என் உயிர்க் 'காத்தவராயன்'
நன்றி முரளி சார்.
Taste விஷயத்தில் நமக்குள் ஒற்றுமை இருப்பது 100% நேற்று உறுதியாகி விட்டது. காத்தவராயனைப் பற்றித்தான் சொல்கிறேன். ஞான ஒளி, தெய்வ மகன், சவாலே சமாளி, ராமன் எத்தனை ராமனடி, உயர்ந்த மனிதன், வசந்த மாளிகை போன்ற காவியங்கள் எந்த அளவிற்கு ஆழ என்னுள் ஊடுருவி இருக்கிறதோ அந்த வரிசையில் நான் சேர்த்துக் கொண்டுள்ள மற்றொரு காவியம் "காத்தவராயன்" சார். அதே போல இன்னொன்று "அம்பிகாபதி". காத்தவராயனை எத்தனை முறை பார்த்திருப்பேன் என்று கணக்கே கிடையாது. அவ்வளவு மனம் கவர்ந்த படம் அது. உங்களுக்கும் அவ்வாறே என்று நினைக்கும் போது சந்தோஷம் இரட்டிப்பாகிறது. தாங்கள் கூறியுள்ளது போல சட்டென்று சில படங்கள் பார்த்த மாத்திரத்தில் பசுமரத்தாணியாய் மனதில் பதிந்து போய்விடும். சில பார்க்க பார்க்க மனம் லயிக்க ஆரம்பிக்கும்.(முதல் மரியாதையை இதற்கு உதாரணமாக சொல்லலாமா!). எனக்கு 'காத்தவராயன்' முதல் வகை. படத்தின் முதல் நொடி முதல் கடைசி நொடி வரை இமை கொட்டாமல் பார்த்து பார்த்து பரவசப்பட்ட படைப்பு. அம்பிகாபதியிலும், காத்தவராயனிலும் அளவுக்கதிகமாக அழகாகத் தெரிவார். "இந்த தருக்கர்களின் தலைகளை வெட்டி வீழ்த்தி மலைகளாகக் குவித்து விடுகிறேன்...பார்த்து விடுகிறேன் படைபலத்தை"...என்று சங்கிலியால் பிணைக்கப்பட்டு இறுதியில் அவர் முழங்கும் போது அவர் குரல் புரியும் சாகசம்.... அடேயப்பா! அந்த மலைப்பு இன்று வரை அடங்கவே இல்லை. அவர் போர்ஷன் மட்டுமல்லாது அனைத்து காட்சிகளுமே அற்புதம். படத்துவக்கத்தில் வரும் கோபிகிருஷ்ணா மற்றும் குமாரி கமலா என்ற இரு நாட்டிய ஜாம்பவான்களின் ருத்ரதாண்டவமாக மாறும் அருமையான சிவதாண்டவம், (கோபி கிருஷ்ணா என்ன மார்க்கண்டேயனா! காத்தவராயனிலும், ஜனக் ஜனக் பாயல் பஜேவிலும், பின்னாளில் வந்த தங்களுக்கு மிக மிகப் பிடித்த 'பாட்டும் பரதமும்' படத்திலும் (உலகம் நீயாடும் சோலை) ஒரே மாதிரியாகவே இருப்பார்) கொல்லிமலை சகோதரிகளின் ஆரம்பப் பாடல் (வெற்றியே அருள் அம்மா...)... காத்தன் குழந்தையாய் காட்டில் வளரும் காட்சிகள்...(முக்கியமாக கோழிக்குஞ்சுகள் நடனக் காட்சி (அய்யா கொல்லாதே...சாமி கொல்லாதே)...பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டிருக்கும்) பாலையா, சந்திரபாபு இவர்களின் மந்திரப் பிழைப்புக் காட்சிகள், (வித்தை காட்டுகையில் சந்திரபாபுவின் மேல் விபூதி அடித்து பாலையா மயங்கி விழச் செய்ய, போட்டிக்கு நம்மவர் பதிலுக்கு மயங்கிக் கிடக்கும் சந்திரபாபு அருகே அமர்ந்து "அடச் சே"..என்று ஜெபித்து எழுப்பி விட, மறுபடி பாலையா தன் பங்கிற்கு "அடத்தூ" என்று மீண்டும் பாபுவை மயக்கமடைய வைக்க, திரும்ப நடிகர் திலகம் "அடச் சே" என்று எழுப்ப... மறுபடி பாலையா "அடத்தூ" என மயங்க வைக்க, இருவருக்கும் ஈடு கொடுத்து சந்திரபாபு 'டக்'கென மயக்கமடைவதும், உடனே மயக்கம் தெளிந்து எழுந்திருப்பதுமாய் ஒரே நகைச்சுவைக் கூத்துதான் போங்கள்!) நாட்டின் தளபதியாய் வந்து தங்கவேலு தரும் தாங்கமுடியாத வயிற்றுவலி நகைச்சுவைக் காட்சிகள்... (மரத்தை சுற்றி நம்மவர் கிழ வேடம் தரித்து மந்திர வட்டம் போட்டு விட்டு மரத்தடியில் அமர்ந்து "ஆரியமாலா... ஆரியமாலா" என்று துந்தனாவை சுண்டிக்கொண்டே ஜெபிக்க, இவரைப் பிடிக்க வரும் படைவீரரர்கள் ஒவ்வொருவராக வட்டத்தைத் தாண்ட முடியாமல் அந்த வட்டக் கோட்டிலேயே மந்திரத்துக்குக் கட்டுண்டு குத்தாட்டம் போட்டுக் கொண்டு சுற்ற ஆரம்பிக்க, இந்தக் கூத்தையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் தளபதி தங்கவேலு அனைத்தையும் ஒருகணம் மறந்து ஆடிக்கொண்டு செல்லும் ஒரு படை வீரனைப் பார்த்து "பய நல்லாத்தான் ஆடுறான்" என்று ரசிக்கும் ஒரு கட்டம் போதும்) சிறைப்பட்டிருக்கும் நம் சிங்கத்தைக் காப்பாற்ற பாலையா சந்திரபாபு மற்றும் எம்.என்.ராஜம் சகிதம் சிறைக்குள் நைசாக நுழைந்து நடத்தும் அதியற்புதமான பொம்மலாட்ட நடன நிகழ்ச்சி (எலாஸ்டிக் கயிறுகளுடன் சந்திரபாபுவும் ராஜமும் பின்னி எடுத்திருப்பார்கள்)..("ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜீயாலகடி ஜீயாலோ") துப்பறிய வரும் தளபதி தங்கவேலுவை தங்கள் வீட்டில் பாபு, பாலையா இருவரும் பெண் வேடங்கள் இட்டுக்கொண்டு இம்சை அளித்து அடிக்கும் கூத்துக்கள்...கண்ணாம்பாவின் கனல் கக்கும் வசன மழை... சாவித்திரியின் பாந்தமான அதேசமயம் அழுத்தமான,பிடிவாதத்தனமான நடிப்பு... ஈ.ஆர்.சகாதேவனின் சீறல்... செருகளத்தூர் சாமா அவர்களின் குருதேவப் பொருத்தம்... ஈ.வி.சரோஜாவின் அட்டகாசமான நடனங்கள்... ஓ .ஏ.கே. தேவரின் சில நிமிட கம்பீரம்... மல்யுத்த பயில்வான் அமீர் அலியின் வாளிப்பான வழவழ மொழுமொழு பளபள உடம்பு... காத்தன் ஊரை அழிக்கும் பிரம்மாண்டங்கள்... (வீடுகளின் தூண்களை மட்டும் பிடுங்கி துவம்சம் செய்வார்) கழுமரம் ஏற்றப்படுமுன் யானையுடன் சங்கிலியால் பிணைக்கப்பட்டு சாட்டையடி பெற்று துடித்து துவளும் தலைவர்... அதன் பின்னணியில் சிதம்பரம் S.ஜெயராமன் குரலில் ஒலிக்கும் "விதியா... சதியா"பாடல்... பிரம்மாண்ட ஐயனார் சிலை?!.. சிலையின் கால்களை தன் கைகளால் நகர்த்தி மலை போன்ற சிலையை விழச் செய்து ஊரை அழிக்கும் பிரம்மிப்பு...வளையல்காரன், குடுகுடுப்பைக்காரன், வயோதிகக் கிழவன் என வேடங்கள் பல தரித்து நம் வேட்கை தணிக்கும் நடிகர் திலகம்... தஞ்சை இராமையாதாஸ் அவர்களின் கருத்தான பாடல்கள்...ஜி.ராமனாதனின் அருமையான இசை... T.K..ராஜாபாதர் அவர்களின் கண்களை விட்டகலாத ஒளிப்பதிவு... 'ஸ்டன்ட்' சோமுவின் தயவால் அருமையான மயிர்க்கூச்செறியும் சண்டைக்காட்சிகள்... பணத்தைத் தண்ணீராய் செலவு செய்த பிரம்மாண்டம்... சற்றும் தொய்வில்லாத ராமண்ணாவின் டைரக்ஷன்...
என்ற சகல அம்சங்களும் சரியாகக் கலக்கப்பட்ட கற்கண்டு பால் போன்றவன் என் ஸாரி நம் 'காத்தவராயன்'. இத்தனை அம்சங்கள் கொடிகட்டிப் பறந்த'காத்தவராயன்' என்னைப் பொறுத்தவரை வெள்ளிவிழா கண்டிருக்க வேண்டும்.

