Page 178 of 199 FirstFirst ... 78128168176177178179180188 ... LastLast
Results 1,771 to 1,780 of 1983

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 7

  1. #1771
    Member Junior Hubber
    Join Date
    Oct 2010
    Posts
    35
    Post Thanks / Like


    ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போன்று தேவர் மகன் திரைப்படத்தின் இந்த காட்சி எனக்கு மிகவும் பிடித்த காட்சியாகும். நடிகர் திலகத்தின் subtle ஸ்டைலிலான ஆக்டிங்கும் , கமலின் தரமான நடிப்பும், இருவருக்குமிடையே நிகழும் உணர்ச்சிப் பூர்வ வசனங்களும் மற்றும் காட்சியமைப்பும் அருமையாக இருக்கும்.
    Last edited by selva7; 30th April 2011 at 11:52 PM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1772
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    மே-1 - இன்று மணநாள் காணும் புது மண தம்பதியருக்கு நமது உளமார்ந்த வாழ்த்துக்கள்.



    அன்புடன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. #1773
    Senior Member Devoted Hubber
    Join Date
    Jun 2007
    Location
    Chennai
    Posts
    287
    Post Thanks / Like
    Some glimpses from the life sketch of NT




    நாடகக் கம்பெனியில் பிளவு

    எஸ்.கே.நாடகக் குழுவில், அப்போது எஸ்.வி.சகஸ்ரநாமமும், கே.ஆர்.ராமசாமியும் முக்கிய
    நடிகர்கள். இவர்களில் யாரிடம் நிர்வாகப் பொறுப்பை ஒப்படைப்பது என்று மதுரம் யோசித்தார். முடிவில் சகஸ்ரநாமத்திடம் ஒப்படைக்கத் தீர்மானித்தார். இதனால், கே.ஆர்.ராமசாமி வருத்தம் அடைந்தார். என்.எஸ்.கே.நாடக சபாவில் இருந்து விலகி, புது
    நாடகக் கம்பெனி தொடங்க தீர்மானித்தார். இதைத் தொடர்ந்து, நாடகக் குழு இரண்டாக
    பிளவுபட்டது. சிலர் சகஸ்ர நாமம் அணியிலும், சிலர் கே.ஆர்.ராமசாமி அணியிலும் சேர்ந்தனர். கே.ஆர்.ராமசாமியுடன் சேர்ந்தவர்களில் சிவாஜிகணேசனும் ஒருவர். பேரறிஞர் அண்ணாவுடன் நெருங்கிய தொடர்பு உடையவர் கே.ஆர்.ராமசாமி. அவர் அண்ணாவை
    சந்திப்பதற்காக காஞ்சீபுரம் சென்றார். போகும்போது, சிவாஜிகணேசனையும், தன் ஆதரவாளர்களையும் அழைத்துச்சென்றார். அண்ணா அப்போது ``திராவிட நாடு" என்ற
    பத்திரிகையை நடத்தி வந்தார். அந்த பத்திரிகை அலுவலகத்தில், சிவாஜியும், மற்றவர்களும்
    தங்கினார்கள். சிவாஜிகணேசன் வாழ்க்கையில் திருப்புமுனை திராவிட கழகத்தில் இருந்து தி.மு.கழகம் பிரியாத காலக்கட்டம் அது (1946). சென்னையில் ஏழாவது சுய மரியாதை மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகளில், பெரியாரும், அண்ணாவும் தீவிரமாக ஈடுபட்டு
    இருந்தனர்.

    அண்ணாவின் நாடகம்

    மாநாட்டில் நடிப்பதற்காக ``சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்" என்ற பெயரில் ஒரு நாடகத்தை அண்ணா எழுதியிருந்தார்.இந்த நாடகத்தின் கதைச்சுருக்கம் வருமாறு:
    சிவாஜி பெரிய மாவீரன். சாதாரணக் குடிமகனாக இருந்து பெரிய மன்னனானவன். அந்நியர் ஆட்சியை எதிர்த்தவன்.மராட்டிய சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியபோதிலும், அவன் மன்னனாக முடி சூட்டிக் கொள்ள பெரிய எதிர்ப்பு கிளம்புகிறது. காரணம், அவன் கீழ் சாதி!
    இதனால், காசியில் இருந்து காகப்பட்டர் என்ற பெரிய மதத் தலைவரை அழைத்து வந்து, சிவாஜியை சத்திரியனாக மாற்றுகிறார்கள். அதன்பிறகு தான் அவர் சிம்மாசனம் ஏற, இந்துக்கள் சம்மதிக்கிறார்கள். இப்படி செல்லும் இந்த நாடகத்தில், சிவாஜியாக
    எம்.ஜி.ஆரும், காகப்பட்டர் வேடத்தில் அண்ணாவும், மற்றொரு முக்கிய வேடத்தில் டி.வி.நாராயணசாமியும் நடிப்பது என்று முடிவாகியது. இந்தக் காலக்கட்டத்தில், எம்.ஜி.ஆர். திரைப் படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து வந்தார். காங்கிரஸ் அனுதாபியாகவும், பக்தராகவும் இருந்தார்.என்ன காரணத்தினாலோ, எம்.ஜி.ஆர். அந்த நாடகத்தில்
    நடிக்கவில்லை. நாடகத்துக்குப் பொறுப்பாளராக இருந்த நடிகர் டி.வி.நாராயணசாமி அண்ணாவை சந்தித்து, எம்.ஜி.ஆர். தன்னால் நடிக்க இயலாது என்று கூறிவிட்டதாக தெரிவித்தார்.

    வாழ்க்கையில் திருப்புமுனை

    ``திராவிட நாடு" அலுவலகத்தில் தங்கியிருந்த சிவாஜி கணேசன், இதற்குள் அண்ணாவுடன் நெருங்கிப் பழகியிருந்தார். சிவாஜியின் நடிப்பாற்றல் பற்றி அண்ணாவும் நன்கு அறிந்திருந்தார்.எனவே, சிவாஜியை அழைத்து, ``கணேசா! என் நாடகத்தில் நீ சிவாஜி வேடத்தில் நடிக்கிறாயா?" என்று கேட்டார். இதைக்கேட்டு சிவாஜிக்கு இன்ப அதிர்ச்சி! தன்
    காதுகளையே நம்பமுடியவில்லை. ``என்ன அண்ணா சொல்கிறீர்கள்? உங்கள் நாடகத்தில் நான் நடிப்பதா? அதுவும் சிவாஜி வேடத்தில்! என்னால் முடியுமா?" என்றார். ``நீ முயற்சி செய்து பார், கணேசா! உன்னால் முடியும்" என்றார், அண்ணா.மேலும் அவர் எழுதிய 90 பக்க நாடக வசனங்களை சிவாஜியிடம் கொடுத்து, ``நான் வீட்டிற்குச் சென்று வருகிறேன். அதற்குள் இதை நீ படித்து வைத்திரு. எப்படிப் பேசுகிறாய் என்று பார்ப்போம்" என்று
    கூறிவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டார்.

    அவர் சிவாஜியிடம் வசனத்தை கொடுத்தபோது பகல் பதினோரு மணி இருக்கும். அண்ணா வீட்டிற்கு சென்று, மாலை ஆறு மணியளவில் திரும்பி, அலுவலகத்திற்கு வந்தார். ``கணேசா! வசனத்தைப் படித்தாயா?" என்று கேட்டார்.சிவாஜி அவரிடம், ``அண்ணா! நீங்கள் இப்படி
    உட்காருங்கள்!" என்று கூறி, அவர் எழுதிக்கொடுத்த வசனங்களைப் பேசி, அதற்குத் தகுந்தாற்போல் நடித்துக் காண்பித்தார். அண்ணா சிவாஜியை கட்டித்தழுவி ``கணேசா! நீ
    இதை ஏழே மணி நேரத்தில் மனப்பாடம் செய்து விட்டாயே! அரிய சாதனை" என்றார்.
    அண்ணா எழுதிய 90 பக்க வசனத்தை குறுகிய காலத்தில் படித்து, நடித்துக் காட்டினார் என்றால் அதற்கு சிவாஜியிடம் இருந்த கலை ஆர்வமும், மனப்பாடம் செய்வதில் அவருக்கு இருந்த ஆற்றலும்தான் காரணம்.

    திராவிட கழக மாநாட்டில், ``சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்" நாடகம் நடந்தது. இந்த நாடகத்தில் சிவாஜியாக சிவாஜி கணேசனும், காகபட்டர் வேடத்தில் அண்ணாவும் நடித்தனர்.

    பெரியார் பாராட்டு

    3 மணி நேரம் நடந்த நாடகத்தை, கடைசி வரை இருந்து பார்த்தார், பெரியார். ``நான் 10 மாநாடுகளில் சொல்லக்கூடிய கருத்துக்களை இந்த ஒரே நாடகத்தில் சொல்லிவிட்டார், அண்ணா" என்று பாராட்டினார்.அத்துடன், ``யாரோ ஒரு சின்னப்பையன் சிவாஜியாக
    நடித்தானே, அவன் யார்?" என்று கேட்டார். சிவாஜிகணேசனை பெரியார் முன் கொண்டுபோய் நிறுத்தி, ``இந்தப் பையன்தான். பெயர் கணேசன்" என்று அறிமுகம் செய்து வைத்தனர். ``சிவாஜியாக ரொம்ப நன்றாக நடித்தாய்! இன்று முதல் நீ கணேசன் அல்ல; சிவாஜி!" என்று பெரியார் வாழ்த்தினார். பெரியாரின் இந்த வாழ்த்து பெரிய பட்டமாக அமைந்து விட்டது. அதுவரை ``வி.சி.கணேசன்" என்று அழைக்கப்பட்டவர், அன்று முதல் ``சிவாஜி கணேசன்" ஆனார்.

    ``என்னுடைய வாழ்க்கையின் உயர்வுக்கு உறுதுணையாக இருந்தது சிவாஜி என்ற பெயர்!
    ஐயாவையும், அண்ணாவையும், அந்த மாநாட்டையும் நான் என்றுமே மறப்பதில்லை. அதற்குப்பிறகுதான் சாதாரண கணேசன், சிவாஜிகணேசன் ஆனேன். `சிவாஜி' என்ற பெயர், தந்தை பெரியார் அவர்கள் எனக்குப் போட்டபிச்சை" என்று சிவாஜிகணேசன் தன்
    வாழ்க்கை வரலாற்றில் குறிப்பிட்டுள்ளார்.

    ``பராசக்தி" வருவதற்கு முன்பே சிவாஜி கணேசன்
    திருமணம் சீர்திருத்த முறையில் நடந்தது
    (1-5-1952)

    நடிகர் சிவாஜி கணேசன் திருமணம், ``பராசக்தி" படம் வருவதற்கு சில மாதங்களுக்கு முன்பாக சுவாமி மலையில் நடந்தது. கே.ஆர்.ராமசாமி குழுவில் சிவாஜி நடிகர் கே.ஆர்.ராமசாமி தன் நாடகக் குழுவை தஞ்சாவூரில் தொடங்கினார். இந்த நாடக்குழுவில்,
    சிவாஜி கணேசனும் இடம் பெற்றார். ``மனோகரா" நாடகத்தில் கே.ஆர்.ராமசாமி மனோகரனாக நடித்தார். சிவாஜிகணேசன், மனோகரனின் தாயார் பத்மாவதியாக
    நடித்தார். இந்த சமயத்தில்தான் கே.ஆர்.ராமசாமிக்காக ``ஓர் இரவு" என்ற நாடகத்தை அண்ணா எழுதினார். ஒரே இரவில் நடைபெறும் சம்பவங்களைக் கொண்டு,
    கதையை புதுமையாக எழுதியிருந்தார். இந்த நாடகத்தில் சிவாஜி கணேசனும் நடிப்பதாக
    இருந்தது. ஆனால், நாடகக் குழுவைச் சேர்ந்த ஒருவருடன் ஏற்பட்ட கருத்து வேற்றுமையால், அவர் நாடகத்தில் நடிக்கவில்லை காஞ்சீபுரத்துக்கு சென்று, ``திராவிட நாடு" அலுவலகத்தில் தங்கிக் கொண்டு, அண்ணாவுக்கு உதவியாக இருந்தார். அண்ணா பொதுக்கூட்டங்களுக்குச் செல்லும்போது, சிவாஜியையும் தன்னுடன் அழைத்துச் செல்வார். மேடையில் பேசுவதற்கு பயிற்சி அளிப்பார்.

    சக்தி நாடகசபா

    இந்தக்காலக் கட்டத்தில், ``சக்தி நாடக சபா" என்ற நாடகக் குழுவினர் நாடகங்களை நடத்தி வந்தனர். தங்கவேலுபிள்ளை என்பவர் இந்த நாடகக் கம்பெனியின் உரிமையாளர். எனினும், ``சக்தி" கிருஷ்ணசாமியின் முழுப்பொறுப்பில் நாடக கம்பெனி நடந்து வந்தது.
    இந்த கம்பெனியில் முக்கிய நடிகர்களாக இருந்த எம்.என். நம்பியார், எஸ்.வி.சுப்பையா ஆகியோர் ஜுபிடர் பிக்சர்ஸ் தயாரித்த சினிமா படங்களில் நடிப்பதற்காக கோவை சென்று விட்டனர். எனவே, சக்தி நாடக சபைக்கு அனுபவம் மிக்க நடிகர்கள் தேவைப்பட்டனர்.
    சிவாஜியின் பால்ய நண்பரான கரந்தை சண்முக வடிவேலு சக்தி நாடகசபை சார்பில் காஞ்சீபுரம் வந்து, அண்ணாவை சந்தித்தார். ``சக்தி நாடக சபாவுக்கு நல்ல நடிகர்கள் தேவைப் படுகிறார்கள். நீங்கள் சிவாஜிகணேசனை அனுப்பி வைத்தால் உதவியாக இருக்கும்" என்று கூறினார்.

    அண்ணா சிறிது யோசித்தார். பிறகு சிவாஜி கணேசனை அழைத்து, ``கணேசா!நீ சக்தி நாடக சபாவுக்குப் போ. உன்னை எப்போது திரும்பக் கூப்பிட வேண்டுமோ அப்போது அழைத்துக் கொள்கிறேன்" என்றார். இதனால், அண்ணாவிடம் பிரியா விடை பெற்று சக்தி நாடக சபாவுக்கு சிவாஜி சென்றார். சக்தி நாடக சபை அப்போது திண்டுக்கல்லில் நாடகங்கள் நடத்திக் கொண்டிருந்தது. அந்தக் குழுவினர் சிவாஜிக்கு நல்ல மரியாதை கொடுத்தனர். முக்கிய வேடங்கள் அவருக்குக் கிடைத்தன.

    வேலூர் முகாம்

    திண்டுக்கல்லில் இருந்து பெங்களூர் சென்றுவிட்டு, வேலூர் சக்தி நாடகசபா முகாமிட்டது.
    அப்போது ``நூர்ஜஹான்" என்ற நாடகத்தில், நூர்ஜஹானாக சிவாஜி நடித்தார். அந்த நாடகத்தில் சிவாஜிக்கு வேஷப்பொருத்தம் பிரமாதமாக இருக்கும். அசல் நூர்ஜஹான் போலவே இருப்பார்; அழகாக நடனம் ஆடுவார்.

    ``நேஷனல் பிக்சர்ஸ்" பி.ஏ.பெருமாள், இந்த நாடகத்தைப் பார்த்தார். சிவாஜியின் நடிப்பு அவரை வெகுவாகக் கவர்ந்தது. ``எதிர்காலத்தில் மிகப்பெரிய நடிகராக சிவாஜி வருவார்" என்று நினைத்தார்.

    பராசக்தி

    இந்த சமயத்தில், தேவி நாடக சபையினர் ``பராசக்தி" என்ற நாடகத்தை நடத்தி வந்தனர். அந்த நாடகத்தை பெருமாள் முதலியார் பார்த்தார். அந்த நாடகத்தின் கதை அவருக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது.``பராசக்தி கதையை படமாகத் தயாரிக்க வேண்டும். அதில் சிவாஜி கணேசனை கதாநாயகனாக நடிக்க வைக்க வேண்டும்" என்று தீர்மானித்தார்.நினைத்ததை செயலில் காட்டினார். ``ஏவி.எம்." கூட்டுறவுடன் ``பராசக்தி"யை எடுத்து, தமிழ்ப்பட உலகுக்கு நடிப்பின் இமயத்தை அறிமுகம் செய்து வைத்தார். தனக்கு வாழ்வளித்த பெருமாள் முதலியாரை, கடைசி மூச்சு உள்ள வரை தெய்வமாகவே கருதினார், சிவாஜிகணேசன்.

    திருமணம்

    ``பராசக்தி"யில் நடித்துக் கொண்டிருந்தபோதே, சிவாஜி கணேசனுக்குத் திருமணம்நடந்து விட்டது. சொந்த அக்காள் மகள் கமலாவை அவர் மணந்தார்.பெரியவர்களால் முடிவு செய்யப்பட்ட இத்திருமணம், சுவாமிமலையில் 1952 மே 1-ந் தேதி நடைபெற்றது.
    சீர்திருத்த முறைப்படி எளிமையாக இத்திருமணம் நடந்தது. திருமணத்துக்கு மு.கருணாநிதி, எம்.ஜி. ஆர்., நேஷனல் பிக்சர்ஸ் அதிபர் பெருமாள் முதலியார், கவிஞர் கண்ணதாசன், அரங்கண்ணல், டி.ஏ. மதுரம், எஸ்.வி. சகஸ்ரநாமம், டைரக்டர்கள் கிருஷ்ணன்-
    பஞ்சு ஆகியோர் வந்திருந்தனர்.

    திருச்சியில் தமிழாசிரியராக இருந்த ரத்தினம் பிள்ளை, திருக்குறளைப்படித்து திருமணத்தை நடத்தி வைத்தார். கண்ணதாசன் மாலையை எடுத்துக் கொடுக்க அதை மணமகளுக்கு அணிவித்தார், சிவாஜி. பின்னர் தாலி கட்டினார். மணமக்களை கண்ணதாசன் வாழ்த்தி
    பேசினார். ஓட்டலில் இருந்து எடுத்து வந்த சாப்பாடு அனைவருக்கும் பரிமாறப்பட்டது.
    ``என்னுடைய கல்யாணச் செலவு 500 ரூபாய்தான்" என்று சிவாஜி கூறியுள்ளார்.
    (இப்படி தான் திருமணம் செய்து கொண்டதால் வருத்தப்பட்ட சிவாஜி தனது தம்பி சண்முகத்தின் திருமணத்திற்கு 100 புரோகிதர்களை வைத்து ஆச்சாரப்படி நடத்தினார்)
    கோடம்பாக்கத்தில்

    திருமணத்துக்குப் பிறகு சென்னை கோடம்பாக்கத்தில் வீடு பார்த்து, மனைவியுடன் குடியேறினார், சிவாஜிகணேசன். சில நாட்கள் கழித்து ராயப்பேட்டை பெசன்ட்
    ரோட்டுக்கு குடிபோனார். அங்குதான் இப்போது சிவாஜி பிலிம்ஸ் அலுவலகம் இருக்கிறது.
    சிவாஜி- பத்மினி ஜோடியாக நடித்த முதல் படம் ``பணம்" ``பராசக்தி"யை அடுத்து சிவாஜி கணேசன் நடித்து வெளிவந்த படம் ``பணம்". இதில் சிவாஜி கணேசனும், பத்மினியும் முதன் முதலாக ஜோடி சேர்ந்தனர். ``பராசக்தி"யில் சிவாஜிகணேசன் நடித்துக் கொண்டிருந்த போதே வேறு சில படவாய்ப்புகள் வந்தன.
    நனறி மாலை மலர்
    Yours truly

  5. #1774
    Senior Member Devoted Hubber
    Join Date
    Jun 2007
    Location
    Chennai
    Posts
    287
    Post Thanks / Like
    Yours truly

  6. #1775
    Senior Member Devoted Hubber
    Join Date
    Jun 2007
    Location
    Chennai
    Posts
    287
    Post Thanks / Like

    They were intimate friends. Let us emulate them

    சிவாஜி மூன்று வேடங்களில் நடித்த படம் "தெய்வ மகன்'. சிறப்பான கதை, நடிப்பு, படமாக்கம் இருக்கிறதென்று அதை ஆஸ்கர் விருதுக்காக அனுப்பி வைத்தனர். அதை கண்டித்தார் எம்.ஜி.ஆர்., "அனுப்பிய முறை சரியில்லை' என்று விமர்சித்தார். எம்.ஜி.ஆரும், சிவாஜியும் சினிமாவிலும், அரசியலிலும் கடுமையாக மோதிக் கொண்ட நேரம் அது. எம்.ஜி.ஆரின் கண்டனம் பற்றி சிவாஜியிடம் கருத்து கேட்ட போது, "தெய்வமகன்' படத்தைப் பற்றி எம்.ஜி.ஆர்., குறை சொல்லவில்லையே! படத்தை ஆஸ்கருக்கு அனுப்பியது பற்றி விமர்சித்திருக்கிறார். அது அவரது கருத்து!' என்று பதிலளித்தார். இந்தப் பிரச்னை மூலமாக இருவருக்கும் மோதல் வளரும் என்று எதிர்பார்த்தவர்கள் ஏமாந்து போயினர்.

    எம்.ஜி.ஆர்., சிவாஜி இருவரும் போட்டி போட்டதைப் போல, மோதிக் கொண்டது போல வேறெங்கும் பார்த்திருக்க முடியாது அவர்களைப் போல் நட்பு கொண்டவர்களையும் காண முடியாது.

    சிவாஜி உற்சாகமாக இருக்கும் போது, எம்.ஜி.ஆரை அண்ணன் என்றே கூறுவார். எம்.ஜி.ஆரும், "தம்பி சிவாஜி' என்றே சொல்வார். இருவரையும் நட்பு ரீதியாக இணைப்பதற்கு அவர்கள் நாடக உலகிலிருந்து வந்தவர்கள் என்ற ஒரு விஷயம் அடித்தளமாக இருந்தது. இன்னொன்று இருவரிடமும் இருந்த அளவில்லாத தாய் பாசம்.

    சிவாஜிக்கு எம்.ஜி.ஆரின் ராமாபுரம் தோட்டத்திற்கு எதிரிலேயே ஒரு தோட்டம் உண்டு. அதை சிவாஜி தோட்டம் என்பர். இங்கு நிறைய திரைப்படங்களின் படப்பிடிப்பு நடந்திருக்கிறது. வயல்வெளி, தோட்டம், ஓய்வெடுக்க வசதியுள்ள வீடு என்றிருந்த இந்த இடத்தில் சிவாஜி, தன் தாயார் நினைவாக சிலை ஒன்றை எழுப்பினார். அந்த சிலையை, அன்றைக்கு தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். திறந்து வைக்க வேண்டுமென்று விரும்பினார்.

    ஆடம்பரமில்லாத அந்த எளிய நிகழ்ச்சியில் சிவாஜி குடும்பத்தினர், எம்.ஜி.ஆர். குடும்பத்தினர் கலந்து கொண்டனர். திரையுலகிலிருந்து தயா ரிப்பாளர், நடிகர் பாலாஜி மட்டுமே அழைக்கப்பட்டிருந்தார். சிவாஜி காங்கிரசில் தீவிரமாக இருந்த நேரம் அது என்றாலும், தான் சார்ந்த கட்சியிலிருந்து அவர் யாரையும் அழைக்கவில்லை.

    இதற்கு முன் தஞ்சாவூரில் சாந்தி, கமலா என்ற இரு திரையரங்குகளை சிவாஜி கட்டி முடித்ததும், அதைத் திறந்து வைக்க முதல்வர் எம்.ஜி. ஆரைத் தான் அழைத்தார். அப்போது முன்னாள் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமனும் கலந்து கொண்டார். அன்றைக்கு சிவாஜி காங்கிரசில் இருந்தாலும் வேறு முக்கிய பிரமுகர்களை அழைக்கவில்லை. இரு தியேட்டர்களையும் திறந்து வைத்துப் பேசிய எம்.ஜி.ஆர்., சிவாஜியின் பெயரில் ஒரு தியேட்டர் எழுப்பப்படவேண்டும். அதையும் நானே திறந்து வைப்பேன்...' என்றார்.

    எம்.ஜி.ஆரின் மறைவிற்கு பின் சிவாஜி நடித்த 275வது படம் "புதிய வானம்' இது ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவிஸ் தயாரித்த படம். சிவாஜியுடன், சத்யராஜ் இன்னொரு நாயகன்.

    படத்தில் சிவாஜி, சத்யராஜ் இருவரும் பாடுவதாக ஒரு பாடல் சொல்கிறேன். புதுப்பாடம் சொல்கிறேன்...' என்ற காட்சி உண்டு. சத்யராஜின் குழந்தைகளுக்கு சிவாஜி புத்தி கூறுவதான பாடல் அது.

    அந்தப் பாடலில், "எளிமையும், மனப் பொறுமையும் புரட்சி தலைவராக்கும் உன்னை...' என்ற வரிகள் வரும்.


    எம்.ஜி.ஆரைக் குறிப்பது என்பதால் நாம்தான் வாயசைத்து நடிக்கப் போகிறோம் என்று சத்யராஜ் நினைத்திருக்கிறார். ஆனால், படப்பிடிப்பிற்கு சென்றபோது தான் அந்த வரிகள் சிவாஜிக்கானது என்று இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் கூறியிருக்கிறார்.

    இதை அறிந்த சிவாஜி முதலில் தயங்கினார், "நான் அண்ணனைப் பற்றிப் பாடினால் ரசிகர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்களோ?' என்று. உதயகுமார் அதற்கு, "எம்.ஜி.ஆர். அமரரான பின் எல்லாருக்கும் பொதுவானவராகிவிட்டார். உங்களுக்கு எந்த சங்கடமும் வேண்டாம்...' என்று விளக்கம் கூறியிருக்கிறார். சொல்கிற விதமாகச் சொன்னால் எந்த ஒரு இயக்குனரின் சொல்லையும் சிவாஜி மீற மாட்டார். சரியென்று நடிக்கத் தயாரானார்.

    சத்யராஜை அழைத்த சிவாஜி, "நீ தான் அண்ணன் (எம்.ஜி.ஆர்.) மாதிரி நிறைய பண்ணியிருக்கியே. நான் எப்படி நடிக்கணும்ன்னு நடிச்சுக் காட்டு...' என்றார்.

    அதற்கு சத்யராஜ் "என்னங்கப்பா (சிவாஜியை அப்பா என்றழைப்பார்) உங்களுக்குப் போய் நடிச்சுக் காட்டச் சொல்றீங்களே?' என்று நெளிந்தார்.

    சிவாஜியோ, நீ நடிச்சுக் காட்டினா தான் நான் நடிப்பேன்...' என்றார். இது சிவாஜியின் குறும்புத்தனம்.

    சத்யராஜ், எம்.ஜி.ஆர். ஸ்டைலில் நடித்துக் காட்ட, அதை ரசித்தார் சிவாஜி. ஆனால், அவர், தனது பாணியிலேயே அந்தப் பாடல் காட்சியில் வாயசைத்து நடித்து முடித்தார்.

    எம்.ஜி.ஆர். அமெரிக்காவில் புரூக்ளின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது, அவரைக் காணச் சென்றவர்களில் சிவாஜியும் ஒருவர். சிவாஜியைக் கண்டதும் கட்டிப்பிடித்து கதறி அழுதுவிட்டார் எம்.ஜி. ஆரின் நிலையைப் பார்த்ததும் சிவாஜியும் அழுது விட்டார். நீண்ட நேரம் அவர்கள் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களைத் தவிர வேறு யாரும் அருகில் இல்லை. சிவாஜியிடம் ரகசியம் ஒன்றைச் சொன்ன எம்.ஜி.ஆர்., ஒரு கடிதமும் கொடுத்தார். அதை சிவாஜி கடைசி வரை யாரிடமும் கூறவில்லை. கடித விஷயங்களை வெளிப்படுத்தவுமில்லை. இரு திலகங்களுக்குள்ளும் உறைந்து போன விஷயம் அது.

    இதற்குப் பின் எம்.ஜி.ஆர்., கடைசி முறையாக சிகிச்சைக்காக அமெரிக்கா செல்வதற்கு முன், இலங்கை தமிழர்களைக் காக்கும் பொருட்டு இந்திய இலங்கை ஒப்பந்தம் ஏற்படுத்தியமைக்காக, பிரதமர் ராஜீவ் காந்திக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஆகஸ்ட், 2,1987ல் சென்னை கடற்கரையில் பெரும் கூட்டமொன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட எம்.ஜி.ஆர்., கீழே பார்வையாளர் வரிசையில் சிவாஜி அமர்ந்திருப்பதைக் கண்டார். சிவாஜி தயங்கினாலும் அவரை மேடைக்கு வரவழைத்து அமர வைத்தார். அப்போது சிவாஜிக்குத் தன் அன்பைத் தெரிவிக்கும் வகையில் அவர் கன்னத்தில் எம்.ஜி.ஆர்., முத்தமிட்டபோது, கூட்டம் முழுவதுமே ஆர்ப்பரித்தது.

    டிச., 5,1987ல் அன்று எம்.ஜி. ஆர்., வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற "ஜல்லிக்கட்டு' 100வது நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு படத்தில் பங்கு பெற்ற கலைஞர்களுக்கு கேடயம் வழங்கினார். எம்.ஜி.ஆர். கடைசியாக பங்கேற்ற திரையுலக நிகழ்ச்சி அது. சிவாஜி நடித்த படமொன்றுக்கு எம்.ஜி.ஆர். கேடயம் வழங்கி மகிழ்ந்த முதலும், கடைசியுமான நிகழ்ச்சி அது.

    மலையாளத்தில் சிவாஜி நடித்த சினிமாஸ்கோப் படம் "தச்சோளி அம்பு' பிரேம் நசீர், தீபா நடித்த இதில் சிவாஜி ஜோடியாக கே.ஆர். விஜயா நடித்தார். அதன் படப்பிடிப்பு கேரள மாநிலம் இடுக்கி அருகே நடைபெற்றது. ஒரு சண்டைக் காட்சியின் போது சிவாஜி தவறி விழுந்து வலது கை மணிக்கட்டுக்கு கீழே எலும்பு முறிவு ஏற்பட்டது. அதற்கு அறுவை சிகிச்சை நடந்த போது, முறிந்த எலும்பை இணைக்கும் வகையில் தகடு பொருத்தப்பட்டது. (அந்தத் தகடுதான் சிவாஜி உடல் எரியூட்டப்பட்டபின் கிடைத்ததாகும்.)

    சிவாஜி குணமாகிய பின், "தச்சோளி அம்பு' படப்பிடிப்பில் மீண்டும் கலந்து கொண்டார். படப்பிடிப்பு தொடங்கிய இடம் சத்யா ஸ்டுடியோ. இந்த ஸ்டுடியோ ஜூபிடர் பிக்சர்ஸ் வசம் இருந்த போது "மனோகரா'விலிருந்து, "பாசமலர்' வரை பல சிவாஜி படங்களின் படப்பிடிப்பு நடைபெற்றது. ஸ்டுடியோவை எம்.ஜி.ஆர். வாங்கிய பின் சிவாஜி படங்களின் படப்பிடிப்பு எதுவும் நடைபெறவில்லை. அங்கு நடந்த எம்.ஜி.ஆர்., குடும்ப திருமண நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே சிவாஜி வந்து போனார்.

    பல வருடங்களுக்குப்பின், "தச்சோளி அம்பு' படப்பிடிப்பு சத்யா ஸ்டுயோவில் துவங்கிய போது எம்.ஜி.ஆர்., தமிழக முதல்வராக இருந்தார். சிவாஜி ஒப்பனையோடு படப்பிடிப்புக்கு வந்தார் ஸ்டுடியோ நிர்வாகி பத்மநாபன், துணை நிர்வாகி ஹரி (எம்.ஜி.ஆர்., மேக்கப்மேன் ராமதாஸின் மகன்) உட்பட ஸ்டுடியோ பணியாளர்கள் அனைவரும் சேர்ந்து பத்தாயிரம் ரோஜாப் பூக்களைக் கொண்ட மிகப்பெரிய மாலையொன்றை சிவாஜிக்கு அணிவித்து வரவேற்றனர். எம்.ஜி.ஆரின் உத்தரவின் பேரில், அவரது பிரத்யேக ஒப்பனை அறையை சிவாஜி பயன்படுத்திக் கொள்ளச் செய்தனர். அதற்கு முன் வேறு யாரும் எம்.ஜி. ஆரின் ஒப்பனை அறையை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டதில்லை.

    இதற்குப் பின் சிவாஜி தன்னுடைய சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பான திரிசூலம், ரத்தபாசம், சந்திப்பு, வா கண்ண வா போன்ற படங்களின் படப்பிடிப்பை சத்யாவில் வைத்துக் கொண்டார்.

    அப்படி படப்பிடிப்பு நடத்திய போது ஸ்டுடியோ பணியாளர்களை எம்.ஜி.ஆர்., நடத்திய விதம், தினந்தோறும் அசைவ உணவு பரிமாறியது பற்றியெல்லாம் அறிந்த சிவாஜி, தன் படங்களில் பணியாற்றியவர்களுக்கும் தினசரி அசைவ உணவு பரிமாறச் செய்தார்.

    இதிலிருந்து சத்யா ஸ்டுடியோ நிர்வாகிகள் ஹரி, சந்திரனிலிருந்து பலரும் சிவாஜி குடும்பத்திற்கு நெருக்கமாகி விட்டனர்.

    Thnaksinamalar...
    Yours truly

  7. #1776
    Senior Member Devoted Hubber
    Join Date
    Jun 2007
    Location
    Chennai
    Posts
    287
    Post Thanks / Like
    `எம்.ஜி.ஆர். என்னை நேசித்தார்! நான் அவரை நேசித்தேன்!'- சிவாஜி வெளியிட்ட அபூர்வத் தகவல்கள் வெள்ளிக்கிழமை, பெப்ரவரி 19, 11:15 am ist
    எம்.ஜி.ஆரும், சிவாஜிகணேசனும் இரு துருவங்களைப் போன்றவர்கள் என்று அவர்களுடைய ரசிகர்கள் எண்ணினார்கள். ஆனால், இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். "நாங்கள் விரோதிகள் அல்ல; நண்பர்கள்" என்று இருவரும் வெவ்வேறு நிகழ்ச்சிகளில் பேசியிருக்கிறார்கள்.

    சிவாஜிகணேசன் வாழ்க்கை வரலாறு "எனது சுயசரிதை" என்ற பெயரில் புத்தகமாக வெளிவந்துள்ளது.

    சென்னை தொலைக்காட்சியில் பல ஆண்டுகள் தயாரிப்பாளராகப் பணிபுரிந்து, பின்னர் உலகக் குழந்தைகள் நல நிறுவனத்தில் ("ïனிசெப்") தகவல் தொடர்பு அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற டாக்டர் டி.எஸ்.நாராயணசாமி, சிவாஜியுடன் பல ஆண்டுகள் பழகி, சிவாஜியிடம் கேள்விகள் கேட்டு, அதற்கு பதில்களைப் பெற்று இந்நூலை உருவாக்கியுள்ளார். கேள்வி_ பதில் ரூபத்தில் இந்த நூல் அமைந்துள்ளது.

    சிவாஜியின் மகன்களான ராம்குமார், பிரபு, சிவாஜியின் தம்பி மகன் கிரிசண்முகம் ஆகியோரைக் கொண்ட "சிவாஜி பிரபு சாரிட்டிஸ் டிரஸ்ட்" இந்த நூலை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் கிடைக்கும் வருமானம் கல்விப் பணிக்கு செலவிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    எம்.ஜி.ஆருடன் இருந்த நட்பு பற்றி சிவாஜிகணேசன் தன் சுய சரிதையில் மனம் விட்டுக் கூறியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

    சின்னப் பிள்ளையிலிருந்தே எம்.ஜி. ஆரும் நானும் நெருங்கிய நண்பர்கள். என் வீட்டிற்கு அவர் வருவதும், அவர் வீட்டிற்கு நான் செல்வதும், என் தாயார் கையால் அவர் சாப்பிடுவதும், அவர் தாயார் கையால் நான் சாப்பிடுவதும் சகஜம். ஒரு கதை மாதிரி எங்கள் நட்பின் வரலாற்றைச் சொல்கிறேன்.

    இரண்டாம் உலகப்போர் முடிந்த சமயம். 1943_44_ல் நான் சென்டிரல் ஸ்டேஷன் பக்கத்திலுள்ள, ஒற்றைவாடை தியேட்டர் அருகில்தான் குடியிருந்தேன்.

    `லட்சுமிகாந்தன்' நாடகமெல்லாம் நடத்தினோமே அந்த நேரத்தில், எனது வீட்டுக்குப் பக்கத்தில்தான் எம்.ஜி.ஆர், அவரது தாயார், சகோதரர் எம்.ஜி.சக்ரபாணி ஆகியோர் குடியிருந்தனர். அப்போதுதான் எம்.ஜி.ஆர். அவர்கள் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார்கள்.

    நானும் என்னுடைய நண்பர் காகா ராதாகிருஷ்ணனும் அவர் வீட்டுக்கு அடிக்கடி செல்வோம். அனேகமாக சாப்பாட்டு நேரத்தில் அங்கேயே இருப்போம். எம்.ஜி.ஆர். "பசிக்கிறது" என்றாலும், "இருப்பா! கணேசன் வரட்டும்" என்பார்கள், அவருடைய அம்மா. அந்த அளவுக்கு அவர்களுக்கு என்மேல் பாசம்.

    எம்.ஜி.ஆர். அவர்கள் இரவு நேரத்தில் என்னையும், ராதாகிருஷ்ணனையும் டவுனுக்குப் பக்கத்திலுள்ள தியேட்டருக்கு சினிமா பார்க்கக் கூட்டிச்செல்வார். திரும்பி வரும்போது, சப்பாத்தி, பால் போன்றவைகளைச் சாப்பிடுவோம். எல்லோருக்கும் அவர்தான் செலவு செய்வார். அதுபோல நீண்ட நாட்கள் இருந்தோம். பிறகு நான் காஞ்சீபுரம் சென்று அண்ணாவுடன் சேர்ந்துவிட்டேன்.

    அண்ணாவின் "சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்" என்ற நாடகத்தில் முதலில் எம்.ஜி.ஆர். நடிப்பதாக இருந்தது. அவர் என்ன காரணத்தினாலோ நடிக்கவில்லை. அண்ணா என்னைத் தேர்ந்தெடுத்தார். நான் நடித்தேன். மறுபடியும் எங்களுக்குள் பிரிவு ஏற்பட்டது. சில வருடங்கள் கழித்து நான் சினிமாவில் சேரும்போது, எம்.ஜி.ஆரைச் சந்தித்தேன்.

    ஒரே காலக்கட்டத்தில் இருவரும் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தோம். அதே சமயத்தில் இருவரும் அரசியலிலும் ஈடுபட்டிருந்தோம். ஒரே உறையில் இரண்டு கத்திகள் இருக்க முடியுமா? நாங்கள் இருவரும் ஒரே இடத்தில் இருந்தால், இருவருக்கும் ஒரே ரசிகர்கள்தான் இருப்பார்கள். நாங்கள் இருவரும் தனித்தனியே செயல்பட்டதால் அவருக்கு வேறு ரசிகர்கள், எனக்கு வேறு ரசிகர்கள் இருந்தார்கள்.

    என்னை அவர் விமர்சிப்பார், அவரை நான் விமர்சிப்பேன். அது அரசியல் பற்றித்தான். பர்சனலாக ஒன்றுமில்லை. பலர் இதை வைத்துக்கொண்டு நாங்கள் இருவரும் விரோதிகள் என்று பேசிக்கொண்டார்கள். அதைப் பற்றி நாங்கள் இருவருமே கவலைப்படவில்லை.

    பல வருடங்கள் சென்றபின் அவர் முதல்_மந்திரியானார். அவர் பதவியிலிருந்தபோது, பல முறை நான் சந்தித்திருக்கிறேன். அவரும் பல சம்பவங்களுக்கும், நிகழ்ச்சிகளுக்கும் வந்திருக்கிறார். அவர் கையால் அவார்டுகள் வாங்கியிருக்கிறேன். எனக்கும் அவருக்கும் உள்ள நட்பு என்றும் மாறவில்லை.

    எனக்கு சென்னையில் ஒரு தோட்டம் இருக்கிறது. அதுவும் எம்.ஜி.ஆரின் தோட்டத்திற்கு பக்கத்திலேயே இருக்கிறது. என் தாயார் மறைந்த பிறகு அவர்கள் நினைவாக என் தோட்டத்தில், என் தாயாரின் உருவச்சிலையைத் திறப்பதற்கு வரவேண்டுமென்று எம்.ஜி.ஆருக்குச் சொல்லியனுப்பினேன். உடனே ஒத்துக்கொண்டு, தன் மனைவியுடன் வந்து, எனது தாயார் சிலையைத் திறந்து வைத்தார்.

    தனது தாயைப்போல் கருதிய என் அம்மாவின் உருவச்சிலையைத் திறந்து வைத்ததில், அவர் மகிழ்ச்சியடைந்தார்.

    இதேபோல் மற்றொரு சம்பவம் நிகழ்ந்தது. தஞ்சாவூரில் எனக்கு சாந்தி _கமலா என்றொரு தியேட்டர் இருந்தது. இப்போது இல்லை. அந்த தியேட்டர் திறப்பு விழாவின்போதும் `நானே வந்து திறக்கிறேன்' என்று சொல்லியனுப்பினார். தஞ்சாவூர் வந்து அந்தத் தியேட்டரைத் திறந்தார். எனக்கும் அவருக்கும் நட்பும், உறவும் இல்லையென்றால், இவையெல்லாம் நடந்திருக்குமா?

    அதுமட்டுமில்லை ஒரு சமயம் அவருக்கு உடல் நிலை சரியில்லாமல் போன பிறகு, நான் இந்திரா காந்தியுடன் போய், எம்.ஜி.ஆரைப் பார்த்துவிட்டு வந்தேன். அதன் பிறகு, எம்.ஜி.ஆர். டெல்லியில் இருந்து எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். `நான் அமெரிக்கா செல்கிறேன். அங்கு வந்து என்னைப்பார்' என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.

    உடனே நான் என் மனைவியை அழைத்துக்கொண்டு, நேராக நியூஜெர்சி சென்று இறங்கினேன். அங்கிருந்து பால்டிமோர் புறப்பட்டோம். என்னை வரவேற்க எம்.ஜி.ஆர். பால்டிமோர் ஏர்ப்போர்ட்டில், ஐம்பது பேரை நிறுத்தியிருந்தார். அதில்தான் பழனி பெரியசாமி, டாக்டர் பி.ராமமூர்த்தி ஆகியோர் இருந்தார்கள். என்னை அழைத்துக்கொண்டு சென்றார்கள். நேராக பால்டிமோர் மருத்துவமனைக்குச் சென்றோம். தொப்பி, கண்ணாடி இல்லாமல் ஒரு போர்வை மட்டும் போர்த்திக்கொண்டு படுத்திருந்தார், எம்.ஜி.ஆர்.

    உள்ளே சென்றவுடன், அப்படியே படுக்கையில் இருந்து எழுந்து, கையை நீட்டினார். ராமாயணத்தில் ராமன் பரதனைச் சந்தித்தது போன்ற சம்பவம் இது. அவர் ராமச்சந்திரன், நான் பரதன். அவர் கையை நீட்டி வரவேற்றார்.

    ஓடிச்சென்று இருவரும் கட்டிப்பிடித்துக்கொண்டு அழுதோம். அந்த நேரத்தில் அவரது மனைவி ஜானகி அம்மாவுக்கு "பைபாஸ் சர்ஜரி" செய்திருந்தார்கள். இருவரும் ஒரே ரூமில்தான் இருந்தார்கள்.

    அவர்கள் கமலாவை கட்டிப்பிடித்துக்கொண்டு அழ, நான் எம்.ஜி.ஆர்ரை கட்டிப்பிடித்துக்கொண்டு அழ, கடைசியில் ஜானகி அம்மா கண்களைத் துடைத்துக்கொண்டு, "என்ன சின்னப் பிள்ளைபோல் அழுதுகொண்டு இருக்கிறீர்கள். இருப்பது கொஞ்ச நேரம்தான். சிவாஜி ஊருக்குச் செல்ல வேண்டுமல்லவா? கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருங்கள்" என்று எம்.ஜி.ஆரிடம் கூறினார்கள்.

    அதன்பின் நிறைய பேசிக்கொண்டிருந்தோம். நாட்டையும், நாட்டு மக்கள் நலத்தைப் பற்றியும் பேசினோம். "அண்ணே! தயவு செய்து என்னிடம் மட்டும் ஒரு உண்மையைச் சொல்லுங்கள். உங்களுக்கு உடல் நிலை எப்படி இருக்கிறது? டாக்டர்கள் என்ன சொல்கிறார்கள்?" என்று கேட்டேன். அவர் உதட்டைப் பிதுக்கி, தலையாட்டினார்.

    உடல் நிலை சரியாகாதென்று முதலிலேயே அவருக்குத் தெரிந்துவிட்டது போலும். உடனே நான் `ஓ..." என்று அழுது கொண்டு, வெளியே ஓடிவந்துவிட்டேன். வெளியே வந்தவுடன், ராமமூர்த்தி போன்றவர்களெல்லாம் என்னைப் பிடித்துக் கொண்டார்கள்.

    கமலாவும் அறையை விட்டு, வெளியே வருவதற்கு எழுந்த பொழுது, எம்.ஜி.ஆர். கமலாவின் கையைப் பிடித்து, பக்கத்தில் உட்கார வைத்தார். தட்டுத் தடுமாறி ஏதோ ஒரு விஷயத்தை சொல்வதற்கு முயற்சி செய்தார்.

    அவரால் சரளமாக பேசமுடியவில்லை. இருந்தாலும் சில சைகைகள் காட்டி ஒரு சில வார்த்தைகளால், சொல்ல விரும்பியதை அவரால் சொல்ல முடிந்தது.

    "இந்தப்பையன் என்னைப்போலவே முன்கோபக்காரன். கோபித்துக் கொள்ளும்படி விடாதே! அவன் கண்டதைச் சாப்பிடுவான். முதலில் அதிகமாக உப்புக் கொடுக்காதே. சொல்லப்போனால் அவனைப்போல ஆப்பமும், கருவாட்டுக் குழம்பும் எனக்கும் அதிகப்பிரியம். அதை அடிக்கடி கொடுக்காதே. அதை நிறையச் சாப்பிட்டுத்தான் இந்த நிலைமை எனக்கு" என்று கமலாவிடம் சொல்லியிருக்கிறார். "கணேசனுக்குப் பிறந்த நாள் வரும்போது, வாழ்த்துச்செய்தி அனுப்புகிறேன்" என்றும் கூறியிருக்கிறார்.

    நானும் கமலாவும் வெளியில் வந்து நண்பர் ஒருவர் வீட்டில் சாப்பிட்டு விட்டு, விமானம் ஏறி இந்தியா வந்துவிட்டோம். அவர் கூறியபடியே பிறந்த நாள் வாழ்த்து அனுப்பினார்.

    எம்.ஜி.ஆரும் ஓரளவு உடம்பு சரியாகி இந்தியா வந்துவிட்டார். இதன்பின் ஒரு சம்பவம் நடந்தது. அப்போது ஆர்.வெங்கட்ராமன் இந்திய ஜனாதிபதியாக இருந்தார். ஆர்.வி.யுடன் டெல்லியில் பல நாட்கள் இருந்திருக்கிறேன். சென்னையில் ஒரு விழாவுக்காக ஜனாதிபதி வந்திருந்தார். அப்போதைய நம்முடைய முதல்_அமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களும் அழைக்கப்பட்டிருந்தார்கள். நானும் சென்றிருந்தேன்.

    கவர்னர் பக்கத்தில் எம்.ஜி.ஆர். உட்கார்ந்திருந்தார். அப்போது எம்.ஜி.ஆர். என்னைக் கூப்பிட்டு "இங்கே வா! பக்கத்தில் உட்கார்" என்றார். நான் தயங்கினேன். உடனே என் கையைப் பிடித்து தன் அருகில் உட்கார வைத்துக்கொண்டார்.

    `ஜனாதிபதி இன்னும் பத்து நாட்களில் ஒரு மருத்துவமனையைத் திறக்க இங்கு வரப்போகிறார். அவர் வந்து சென்றவுடன், நீ வா. உன்னிடம் ஒரு பெரிய பொறுப்பை ஒப்படைக்கவேண்டும்' என்று மெதுவாக சைகைகள் காட்டி விளக்கிச் சொன்னார். வீட்டிற்கு சென்றதும் என் மனைவியிடம் அண்ணன் எம்.ஜி.ஆர். இப்படி கூறினாரென்று சொன்னேன்.

    "இருவருமே சேர்ந்து அவரைப் பார்க்கப் போகலாம்" என்று நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால் அந்த மருத்துவமனை திறப்பு விழாவிற்கு ஜனாதிபதி வருவதற்கு முன்பாகவே அண்ணன் எம்.ஜி.ஆர். அமரராகிவிட்டார். என்னிடம் பேசிய நாலைந்து நாட்களில் அவர் மறைந்து விட்டார். அதன்பின் என்ன செய்யமுடியும்? எல்லாம் இறைவன் செயல். அவர் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்தித்தோம்.

    குடும்ப துக்கம் விசாரிக்க வேண்டுமல்லவா? அதற்காக இரண்டு நாட்கள் கழித்து அவரது தோட்டத்திற்குச் சென்றேன். ஜானகி அம்மாளைப் பார்த்து துக்கம் விசாரித்தேன். அவர்கள் "என் தம்பி கணேசன் வீட்டிற்கு வரப்போகிறான். அவனிடம் ஒரு முக்கியமான விஷயம் பேசப்போகிறேன். அவனுக்குப் பிடித்த ஆப்பம், கருவாட்டுக் குழம்பு செய்து வை' என்று உங்கள் அண்ணன் கூறினாரே. ஆனால் உங்களிடம் பேசாமலே சென்றுவிட்டாரே!" என்று வருத்தத்தோடு கூறி அழுதார்கள். என்ன செய்வது? எம்.ஜி.ஆர். வாழ்வாங்கு வாழ்ந்து கடவுளாகி விட்டார்.

    அவரைப்பற்றி சொல்வதில் எனக்குப் பெருமை உண்டு. ஏனென்றால், அவர் என்னை உண்மையாக நேசித்தார். நானும் அவரை நேசித்தேன். அவரது வாழ்க்கை வரலாற்றில் சில கட்டங்களில் நானும் ஒரு முக்கிய பாத்திரமாக இருந்தேன். எம்.ஜி.ஆர். அவர்கள் அன்றும் இன்றும் என்றும் என்னுடைய மனதில் ஒரு நல்ல நண்பராக நிறைந்திருக்கிறார்."
    Yours truly

  8. #1777
    Senior Member Devoted Hubber
    Join Date
    Jun 2007
    Location
    Chennai
    Posts
    287
    Post Thanks / Like

    A tribute to the giant

    சரவணா பிலிம்ஸ் அதிபர் ஜி.என்.வேலுமணி தமிழ்ப் படவுலகில் சிவாஜி, எம்.ஜி.ஆர் போன்ற பெரிய நடிகர்களை வைத்து பாலும் பழமும், மாட்டுக்கார வேலனை ஒத்த பல வெற்றிப் படங்களைத் தயாரித்தவர். அதே காலகட்டத்தில் எங்கள் டைரக்டர் பாலசந்தரும் பெரும் நடிகர்கள் இல்லாமல் பல வெற்றிப் படங்களைக் கொடுத்து வந்தார்.


    வேலுமணிக்கு ஓர் எண்ணம் எழுந்தது. சிறிய நடிகர்களை வைத்தே பாலசந்தரால் சிறந்த படங்களைக் கொடுக்க முடிகிறதென்றால், ஏன் சிவாஜியையும், பாலசந்தரையும் இணைத்து ஒரு படத்தை எடுத்தால், அது எவ்வளவு பெரிய வெற்றியைக் கொடுக்கும் என வியாபாரக் கணக்கைப் போட்டார். அதற்கான முயற்சியை எடுத்து இருவரையும் இணைத்தார். அந்தப் படம்தான் 'எதிரொலி'. அந்தப் படத்தில் பணியாற்றக் கூடிய வாய்ப்பை நான் பெற்றதால்தான் சிவாஜிகணேசனுடன் பழகக் கூடிய, அவரைப் புரிந்து கொள்ளக் கூடிய, அறிந்து கொள்ளக்கூடிய சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது.

    சிவாஜியும், இயக்குநர் சிகரத்துடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்கிற தாகத்தை இப்படத்தின் வாயிலாகத் தணித்துக் கொண்டார். கதையைச் சொல்ல, நடிகர் திலகத்திடம் டைரக்டர் சென்றார். ' பாலு! முழுக்கதையையும் ஏன் சொல்றீங்க. தேவையில்லை. சும்மா அவுட் லைன் மட்டும் சொன்னா போதும். உங்களுக்குத் தெரியும் எப்படி ஒரு சிறந்த படத்தை உருவாக்க வேண்டுமென்று. அதில் நீங்கள் வெற்றியும் பெற்று வருகிறீர்கள்; நான் உங்கள் மீது நம்பிக்கையுடன் இருக்கிறேன்' என்று சுருக்கமாகக் கதையைக் கேட்டுக் கொண்டார்.

    இதில் என்ன சோகம் என்றால் எதிரொலி வணிக ரீதியாகப் பெரிய வெற்றியைத் தர வில்லை. சிவாஜி மக்கள் மனத்தில் நற்பெயருடன் நிலைகொண்ட நடிகர். கதைப்பாத்திரப்படி வழக்குரைஞர்; சந்தர்ப்பத்தால் பெட்டி கைமாறினாலும், அந்தப் பெட்டிக்குள் நிறையப் பணம் இருந்ததை உடையவரைத் தேடி ஏன் இவர் கொடுக்கவில்லை, அல்லது போலீசிடம் ஒப்படைக்கவில்லை? திருடிக்கொள்ள எண்ணி விட்டாரோ? சிவாஜிக்குத் திருடன் பட்டமா? படம் தோல்வி அடைந்து விட்டதற்கு காரணம் அப்படித்தான் சொல்லப் பட்டது.

    பாலசந்தர் பெரிய டைரக்டர் என்கிற பெயர் எடுத்திருந்தாலும், திரைப்படத் திறமையும் அறிவும் நிறைந்து இருந்தாலும் அப்போது தன்னைப் பற்றிக் கொஞ்சம் குறைத்தேதான் மதிப்பிட்டுக்கொள்வார். அந்த 'காம்ப்ளெக்ஸ்' அவரிடம் இருந்தது. சிவாஜியா அவர் எவ்வளவு பெரிய நடிகர், அவரிடம் எப்படிப் போய் இந்த இடத்தில் இப்படி நடிக்க வேண்டுமென்று நான் சொல்லிக்கொடுப்பது? அவருக்குத் தெரியாதா என்று நினைத்துக் கொண்டு காட்சியை விளக்கிவிட்டு வந்துவிடுவார். ஒரு டைரக்டரும் கதாநாயகனும் எப்படியெல்லாம் உரையாடு வார்கள், உறவாடுவார்கள்? அப்படிப்பட்ட எந்த நெருக்கமும் இல்லாமலேதான் படப்பிடிப்பு நடக்கும். ஒருபுறம் துரு துருவென்று சிகரெட்டைப் பிடித்துக்கொண்டே டைரக்டர் நிற்பார்.

    காட்சி தயாரானதும்,என்னை டைரக்டர் அழைப்பார்.என்னிடம்தான் அவருக்கு வேண்டிய சிகரெட் இருக்கும். அதற்காகத்தான் அழைக்கிறாரோ என்று சிகரெட்டை எடுப்பேன். இல்லை. ஷாட் ரெடி. நீ போய் சிவாஜியை அழைத்து வா என்பார். நான்தான் உதவி டைரக்டர்களிலேயே வயதிலும் அனுபவத்திலும் இளையவன். ஆகையினால் நான்தான் ஓடும்பிள்ளை. ஒப்பனை அறைக்கு ஓடிப்போய் 'அண்ணன் ஷாட் ரெடி வரலாம்' என்பேன். 'ஏண்டா லேட்?.. வா.. அந்த 'கோட்' டை எடுத்து மாட்டிவிடு' என்பார். நானும்அவ்வாறே செய்து அழைத்து வருவேன். தாமதம் என்பது ஐந்து, பத்து நிமிடம்தான்.

    படப்பிடிப்பகத்துக்குள் நுழைந்தவுடன் எல்லோரும் வணக்கம் தெரிவிப்பார்கள். இவரும் பதிலுக்கு முகத்தை சீரியசாக வைத்துக் கொண்டே பதிலுக்குக் கனத்த குரலில் வணக்கம் சொல்வார். டைரக்டர் அருகில் வந்து, அன்று எடுக்கப் போகும் காட்சியை விவரிப்பார். உடன் இருக்கும் உதவி டைரக்டர் பாஸ்கரன் சிவாஜி பேசவேண்டிய வசனங்களைச் சொல்வார். நன்றாகக் கேட்டு, மனத்தில் இறுத்திக்கொண்டு மெதுவாகச் சொல்லிப் பார்ப்பார்.

    டைரக்டர், ஸ்டார்ட் கேமிரா சொல்லி 'ஆக்ஷ்ன் ' என்று சொன்னவுடன், எங்கிருந்துதான் வருமோ, அந்த வசன உச்சரிப்பும், அதற்கேற்ற பாவங்களும்? பார்த்துக்கொண்டிருக்கும் போது நமக்குப் புல்லரிக்கும். அவர்தான் சிவாஜி.

    சிவாஜியுடன் பணியாற்றிய போது அவரிடமிருந்து "நேரம் தவறாமை, செய்யும் தொழிலே தெய்வம்" என்கிற அவ்விரு தாரகமந்திரத்தை அறிந்துகொண்டேன். அதை இன்றும் கடைப்பிடித்தும் வருகிறேன். சிங்கப்பூரில் நிகழ்ச்சிகளுக்குச் செல்லும்போது நான் சரியான நேரத்திற்குச் சென்று விடுவேன். குறிப்பாக நான் முன்னின்று நடத்தும் எந்த நிகழ்ச்சியானாலும், சரியான நேரத்திற்குத் தொடங்கி, சரியான நேரத்தில் முடித்திடுவேன். அதனால் இப்போது, அன்பழகன் நிகழ்ச்சி என்றால் சிறப்புப் பேச்சாளர் வருவதற்கு ஐந்து நிமிடம் தாமதம் ஆனாலும் சரியான நேரத்தில் நிகழ்ச்சியைத் தொடங்கிவிடுவார் என சிங்கப்பூர் தமிழ் மக்களே அறிந்து கொண்டனர். அத்துடன் நான் சிங்கையில் வணிகம் செய்யும் போதும் சரியாக விடியல் ஆறு மணிக்கு முன்பே நானே கடையைத் திறந்து விடுவேன். அந்த வியாபார நேரத்தில் யாரேனும் எங்கே அழைத்தாலும் செய்கிற தொழிலை விட்டு விட்டுப் போகமாட்டேன். சிவாஜியிடம் கற்றுக் கொண்ட பாடம் என்னுடைய வாழ்க்கைக்கும் பெரிதும் பயன்பட்டது.

    காலை ஏழு மணி கால்ஷீட் என்றால் பொதுவாக பணியாற்றுபவர்கள் எல்லோரும் ஏறத்தாழ ஏழுமணிபோல்தான் ஸ்டுடியோவிற்கு வந்து சேர்வோம். அதன் பின் ஏற்பாடுகளைக் கவனிப்போம். கேமிராமேனிடம் காட்சியைச் சொல்லி, விளக்குகளை நடிகர்கள் நடமாடும் இடங்களில் பொருத்தச் சொல்வோம். காட்சிக்கேற்ற உடை அணிகலன்கள், ஒப்பனை ஆகியவற்றைச் சம்பந்தப் பட்டவர்களிடம் சொல்வோம். காட்சியில் வைக்க வேண்டிய பொருட்கள், காட்சிக்குத் தேவையான பொருட்களைச்சேகரிப்போம்.
    'கண்டினியூட்டி' என்று சொல்லப்படும் தொடர்ச்சியான முன் காட்சியில் என்றோ ஒரு நாள் அதே நடிகர்கள் நடித்தபோது எடுக்கப்பட்ட படத்தை, தொடர் நடவடிக்கைக்காகப் பார்த்து வைத்துக் கொள்வோம். அதற்குள் டைரக்டர் வந்து விடுவார். அவர் ஒரு முறை எல்லாவற்றையும் சரி பார்ப்பார். தயாரிப்பு நிர்வாகியை அழைத்து நடிகர்கள் வந்துவிட்டார்களா? என்று கேட்பார். நடிகர் வீட்டில் குளித்துக் கொண்டிருந்தாலும், "ஆன் தி வே சார் " என்று பவ்வியமாகப் பதில் சொல்லிவிட்டு நகர்ந்திடுவார். ஆக எப்படிப் பார்த்தாலும் படப்பிடிப்புக் கருவி இயங்கக் கிட்டத்தட்ட ஒன்பது மணியாகிவிடும். இப்படித்தான் பொதுவாக நடக்கும். இதை நான் இங்கே குறிப்பிடுவதற்குக் காரணம் உண்டு.

    இந்திரா காந்தி பிரகடனப்படுத்திய நெருக்கடி நிலை நேரத்தில் அலுவலகங்களில் எல்லாம் சுறுசுறுப்பாகப் பணிகள் நடந்ததுபோல், நடிகர் திலகம் அவர்களின் கால்ஷீட் என்றால் முதல்நாளே சம்பந்தப்பட்ட அனைவரும் பம்பரம்போல் சுழல ஆரம்பித்து விடுவார்கள். இன்னொரு செய்தி என்னவென்றால், மற்றவர்கள் பத்து கால்ஷீட்டுகளில் எடுப்பதை, சிவாஜி படப்பிடிப்பு என்றால் ஏழு கால்ஷீட்டுகளில் முடித்துவிடலாம். அந்த அளவிற்கு வேகமாக நடக்கும்.
    கதாநாயகனான சிவாஜியே முழு ஒப்பனையுடன் ஏழு மணி கால்ஷீட் என்றால் சரியாக ஆறு ஐம்பத்தைந்து மணிக்குத் தயாராய் இருப்பார். இவ்வாறு வேலை செய்யும்போது எவ்வளவு மகிச்சியாகவும், மனநிறைவாகவும் இருக்கும் தெரியுமா? அவருடன் பணியாற்றும் சக நடிகர்களும் கூடப் பயந்து கொண்டு சரியான நேரத்திற்குத் தயாராகி விடுவார்கள். ஆனால் எம் ஜி ஆர் படப்பிடிப்பு என்றால் பதினொரு மணிக்குத்தான் என்பார்கள்.

    பட்டுக்கோட்டையார் பாடி வைத்தாரே " செய்யும் தொழிலே தெய்வம் " என்று. அது சிவாஜி அவர்களைப் பார்த்துத்தான் பாடியிருப்பாரோ என்றுகூடத் தோன்றுகிறது. அந்த அளவிற்கு கதையின் பாத்திரமாகவே மாறிவிடுவார். காட்சிக்கு ஏற்ற மனநிலையை வரவழைத்துக் கொள்வார். அவர் நடிப்பு மிகையானது என்று வாதிடுவரும் உளர். அது ஓரளவு உண்மையாகவும் இருக்கலாம். இயல்பாக நடிப்பது என்பது ஒன்று. எதையும் மிகைப்படுத்தியே பேசியும், எழுதியும் வரும் நம் நாட்டினர் இப்படி நடித்தால்தான் 'நடிப்பு' என்றும் ஒத்துக் கொண்டார்கள். நடிப்பைப் பார்த்து உணர்ச்சி வசப்படுபவர்கள், கண்ணீர் சிந்துபவர்களாலே படம் ஓடியது. சிறந்த நடிகர் என்கிற விருதினை உள் நாட்டிலும், வெளிநாட்டிலும் அவருக்கு அளித்தார்கள். நடிப்பு ஆற்றலை வெளிப்படுத்திய இன்னொரு நடிகர் இந்தியாவில் இல்லை. சிவாஜி நடித்த படங்களை இந்தியில் மீண்டும் எடுக்க முற்படும் போது, படத்தைப் பார்த்தபின் எத்தனையோ நடிகர்கள், சிவாஜி போல் தன்னால் செய்ய முடியாது என்று பயந்து ஓடிய வரலாறும் உண்டு.

    நடிகர் திலகத்துடன், எதிரொலி படப்பிடிப்பு நேரத்தில் எனக்கு நெருங்கிப் பழகக்கூடிய வாய்ப்புக் கிட்டியது. காரணம், நான் சிறியவன், ஒரே மாவட்டத்தைச் சேர்ந்தவன் என்பதோடு உறவுக்காரன் என்றுகூட நாங்கள் இருவரும் சொல்லிக் கொள்வோம். உங்களைக் கெடுத்தது டைரக்டர் பீம்சிங்தான் என்பேன். ஏண்டா அப்படிச் சொல்கிறாய்? என்று கேட்பார். ஆமாம். அவர்தானே உங்களைத் திருப்பதிக்கு அழைத்துச் சென்று ஆஸ்திகராக்கினார். எங்கள் இயக்கத்தை விட்டு அதன்பின்தானே விலகினீர்கள். இல்லையென்றால் இன்னும் நெருக்கமாக இருப்போமல்லயா? என்று சிறுவன் என்கிற பாதுகாப்பில் பேசுவேன். சிரித்துக் கொள்வார். அப்படிக் கேட்டதிலிருந்து " நாத்திகப் பயலே " என்று செல்லமாகத் தான் என்னை அழைப்பார். அப்படி அவர் என்னை அழைத்தபோது எனக்கு அவரிடம் உள்ள நெருக்கத்தையும் அன்பையும் நினைத்து இன்றும் மகிழ்ச்சியடைகிறேன்.

    கணேசன் நம்மைவிட்டு மறைந்து இருக்கலாம்; ஆனால் சிவாஜி மறைய வில்லை, என அவர் மறைந்தபோது சிங்கப்பூரில் நடைபெற்ற இரங்கற் கூட்டத்தில் நான் பாடியது நினைவுக்கு வருகிறது. அதை உங்களோடு இன்று பகிர்ந்து கொள்கிறேன்.
    Yours truly

  9. #1778
    Senior Member Devoted Hubber
    Join Date
    Jun 2007
    Location
    Chennai
    Posts
    287
    Post Thanks / Like
    சிவாஜி - சிறு குறிப்புகள்
    சிவாஜி கணேசன்... இந்திய சினிமாவின் திறந்தவெளிபல்கலைக்கடிதம். எல்லா நடிகர்களுக்கும் ரசிகர்கள் இருப்பார்கள். ஆனால், அனைத்து நடிகர்களும் இவருக்கு ரசிகர்கள். அந்தக் கலைச் சமுத்திரத்திலிருந்து சில துளிகள்....

    சத்ரபதி சிவாஜி வேடத்தில் நடித்த வி.சி.கணேசனை மேடைக்குக் கீழ் இருந்து பார்த்த தந்தை பெரியார், 'இனி இவர்தான் சிவாஜி!' என்று சொன்னார். அதுவே காலம் சொல்லும் பெயரானது!

    நடிகர் திலகம் முதன்முதலில் போட்டவேடம் பெண் வேடம் தான். உப்பரிகையில் நின்றுகொண்டு ராமனைப் பார்க்கும் சீதை வேடம்தான் சிவாஜி ஏற்ற முதல் பாத்திரம்!

    1952 -ல் நேஷனல் பிக்சர்ஸ் தயாரித்த `பராசக்தி’யில் 'குணசேகரன்' பாத்திரத்தில் சிவாஜியைக் கதாநாயகனாக்க படத் தயாரிப்பாளர் பி.ஏ.பெருமாள் முடிவு செய்தபோது. பலரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் சிவாஜியை ஹீரோவாக்கிய பெருமை பெருமாளுக்கே உண்டு!

    சின்சியாரிட்டி,ஒழுங்கு நேரந் தவறாமைக்கு சிவாஜி ஒர் உதாரணம், ஏழரை மணிக்கு ஷீட்டிங் என்றால், ஆறே முக்கால் மணிக்கே செட்டில் ஆஜராகிவிடுவார். தனது வாழ்நாளில் ஒரு நாள்கூடத் தாமதமாக் ஷீட்டிங்குக்குச் சென்றது இல்லை!

    கலைஞரை 'மூனா கானா', எம்.ஜி.ஆரை 'அண்ணன்', ஜெயலலிதாவை 'அம்மு', என்றுதான் அழைப்பார்!

    வீரபாண்டிய கட்டபொம்மன், பாரதியார், வ.உ.சி, பகத்சிங் திருப்பூர் குமரன் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் பாத்திரங்கள் அனைத்தையும் ஏற்று நடித்தவர் சிவாஜி ஒருவரே!

    தன்னை 'பராசக்தி' படத்தில் அறிமுகம் செய்த தயாரிப்பாளர் பி.ஏ.பெருமாள் வீட்டுக்கு ஒவ்வொரு பொங்கல் அன்றும் சென்று, அவரிடம் ஆசி பெறுவதை வழக்கமாகவே வைத்திருந்தார் சிவாஜி!

    திருப்பதி, திருவானைக்கா, தஞ்சை மாரியம்மன் கோயில்களுக்கு யானைகளைப் பரிசளித்துள்ளார்!

    தமிழ் சினிமா உலகில் முதன்முதலாக மிகப்பெரிய கட் – அவுட் வைக்கப்பட்டது சிவாஜிக்குத்தான். 1957 ல் வெளிவந்த அந்தப் படம் 'வணங்காமுடி'!.

    சிவாஜி தனது நடிப்புக்காக வாங்கிய முதல் பரிசு ஒரு வெள்ளித்தட்டு, 'மனோகரா' நாடகத்தைப் பார்த்த கேரளா கொல்லங்காடு மகாராஜா கொடுத்த பரிசு அது!

    தனது அண்ணன் தங்கவேலு, தம்பி சண்முகம் போன்றவர்களுடன் ஒரே கூட்டுக் குடும்பமாக இறுதிவரை வாழ்ந்தார்.சிவாஜியின் கால்ஷீட், நிர்வாகம் அனைத்தையும் கவனித்துகொண்டவர் அவரது தம்பி சண்முகம்தான்!

    சிவாஜி நடித்த மொத்தப் படங்கள் 301. இதில் தமிழ்ப் படங்கள் 270. தெலுங்கில் 9, ஹிந்தி 2, மலையாளம் 1, கெளரவத் தோற்றம் 19 படங்கள்!

    ஒவ்வொரு வருடமும் குடும்பத்துடன் தனது சொந்த ஊரான் சூரக்கோட்டையில் பொங்கல் விழா கொண்டாடுவதை வழக்கமாகவே வைத்திருந்தார். அன்றைக்குப் பல சினிமா பிரபலங்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வார்கள்!

    விநாயகர் மீது மிகுந்த பக்திகொண்டவர் சிவாஜி, சிறு வெள்ளியிலான பிள்ளையார் விக்கிரகத்தை எப்போதும் கூடவே வைத்திருப்பார்!

    சிவாஜிக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருந்தது. 'பராசக்தி' படத்தை இயக்கிய, இயக்குநர்கள் கிருஷ்ணன் – பஞ்சு முன்னிலையில் மட்டும் சிகரெட் பிடிக்கமாட்டார்!

    'ரத்தத் திலகம்' படத்தில் இவரது நடிப்பைப் பாராட்டி சென்னை சினிமா ரசிகர் சங்கம் கொடுத்த பரிசு ஒரு துப்பாக்கி!

    படப்பிடிப்பின்போது அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்காத நேரங்களில் மற்றவர்கள் நடிப்பதை உற்றுக் கவனிப்பார். ஆர்வமாகக் கேட்டால் மற்றவர்களுக்கு டிபஸ் கொடுப்பார்!

    சிவாஜியும் எம்.ஜி.ஆரும் இணைந்து நடித்த ஒரே படம் கூண்டுக்கிளி!

    விதவிதமான கடிகாரங்களை அணிவதில் இவருக்கு அலாதி பிரியம். ஒமேகா, ரோலக்ஸ் போன்ற வாட்சுகளை ஏராளமாக வாங்கி வைத்திருந்தார்!

    தன் தாய் ராஜாமணி அம்மையாருக்கு சிவாஜி கார்டனில் சிலை ஒன்றை அமைத்தார் சிவாஜி. அந்தச் சிலையைத் திறந்துவைத்தவர் எம்.ஜி.ஆர்!

    'ஸ்டேனிஸ் லா வோஸ்கி தியர்' என்கிற நடிப்புக் கல்லூரி மாணவர்களுக்கான பாடப் புத்தகத்தில் 64 வகையான முகபாவங்களைப் பிரதிபலிக்கும் திறமை பெற்றவர் என்று குறிப்பிட்டு சிவாஜியின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன!

    அவரது தீவிரமான ஆசைகளில் ஒன்று தந்தை பெரியார் வேடத்தில் நடிப்பது கடைசி வரை அது நிறைவேறவே இல்லை!

    பிரபலதவில் கலைஞர் வலையப்பட்டி. 'தமிழ் சினிமாவில் நீங்கள்தான் எல்லோருக்கும் ரோல் மாடல்' என்று சிவாஜியிடம் சொன்னபோது, 'டி.எஸ்.பாலையா, எம்.ஆர்.ராதா வரிசையில் மூன்றாவதாகத்தான் நான்' என்றாராம் தன்னடக்கமாக!

    பெருந்தலைவர் காமராஜரின் மீது அளவிட முடியாத அன்புகொண்டவர் இவர்.`அந்த சிவகாமியின் செல்வனின் அன்புத் தொண்டன் இந்த ராஜாமணியின் மகன் – என்பதுதான் தன்னைப்பற்றி சிவாஜி செய்துகொள்ளும் அடக்கமான அறிமுகம்!

    கிரிக்கெட், கேரம்போர்டு இரண்டும் இவருக்குப் பிடித்தமான விளையாட்டுகள்!.
    Yours truly

  10. #1779
    Senior Member Devoted Hubber
    Join Date
    Jun 2007
    Location
    Chennai
    Posts
    287
    Post Thanks / Like
    கலைஞர், எம்.ஜி.ஆர். தயாரிப்பில் சிவாஜி நடித்த படம்
    பதிவு செய்த நாள் 12.11.2010

    அண்ணாதுரையின் புகழ்பெற்ற நாவல் ‘ரங்கூன் ராதா’, படமானது. முதல்வர் கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஏ.காசிலிங்கத்தின் மேகலா பிக்சர்ஸ் தயாரித்த படம். எம்.ஜி.ஆர். தயாரிப்பில் சிவாஜி ஹீரோவாக நடித்த படம் இது. ஹீரோ என்றாலும் வில்லத்தனம் கலந்த வேடம். இது போல் தொடர்ந்து வேடங்கள் வருவதால் சிவாஜி கவலைப்படவில்லை. தனக்கென எந்த இமேஜும் இருக்கக் கூடாது என்பதில் அவர் தீர்மானமாக இருந்தார். வித்தியாசமான வேடங்களை ஏற்பதிலும் ஆர்வத்தோடு இருந்தார். இதில் பானுமதி ஹீரோயின்.

    கதைப்படி சிவாஜியின் மனைவியாக அவர் நடித்திருப்பார். அவரது தங்கை ராஜத்தை அடைய சிவாஜி முயற்சிப்பார். அதற்காக சதி செய்வார். அண்ணாதுரையின் கதைக்கு திரைக்கதையுடன் வசனங்களை எழுதினார் கருணாநிதி. பாரதியாரின் பாடல்களுடன் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், உடுமலை நாராயண கவி, ஆத்மநாதனின் பாடல்களும் இடம்பெற்றன. என்.எஸ்.கேயும் பாடல் எழுதியிருந்தார். ஜி.துரை ஒளிப்பதிவு செய்திருந்தார். சிவாஜி, பானுமதி, எம்.என்.ராஜத்துடன் எஸ்.எஸ்.ஆர்., ராஜசுலோச்சனா, என்.எஸ்.கே., மதுரம், குலதெய்வம் ராஜகோபால் நடித்தனர். படம் முடிந்ததும் அண்ணாதுரைக்கு தனியாக திரையிட்டு காண்பித்தனர்.

    படம் பார்த்த அண்ணாதுரை, நடிப்புக்கு இலக்கணம் வகுத்த நடிகை என பானுமதியை பாராட்டினார். படம் மெகா வெற்றி. பல்வேறு சங்கங்களின் விருதுகள் சிவாஜிக்கும் பானுமதிக்கும் கிடைத்தது. விமர்சகர்களாலும் அவர்களின் நடிப்பு பாராட்டப்பெற்றது.சிவாஜி கணேசனின் திரையுலக வாழ்க்கையில் மற்றொரு மைல்கல் ‘ராஜா ராணி’. இந¢த படத்தில்தான் அந்த நீண்ட.... வசனத்தை ஒரே டேக்கில் பேசி நடித்து புது சாதனையை அவர் புரிந்தார். இன்று வரை அந்த சாதனையை எந்த நடிகருமே முறியடிக்கவில்லை. நியூடோன் ஸ்டுடியோ தயாரித்த படம்.

    ஒளிப்பதிவாளர் டின்ஷா தயாரித்தார். கருணாநிதியின் கதை, திரைக்கதை, வசனம் படத்தின் சிறப்பம்சம். பீம்சிங் இயக்கியிருந்தார். டி.ஆர்.பாப்பா, இசை. பாடல்களை கருணாநிதி, மருதகாசி, கே.பி.காமாட்சி, எம்.கே.ஆத்மநாதன், விவேகன், வில்லிப்புத்தன் எழுதியிருந்தனர். ஒளிப்பதிவு ஜித்தன் பானர்ஜி. சிவாஜி, பத்மினி, ராஜசுலோச்சனா, எஸ்.எஸ்.ஆர்., என்.எஸ்.கே., மதுரம் நடித்தனர்.

    இந்த படத்தில் கதைப்படி மேடை நாடக காட¢சிகள் இடம்பெறும். ஒரு நாடகத்தில் சாக்ரடீஸ் வேடம் ஏற்றிருப்பார் சிவாஜி. இன்னொரு நாடகத்தில் சேரன் செங்குட்டுவன் வேடத்தில் வருவார். அந்த வேடத்த¤ல் கருணாநிதியின் தீப்பொறி வசனங்களை ஒரே ஷாட்டில் படமாக்க திட்டமிட்டார் பீம்சிங். அது அவ்வளவு எளிதான காரியமல்ல. பல பக்கங்களில் அந்த வசனங்கள் இருந்தன. ஆனாலும் சிவாஜி மீது பீம்சிங்கிற்கு நம்பிக்கை இருந்தது.

    அவரிடம் சொன்னார். சிவாஜியும் ஒரே ஷாட்டில் நடிக்க சம்மதித்தார். வசனங்களை வாங்கி பார்த்த சிவாஜி, சில ந¤மிடங்களிலேயே அதை கரைத்து குடித்தார். ஷாட்டுக்கு சிவாஜி ரெடியாகிவிட்டார். பீம்சிங் உட்பட யூனிட்டில் இருந்த அனைவரும் படபடப்பாக இருந்தனர். கேமரா ஓடத் தொடங்கியது. கலைஞரின் முதல் வரியை வாசிக்க ஆரம்பித்தவர்தான், வாசித்தபடியே சென்றார். எந்த குறையும் இல்லாமல் தனது நடிப்பாற்றலையும் வெளிப்படுத்திக் கொண்டே அந்த காட்சியில் நடித்து முடித்தார். மொத்தம் 800 அடி நீள காட்சி அது. ஒரே ஷாட். டேக்கே கிடையாது.

    சிவாஜி ஒருவரால்தான் முடியும். காட்சி முடிந்ததும் யூனிட்டாரின் கைதட்டல் சத்தம் நிற்க வெகு நேரமானது. வெற்றியை கொண்டாடிய படம் இது. கசப்பும் இனிப்பும் என்ற நாவலை தழுவியது வாழ்விலே ஒரு நாள். சிவாஜிக்கு ஜோடியாக ஜி.வரலட்சுமி நடித்திருந்தார். ராஜசுலோச்சனா, ஸ்ரீராம், வி.கே.ராமசாமி, எம்.ஆர்.சந்தானம் (இவர் நடிகரும் இயக்குநருமான சந்தானபாரதியின் அப்பா) நடித்தனர். சி.என்.பாண்டுரங்கம், டி.ஜி.லிங்கப்பா, எஸ்.எம்.சுப்பைய நாயுடு இசையமைத்தனர். படம் வெற்றி பெறவில்லை.

    சிவாஜி பிலிம்ஸ் நிறுவனத்தை சிவாஜி கணேசன் ஆரம்பிக்க காரணமாக அமைந்த படம் அமரதீபம். கிருஷ்ணமூர்த்தி, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜனின் அப்பா கோவிந்தராஜன், இயக்குநர் ஸ்ரீதர் (அப்போது கதாசிரியர் மட்டும்தான்) ஆகியோர் பார்ட்னர்களாக ஒப்பந்தம் போட்டுக் கொண்டனர். வீனஸ் பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி இப்படத்தை தயாரித்தனர். வீனஸ் பிக்சர்ஸ் படங்களையெல்லாம் பட வினியோகஸ¢தரான ரத்னத்திடம்தான் தருவார்கள். அந்த ரத்னம் வேறு யாருமல்ல, மணிரத்னத்தின் அப்பாதான்.

    பிரகாஷ் இயக்கிய இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் ஸ்ரீதர். சிவாஜி, பத்மினி, சாவித்திரி, இ.வி.சரோஜா, நம்பியார், தங்கவேலு, நாகைய்யா நடித்தனர். சலபதிராவ், ஜி.ராமநாதன், ஜி.என்.பாலசுப்ரமணியம் ஆக¤ய மூவர் இசையமைத்தனர். பாடல்களை தஞ்சை ராமைய்ய தாஸ், மருதகாசி, உடுமலை நாராயண கவி உள்ளிட்டோருடன் சேர்ந்து கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் எழுதியிருந்தார்.

    பின்னர் வெற்றிப் பட இயக்குநராக வலம் வந்த கோபாலகிருஷ்ணனுக்கு இதுதான் திரையுலக பிரவேசம். கலை இயக்குனர் தோட்டாதரணியின் அப்பா தோட்டா, இப்படத்துக்கு கலை இயக்குனர். சென்னை நகர உரிமையை பெற்று, சிவாஜி பிலிம்ஸ் மூலம் படத்தை வெளியிட்டார் சிவாஜி. 100 நாள் கடந்து வெற்றி பெற்ற படம்.
    Yours truly

  11. #1780
    Senior Member Regular Hubber Mahesh_K's Avatar
    Join Date
    Mar 2010
    Posts
    186
    Post Thanks / Like
    Quote Originally Posted by Murali Srinivas View Post
    மகேஷ்,சதீஷ்,tac

    இந்த திரியின் இரண்டு முக்கிய நோக்கங்களே நடிகர் திலகம் என்ற மாபெரும் கலைஞனை இன்றைய நாளைய தலைமுறைக்கு சரியான முறையில் அறிமுகப்படுத்துதல் மற்றும் பல்வேறு காலக்கட்டங்களில் பல்வேறு கலை மற்றும் அரசியல் தளங்களில் நடந்த சதி மற்றும் சூழ்ச்சிகளின் காரணமாக மறைக்கப்பட்ட சாதனைகளை மக்கள் பார்வைக்கு கொண்டு வருதல் எனவையே ஆகும். இவ்விரண்டு நோக்கங்களும் இந்த திரியில் சரியான வழியில் முன்னெடுத்து செல்லப்படுகிறது. இதை தடுப்பதற்கும் திசை மாற்றுவதற்கும் நடக்கும் முயற்சிகளை புறந்தள்ளி நாம் எப்போதும் போல் முன்னேறி செல்வோம். இதை என் அன்பு வேண்டுகோளாக உங்கள் முன் வைக்கிறேன். யார் தலைகீழாக நின்று முயற்சித்தாலும் நடிகர் திலகத்தின் சாதனைகள் இல்லை என்றாகி விடாது. Please ignore disturbances

    அன்புடன்
    Murali sir , Ungal vendukoLil uLLA niyaaythai uNarnthirukkiREn. Joe kooda ithu ponRa karuththai therivithirunthaar.

    Innoru puRam, silar therivikkum thavaRaana karuthukkaLukku naam pathilaLikkavidil, athai uNmai enRu intha threadkku puthithaaka varum yaarum karuthividum aBaayamum uLLathu. I

    Irandaiyum karuththaan naan aathaaranGaLai mattum koduthirukkiRen. nichayam ethir vinayai thoondum thani nabar vimarisanhaLil edupada mattEn.

  12. Thanks senthilvel thanked for this post

Similar Threads

  1. Nadigar Thilagam Sivaji Ganesan Part 8
    By RAGHAVENDRA in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1966
    Last Post: 20th September 2011, 10:04 PM
  2. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 5
    By Murali Srinivas in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1490
    Last Post: 4th February 2010, 02:35 PM
  3. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 4
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1478
    Last Post: 17th November 2008, 09:45 AM
  4. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 3)
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1472
    Last Post: 28th February 2008, 08:05 PM
  5. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 2)
    By NOV in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1470
    Last Post: 2nd July 2007, 09:40 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •