Originally Posted by
mr_karthik
அன்புள்ள நெய்வேலி வாசுதேவன் சார், (புதிதாக திருவல்லிக்கேணி வாசுதேவன் அவர்கள் வந்திருப்பதால் அடையாளம் தெரிய நெய்வேலியைச் சேர்த்துக்கொண்டேன்)
தங்களின் டூரிங் அனுபவப்பதிவு மிகப்பிரமாதம். அதை அனுபவித்தவர்களுக்குத்தான் அதன் அருமை தெரியும். நானும் அந்த அனுபவத்தைப்பெற்றிருப்பதால், தங்கள் பதிவைப்படிக்கும்போது அப்படியே அந்த காலகட்டத்துக்குச் சென்று விட்டேன். பள்ளி நாட்களில் கோடைவிடுமுறைக்காக கிராமத்துக்கு உறவினர் வீட்டுக்குச்சென்று ஒரு மாதம் தங்கியிருக்கும்போது மாலை நேர சுவாரஸ்யமே இந்த டூரிங் டாக்கீஸ்கள்தான்.
திரையிடப்படும் எல்லாப்படங்களையும் பார்த்து விடுவோம். பெற்றோர் சென்னையிலிருக்க நாங்கள் மட்டும் சென்றிருப்பதால் கண்டிப்பு தண்டிப்பு எதுவும் இல்லாத சுதந்திரம். ஒரு வருஷம் பிரிந்திருந்து ஒருமாதம் மட்டும் சந்திப்பதால், 'பசங்களுக்கு லீவு, பாவம் அனுபவிச்சிட்டுப்போகட்டும்' என்று தாத்தா, பாட்டி, அத்தைகள் அளிக்கும் சுதந்திரமே தனி அலாதி சுகம். டூரிங் டாக்கீஸ் என்றாலே இரண்டு காட்சிகள்தான். நடுவில் கீற்றுக்கொட்டகை போட்டு சுற்றிலும் வேலி. நல்ல காற்றோட்டமாக இருக்கும். ஆபரேட்டர் அறை மட்டும் கல்லால் கட்டப்பட்டு மேலே அஸ்பெஸ்டாஸ் கூறை போடப்பட்டிருக்கும். (தீ விபத்து நேர்ந்தால் பாதிக்காமல் இருக்கவாம்) பக்கத்து நகரத்தில் ரிலீஸாகி ஓடி முடிந்து ஆறு மாதம், ஒரு வருஷம் கழித்துதான் டூரிங் டாக்கீஸுக்கு அந்த படம் வரும். அப்போது பார்க்காதவர்களும், பார்த்திருந்தாலும் மீண்டும் பார்க்க விரும்புவோரும் வருவார்கள், ஒவ்வொரு படமும் அதிக பட்சம் ஒரு வாரம்தான் ஓடும். ஓகோவென்று ஓடி சாதனை புரிந்த படங்கள் மட்டும் இரண்டு வாரங்கள் தாக்குப்பிடிக்கும். அதற்குக்காரணம், ஓடும் நாட்களில் எவ்வளவு பேர் வந்தாலும் டிக்கட் கொடுத்துக்கொண்டே இருப்பதுதான். உள்ளே இடம் பிடித்துக்கொள்வது நம் சாதனை.
கொட்டகைக்கு முன் பெரிய வெளி. அதில் மூங்கில் தடுப்புகளால் அமைக்கப்பட்ட கியூ நிற்கும் இடம், அதன் முடிவில் ஒரு மரப்பெட்டி அதன் முன்பக்கம் டிக்கட் கொடுப்ப்தற்கான ஒரு சின்ன திறப்பு, பின்பக்கம் ஒரு கதவு. டிக்கட் கொடுப்பவர் கையில் டிக்கட்டோடு வந்து அந்தப்பெட்டிக்குள் புகுந்து க்தவை தாழ்ப்பாள் போட்டுக்கொண்டதும், ஆங்காங்கே அமர்ந்து வெட்டிக்கதை பேசிக்கொண்டிருந்தவர்களெல்லாம் வந்து மூங்கில் தடுப்புக்குள் புகுந்துகொள்வார்கள். ஒவ்வொரு மரப்பெட்டிக்கும் வெளியே 40 வாட்ஸ் பல்பு எரிந்துகொண்டிருக்கும். தூரத்தில் இருந்து வரும்போது பல்பு எரிந்துகொண்டிருப்பதைப் பார்த்தால் கவுண்ட்டரில் (?) ஆள் இருக்காரென்று அர்த்தம். விளக்கு அணைக்கப்பட்டிருந்தால் போய்விட்டாரென்று தெரிந்து திரும்பி விடுவார்கள். படம் கால்வாசி ஓடும்வரை டிக்கட் கொடுத்துக்கொண்டிருப்பார்கள். இப்படி மூன்று வகுப்புக்கும் மூன்று கியூ.
கடைசி வகுப்பு தரை டிக்கட். கொட்டகையில் பாதி இடத்தை அடைத்துக்கொண்டிருக்கும். நன்றாக ஆற்று மணல் அடித்து வைத்திருப்பார்கள். கொஞ்சநாளைக்கு ஒருதரம் அள்ளி விட்டு, வேறு மணல் கொட்டுவார்கள். உண்மையில் இதைத்தான் முதல் வகுப்பு என்று சொல்ல வேண்டும். எப்படி வேண்டுமானாலும் படம் பார்க்கலாம். நின்று கொண்டு, உட்கார்ந்து கொண்டு, காலை நீட்டி அமர்ந்துகொண்டு, கூட்டம் குறைந்த நேரங்களில் படுத்துக்கொண்டும் பார்க்கலாம். அடுத்து பெஞ்ச் டிக்கட். முன்பக்கம் உயரம் குறைவானதிலிருந்து போகப்போக உய்ரம் கூடிக்கொண்டே போகும் வகையில் சவுக்குக்ட்டைகளை தரையில் ஊன்றி, அதன்மீது பலகையை நீளமாக ஆணிபோட்டு அடித்து வைத்திருப்பார்கள். ஆட்டவோ அசைக்கவோ முடியாதபடி ஸ்ட்ராங்காக இருக்கும். பின்னால் சாய ஒன்றுமிருக்காது. ரொம்ப நேரம் அமர்ந்தால் முதுகு வலி வந்துவிடும்.
கடைசியாக முதல் வகுப்பு. அது என்ன?. உயரமான ஒரு பெரிய சிமெண்ட் திண்ணை அவ்வளவுதான். திண்ணையின் கடைசியில் இரும்பாலான மடக்கு நாற்காலிகள் நிறைய சாத்தி வைத்திருப்பார்கள். முதல் வகுப்பு டிக்கட் வாங்கியவர்கள் போய் ஆளுக்கொன்றாக எடுத்து வந்து விரித்துப்போட்டு உட்கார்ந்துகொள்ள வேண்டியதுதான். எல்லா நாற்காலிகளுக்கும் கரும்பச்சை பெயிண்ட் அடித்து, அதில் வெள்ளையில் டூரிங் டாக்கீஸ் பெயர் எழுதியிருப்பார்கள். முதல் வகுப்புக்கு மட்டும் கொர கொர சத்ததுடன் இரண்டு ஃபேன்கள் ஓடிக்கொண்டிருக்கும். மற்ற வகுப்புக்களுக்கு ஃபேன் கிடையாது. ஆண்களும் பெண்களும் சேர்ந்து உட்கார அனுமதி முதல் வகுப்பில் மட்டும்.
எல்லா டூரிங் டாக்கீஸ் போலவே ஒரே ஒரு புரொஜெக்டர். அதனால் மூன்று இடைவேளை. தனியாக ஸ்டால் எல்லாம் கிடையாது. உள்ளே விற்றுக்கொண்டு வரும் பையன்களிடம்தான் தின்பண்டங்கள் வாங்க வேண்டும். என்னென்ன விற்பார்கள்?. வழக்கம்போல சுண்டல், முறுக்கு, வடை, இவைகளோடு சீஸனுக்குத்தகுந்தாற்போல பனங்கிழங்கு, வள்ளிக்கிழங்கு, பொறி உருண்டை, கடலை மிட்டாய் என்று எல்லாம் விற்பனைக்கு வரும்.
வேலிக்குள்ளே நாற்புறமும் திறந்த கொட்டகையாதலால், உள்ளே படம் பார்க்கும் அளவு கூட்டம் வெளியே வசனம் மற்றும் பாட்டுக்கேட்பதற்கு நிற்கும். அப்போதெல்லாம் சினிமாவை ரசிக்க கொட்டகையை விட்டால் வேறு ஏது போக்கிடம்?. அவர்களில் பெரும்பாலோர் ஏற்கெனவே அந்தப்படத்தைப் பார்த்தவர்களாக இருப்பார்கள். டூரிங் டாக்கீஸில் என்ன படம் ஓடுகிறதோ அந்தவாரம் முழுக்க தெருமுனை, குளக்கரை, கடைத்தெரு, வீடுகளில் பெண்களுக்குள் என எங்கும் அத்திரைப்படம் பற்றிய விவாதமாகவே இருக்கும்.
என்ன இருந்தாலும் அது ஒரு காலம்தான், அவை ஒரு சுகமான அனுபவங்கள்தான். விடுமுறை முடிந்து சென்னை பரபரப்புக்கு வந்த பின்னும் பல நாட்களுக்கு அந்த டூரிங் டாக்கீஸ் அனுபவங்கள் மனதில் அலையடித்துக்கொண்டே இருக்கும்.
வாசு சார், மலரும் நினைவுகளைக் கிளறி விட்ட தங்கள் பதிவுக்கு நன்றி.