத்தின் கன்னட மூலப்படமான 'நாகரகாவு' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி, கன்னடத்தில் பிரபலமான நட்சத்திரமாகத்திகழ்ந்த திரு.விஷ்ணுவர்தன் நேற்று (டிசம்பர் 30) காலை மாரடைப்பால் காலமானார். இவர் பிரபல நடிகை பாரதியின் கணவர் ஆவார்.

    இயக்குனர் ஸ்ரீதரின் 'அலைகள்' படத்தின் மூலமாக தமிழில் கதாநாயகனாக அறிமுகமானவர் விஷ்ணுவர்தன். ரஜினிகாந்தின் 100-வது படமான ஸ்ரீராகவேந்திரர் படத்திலும் நடித்துள்ளார்.

    நடிகை லட்சுமி இயக்கிய ஒரே படமான 'மழலைப்பட்டாளம்' படத்தில் கதாநாயகனாக, சுமித்ராவின் ஜோடியாக நடித்துள்ளார். (இப்படத்தை இயக்குனர் கே.பாலச்சந்தர் மேற்பார்வை செய்தார்).

    நடிகர்திலகம் சிவாஜி, சூப்பர் ஸ்டார் ரஜினி இணைந்து நடித்த (இந்தி 'குர்பானி' படத்தின் தமிழ் ரீமேக்) 'விடுதலை' படத்திலும் நடித்துள்ளார். (உண்மையில் விடுதலையில் இவருடைய ரோலில் உலகநாயகன் கமலைத்தான் நடிக்க வைக்க தயாரிப்பாளர் திரு பாலாஜி முயன்றார். சில பல காரணங்களால் கமல் அப்படத்தில் நடிக்க முடியாமல் போனது. சிவாஜி, ரஜினி, கமல் இணைந்து நடித்த ஒரே படம் என்ற பெருமை கைநழுவிப்போனது).

    May his soul rest in peace.

Page 2 of 19 FirstFirst 123412 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •