A Recap from the old posting of Mr Murali
செல்வம் - Part I
தயாரிப்பு: வி.கே.ஆர். பிக்சர்ஸ்
திரைக்கதை வசனம் இயக்கம்: கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்
வெளியான நாள்: 11.11.1966
[இந்தப் படத்தைப் பற்றி NOV ஏற்கனவே ஒரு விமர்சனம் எழுதியிருப்பதால் இங்கே சுருக்கமாக கதை. NOV எழுதியதன் லிங்க் http://forumhub.mayyam.com/hub/viewt...asc&start=675].
ஊரில் பெரிய பணக்கார குடும்பத்தின் ஒரே வாரிசு செல்வம். தந்தை இல்லை. தாய் மட்டுமே. தாய் ஜாதகத்திலும் ஜோஸ்யத்திலும் மிகுந்த நம்பிக்கை உடையவர். ஜோஸ்யர் கிழிக்கும் கோட்டை தாண்டாதவர். வெளிநாடு சென்று படித்து விட்டு வரும் செல்வம் சொந்த ஊரில் ஒரு உர தொழிற்சாலையை நிறுவி வெளிநாட்டு நிபுணரை வரவழைத்து தொழிலாளிகளுக்கு பயிற்சியளிக்கவும் ஏற்பாடு செய்கிறான்.
செல்வத்திற்கு இரண்டு மாமன்கள். ஒருவர் செல்வம் வீட்டிலேயே இருக்கிறார். அவருக்கு ஒரு மகள். அடுத்த மாமா அதே ஊரில் தனியாக வசிக்கிறார். அவர் மகள் வள்ளி. செல்வமும் வள்ளியும் ஒருவரை ஒருவர் மிகவும் நேசிக்கிறார்கள். அது அனைவருக்கும் தெரியும். செல்வத்தின் அம்மா இவர்கள் இரண்டு பேரின் ஜாதகங்களை ஜோஸ்யரிடம் காண்பிக்க இந்த திருமணம் நடந்தால் ஒரு வருடத்தில் செல்வம் இறந்து விடுவான் என்று சொல்லி விடுகிறார். செல்வத்தின் தாய் வள்ளியிடம் சென்று தன் மகனை மறந்து விடும்படி சொல்கிறாள். செல்வம் வந்து கேட்டால் அவனை பிடிக்கவில்லை என்று சொல்ல சொல்கிறாள். அவளும் அப்படியே சொல்ல செல்வம் மிகுந்த கோபமும் வருத்தமும் அடைக்கிறான்.
ஆனால் செல்வத்தால் வள்ளியை மறக்க முடியவில்லை. ஒரு வேகத்தில் அவளையும் கூட்டிக் கொண்டு கோவிலுக்கு செல்ல அங்கே வள்ளி திருமணம் நடைபெறப் போகும் நேரம். முருகன் வள்ளி திருமாங்கல்யத்தை எடுத்து செல்வம் வள்ளி கழுத்தில் கட்டி விடுகிறான். முதலில் அதிர்ச்சி அடைந்தாலும் செல்வத்தின் தாய் அவர்களை ஏற்றுக் கொள்கிறாள். மீண்டும் ஜோஸ்யரை நாட அவர் ஒரு பரிகாரம் சொல்கிறார். அதாவது கணவன் மனைவி ஒரு வருடம் சேராமல் இருந்தால் இந்த தோஷம் நீங்கி விடும் என்று சொல்ல செல்வமும் வள்ளியும் அதை ஏற்றுக் கொள்கின்றனர். வள்ளி அவள் வீட்டிற்கு சென்று விடுகிறாள்.
ஜோஸ்யர் மேலும் ஒரு விஷயம் சொல்கிறார். செல்வத்திற்கு இரண்டாம் கல்யாணம் செய்து வைத்தால் இந்த தோஷம் நிரந்தரமாக விலகி விடும் என்று. செல்வத்தின் தாய் வீட்டோடு இருக்கும் தன் தம்பியிடம் வெளியூரிலிருக்கும் அவன் மகளை வரவழைக்க சொல்கிறாள். உடலளவில் வளர்ந்திருந்தாலும் மனதளவில் வயதிற்கேற்ற முதிர்ச்சி இல்லாத அந்த மாமன் மகளின் அருகாமை செல்வத்தை சற்றே சலனப்படுத்த அவன் அதிலிருந்து மீள்கிறான். செல்வத்தை பார்த்துக் கொள்ள ஊரிலியே ஒரு பெரிய டாக்டர் ஏற்பாடு செய்யப்படுகிறார். இளமை உணர்வுகளால் தூண்டப்படும் செல்வம் வள்ளியை காண அவள் வீட்டிற்கு செல்ல அவள் அவன் செய்துக் கொடுத்த சத்தியத்தை நினைவுபடுத்தி அவனை திருப்பி அனுப்பி விடுகிறாள்.
வீட்டில் இருக்க பிடிக்காமல் தொழிற்சாலை கெஸ்ட் ஹௌசில் டாக்டருடன் போய் தங்குகிறான் செல்வம். அங்கே டாக்டரிடம் தன் நிலைமையைப் பற்றி விவாதிக்கிறான். மூட நம்பிக்கைகள வேண்டாம் என்றும் நேர் வழியில் சென்றால் நிச்சயம் நன்மைகளே விளையும் என்கிறார் டாக்டர். அடுத்த அறையில் வெளிநாட்டு நிபுணரும் அவர் மனைவியும் நெருக்கமாக ஆடும் நடனம் செல்வத்தின் உணர்வுகளை தூண்டி விட தன் மனைவியை தேடி போகிறான். முதலில் தடுக்கும் வள்ளி பின் செல்வத்தின் நிர்பந்தத்தினால் உடன்படுகிறாள். செல்வத்தை தேடி வரும் டாக்டர் மட்டும் விஷயத்தை தெரிந்துக் கொள்கிறார். செல்வத்தின் வீட்டில் இருக்கும் பெண்மணி வள்ளி வீட்டு வாசலில் கார் நிற்பதையும் செல்வமும் டாக்டரும் வள்ளி வீட்டிலிருந்து வெளியே வந்து கார் ஏறி செல்வதை பார்த்துவிட்டு செல்வத்தின் தாயிடம் போய் சொல்கிறாள். செல்வத்தின் தாய் வள்ளியை மீண்டும் அவர்கள் வீட்டிற்கே கூட்டி செல்கிறாள்.
இதற்கிடையில் வள்ளி கர்ப்பமடைக்கிறாள். இதை செல்வத்தின் தாய்க்கு தெரியாமல் மறைக்கும் பொறுப்பு டாக்டரின் தலையில் விழுகிறது. ஜோஸ்யர் கொடுத்த ஒரு வருட கெடு முடியும் நாள் நெருங்க நெருங்க செல்வத்திற்கும் பயம் தோன்ற ஆரம்பிக்கிறது. ஜாதகத்தில் நம்பிக்கை என்பதை விட தாய்க்கு செய்து கொடுத்த சத்தியத்தை மீறி விட்டோமே அதன் மூலம் ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் என்ன செய்வது என்று மனதளவில் குழம்ப குழம்ப, பரிகாரங்களும் பூஜைகளும் முழு வீச்சில் நடைபெற அந்த கெடுவின் கடைசி நாளும் வர அந்த இறுதி நிமிடங்கள், அந்நேரம் அரேங்கேறும் புதிய திருப்பங்கள், ஜோசியம் பலித்ததா, செல்வத்தின் நிலைமை என்ன வள்ளியின் நிலை என்ன என்பதை வெள்ளித்திரையில் காண்க.