Quote:
சிவாஜி சமூக நலப் பேரவை தலைவர் கே.சந்திரசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
நேற்று முன்தினம் 14-ந்தேதி நடைபெற்ற ஒரு சினிமா விழாவில் பேசிய நடிகர் சத்யராஜும். கமலா தியேட்டர் அதிபர் வி.என். சிதம்பரமும், நடிகர் திலகம் சிவாஜி கணேசனைப் பற்றி தவறான தகவலைக் கூறியுள்ளனர்.
நடிகர் விஜய் அரசியலுக்கு வரும் விஷயம் குறித்து கருத்துத் தெரிவித்த போது அரசியலில் சிவாஜி தோற்றவர், எனவே அவரை முன்னுதாரணமாகக் கொண்டு அரசியலுக்கு வரக் கூடாது என்று நடிகர் திலகம் சிவாஜி பற்றி அவதூறாகப் பேசியுள்ளனர்.
இது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். மேடையில் உள்ளவர்களைப் புகழ வேண்டும் என்று நினைத்தால் எது வேண்டுமானாலும் புகழ்ந்து கொள்ளட்டும். ஆனால், மறைந்த நடிகர் திலகம் போன்றோரை வீணாக வம்புக்கு இழுத்தால் லட்சோபசட்சம் சிவாஜி ரசிகர்கள் கொதித்தெழுவார்கள்.
பெரியார், அண்ணா, காமராஜர் காலத்திலிருந்து அரசியலில் ஈடுபட்டு பலரை ஆளாக்கியவர், உருவாக்கியவர் சிவாஜி. அவர் ஒரு தேர்தலில் தான் தோல் வியடைந்தாரே தவிர அரசியலில் தோற்கவில்லை. அப்படி அவர் அரசியல் தோற்றவராக இருந்தால், தேர்தல் தோல்விக்குப் பிறகு, இந்தியாவை ஆண்டு கொண்டிருந்த ஒரு கட்சியின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டிருக்க மாட்டார்.
திரையுலகிலும் சரி, அரசியல் உலகிலும் சரி, இவரால் பயனடைந்தவர்கள் பலர். யாரையும் அழிப்பது, கவிழ்ப்பது போன்ற சூது? வாது தெரியாதவர் சிவாஜி. திரையில் நடிகர் திலகமாக ஜொலித்த சிவாஜிக்கு அரசியல் மேடையில் நடிக்கத் தெரியாது. தான் சம்பாதித்த பணத்தில் கட்சி நடத்தியவர்.
அவரை முன்னுதாரணமாகக் கொண்டு அரசியலுக்கு வந்தாலே அரசியல் ஒரு சாக்கடை என்ற அவப் பெயர் நீங்கும். ஆனால், வெற்று விளம்பரங்களையும், வாய்ச் சவடால் பேச்சுக்களையும் நம்பும் சத்யராஜ், போன்றவர்களுக்கு வேண்டுமானால் இது தவறாகத் தோன்றலாம்.
ஆனால், எங்களைப் போன்ற லட்சோபலட்சம் சிவாஜி ரசிகர்களுக்கும், அரசியலைக் கூர்ந்து நோக்கும் நடுநிலையாளர்களுக்கும் இந்த உண்மை தெள்ளத் தெளிவாகத் தெரியும்.
மேடையில் வீராவேசமாகப் பேசிவிட்டு, வீட்டுக்குள் பதுங்கிக் கொள்ளும் நடிகர் சத்யராஜ் போன்றோருக்கு, உள்ளதைச் சொல்வேன், சொன்னதைச் செய்வேன், வேறொன்றும் தெரியாது என்று திரையில் மட்டுமல்ல, சொந்த வாழ்க்கையிலும் வாழ்ந்து காட்டி மறைந்த எங்கள் நடிகர் திலகம் பற்றி குறை கூறுவதற்கு எந்த அருகதையும் கிடையாது.
இனியும் அவ்வாறு தெரியாமல் அவதூறாகப் பேசினால், நடிகர் திலகம் சிவாஜி சமூக நலப் பேரவை அவர்களக்கு எதிராக போராட்டம் நடத்தும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
மாலை மலர் இன்றைய இதழில் வெளிவந்துள்ள சந்திர சேகரின் மறுப்பறிக்கை பாராட்டத் தக்கது. இது தொடர்பாக அங்கே இடப்பட்டுள்ள என்னுடைய பதில் பதிவு
Quote:
நண்பர் சந்திரசேகர் கூறியது முற்றிலும் சரி. நடிகர் திலகம் தோற்றது தேர்தலில் தானே தவிர, அரசியலில் அல்ல. ஆழமாக இறங்கி கருத்துக்களைக் கூறினால் பலரது மனம் புண்படும். நடிகர் திலகம் தனக்காக வாக்குக் கேட்க வில்லை. சத்யராஜின் தலைவரும் மறைந்த முதல்வருமான எம்.ஜி.ஆர். மறைந்த போது அவரது கட்சி சிதறக் கூடாது என்கிற எண்ணத்தில் எம்.ஜி.ஆரின் துணைவியார் ஜானகி அம்மையாருக்கு உதவிக் கரம் நீட்டினார். அது மட்டுமல்லாமல் அதற்காக தான் காலம் காலமாய் உழைத்த காங்கிரஸ் பேரியக்கத்தை விட்டே விலகினார். தமிழக அரசியல் வரலாற்றில் கொள்கை அடிப்படையில் இன்னொரு இயக்கத்திற்காக தன் இயக்கத்தை விட்டு விலகி, ஆதரவுக்கரம் நீட்டிய ஒரே மனிதர் நடிகர் திலகம். அன்றைய கால கட்டத்தில் அலைஅலையாக நடிகர் திலகத்தை சந்தித்து தம்முடைய நன்றியை உணர்ச்சிப் பெருக்கால் கொட்டிய ஏராளமான எம்.ஜி.ஆர் ரசிகர்களைக் கேட்டுப் பாருங்கள், அவர்களது மனசாட்சியைக் கேட்டுப் பாருங்கள். சத்யராஜாகட்டும் யாராகட்டும், தமிழக அரசியல் வரலாற்றினை முழுதும் தெரிந்து கொண்டு அதன் பிறகு நடிகர் திலகத்தின் அரசியலைப் பற்றிப் பேச வாருங்கள். அப்படி வரும் போது உங்களையறியாமலேயே உங்கள் உதடுகள் அந்த உயர்ந்த மனிதரைப் பற்றிப் புகழ்ந்து பேசும்.
அன்புடன்