எங்க மாமா" PART - II)
'நான் தன்னந்தனிக்காட்டு ராஜா' பாடலில் நடிகர் திலகம் வழக்கத்துக்கு மாறாக தொப்பியணிந்து நடித்திருப்பார். முன்னிசையும் (PRELUDE), இடையிசையும் (INTERLUDES) நம் மனத்தை மயக்கும்.
அடுத்தது தன்னுடைய குழந்தைகள் இல்லத்தில் நடிகர் திலகம் பாடும் 'செல்லக்கிளிகளாம் பள்ளியிலே' என்ற பாடல். 'ல...ல...ல... ல... ல...ல..லா' என்ற ஆலாபனையுடன் டி.எம்.எஸ். பாடத்துவங்கும்போதே நம் மனதை அள்ளிக்கொண்டு போகும்.
செல்லக்கிளிகளாம் பள்ளியிலே
செவ்வந்திப்பூக்களாம் தொட்டிலிலே
என் பொன் மணிகள்... ஏன் தூங்கவில்லை
கன்றின் குரலும் கன்னித்தமிழும்
சொல்லும் வார்த்தை அம்மா.. அம்மா
கருணைதேடி அலையும் உயிர்கள்
உருகும் வார்த்தை அம்மா.. அம்மா
எந்த மனதில் பாசம் உண்டோ
அந்த மனமே அம்மா... அம்மா
இன்பக்கனவை அள்ளித்தரவே
இறைவன் என்னைத் தந்தானம்மா
என் பொன்மணிகள் ஏன் தூங்கவில்லை
தந்தை ஒருவன் அந்த இறைவன்
அவனும் அன்னை இல்லாதவன்
தன்னைத்தேடி ஏங்கும் உயிர்கள்
கண்ணில் உறக்கம் கொள்வானவன்
பூவும் பொன்னும் பொருந்தி வாழும்
மழலை கேட்டேன் தந்தானவன்
நாளை உலகில் நீயும் நானும்
வாழும் வழிகள் செய்வானவன்
என் பொன் மணிகள் ஏன் தூங்கவில்லை.
எத்தனை முறை கேட்டாலும் கிறங்க வைக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று.
இந்தப்பாடல் படத்தில் இரண்டு முறை வரும். மகிழ்ச்சியான சூழ்நிலையில் முதலில் பாடிய இதே பாடலை, சேகரை பணக்காரர் ஒருவருக்கு தத்துக் கொடுத்தபின்னர் சோகமே உருவாக இருக்கும் குழந்தைகளை சமாதானப்படுத்த மீண்டும் ஒருமுறை சோகமாக பாடுவார். இரண்டுமே மனதைத்தொடும்.
பாலாஜியின் பிறந்தநாள் விழாவில், வெண்ணிற ஆடை நிர்மலாவுடன் நடிகர் திலகம் பாடும்
"சொர்க்கம் பக்கத்தில்...
நேற்று நினைத்தது கைகளில் மலர்ந்தது பெண்ணின் வண்ணத்தில்
பெண்ணின் வண்ணத்தில்...
நாளை வருவது இன்றே தெரிந்தது மின்னும் கண்ணங்களில்
சிந்தும் முத்தங்களில்"
மஞ்சள் நிற சேலையில் நிர்மலாவும், டார்க் மெரூன் கலர் ஃபுல் சூட்டில் நடிகர் திலகமும் ஆடும் இந்த காட்சி நம் இதயங்கலை கொள்ளை கொள்ளும். நான் திரும்ப திரும்ப சொல்வது ஒன்றுதான். இக்காட்சிகள் மிக அருமையாக அமைய காரணம் அப்போதிருந்த அவருடைய ஒல்லியான அழகு உடம்பு. அதற்கேற்றாற்போல அமைந்த அழகான நடன அசைவுகள். இன்றைக்குப் பார்த்தாலும் அந்தப்பாடல் நம் மனதை அள்ளும். இப்பாடல் டி.எம்.எஸ்ஸும் ஈஸ்வரியும் பாடியிருப்பார்கள். (இப்பாடலுக்காக நடிகர்திலகம் 'அக்கார்டியனை' தோளில் மாட்டிக்கொண்டு வாசிப்பது போல உடலை பெண்ட் பண்ணி நிற்பதுதன் அன்றைய 'தினத் தந்தி' பத்திரிகையில் முழுப்பக்க விளம்பரம். என் அப்பாவுடைய ஃபைலில் இருக்கிறது).
ஓட்டலில் ஜெயலலிதா ஆடும் 'பாவை பாவைதான்... ஆசை ஆசைதான்' என்ற பாடலில் அதிகப்படியான இசையை அள்ளிக்கொட்டியிருப்பார் மெல்லிசை மன்னர். வயலின், கிடார், பாங்கோஸ் யாவும் ஒன்றையொன்று போட்டி போட்டுக்கொண்டு விளையாடும்.
நடிகர் திலகத்துக்கும் ஜெயலலிதாவுக்கும் டூயட் பாடல் வேண்டுமே என்ற (தேவையில்லாத சித்தாந்தத்தில்) உருவான "என்னங்க... சொல்லுங்க... இப்பவோ எப்பவோ" என்ற பாடல் இப்படத்திற்கு ஒரு திருஷ்டிப்பொட்டு. கொஞ்சம் கூட மனதைத் தொடவில்லை.
கடைசி பாடல்... அய்யோ, நம மனதை அள்ளிக்கொண்டு போகும். புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு ஓட்டலுக்கு ஜெயலலிதாவுடன் வரும் பாலாஜி, நடிகர் திலகத்தை ஒரு பாடல் பாடும்படி வற்புறுத்த, இவர் தன்னுடைய சோகத்தையெல்லாம் கலந்து பாடும் இந்த பாடல் இன்றைய இளைஞர்களுக்கும் கூட ஃபேவரைட்.
'பியானோ' வாசித்துக்கொண்டே பாடுவது போன்ற பாடல் இது. டி.எம்.எஸ். அண்ணா பற்றி சொல்லணுமா. அவருக்கு இந்த மாதிரிப் பாடல்களெல்லாம் அல்வா சாப்பிடுவது மாதிரி. பிண்ணியெடுத்திருப்பார். எத்தனை ஆழமான வரிகள்.
எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்
நான் வாழ யார் பாடுவார்
என் பாடல் நான் பாட பலர் ஆடுவார்
இனி என்னோடு யார் ஆடுவார்
பூப்போன்ற என் உள்ளம் யார் கணடது
பொன்னான மனமென்று பேர் வந்தது
வழியில்லாத ஊமை எது சொன்னாலும் பாவம்
என் நெஞ்சும் என்னோடு பகையானது
கண்ணீரை நான் எங்கு கடன் வாங்குவேன்
அது கடனாக வந்தாலும் தடை போடுவேன்
நியாயங்கள் தெளிவாக நாளாகலாம்
நான் யாரென்று அப்போது நீ காணலாம்
உன் பார்வை என் நெஞ்சில் விழுகின்றது
உன் எண்ணம் எதுவென்று தெரிகின்றது
நான் இப்போது ஊமை மொழியில்லாத பிள்ளை
என்றேனும் ஓர் நாளில் நான் பேசலாம்
உன் பாதை நீ கண்டு நீ வாழலாம்
இனி என் பாதை நன் கண்டு நான் போகலாம்
எங்கே நீ சென்றாலும் சுகமாகலாம்
நான் எப்போதும் நீ வாழ இசை பாடலாம்
எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்
நான் வாழ யார் பாடுவார்
என் பாடல் நான் பாட பலர் ஆடுவார்
இனி என்னோடு யார் ஆடுவார்
பாடலின்போது நடிகர் திலகம் மற்றும் ஜெயலலிதா கண்களில் மட்டுமா கண்ணீர்?. இல்லை நம் கண்களிலும்தான். பாடல் வரிகளின் பொருளை கொஞ்சம் கொஞ்சமாக உள்வாங்கிக்கொள்ளும் ஜெயலலிதாவின் முகபாவமும் அருமையாக இருக்கும்.
பியானோ வாசிப்பது போல நடிக்க நடிகர் திலகத்துக்கு சொல்ல வேண்டுமா?. ஏற்கெனவே பாசமலரில் 'பாட்டொன்று கேட்டேன்', புதிய பறவையில் 'உன்னை ஒன்று கேட்பேன்', 'பார்த்த ஞாபகம் இல்லையோ' (இரண்டாவது முறை), எங்க மாமாவுக்குப்பின்னர் வந்த கௌரவத்தில் 'மெழுகு வர்த்தி எரிகின்றது' போன்ற பாடல்களுக்கு அருமையாக பியானோ வாசிப்பது போல அபிநயம் செய்திருப்பார்.
("நடிகர் திலகத்தைப் பொறுத்தவரை எந்த வேஷமானாலும், அது நாதஸ்வர வித்வானோ அல்லது பிச்சைக்காரனோ, எதையும் முழுமையாக புரிந்து, முழுமையாக பயிற்சி எடுத்து, முழுமையாக செய்து முடிப்பவர். அவர் செய்து முடித்தபின், அது சம்மந்தமான கலைஞர்கள் அவரைப் பாராட்டும்படி இருக்குமே தவிர, குறை சொல்லும்படி இருக்காது" - பரத நாட்டியக் கலைஞர் டாக்டர் பத்மா சுப்ரமண்யம்).
நடிகர் திலகம், ஜெயலலிதா, வெண்ணிற ஆடை நிர்மலா, பாலாஜி, சோ, தேங்காய் சீனிவாசன், ஏ.கருணாநிதி, ரமாபிரபா, கி.கே.சரஸ்வதி, ஓ.ஏ.கே.தேவர், செந்தாமரை, டைப்பிஸ்டு கோபு இப்படி பெரியவர்கள் மட்டுமல்லாமல், அப்போதிருந்த குழந்தை நட்சத்திரங்கள் அத்தனை பேரும் (பேபி ராணி நீங்கலாக) பிரபாகர், சேகர், ராமு, ஜெயகௌசல்யா, ரோஜாரமணி, ஜிண்டா, சுமதி இன்னும் பெயர் தெரியாத குழந்தை நட்சத்திரங்களும் நடித்திருந்தனர். நடிகர் திலகத்தின் படங்களிலேயே முழுக்க முழுக்க குழந்தைகளோடு நடித்த படம் இது.
அப்போது நடிகர்திலகத்தின் பல படங்களை வரிசையாக இயக்கி வந்த இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தர் இப்படத்தையும் இயக்கியிருந்தார். வசனம் குகநாதன் எழுதியிருந்தார். மாருதிராவ் ஒளிப்பதிவு செய்திருந்தார் (கிளைமாக்ஸில் ரயில் தண்டவாளத்தின் குறுக்கே நிற்கும் வேனை ஜீப் இடித்துத்தள்ளிவிட்டு சட்டென்று ஜீப் ரிவர்ஸில் வர, உடனே ரயில் கடந்து செல்லும் காட்சி தியேட்டரில் பலத்த கைதட்டல் பெற்றது. ஒளிப்பதிவும் எடிட்டிங்கும் அருமை).
நான் துவக்கத்தில் சொன்னபடி, நடிகர் திலகத்தின் சிறந்த பொழுதுபோக்குப் படங்களில் 'எங்க மாமா'வுக்கு எப்போதும் ஒரு சிறப்பிடம் உண்டு.
"எங்க மாமா" பற்றிய என்னுடைய கருத்துக்களைப் படித்த நல்ல இதயங்களுக்கு நன்றி.
From the posting of Saradha Madam - the analysis of NT's Fantastic Movie Enga Mama