ஸ்ரீதரை மிகச் சிறந்த திரைக்கதாசிரியராக அறிமுகப்படுத்திய படம் 1954-ல் வெளியான ‘எதிர்பாராதது’ திரைப்படம். சி.எச்.நாராயணமூர்த்தி இயக்கிய இந்தப் படத்தில் சிவாஜியும் பத்மினியும் காதலர்கள். நாகையா சிவாஜியின் தந்தை. மனைவியை இழந்தவர்.
இரண்டாம் தாரமாக பத்மினியை மணந்துகொள்கிறார். இப்போது சிவாஜிக்கு பத்மினி சிற்றன்னை யாகிவிடுகிறார். நாகையா திடீரென இறந்துபோக, ஒருநாள் சிவாஜி, பத்மினியைத் தொடுகிறார். அப்போது அதிர்ச்சியடையும் பத்மினி சிவாஜியை வெறிகொண்டு அடிப்பார். இந்தக் காட்சி ரசிகர்களை உலுக்கியது என்றுதான் சொல்ல வேண்டும். ரசிகர்களை “கலிகாலம்...!” என்று சொல்லவைத்தது.
இந்தக் காட்சி படமானபோது பத்மினி உணர்ச்சிவசப்பட்டு சிவாஜியை நிஜமாகவே அடித்த அடியில் அவருடைய கன்னம் வீங்கி விட்டது. அந்தக் காட்சி முடிந்ததும் கிளம்பிப்போன சிவாஜி இரண்டு நாட்கள் படப்பிடிப்புக்கே வரவில்லை. மூன்றாவது நாள் சிவாஜியைப் பார்க்க பத்மினி அவரது வீட்டுக்குப் போனார். சிவாஜியை சமாதானம் செய்து அவருக்கு புத்தம் புது ஃபியட் கார் ஒன்றை வாங்கிப் பரிசாக அளித்தார். அதுதான் சிவாஜியின் முதல் கார். படத்தின் கதை மட்டுமல்ல படப்பிடிப்பில் நடந்த சம்பவமும், சிவாஜிக்கு முதல் கார் கிடைத்ததும் கூட எதிர்பாராமல் நடந்ததுதான்.
- தி இந்து .