'வெண்ணிலா கபடிக்குழு’, ‘நான் மகான் அல்ல’ வெற்றிக்குப் பின் ‘அழகர்சாமியின் குதிரை’யுடன் தேனி மலைப் பகுதியில் வலம் வந்து கொண்டிருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன். அவருடன் பேசினோம்...
‘‘‘அழகர்சாமியின் குதிரை’ எனது மூணாவது படம். மலைப்பிரதேசத்தில் கோவேரு கழுதை இனத்தைச் சேர்ந்த ஒரு குதிரை. அதை வைத்து பொதி சுமந்து காடு மலைகளில் பாம்பு, பல்லி, பூச்சி பட்டைகளோடு வாழ்ற மலைவாழ் மனித வாழ்க்கைதான் படம்.இந்தக் கதை பாஸ்கர் சக்தியோட நாவல்.அதை படமா நான் இயக்குறேன்.ரொம்ப வித்தியாசமா வந்துக்-கிட்டு இருக்கு.இந்த ஸ்கிரிப்ட்டை முதல்ல கேட்டவுடனே படத்தை தயாரிக்க முன்வந்த மதன்,கௌதம்மேனன் ரெண்டு பேருக்கும் நன்றி சொல்லணும்.’’
ரொம்ப சீரியஸா இருக்கும் போல...?
‘‘அது தப்பு. குதிரையே வாழ்க்கைன்னு வாழ்றவனோட மனசுல காதல் வர, (காதலியா மலை கிராமத்துப் பொண்ணு சரண்யாமோகன்) குதிரை காணாமல் போயிடும்.குதிரை இல்லாம பொழப்பு கெட்டு வாழ வழி இல்லாதவனுக்கு பொண்ணு கொடுக்கத் தயங்குறாங்க. தனது குதிரையை கண்டு பிடித்து விடுவானா? திருமணம் எப்படி முடிக்கிறான்ங்கிறது தான் கதை. நகைச்சுவையா போகும்.’’
1982 காலகட்ட கதையா படம் பண்றதால ஒவ்வொரு ஷாட்டுக்கும் மெனக்கெட வேண்டியிருக்கு. மலைப் பிரதேசக் கிராமங்கள் வரைக்கும் இப்ப ‘டிஷ்’ வந்திருச்சு.இதெல்லாம் இல்லாத லொக்கேஷனா கண்டுபிடிச்சு படம் பண்றோம்.’’
இளையராஜா மியூஸிக் எப்படி வந்திருக்கு?
‘‘இசைஞானி ராஜாசார், எடிட்டிங் முடிஞ்சு போட்டுப் பார்த்து பிரமிச்சு போயிட்டாரு. கதையும், கதைக்கான ஷூட்டிங் ஸ்பாட்டும் அவரோட தேனி மண்ணுங்கிறதால, ரொம்ப லயிச்சிட்டாரு. மொத்த படத்தையும் பார்த்திட்டு அவரே பொருத்தமான இடத்துல பாட்டுப் போட்டு கொடுத்திருக்காரு. நிச்சயம் இந்தப் படத்தோட பாடல்கள் பிரபலமாகும்.’’
வழக்கமா உங்க படத்துல க்ளைமேக்ஸ்லாம் நெகடிவ்வாக இருக்கும். இந்தப் படத்துல எப்படி?
‘‘என்னோட முதல் ரெண்டு படத்தோட க்ளைமாக்ஸ் கூட பெரும் விவாதமா இருந்துச்சு.சமீபகாலமா நெகடிவ் க்ளைமாக்ஸ்தான் படத்திற்கு பரபரப்பா இருக்குனு ஒரு பேச்சு வந்திடுச்சு. ஆனா, இந்தப் படத்துல ஒரு பாஸிட்டிவ்வான, எல்லோரும் சந்தோசப்படுற, கைதட்டிட்டுப் போற மாதிரி க்ளைமாக்ஸ் இருக்கும்.இந்த ஸ்கிரிப்ட்டுக்குள்ளே நல்ல மெசேஜ் சொல்லியிருக்கோம்.’’
அடுத்து விக்ரம் படமாமே?
‘‘ஆமாம். அதற்குள் அடுத்த படத்துக்கான கதையும் ரெடியாயிடுச்சு. ‘போக்கிரி’ படம் பண்ணுன ரமேஷ் சார்தான் புரடியூசர். விக்ரம் ஹீரோ. யுவன் மியூசிக். ¬ட்டில் இன்னும் முடிவு பண்ணல. விக்ரம் சார் இதுல டபுள் ஆக்டிங் பண்ணுறார். லொக்கேஷன், ஹீரோயின் தேடுதல் நடந்திட்டிருக்கு.’’
விக்ரம் படம்கிறதுனால ஸ்பெஷல் ஸ்கிரிப்ட் பண்றீங்களா?
‘‘என்னைப் பொறுத்தவரை நான் எடுக்கிற படங்கள் எனக்கு நல்ல படம். சந்தோசமா இருக்கணும் என்பதை விட,தியேட்டரில் எல்லா தரப்பு ரசிகர்களுக்கும் பிடிச்ச மாதிரியும் ரசிக்கும்படியாவும் இருக்கணும். தயாரிப்பாளர்களுக்கு வியாபார ரீதியான வெற்றியாகவும் இருக்கணும் என்பது முக்கியம்.’’ என்கிறார் இயக்குநர் சுசீந்திரன் உற்சாகமாக..
Bookmarks