'வசந்த மாளிகை'
http://www.thiraivideo.com/video/wp-...ha-Maligai.jpg
வண்ணமயமான வசந்த மாளிகை.
http://i1087.photobucket.com/albums/..._001408768.jpg
இறந்த பிறகுதான் சொர்க்கம் என்பார்கள். ஆனால் நடிகர் திலகத்தின் ரசிகப் பிள்ளைகளோ கொடுத்து வைத்தவர்கள். அதனால்தான் தங்கள் வாழ்நாளிலேயே உயிரோடிருக்கும் போதே சொர்க்கத்தை வசந்த மாளிகையில் கண்டு சொக்கிப் போனார்கள். இனி சொர்க்கம் என்று ஒன்று எதற்கு என்று மாளிகையின் மடியிலே கிறங்கிப் போனார்கள். ஜாதி, இனம், மதம், பேதம் அனைத்தையும் கடந்து மக்கள் அனைவரும் ஒருசேர மாளிகையில் சங்கமித்தார்கள். "நான் அவர் ரசிகன், நான் இவர் ரசிகன்" என்றோரெல்லாம் நாங்கள் வசந்தமாளிகையின் ரசிகர்கள் என்று காலரைத் தூக்கி விட்டுக் கொண்டார்கள். கொண்டாடினார்கள். காதலின் உண்மையான மகத்துவத்தை அறிந்தார்கள். உணர்ந்தார்கள். பிரெஞ்சுப் புரட்சி போல திரையுலகில் ஓர் புரட்சி. தமிழ் சினிமாவுக்கோர் மறுமலர்ச்சி. விளைவு? எங்கும் காணாத எழுச்சி. வசந்த மாளிகை கண்ட தியேட்டர்கள் திருவிழாக் கோலம் பூண்டன.
http://www.shotpix.com/images/93211859266553409697.jpg
"நீ எத்தனை முறை வசந்த மாளிகை பார்த்தாய்?"
"பத்து முறை"...
"ச்சே! அவ்வளவுதானா? நான் இருபது முறையாக்கும்"
என்று ரசிகரல்லாதோர் கூட பெருமை கூட்டிக் கொண்டார்கள்.
"மாமா! புதுப்படம் போட்டிருக்கான்டா.. வாடா செகண்ட் ஷோ போலாம்" என்பான். "போடா போடா போக்கத்தவனே... வசந்தமாளிகை ஓடுது.. அதுக்குப் போவானா... போறானாம் புதுப்படத்துக்கு... கெளம்புடா! டிக்கட் கெடைக்காம போகப் போவுது"...
என்று கட்டிய லுங்கியுடன் சைக்கிளில் பறந்து சென்று பார்த்த இளைஞர் கூட்டம். ரிக்ஷா வண்டி இழுத்தவன் முதல் மேல் தட்டு மேனஜர்கள் வரை துக்கங்களை தூர எறிந்துவிட்டு, தூக்கத்தை மறந்து ஏக்கங்கள் கொள்ளவைத்த மாளிகை. இரண்டாவது மூன்றாவது ரீ-ரிலீஸ்களின் போது கிடைத்த வரவேற்பு வாய் பிளக்க வைக்கும்.
நூறாவது மறு வெளியீட்டிலும் அது தொடரும்.
http://www.shotpix.com/images/06198035887453000333.png
யாரை வேண்டுமானாலும் கேள்.. எவரை வேண்டுமானாலும் கேள்... "நல்லாயில்ல"... என்று வேண்டுமென்றே நம்மை வேதனைப்படுத்தக் கூட ஒரு வார்த்தை வராது. "பின்னிட்டாருய்யா உங்க ஆளு... அசல் குடிகாரன் கெட்டான்யா... கணேசன் கணேசன்தான்யா' என்று மகுடம் சூட்டுவான். "இரண்டு மனம் வேண்டும்" என்று கேட்கும் போதே இவன் இருமி வாந்தி எடுக்க முற்படுவான். "யாருக்காக' என்று கூக்குரலிடுகையில் "தலைவா... உனக்காக" என்று ஒருவன் கத்துவான். "எங்களுக்காக" என்று மற்றொருவன் மகிழ்ந்து சொந்தம் கொண்டாடுவான். வசதி படைத்தவன் ஒயின் கிளாஸை போஸ்ட்டரில் பார்த்தது போலப் பிடித்துப் பார்க்க முயன்று 'ஏன்' இந்த வேலை? என்று தோற்றுப் போவான். சால்வைகள் விலை ஏற்றமடைந்தன. தியேட்டர் ஊழியன் பளபளப்பாகத் தெரிவான். இடைவேளைகளில் பல லிட்டர் பால் கேண்டீன்காரன் வாங்கி வைத்தாலும் தியேட்டரில் பாதிப் பேர் 'டீ' இல்லாமல் அலைவான். ரசிகப் பிள்ளைகள் தலைவர் வராத சீன்களில் தியேட்டர் வெளிவராந்தாவில் இறைவன் புகழ் பாடிக்கொண்டிருக்கும்.
http://www.shotpix.com/images/70138038824957566388.png
''வெறும் சட்டங்கள் தர்மங்கள் ஏதுமில்லை இன்பச் சக்கரம் சுற்றுதடா... அதில் நான் சக்கரவர்த்தியடா'' எனும் போது திருவண்ணாமலை தீபம் தியேட்டரில் தெரியும்.. ஒவ்வொருத்தர் கையிலும் கற்பூரம் எரியும். கிளாசிலிருந்து தரை வரை கைத்தட்டல் உச்சி பிளக்கும். தரை டிக்கெட் எடுத்தவன் துண்டை சுழற்றி மேலே கிடாசுவான். சில்லறைகள் சிதறும். லாட்டரி சீட் கவுண்டர் பைல்கள் திரையை மறைக்கும். 'மயக்கமென்ன' என்றவுடன் இரு கைகளையும் தூக்கிக் கொண்டு திரையை நோக்கி ஓடுவான். ஆடியன்ஸைப் பார்த்து ஆட்டமாடுவான். "உயிரோடு இருக்கும் என் காதலிக்காகக் கட்டப்பட்ட வசந்தமாளிகை" என்று உச்சரிக்கும் போது இதழ் பிரியாமல் கூடவே உச்சரிப்பான். திருக்குறளை மனப்பாடம் செய்தானோ இல்லையோ... வசந்த மாளிகையின் வசனங்களை வசப்படுத்திக் கொண்டான். "அன்புக் காணிக்கைதான் கண்ணே" என்றால் பக்கத்து சீட்டு நண்பன் மார்பில் இவன் முகம் புதைப்பான். "ஆடிவரும் வண்ண நீரோடை உன்னை பாத பூஜை செய்துவர" வரிகளில் இவன் பூக்களை கைகளில் பின்னால் ஒளித்து வைத்து தெய்வப் பாதங்களில் தூவுவான்.
http://www.shotpix.com/images/81038360482960668229.jpg
'கடவுளை தண்டிக்க என்ன வழி?' என்று கையை உதறும் போது காதலியை நினைத்து கதறுவான். 'ஆனா அவகிட்டப் பிடிச்சதே அந்த அகம்பாவம்தான்' என்று சொன்னால் 'எனக்கும் அப்படித்தான் தலைவா' என்று தன்னை மறந்து கத்துவான். "குடிமகனே" என்ற குரல் ஒலிக்கும் முன்பே 'ஓ ஹ ஹா ஹா' என்று இவன் முடித்து வைப்பான். தாய்க்குலம் இருக்கைகள் நிரம்பி வழிந்திருக்கும். 'யாருக்காக'வின் போது பாதிதான் இருக்கும்.."நாசமா போறவனுங்களே! படம் பாக்க உடுறீங்களாடா" என்று தாய்க்குலம் வசவு பாடும். இவனுக்கு பாராட்டுப் பத்திரமாய் இனிக்கும். கூடை கூடையாய் மலர்களை அள்ளித் தெளித்துவிட்டு சிந்திய பூக்களை இருட்டில் அள்ளுவான் மறுபடி தூவ. திருப்தியே இருக்காது. வணக்கம் முடிந்தாலும் வாழ்க கோஷம் தொடரும். மனமில்லாமல் பிரிவான். மறுநாள் அதே கூத்து தான்.
அன்புடன்,
வாசுதேவன்.