சதிஷை சந்தித்தேன்!
நமது அன்பு நண்பர் ஆஸ்திரேலியா கண்டத்தில் நடிகர் திலத்தின் புகழ் பரப்பும் மதுரையின் மைந்தன் கோல்ட் ஸ்டார் சதீஷ் அவர்களை பத்து நாட்களுக்கு முன் மதுரையில் வைத்து சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது!
அவரே குறிப்பிட்டிருப்பதை போல ஒன்றாக இருந்த அந்த ஒரு மணி நேரமும் நடிகர் திலகம் பற்றிய பேச்சிலேயே கழிந்தது. டி.வி.டி கடையிலும் சரி உட்கார்ந்து பேசிய உணவு விடுதிலும் சரி, உரையாடல் அவரை சுற்றி சுற்றியே வந்தது.
டவுன் ஹால் ரோடு - மேலமாசி வீதி - மேலகோபுர வாசல் தெரு சந்திக்கும் இடத்தில் நின்று கொண்டு பேசியபோது அவரிடம் பழைய நினைவுகளை நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டேன். அந்த இடத்தின் சிறப்பு என்னவென்றால் அதுதான் சென்ட்ரல் சினிமா அமைந்துள்ள இடம்! அவரிடம் அந்த நாற்சந்திப்பின் மூலையை காட்டி சிவந்த மண் படம் வெளியான முதல் நாளன்று இந்த இடத்தையும் தாண்டி வரிசை நின்றது என்பதை சொன்னேன்! சொர்க்கம் படத்திற்கு முதல் நாள் எந்த வழியாக தியேட்டர் உள்ளே சென்றோம் என்பதை சுட்டிக் காட்டினேன்! ஊட்டி வரை உறவு முதல் நாள் கூட்டத்தைப் பற்றி, என் தம்பி மூன்றாம் நாள் அலப்பறையைப் பற்றி, ராஜாவிற்கு வந்த கூட்டத்தைப் பற்றி, பட்டிக்காடா பட்டணமா படத்தின் வெள்ளி விழாவிற்கு வந்த நடிகர் திலகம் திறந்த ஜீப்பில் தியேட்டரில் இருந்து பாண்டியன் ஓட்டலுக்கு சென்ற போது நான் எங்கிருந்து பார்த்தேன் என்ற இடம், அந்த தெருவில் ஞாயிறன்று வாசகசாலை எங்கே அமைப்பார்கள் என்ற இடம் இவற்றையெல்லாம் பற்றி சொல்லிக் கொண்டேயிருந்தேன்! சதீஷ் வீட்டில் ஒரு முக்கியமான சடங்கு நடைப் பெற்றுக் கொண்டிருந்த அந்த நேரத்திலும் அவரின் presence வீட்டில் கட்டாயம் தேவை என்ற நிலையிலும் அவர் என்னோடு நேரம் செலவிட்டுக் கொண்டிருந்த அந்த செய்கை மறக்க முடியாத ஒன்று! அந்த நேரத்திலேயே அந்த இடத்திலிருந்தே சுவாமியுடன் அலைபேசியில் உரையாடியதும் மறக்க முடியாத ஒன்று!
நன்றி சதீஷ்! நன்றி! அநேகமாக நீங்கள் மதுரையிலிருந்து புறப்படும் தினமான செப்டம்பர் 30 அன்று மதுரையில் மன்னவன் வந்தானடி திரையிடப்படலாம்! அதுவும் உங்கள் அபிமான அலங்கார் திரையரங்கில்!
அன்புடன்