Quote:
போதைக்கு அடிமையாகி விடக்கூடாது என்பதை வலியுறுத்தி எடுக்கப்பட்ட படம்தான் 'தூங்காதே தம்பி தூங்காதே.' இந்தப் படத்தில் கிளைமாக்ஸ் காட்சி எப்படி அமைக்கப்பட்டது என்பதற்கு சுவையான பின்னணி உண்டு.
ஒருநாள் நான் கேஷ¤வலாக வித்வான் வே. லட்சுமணன் அவர்களைப் பார்த்துப் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அவர் ''நானும் மணியனும் ஒரு ஹிந்திப் படத்திற்காக பத்து லட்சம் ரூபாய் செலவு செய்து ஒரு கிளைமாக்ஸ் காட்சியை எடுத்தோம். ஆனால் படம் சரியாகப் போகவில்லை. எல்லாம் வீணாகிவிட்டது. கிளைமாக்ஸ் காட்சி அருமையாக வந்திருந்தும் என்ன லாபம்? மக்களை அது சென்றடையவில்லையே, உங்களுக்கு வேண்டுமானால் அந்தக் காட்சி பயன்படுமா என்று பாருங்கள்...'' என்றார்.
இதைக் கேட்டதும் எனக்கு ஏதோ பொறி தட்டியது. ''நாங்கள் அந்த கிளைமாக்ஸ் காட்சியைப் பார்க்கலாமா?'' என்று கேட்டேன்.
லட்சுமணன் அவர்கள் உடனே ஏற்பாடு செய்தார். அந்த கிளைமாக்ஸ் எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது.
''இதை எனக்குக் கொடுத்து விடுகிறீர்களா?'' என்று கேட்டேன்.
''தாராளமாகத் தருகிறேன்'' என்று சொன்னவர், அதற்காக எங்களிடமிருந்து ஐம்பதாயிரம் ரூபாய் விலை எதிர்பார்த்தார்.
''ஐம்பதாயிரம் அதிகமாகத் தெரிகிறது'' என்று நான் சொல்ல, ஒருவழியாக முப்பதாயிரம் ரூபாய்க்குப் பேசி முடித்தோம்.
கிளைமாக்ஸ் காட்சி என் கையில் தயாராக இருந்தாலும் 'தூங்காதே தம்பி தூங்காதே'வில் அதை எப்படிச் சேர்ப்பது?
விசுவைக் கூப்பிட்டனுப்பினோம்.
''இந்தக் காட்சியை இந்தப் படத்தில் பொருத்தமாகச் சேர்க்கும் வகையில் செய்யுங்கள்'' என்று கேட்டுக் கொண்டோம்.
கதையில் செந்தாமரை கேரக்டரைப் புகுத்தி அதை அழகாகச் செய்து கொடுத்தார் விசு.
கிளைமாக்ஸ் 'லிங்க்' காட்சியை மட்டும் நாங்கள் பம்பாயில் படமாக்கினோம். எது ஹிந்திப் படம், எது நாங்கள் எடுத்தது என்பது தெரியாத வகையில் உரிய முறையில் எடிட் செய்யப்பட்டது.
'நானாக நானில்லை தாயே' என்று கமல் பாடும் பாடலுக்காகவே ஜமுனாவைத் தாயாகப் போட்டோம்.
'வானம் கீழே வந்தாலென்ன... பூமி மேலே போனாலென்ன?' என்ற பாடலுக்கான காட்சி பதினேழு நாட்கள் படமாக்கப்பட்டது. எந்த கிரா·பிக்ஸ் நகாசு வேலைகளும் செய்யாமல், மிட்சுல் கேமராவால் எல்லா டிரிக் காட்சிகளையும் கேமராமேன் பாபு நேரடியாகவே எடுத்தார்.
கமலுக்கு இரண்டு வேடங்கள். ஒரு வேடத்தை இன்னொரு வேடம் மிஞ்சுகிற மாதிரி கமல் நடிப்பை வெளிப்படுத்தி அசத்தினார்.
படத்தில் 'பென்ச் ·பைட்' ஒன்று வரும். பென்சைத் தூக்கிச் சுழற்றி பிரமாதமாக சண்டை போடும் காட்சி. அதற்கும் உபயம் நல்லி செட்டியாரின் மகன்கள்தான். அவர்கள் தந்த வெளிநாட்டுப் படம் ஒன்றின் டேப்பைப் போட்டுப் பார்த்து, அதன் அடிப்படையில் அந்தக் காட்சி அமைக்கப்பட்டது. அந்தப் படத்தில் இடம் பெற்ற ஹெலிகாப்டர் ஸீன், விசுவின் ஐடியா. கிளைமாக்ஸில் அந்தக் காட்சிக்காக முதலிலேயே ஹீரோ ஹெலிகாப்டரில் வந்திறங்குவது போல காட்சி அமைத்து 'எஸ்டா பிளிஷ்' செய்தோம்.