Quote:
Originally Posted by saradhaa_sn
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்துக்கு முதல்நாள் அறிவிக்கப்படும், குடியரசுத்தலைவரின் 'பத்ம' விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன.
விருது பெறுவோர் பட்டியலில் தகுதியான பலர் இடம்பெற்றிருந்தபோதிலும், மிகத்தகுதியான ஒருவர் "வழக்கம்போல" விடுபட்டிருந்தார். அவர் வேறு யாருமல்ல மெல்லிசை மாமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள்தான்.
எஸ்.பி.பி.க்கு பத்மபூஷண் அளிக்கப்பட்டிருப்பது சந்தோஷமானதுதான். மற்றபடி (பலருக்கு யாரென்றே தெரியாத இரண்டு பரதநாட்டியக்கலைஞர்கள் இருவர் உட்பட) பத்மஸ்ரீ பெற்றவர்களைப்பற்றியும் நாம் குறை சொல்வதற்கில்லை.
நம் கேள்வி, 'அவர்களுக்கு ஏன் கொடுத்தாய்?' என்பது அல்ல, 'இவருக்கு ஏன் தடுக்கிறாய்?' என்பதுதான். சென்ற ஆண்டு காங்கிரஸ் தலைவர் திரு தங்கபாலு பங்குபெற்ற ஒரு விழா மேடையில் அவரிடமே இதுபற்றி கோரிக்கைவைத்தார் இயக்குனர் எஸ்.பி.முத்துராமன்.
அவர் உச்சத்தில் இருந்தபோதே கொடுத்திருக்க வேண்டியது, இன்னும் அவருக்கு எட்டாமலே இருக்கிறது. ஏற்கெனவே அவர் தனது 83-வது வயதில் பயணித்துக்கொண்டு இருக்கிறார். இனிமேலா அவரை கணக்கில் எடுத்துக்கொள்ளப்போகிறார்கள்?.
மறைந்த முதல்வர், முன்னாள் முதல்வர், இந்நாள் முதல்வர் என எல்லா முதல்வர்களுடனும் தொடர்பிருந்தும் ஒரு மாபெரும் கலைஞர் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறார்.
ஒருவேளை, ஒரே ஒரு முறை எம்.எஸ்.வி.க்கு பத்மபூஷணோ அல்லது பத்மஸ்ரீயோ வழங்கி அப்படியே விட்டுவிடுவதைவிட, வருஷாவருஷம் அவருக்கு 'பத்ம-நாமம்' வழங்கிக்கொண்டே இருக்கலாம் என்று முடிவெடுத்து விட்டதோ இந்திய அரசு?.
சகோதரி சாரதா,
நடிப்புலகில் நமது நடிகர் திலகம் புரிந்திருக்கும் ஈடு இணையற்ற சாதனைகளைப் போல் இசையுலகில் நமது மெல்லிசை மாமன்னர் புரிந்திருக்கிறார் என்பது மறுக்க முடியாத வரலாற்று உண்மை. ஈரேழு பதினான்கு லோகங்களிலும் சிறந்த நடிகரான சிவாஜிக்கு இந்திய அரசின் சிறந்த நடிகர் விருது இறுதி வரை வழங்கப்படவே இல்லை. ஆறுதலாக பத்மஸ்ரீ(1966), பத்மபூஷன்(1984) விருதுகள் வழங்கப்பட்டன. பின்னர் வருமா வருமா என்று ஒவ்வொரு வருடமும் எதிர்பார்த்து இனி வரவே வராது என்று நாம் விரக்தியடைந்திருந்த நிலையில் 1997-ல் (1996-ம் ஆண்டுக்கான) "தாதா சாகேப் பால்கே விருது" நமது நடிகர் திலகத்திற்கு வழங்கப்பட்டது. இருப்பினும், சிறந்த நடிகர் விருது கடைசி வரை அவருக்கு வழங்கப்படாமலே போனது அவரை நேசிக்கும் நம்மைப் போன்ற நல்லிதயங்கள் அனைவருக்கும் அழிக்க முடியாத பெருங்குறைதான். சுதந்திரத்திற்குப் பின் இந்தியாவை ஆண்டவர்கள் கணிசமான தவறுகளையும் இழைத்திருக்கிறார்கள் என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமில்லை. அந்தத் தவறுகள் பட்டியலில் முக்கிய இடம் பெற்றிருப்பது சிவாஜி அவர்களுக்கு சிறந்த நடிகர் விருது வழங்காததும் தான். பாரதத்திலே பிறந்து, பாரதத்திற்காக உண்மையான தொண்டாற்றியவருக்கு - தனது அபரிமிதமான கலைத்திறனால் பாரதத்தின் பெருமையை பாரெங்கும் பறைசாற்றியவருக்கு - "பாரத்"தும் கிடைக்கவில்லை, "பாரத ரத்னா"வும் இல்லை. உண்மையான தேசபக்தி உள்ள ஒவ்வொரு இந்தியனுக்கும் தலைகுனிவை ஏற்படுத்துகிற விஷயம் இது.
[ஆசிய-ஆப்பிரிக்க பட விழாவில் "வீரபாண்டிய கட்டபொம்மன்" திரைக்காவியத்திற்காக ஆசிய-ஆப்பிரிக்க கண்டங்களின் சிறந்த நடிகர் விருது(1960), அமெரிக்க நாட்டின் நியூயார்க் மாநிலத்தில் உள்ள நயாகரா நகரின் ஒரு நாள் கௌரவ மேயர்(1962), மாவீரன் நெப்போலியன் உருவாக்கிய விருதான பிரான்ஸ் நாட்டின் மிக மிக உயர்ந்த செவாலியே விருது(1995) முதலிய உலகப்பெரும் விருதுகளை பெற்றவர் நமது நடிகர் திலகம் என்பது உலகறிந்த விஷயம்].
நகைச்சுவைச் சக்கரவர்த்தி நாகேஷ், இந்திய அரசின் எந்தவொரு அங்கீகாரமும் பெறாமல் 2009-ல் அமரரானார். இந்தியன் மேலும் ஒரு முறை தலைகுனிந்தான். தற்பொழுது 2011 தொடக்கத்திலும், மெல்லிசைச் சக்கரவர்த்திக்கு 'பத்ம' விருது வரும் என எதிர்பார்த்து வழக்கம் போல் [தாங்கள் மிகச் சரியாக எழுதியது போல்] 'பத்ம' நாமம் பெற்றிருக்கும் நிலையில், இந்தியன் மீண்டும் கூனித் தலை குனிகிறான். ஒன்றே ஒன்று மட்டும் புரியாத புதிராக உள்ளது. இசையுலக பிரம்மனாக அவர் இசையமைத்த படைப்புகளையெல்லாம் பாடிய பெரும்பாலானோருக்கு பெரும்விருதுகள் வழங்கப்பட்டு விட்டன. படைப்பாளிக்கு மட்டும் ஏன் இன்னும் ஒரு விருது கூட வழங்கப்படவில்லை. இந்த ஆண்டிலேயே "தாதா சாகேப் பால்கே விருது" வழங்கியாவது பாரத மணித்திருநாடு, இசையுலக மாமணிக்கு இழைத்த கொடுந்தவறுக்கு பரிகாரம் தேடிக் கொள்ளட்டும்.
வருத்தத்துடன்,
பம்மலார்.