திரு.செல்வகுமார் சார்,
உழைப்பாளர் தினத்தையொட்டி தலைவரின் கையெழுத்தை எல்லாரின் பார்வைக்கும் பரிசாக வழங்கியிருக்கிறீர்கள். நன்றி.
1980-ம் ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி புரட்சித் தலைவர் அரசு காரணமின்றி கலைக்கப்பட்டது. அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை. சென்னை தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, ஏழிசை மன்னர் தியாகராஜ பாகவதர் நடித்த சிவகவி திரைப்படத்தை தலைவர் பார்த்துக் கொண்டிருக்கிறார். அரசு கலைக்கப்பட்ட செய்தி வருகிறது. அப்போதும் தலைவர் நிலை குலையவில்லை. சமையல் கலைஞர் மணி என்பவரை அழைத்து ‘என்ன ஸ்வீட் இருக்கிறது?’ என்று கேட்டு வீட்டில் இருந்த லட்டுகளை வரவழைத்து எல்லாருக்கும் கொடுத்திருக்கிறார். முழு படத்தையும் அமைதியாக பார்த்து ரசித்து பாகவதரின் நடிப்பையும் பாடல்களையும் பாராட்டியிருக்கிறார். இந்த தகவல்களை திரு.மணியன் பதிவு செய்திருக்கிறார்.
இதயம் பேசுகிறது வார இதழில் நம்புங்கள் நாராயணன் என்று ஒரு ஜோதிடர் ராசிபலன்கள் எழுதுவார். அவர் ‘தலைவரின் ஜாதகப்படி இப்போது நேரம் சரியில்லை. அதிமுக ஆட்சிக்கு ஆபத்து’ என்று ஆட்சி டிஸ்மிஸ் ஆவதற்கு முன்பே கூறியிருந்தார். டிஸ்மிஸ் ஆன பிறகு, நம்புங்கள் நாராயணனை தோட்டத்துக்கு வரும்படி போனில் அழைப்பு சென்றிருக்கிறது. தயக்கத்துடனேயே திரு.நாராயணன் போயிருக்கிறார்.
தலைவர் அவரை சாப்பிடச் சொல்லி உபசரித்து, குடும்ப விவரங்கள் கேட்டறிந்து ஒரு தட்டில் ரூ.5,001 பணம் வைத்து (80-ம் ஆண்டில் இது பெரிய தொகை) நாராயணனிடம், ‘உங்கள் திறமைக்கு பாராட்டுக்கள்’ என்று சொல்லி கொடுத்திருக்கிறார். தலைவர் மறைந்த பிறகு ஒரு பேட்டியில் இதை திரு. நாராயணன் தெரிவித்திருந்தார்.
அரசு டிஸ்மிஸ் ஆன பிறகு 41வது நாளில் மார்ச் 31ம் தேதியன்று உங்களுக்கு நோட்டு புத்தகத்தில் தலைவர் கையெழுத்திட்டு கொடுத்திருக்கிறார். அதைப் பார்த்ததும் மேலே சொன்ன நினைவுகள் வந்து கண் கலங்கினேன். இப்படி, எந்த சூழலிலும் நிலைகுலையாத உறுதியோடு, தனது ஆட்சி டிஸ்மிஸ் ஆகும் என்று சொன்னவரின் திறமையையும் பாராட்டி பரிசளித்து , நெருக்கடியான சூழலிலும் பார்க்க வந்த உங்களைப் போன்ற தொண்டர்களையும் சந்தித்து கையெழுத்து போட்டு கொடுக்கிறார் என்றால், அதனால்தான் அவர் பொன்மனச் செம்மல்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்