21.07.2011 அன்று தன் பூதவுடலை மட்டும் அனுப்பி விட்டு நம்முடன் இருக்கும் நடிகர் திலகம் இறவாப் புகழுடன் சிறந்து விளங்குவதை மீண்டும் நிரூபித்த நிகழ்ச்சி, இன்று நடைபெற்ற கர்ணன் முன்னோட்ட வெளியீட்டு விழா. எத்தனை காரணங்கள், சிவராத்திரி, அமாவாசை, வார நாள், முற்பகல் என அத்தனையும் மீறி திரளான மக்கள் வந்திருந்து மிகச் சிறப்பாக நடத்திய விழா, எங்கள் நடிகர் திலகத்திற்கென விழா வென்றால் மற்றவையெல்லாம் எமக்கு எம்மாத்திரம் என மக்கள் திரண்டு வந்து வரவேற்பளித்த விழா. வந்திருந்தோர் அத்தனை பேரும் முதலில் வியந்தது அந்த திரளான மக்களைத் தான் என்றால் அது மிகையில்லை. காலை 8.55க்குத் தொடங்கி சுமார் 11.10 வரையில் இரண்டு மணி நேரமும் போனதே தெரியவில்லை. வருகை தந்த படத்தில் பங்கு பெற்ற கலைஞர்கள் மூத்த கலைஞர் வி.எஸ். ராகவன், சண்முக சுந்தரம், மாஸ்டர் ஸ்ரீதர், பின்னணி இசைக் கலைஞர்களில் மெல்லிசை மன்னர் டி.கே.ராமமூர்த்தி, பி.பி.ஸ்ரீநிவாஸ், மற்றும் பந்துலு அவர்களின் புதல்வர் ரவிசங்கர், புதல்வி விஜயலட்சுமி, விநியோகஸ்தர்கள், ஆநந்தா பிக்சர்ஸ் சுரேஷ், கமலா திரையரங்கு உரிமையாளர் சிதம்பரம், மற்றும் வி.சி.குகநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர். பிரைட்டன் திரையரங்கில் என்தம்பி திரைப்படத்தை 40000 க்கு அனுமதி பெற்று வெற்றியுடன் ரூ 1 லட்சத்தை சம்பாதித்ததை நன்றியுடன் நினைவு கூர்ந்த விநியோகஸ்தரின் கூற்று உண்மை என்றுமே மறைக்க முடியாது என்பதை நிரூபித்தது.
வந்திருந்த ரசிகர்களின் ஆரவாரம் அன்பு சகோதரர் ராம் குமார் வருகை புரிந்த போது விண்ணதிர வைத்தது என்றால் அது உண்மை. ராம் குமார் வடிவில் ரசிகர்கள் நடிகர் திலகத்தைப் பார்க்கிறார்கள் என்பது இன்று நிரூபணம் ஆனது.
நிகழ்ச்சியை சிறப்புற தொகுத்து வழங்கிய திரு மகேந்திராவும் வார்த்தைக்கு வார்த்தை உணர்ச்சிப் பிழம்பாய் உருகிய சேரன் அவர்களும் ரசிகர்களின் இதயத்தில் நீங்கா இடம் பெற்று விட்டனர்.
முன்னோட்டத்தின் காட்சிகள் பிரம்மாண்டம் என்றால் என்ன என்பதற்கு விளக்கம் அளிப்பது போல் சிறப்புற அமைந்துள்ளன. ஒலியமைப்பு மிகவும் அற்புதமாய் அமைந்தது மட்டுமின்றி, தெளிவாகவும் இருந்தது தொழில் நுட்ப வல்லுநர்கள் எந்த அளவிற்கு கடுமையாக உழைத்துள்ளனர் என்பதற்கு எடுத்துக் காட்டு.
இவ்வளவு பெரிய அளவிற்கு இப்படத்தை அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு அரும் பாடு பட்டு உழைத்துள்ள திரு திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம் அவர்களுக்கு நம் அனைத்து ரசிகர்கள் சார்பாகவும் உளமார்ந்த நன்றி.
மாதிரிக்கு சில படங்கள் இங்கே
மற்ற படங்களுக்கு
Bookmarks