http://www.tamilbase.com/index.php?o...ews&Itemid=318
'யானை இறந்தாலும் ஆயிரம் பொன்' என்பது நடிகர் திலகம் சிவாஜிக்குதான் பொருந்தும். அண்மையில் டிஜிட்டல் வடிவில் வெளிவந்த 'கர்ணன்', சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்களின் பணப் பெட்டியை பொக்கிஷமாக்கி ஓயவில்லை, அதற்குள் 'வசந்த மாளிகை' வந்திருக்கிறது. பொன்மகன் வந்தான், பொருள் வாரி தந்தான் என்று சிவாஜியை புகழாத தியேட்டர்களே கிடையாது என்கிற அளவுக்கு 1972 லிருந்தே கலெக்ஷனை கொட்டிக் கொண்டிருக்கிறது வசந்த மாளிகை. தெலுங்கில் 'எவருக்கோசம்... இது எவருக்கோசம்...?' என்று நாகேஸ்வரராவ் பாடியதைதான் இங்கே நமக்காக 'யாருக்காக இது யாருக்காக?' முழங்கினார் சிவாஜி.
உதடு துடிக்க, கண்கள் சிவக்க, கையில் விஷக் கிண்ணத்தோடு அவர் பாட பாட 'அவசர தேவை ஒரு காதல் தோல்வி' என்கிற அளவுக்கு அந்த நடிப்பின் மீது உயிராய் திரிகிற ரசிகர்கள் இப்போதும் இருக்கிறார்கள். அதுதான் நடிகர் திலகத்தின் புகழ், பெருமை! 'மதுவைதானே குடிக்கக் கூடாதுன்னு சொன்னே, விஷயத்தை இல்லையே?' என்று காதல் தோல்வி தத்தளித்து தளும்ப தளும்ப அவர் வாணிஸ்ரீயை பார்த்து பேசுகிற டயலாக்கை கேட்டு மயக்கம் போட்டு விழுந்த ரசிகர்கள் அப்போது ஏராளமாம்.
'பார்... என் காதல் தேவதைக்காக நான் கட்டிய வசந்த மாளிகையை பார்...' என்று சொல்லிக் கொண்டே அவர் ஒவ்வொரு படியாக ஏறுகிற அழகை பார்க்க இப்பவே 'வசந்த மாளிகை' ஓடும் தியேட்டர்களுக்கு முண்டியடித்துக் கொண்டு ஓடலாம். பாலமுருகனின் வசனங்கள் ஒவ்வொன்றும் அவ்வளவு உயிராக அமைந்ததெல்லாம் தமிழ் சினிமாவுக்கு அமைந்த வரம்.
இப்போதைய தமன்னா, ஸ்ரேயா, நயன்தாரா, த்ரிஷா, சமந்தா, அனுஷ்காவையெல்லாம் ஒரு குடுவையில் போட்டு கலக்கினாலும் ஒரு வாணிஸ்ரீக்கு ஈடாகாது அந்த கலவை! அப்படியொரு செதுக்கி வைத்த பேரழகோடு நடித்திருக்கும் வாணிஸ்ரீ யின் பிடிவாதத்தையும், ஆணவத்தையும், ஏழ்மையின் நேர்மையையும், இன்னும் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது.
இப்படத்தில் இடம்பெற்ற கண்ணதாசன் வரிகளையும் கே.வி.மகாதேவன் இசையையும் இதற்கு முன்பும் ஓராயிரம் முறை கேட்டுவிட்டோம். இவ்வளவுக்கு பிறகும் தியேட்டரில் அதை கேட்கும்போது மனசும் உடலும் பித்து பிடித்துக் கிடக்கிறதே... அந்த உணர்வை என்னவென்று சொல்ல?
ஆடி மாதத்தில் காற்றடிக்கும், ஐப்பசி மாசத்தில் மழையடிக்கும் என்பதெல்லாம் பருவநிலை மாறும் போதுதான் நடக்கிற சமாச்சாரங்கள். 'வசந்தமாளிகை' படத்தை எப்போது பார்க்க நேர்ந்தாலும் மனசுக்குள் மழையும் காற்றும் நிச்சயம். இதோ- இந்த முறை டிஜிட்டலையும் சினிமாஸ்கோப்பையும் சேர்த்துக் கொண்டு வந்திருக்கிறது அது.
ஆசை தீர அனுபவிச்சுட்டு சொல்லுங்க ரசிகர்களே!