-
12th January 2011, 05:22 PM
#11
Senior Member
Veteran Hubber
'சாந்தியின் பொன்விழா நிறைவு'
12.01.1961-ம் ஆண்டு தமிழ்நாடு முதமைச்சர் பெருந்தலைவர் காமராஜ் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட சென்னை சாந்தி திரையரங்கம், நேற்றுடன் தனது 50 ஆண்டுகளை வெற்றிகரமாகப்பூர்த்தி செய்து, இன்று 51-வது வெற்றி ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
சென்னை அண்ணாசாலையின் ஒரு அடையாளச்சின்னமாகத் திகழ்ந்துகொண்டிருக்கும், அத்திரையரங்குடன் நம்முடைய நினைவுகள்தான் எத்தனை பசுமையானவை..!. எத்தனை திரைப்படங்களை அங்கு கண்டு களித்திருப்போம். எத்தனை நண்பர்களுடன் அளவளாவியிருப்போம். சாந்தி திரையரங்க வளாகம் என்பது, நடிகர்திலகத்தின் ரசிகர்களுடைய 'சங்கமக்கூடம்'. தமிழ்நாட்டின் எந்தத்திரையரங்கில் நடிகர்திலகத்தின் படம் ஓடிக்கொண்டிருந்தாலும் அங்கு விவாதிக்கப்படும். தகவல்கள் பறிமாறிக்கொள்ளப்படும்.
கால ஓட்டத்தின் காரணமாக ஆளுக்கொரு திக்கில் ஓடிப்போனோம். ஆனாலும் நினைவுகள் மட்டும் பசுமையாக நெஞ்சில் உறைந்து நிற்கின்றன. முன்னொருமுறை நண்பர் ராகவேந்தர் அவர்கள், கவிஞர் கா.மு.ஷெரீப் அவர்களின் மகன் சீதக்காதி பற்றிக் குறிப்பிட்டபோது என்னுடைய எண்ணமும் பின்னோக்கிப்பாய்ந்தது. காரணம் எனக்கும் அவர் நண்பர். எங்களூக்கு மட்டுமல்ல, அந்த காலகட்டத்தில் அந்த வளாகத்தில் கூடி நின்ற அனைவருக்கும் நண்பர். நடிகர்திலகத்தைக் குறை சொல்வோரை 'உண்டு, இல்லை'யென்றாக்கி விடும் தீவிர ரசிகர் அவர்.
1975 - 85 பத்தாண்டுகள், நாங்கள் சாந்தி வளாகத்துக்கு செல்லாத மாலை நேரங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். "கோவை கீதாலயாவில் அண்ணன் ஒரு கோயில் முந்தாநாள் ஈவ்னிங் ஷோவோடு கண்டினியூ புல் முடிஞ்சு போச்சாம். முந்தாநாள் நைட்ஷோ புல் ஆகலையாம்" என்பன போன்ற தகவலகளை சூட்டோடு சூடாக பறிமாறிகொண்ட இனிய காலங்கள் இனி வரப்போவதில்லை. அலங்காரில் பைலட் பிரேம்நாத் புல் ஆகும்வரை நின்று பார்த்துவிட்டு, பேசிக்கொண்டே நடந்து, தாய்வீடான சாந்திக்குத் திரும்பிய அந்த நாட்கள் இனி கிடைக்கப்போவதில்லை. மிட்லண்டில் கவரிமான் சரியாகப்போகவில்லை என்று கவலைதோய்ந்த முகத்தோடு பேசிக்கொண்ட நாட்கள் இனி வரப்போவதில்லை. ரிஷிமூலத்தையும், பில்லாவையும் ஒப்பிட்டுப்பேசிய ஒரு மாற்று ரசிக நண்பரோடு விவாதத்தில் ஈடுபட்ட நாட்கள் இனி திரும்பி வரப்போவதில்லை.
ஆனால் அந்த பசுமையான நினைவுகள் எங்கள் நெஞ்சங்களில் உறைந்திருக்கின்றன. இறுதிக்காலம் வரை அது அழியாது, மறையாது.
-
12th January 2011 05:22 PM
# ADS
Circuit advertisement
Bookmarks