என் வாழ்க்கையின்
முதல் வெளிச்சத்தை...
1969 இல்...
'ராஜா' தியேட்டர் இருட்டில் கண்டு பிடித்தேன்!'
'ஒளி விளக்கு'...
நான் பார்த்த முதல் எம்.ஜி.ஆர் படம் !
ஒரு நடுத்தரக் குடும்பத்தின் தடுமாற்றம்
என்று இருந்த என்னை...
நம்பிக்கை என்னும் தடம் மாற்றி...
வாழ்க்கையின் முதல் பிடிப்பைத் தந்தவர்...
நீங்கள் தான்!
நாத்திகராக உங்களை நீங்கள்
அடையாளங் காட்டினாலும்...
உண்மையான ஆன்மீகம் எது ?என்பதை
எனக்குக் கற்றுத் தந்தது...
உங்கள் வாழ்க்கை தான்!
ஒரு தெய்வத்தால் மட்டுமே
தரக் கூடிய ஆறுதலை...
உங்கள்...
'என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே'
எனக்குத் தந்திருக்கிறது.
ஒரு குருவினால் மட்டுமே
வரக் கூடிய ஞானத்தைஉங்கள்...
'ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்'
பாடல்எனக்கு அருளியிருக்கின்றது.
ஒரு தாயிடமிருந்து வரக் கூடிய
கனிவையும் அரவணைப்பையும்
'செல்லக் கிளியே மெல்லப் பேசு'
எனக்கு அள்ளித் தந்தது.
ஒரு தந்தையிடமிருந்து பெறக்...
கூடிய தைரியத்தை
'வெள்ளி நிலா முற்றத்திலே'
பாடல்எனக்குச் சொல்லித் தந்தது.
'உன்னை அறிந்தால்..' பாடலைக் கேட்டதால் தான்
எனக்குள் உயர்ந்து நின்ற
சோதி மரத்தையான் உணர ஆரம்பித்தேன்.
'நாளை நமதே' பாடலைக் கேட்டதால் தான்
எனது பாலைகளையும் சோலைகளாக..
மாற்றும்'அற்புதம்' அறிந்து கொண்டேன்.
'உலகம் பிறந்தது எனக்காக'
என்று ஒலிக்க ஒலிக்க...
உரிமை கொண்டாடி ரசிக்கும்
உற்சாக குணம் என்னுள்
துள்ளி வளர்வதை
உணர்ந்து சிலிர்த்தேன்.
உங்கள் பாடல் காட்சிகளில்
இரு கையுயர்த்தி நீங்கள்
'இமய' தைரியம்தந்திராவிட்டால்...
நேற்றைய என் கனவுகள்
காவியுடை பூண்டிருக்கும்.
'எங்கே போய் விடும் காலம்?!
' என்றுநீங்கள் கரம் உயர்த்திப் பாடிய போது...
பொறுமை காத்து...ஆனால்
தலை உயர்த்திக் காத்திருந்தன
எனது திறமைகள்.
உங்கள்...கம்பு வீசும் சாகசங்களில்
பித்தனானேன்.
கத்திச் சண்டைகளில்
முத்தியடைந்தேன்!
'நல்ல நேரம்' படத்தில்சுருண்ட
முடி நெற்றியில் சுந்தரம் கூட்ட..
மஞ்சள் உடையுடன் மலையருவி
போல் துள்ளிக் குதித்துமாடிப் படியிறங்கிய
உங்கள் அழகில்.....
நான் வானம் ஏறினேன்!
கிட்டத்தட்ட் 12 ஆண்டுகளுக்குப் பிறகு
'ஒளி விளக்கு'மீண்டும் 'ராஜா'வில்..
ஏற்றி வைக்கப்பட்ட போது
எனக்கும் என் நண்பனுக்கும் [ நெல்லியடி முரளிதரன் ]
இடையே..ஒரு நூதனமான போட்டி!
'தைரியமாகச் சொல் நீ மனிதன் தானா?'
பாடல் காட்சியில் வரும்
நான்கு எம்.ஜி.ஆரில்
எந்த எம்.ஜி.ஆர் அதிக அழகு?'
இந்தக் கேள்விக்கு விடை காண்பதற்காகவே....
ஒளி விளக்கை மீண்டும் மீண்டும் பார்த்தோம்.
சந்தோஷமாகத் தோற்றோம்!
உங்கள் கணக்கில் வரவு வைத்திருக்க..
வேண்டிய வசந்தங்களை எல்லாம்
வறுமை...விரட்டியடித்திருக்கிறது.
உங்கள் இளமைக் காலத்தின்
எண்பது சத வீதத்தை...விதி...வீணாக்கி இருக்கிறது.
உங்கள் கனவுகளுக்குக் கூடமறுக்கப்பட்டது களம்.
கடவுள் மீதான நம்பிக்கையை நீங்கள்
கவிழ்த்துப் போடும் அளவுக்கு
உங்களைப் பந்தாடியிருக்கிறது
கடந்த காலம்.
பெரிய பெரிய திறமைகளை..
வைத்துக் கொண்டே..
சின்னச் சின்ன வாய்ப்புகளுக்கும் கூடநீங்கள்..
'பகீரதப் பிரயத்தனம்' செய்ய வேண்டியிருந்தது.
உங்கள் துவக்கப் பாதைகளில் எல்லாம்
தூவப்பட்டன அவமான முட்கள்.
உங்கள் கலைப் பயணத்தின் பாதித் தூரம்..
வரைக்கும்'சூழ்ச்சி'யெனும் தடைக் கற்கள்.
பாவம்....உங்கள் 'மன வலிமை'யை
அவை உணரத் தவறின.
தடைக் கற்கள்-
உங்கள் கால்களுக்கும்அவமானங்கள்-
உங்கள் மனதுக்கும் உலுக்க முடியாத உறுதியைத் தந்தன!
ஏளனங்கள் எல்லாம் உங்களை..
ஒரு வேழமாய் மாற்றின!
எதிர்ப்புகள் எல்லாம் உங்கள் ஏணியாய் உயர்ந்தன!
ராமச்சந்திரன் முகவரி தேடி வந்துவட்டியும்
முதலுமாகஅதிசயங்கள் நிகழ்த்த..
ஆரம்பிக்கிறாள்அதிர்ஷ்ட தேவதை!
'ஒரு போதும் தோற்காது உண்மை உழைப்பு'
என்று...உங்கள் வெற்றி வாழ்க்கை
விளக்கு ஏந்தி வந்துவிளக்கம் சொல்கிறது.
'யாம் பெற்ற துன்பம்
இரு மடங்காகயாம் காண்பவர்
எல்லாம் பெறுக...
'என்று அலையும்சேடிஸ்ட்டுகள் செறிந்த உலகில்...
'யாம் பெற்ற துன்பம் இனி யாருக்கும் வேண்டாம்'
என்றுசத்துணவு தந்தீர்கள்.
இல்லாதவரை எல்லாம் தேடிப் பிடித்து
அவர்கள் தேவைள் படித்தறிந்து
அதனிலும் மேலாகஅள்ளித் தந்தீர்கள்.
போனால் போகட்டும் என்று கொடுத்தால் கூட..
அளந்து கொடுக்கின்ற சிறிய உலகில்
கணக்குப் பார்க்காமல் வாரிக் கொடுத்தது
கண்டிக் கர்ணனின் 'பெரிய' மனம்.
உங்களைப் பழித்தவர்களாக இருந்தாலும்
அவர்கள் ஒடிந்து நின்ற காலங்களில்
ஓடிப் போய் உதவியிருக்கிறீர்கள்.
ஆரம்ப காலங்களில் உங்கள்கைக்கு
எட்டிய வாய்ப்புகளை...
வாய்க்கு எட்டாமல்தட்டி விட்டவர்கள்...
பின்பு..வாழ்ந்து கெட்டு....
உங்கள்
வீட்டுக் கதவை வந்து தட்டிய போது...
உங்கள் மனக் கதவையும் அகலமாகவே
அவர்களுக்காகதிறந்து வைத்தீர்கள்.
இறப்பு என்பது...இயற்கையின் நிஜம்.
ஆனால்...என்னைப் பொறுத்தவரையில்...
இந்த இருவர் மரணமும்
உண்மைக் கலப்பற்ற பொய்கள்!
ஒருவர்...என் தந்தை!
மற்றவர்...நீங்கள்!....
Thanks - thiru யாழ் சுதாகர்