உள்ளே சென்று அமர்ந்தோம். படம் துவங்கும்வரை ரசிகர்கள் மிகவும் உற்சாகமாக, ஆர்வத்துடன் சற்று சத்தமாக உரையாடிக்கொண்டிருந்ததால் எங்கும் ஆரவாரமாக இருந்தது. நான் முதலில் குறிப்பிட்டது போல, 1977-ம் ஆண்டு 72-ஐத் திரும்பக்கொண்டுவந்துவிட்டது போலத்தோன்றியது. படம் துவங்கியதும் ஆரவாரம் அதிகரித்தது. ஒரு முடிவோடு வந்திருந்த ரசிகர்கள் அனைவரும் காட்சிக்கு காட்சி கைதட்டி மகிழ்ந்தனர். 'அம்மானை... அழகுமிகும் கண்மானை' பாடலை மிக அட்டகாசமாகத்துவக்கியிருந்தார் மெல்லிசை மன்னர். இதற்குமுன் வெளியில் கேட்டிராத பாட்டு. கட்டம்போட்ட சஃபாரி சூட்டில் நடிகர்திலகமும், சிக்கென பாவாடை தாவணியில் மஞ்சுளாவும் தோன்ற அழகாக வெளிப்புறப்படப்பிடிப்பாக படமாக்கியிருந்தார் கே.எஸ்.பிரகாஷ்ராவ். வான்புகழ்கொண்ட 'வசந்த மாளிகை'யை இயக்கியவராயிற்றே. டி.எம்.சௌந்தர்ராஜனின் கம்பீரக்குரலும், வாணிஜெயராமின் கனிவுக்குரலும் பாடலை எங்கோ உயரத்துக்கு இட்டுச்சென்றன.
டி.கே.பகவதி, மேஜர் சுந்தர்ராஜன், எஸ்.வரலட்சுமி, வி.கே.ராமசாமி, எம்.பானுமதி ஆகியோர் மிக நிறைவாக நடித்திருந்தனர். ஸ்ரீகாந்தின் நடிப்பு படு அட்டகாசமாக அமைந்திருந்தது. தம்பியாக இருந்துகொண்டே வில்லனாகச்செயல்படும் காட்சிகளில் அருமையாகச் செய்திருந்தார். டென்னிஸ்கோர்ட்டில் உட்காரவைத்து நடிகர்திலகம் ஸ்ரீகாந்துக்கு அட்வைஸ் செய்யும் இடம், படத்தின் ஜீவக்காட்சிகளில் ஒன்று.
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த 'வணக்கம் பலமுறை சொன்னேன்' பாடல், கானக்குயில் சுசீலாவின் ஆலாபனையுடன் துவங்க, மாடிப்படியின் மேல்பகுதியில் சிவந்தமண் நாயகியைப்பார்த்ததும் ரசிகர்களின் கைதட்டல் அதிர வைத்தது. இப்பாடலில் நடிகர்திலகத்துக்கு அருமையான கருப்பு ஃபுல்சூட் உடையுடன் Hair Style -ம் அருமையாக இருக்கும். ஒரு கலெக்டருக்குரிய கண்ணியத்தோற்றம் அளித்தார். சற்றும் எதிர்பாராத விதமாக காங்கிரஸ் பார்டருடன் கூடிய வெள்ளைப்புடவையணிந்த நடனமாதர்கள் பாடலில் பங்கேற்க ரசிகர்கள் உற்சாக வெள்ளம் கரை கடந்தது. நடிகர்திலகம் 'வண்ணத்திலகங்கள் ஒளிவீசும் முகங்கள்' என்ற சரணத்தைப்பாடியவாறு, காங்கிரஸ் புடவையணிந்த அந்த நடனமாதர்களின் முன்னால் ஸ்டைலாக நடந்துவரும்போது, ரசிகர்கள் ஆரவாரத்தில் தியேட்டரே ஒருவழியானது. நாங்கள் உணர்ச்சிவெள்ளத்தில் திக்குமுக்காடிப்போனோம். பின் வரிசையில் இருந்த நடுத்தர வயதைக் கடந்த ரசிகர் ஒருவர், 'சிவாஜி படத்துல இந்தமாதிரி ஆரவாரத்தைப்பார்த்து ரொம்ப நாளாச்சுப்பா' என்று சொல்லிக்கொண்டிருந்தார். உண்மைதான்.
அங்கங்கே நிறைய பொடியும், நெடியும் கலந்து எழுதப்பட்ட ஆரூர்தாஸின் வசனங்கள் ரசிகர்களாலும் மக்களாலும் புரிந்துகொள்ளப்பட்டு ரசிக்கப்பட்டன. கலெக்டர் பதவியை உதறித்தள்ளிவிட்டு பொதுவாழ்வில் இறங்கும் நடிகர்திலகம், பூங்காவிலிருக்கும் பெருந்தலைவர் சிலைக்கு மாலையணிவித்து ஊர்வலத்தைத் துவங்குவதாக அமைந்த பாடல் துவங்கியது......
வெள்ளை குர்தா, ஜிப்பா அணிந்து அதன்மேல் கட்டம் போட்ட கதர் ஷெர்வாணியும் அதன்மீது பேட்ஜும் அணிந்தவாறு பெருந்தலைவர் கர்மவீரர் சிலைமுன் இருக்கும் படிக்கட்டில் பெரிய மாலையுடன் ஏறும் நடிகர்திலகம்,
'நாளை என்ன நாளை... இன்றுகூட நமதுதான்
வேளை நல்ல வேளை.. விழுந்தவர்க்கு வாழ்வை
வழங்கவாரும் தோழரே'
என்ற முழங்கியவாறு சிலைக்கு மாலை அணிவிக்கும்போது கைதட்டல், விசில், காகித வீச்சு என கிருஷ்ணா தியேட்டரே ஆடிப்போனது. அதிலிருந்து பாடல் முடியும்வரை வரிக்கு வரி கைதட்டல்கள்தான். குறிப்பாக, 'ஞானத்தோடு வாழுவோம்.. நிதானத்தோடு வாழுவோம் மாபெரும்தலைவர் சொன்ன மானத்தோடு வாழுவோம்' என்ற வரிகளின்போது கூடுதல் ஆரவாரம். ஊர்வலத்தின் முன்வரிசையில் மஞ்சுளா, காஞ்சனா இருவரும் நடந்துவரும் காட்சியும் ரசிக்கப்பட்டது. படம் நிறைவுறும் தறுவாயில் நடிகர்திலகம் உரையாற்றும்போது, பாரதப்பெருந்தலைவி அன்னை இந்திரா அவர்களின் இருபது அம்சத்திட்டத்தை குறிப்பிட்டுப்பேசியபோதும், பெருந்தலைவரைப் புகழ்ந்து பேசியபோதும் கைதட்டல் விண்ணைப்பிளந்தது.
படம் முடிந்து வெளியே வரும்போது ரசிகர்கள் மத்தியில் ஒரே ஆரவாரம், 'அண்ணன் சிவாஜி வாழ்க', 'அன்னை இந்திரா வாழ்க' என்ற் கோஷங்கள் அவ்வழியே சாலையில் செல்வோரின் கவனத்தைத்திருப்பின. இன்னும் சில ரசிகர்கள் 'திரும்பியது எங்கள் பொற்காலம்' என்று கோஷமிட்டனர். அடுத்த காட்சிக்கு வரிசையில் நின்ற ரசிகர்களைப்பார்த்து, கட்டைவிரலை உயர்த்தி 'படம் சூப்பர்' என்று உற்சாகமளித்தனர். ஒரு பெரியவர் சொன்னது போல கிருஷ்ணாவைப்பிடித்து விட்டதாகவே தோன்றியது. அதுவரை பிடித்து வைத்திருந்தவர் மகாராணி பக்கம் ஒதுங்கினார். அதற்குப்பின் ‘அவரது’ நான்கு படங்கள் வெளிவந்தன. அனைத்தும் மகாராணியிலேயே. 'அவன் ஒரு சரித்திரம்' சென்னையிலேயே அதிகபட்சமாக ஸ்ரீகிருஷ்ணா தியேட்டரில்தான் அதிக நாட்கள் ஓடியது. பக்கத்தில் கிரௌன் திரையரங்கில் 'தீபம்' வெளியாகி பட்டையைக்கிளப்பியபோதும், அது இப்படத்தின் ஓட்டத்தைப் பாதிக்கவில்லை.
நினைக்க நினைக்க திகட்டாத எண்ண அலைகள்..... வண்ண நினைவுகள்.......