டி.ஆர்.ராஜகுமாரி
அபூர்வ தகவல்கள் - 7
cinema express
http://www.cinemaexpress.com/Images/.../11/27/trr.jpg
"கனவுக் கன்னி', "ஆடும் மயில்', "பாடும் குயில்', "கோயில் சிற்பம்', "தந்த பொம்மை' என்றெல்லாம் அக்கால சினிமா பத்திரிகைகள் டி.ஆர்.ராஜகுமாரிக்கு கவர்ச்சிப் பட்டங்கள் அளித்தன. அழகான கண்களும் கொஞ்சும் மொழியும் கொண்ட இவர் சேலையணிந்து உடல் முழுவதும் மறைத்து நடித்தாலும், அதையும் மீறிய ஒரு கவர்ச்சி இவரிடம் இருந்தது.
5.5.1922 வெள்ளிக் கிழமையன்று தஞ்சாவூரில் ராதாகிருஷ்ணப் பிள்ளை-ரங்கநாயகி தம்பதிக்கு பிறந்தவர் டி.ஆர்.ராஜகுமாரி. இவரது இயற்பெயர் "ராஜாயி' என்பதாகும். பள்ளியில் 3ஆம் பாரம் (8ஆம் வகுப்பு) வரை இவர் படித்துள்ளார். இவர் தனது குடும்பத்தினர் நலனையே குறிக்கோளாகக் கொண்டு, திருமணமே செய்துகொள்ளாமல் இருந்தார்.
டி.ஆர்.ராஜகுமாரியின் குடும்பமே ஒரு கலைக் குடும்பமாகும். டி.ஆர்.ராஜகுமாரியின் தாய்வழிப் பாட்டி குசலாம்பாள் கர்நாடக பாடகியாக விளங்கியவர். டி.ஆர்.ராஜகுமாரியின் சித்தி எஸ்.பி.எல். தனலக்ஷ்மி பிரபல கதாநாயகி நடிகையாவார். எஸ்.பி.எல்.தனலக்ஷ்மியின் மகள்களான ஜோதிலட்சுமியும் ஜெயமாலினியும் கவர்ச்சி நடிகைகள். டி.ஆர்.ராஜகுமாரியின் மற்றொரு சித்தி டி.எஸ்.தமயந்தியும் நடிகை. டி.எஸ்.தமயந்தியின் மகள் குசல குமாரியும் நாயகி நடிகையாவார். டி.ஆர்.ராஜகுமாரியின் தம்பி டி.ஆர்.ராமண்ணா சிறந்த தயாரிப்பாளரும் இயக்குநரும் ஆவார். டி.ஆர்.ராமண்ணாவின் முதல் மனைவி பி.எஸ். சரோஜாவும், இரண்டாவது மனைவி ஈ.வி.சரோஜாவும் நாயகி நடிகையர். ஈ.வி.சரோஜாவின் சகோதரர் ஈ,வி.ராஜன் (ஈ.வி.ஆர்.பிக்சர்ஸ்) தயாரிப்பாளர்.
படப்பிடிப்பின் போது சரியான நேரத்தில் வந்து, தயாரிப்பாளர்களின் நன்மதிப்பைப் பெற்றவர் டி.ஆர்.ராஜகுமாரி. சினிமாவிற்கு வந்த பின்பே நாட்டியம் ஆட கற்றுக் கொண்டார்.
தமிழ் நட்சத்திரங்களில் டி.ஆர்.ராஜகுமாரிதான் முதன் முதலாக சினிமா தியேட்டர் கட்டினார். "ராஜகுமாரி' என்று அவர் பெயரிலேயே அமைந்த இந்த தியேட்டரை ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன் திறந்து வைத்தார். சென்னை, தியாகராயநகர், பாண்டிபஜாரில் "ராஜகுமாரி' தியேட்டர் இருந்த இடம் இன்று வணிக வளாகமாக மாறிவிட்டது.
தமிழக முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., வி.என்.ஜானகி, மு.கருணாநிதி ஆகியோருடன் கலைத் தொடர்பு கொண்டவர் டி.ஆர்.ராஜகுமாரி. பாசம், பெரிய இடத்துப் பெண், குலேபகாவலி, பணக்காரி ஆகிய படங்களில் எம்.ஜி.ஆருடன் இணைந்து நடித்துள்ளார். டி.ஆர்.ராஜகுமாரி நடித்த சந்திரலேகா படத்தில் வி.என்.ஜானகி ஒரு நாடோடிப் பெண்ணாக நடித்துள்ளார். மு.கருணாநிதி வசனம் எழுதிய மனோகரா, புதுமைப் பித்தன் ஆகிய படங்களில் டி.ஆர்.ராஜகுமாரி நடித்துள்ளார்.
"மனோகரா' படத்தில் சிவாஜியின் நடிப்பு போற்றப் படுவதற்கு, டி.ஆர்.ராஜகுமாரியின் பாத்திரமும் நடிப்பும் ஒரு காரணமாகும். குளிர்ந்த நீராக இருந்த மனோகரனை (சிவாஜியை), கொதிக்கும் நீராக மாற்றியது வசந்தசேனை (டி.ஆர்.ராஜகுமாரி) தானே.
"மனோகரா' படத்தில் சிவாஜிக்கு, வில்லி சித்தியாக நடித்த டி.ஆர்.ராஜகுமாரி, "அன்பு' படத்தில் நல்ல சித்தியாக நடித்துள்ளார்.
பி.பானுமதி தன்னைவிட வயதில் குறைந்த சிவாஜியுடன் நடித்ததைப் போலவும், செüகார் ஜானகி தன்னைவிட வயதில் குறைந்த ஏ.வி.எம்.ராஜனுடன் நடித்ததைப் போலவும், தன்னைவிட வயதில் குறைந்த டி.ஆர்.மகாலிங்கத்துடன் ஜோடியாக "இதய கீதம்' படத்தில் நடித்துள்ளார் டி.ஆர்.ராஜகுமாரி. இப்படத்தின் நாயகி, நாயகனுக்கு அக்காள் போல் உள்ளார் என்று, இப்பட வெளியீட்டின்போது விமர்சனம் எழுந்தது.
"மதனமாலா' (1947) என்ற படத்தின் நாயகி டி.ஆர்.ரஜினி என்பவர் பவளக்கொடி படத்தில் டி.ஆர். ராஜகுமாரிக்கு தாயாக நடித்துள்ளார். தமிழ் சினிமாவின் முதல் நாயகி நடிகையான டி.பி.ராஜலக்ஷ்மி என்பவர் இதய கீதம் படத்தில் டி.ஆர். ராஜகுமாரிக்கு தாயாக நடித்துள்ளார்.
டி.ஆர்.ராஜகுமாரி இரு வேடங்கள் ஏற்று நடித்த ஒரே படம் "விஜயகுமாரி' என்ற படம். ராஜகுமாரி என்ற பெயரில் இளவரசியாகவும், தூயமணி என்ற பெயரில் தீவுவாசிப் பெண்ணாகவும் இரு வேடங்கள் ஏற்று இப்படத்தில் நடித்தார் டி.ஆர்.ராஜகுமாரி. இந்த "விஜயகுமாரி' படத்தின் எடிட்டர் எம்.ஏ.திருமுகம்.
டி.ஆர்.ராஜகுமாரி நடித்த முதல் சமூகப் படம் "விகடயோகி'.
இவர் பிறமொழிப் படங்களில் நடிக்கவில்லை என்றாலும்,"சந்திரலேகா' இந்தியிலும் ஆங்கிலத்திலும் மொழி மாற்றம் செய்து வெளியிடப் பட்டது. 1948இல் உருவான சந்திரலேகா 1949இல் செக்கோஸ்லேவேக்கியாவில் சிறந்த படத்திற்கான விருது பெற்றது.
தமிழ்த் திரைப் படங்களிலேயே 110 வாரங்கள் திரையிடப்பட்ட ஒரே படம், டி.ஆர்.ராஜகுமாரியும் தியாகராஜ பாகவதரும் இணைந்து நடித்த "ஹரிதாஸ் படம் மட்டுமே. ஓடிய தியேட்டரில் மூன்று தீபாவளிகளைக் கண்ட ஒரே படம் "ஹரிதாஸ்' மட்டுமே.
டி.ஆர்.ராஜகுமாரி "கச்ச தேவயானி' படத்தில் குளத்தில் குளித்துவிட்டு உடலில் ஈரப்புடவையுடனும், இடுப்பில் குடத்துடனும் வரும் காட்சியும், "சந்திரலேகா' படத்தில் ரஞ்சனின் தழுவலில் இருந்து ராஜகுமாரி மயங்கியவர் போல் நடித்து நழுவும் காட்சியும், அன்றைய பத்திரிக்கைகளில் பரபரப்பான விமர்சனங்களாயின. "கச்ச தேவயானி' படத்தை 30 முறை பார்த்தேன் 40 முறை பார்த்தேன் என்று அக்காலத்தில் ரசிகர்கள் பெருமையாக சொல்லிக் கொள்வார்கள். "கச்ச தேவயானி' படத்தில் தேவகுருவின் மகன் கச்சனும் அசுரகுருவின் மகள் தேவயானியும் காதல் புரிந்து புராண காலத்திலேயே கலப்பு மணம் செய்துள்ளனர்.
"பிரபாவதி' படத்தில் நாயகன் ஹொன்னப்ப பாகவதருடன், டி.ஆர்.ராஜகுமாரியின் சித்தி எஸ்.பி.எல். தனலக்ஷ்மி நாயகியாக நடித்து ஒரு டூயட் பாடியிருந்தாலும், டி.ஆர்.ராஜகுமாரியும் துணை நாயகியாக நடித்து நாயகனுடன் ஒரு டூயட் பாடியுள்ளார்.
டி.ஆர்.ராஜகுமாரி தனது தம்பி டி.ஆர்.ராமண்ணாவின் இயக்கம் மற்றும் தயாரிப்பில் வாழப்பிறந்தவள், குலேபகாவலி, புதுமைப் பித்தன், பாசம், பெரிய இடத்துப் பெண் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
வி.நாகையா திரைக்கதை எழுதி நடித்து இயக்கிய "என்வீடு' படத்தின் நாயகியாக டி.ஆர்.ராஜகுமாரி நடித்தார். மேலும் டி.ஆர்.ராஜகுமாரி நாயகியாக நடித்த "பணக்காரி' படத்திலும் வி.நாகையாதான் நாயகன்.
"தங்கமலை ரகசியம்' படத்தில் பி.எஸ்.வீரப்பாவுக்கு மனைவியாகவும், நாயகி ஜமுனாவுக்கு சித்தியாகவும் நடித்தார் டி.ஆர்.ராஜகுமாரி.
டி.ஆர்.ராஜகுமாரி சொந்தக்குரலில் பாடி நடிக்கக் கூடியவராக இருந்தாலும், சில படங்களில் இவருக்கு வேறு பாடகிகள் பின்னணி பாடியுள்ளது ஒரு அபூர்வ நிகழ்ச்சியாக உள்ளது. "புதுமைப் பித்தன்' படத்தில் வரும் "மனமோகனா மறந்து போவேனா' என்ற பாடலை டி.ஆர்.ராஜகுமாரிக்காக பி.லீலா பாடியுள்ளார். "தங்கமலை ரகசியம்' படத்தில் டி.ஆர்.ராஜகுமாரிக்காக மூன்று பாடல்களை ஜிக்கி பாடியுள்ளார்.
"குலேபகாவலி' படத்தில் வரும் "வில்லேந்தும் வீரரெல்லாம்' என்ற பாடலில் டி.ஆர்.ராஜகுமாரிக்காக பி.லீலா குரல் கொடுத்துள்ளார்.
இவர் நடித்த 25 படங்களில் மொத்தம் 94 பாடல்கள் பாடியுள்ளார். இதில் இவர் தனித்து 54 பாடல்கள் பாடியுள்ளார். மற்றவர்களுடன் இணைந்து 40 பாடல்களை பாடியுள்ளார்.
லலிதா - பத்மினி சகோதரிகள் டி.ஆர்.ராஜகுமாரி நடித்த பவளக்கொடி, விஜயகுமாரி, இதய கீதம், அமர கீதம் ஆகிய 4 படங்களில் நாட்டியமாடியுள்ளார்கள். டி.ஆர்.ராஜகுமாரி நடித்த "அன்பு' படத்தில் லலிதாவும் பத்மினியும் நடித்துள்ளார்கள். டி.ஆர்.ராஜகுமாரி நடித்த "விஜயகுமாரி' படத்தில் வைஜெயந்திமாலா நாட்டியமாடியுள்ளார்.
கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக நடித்த "வானம்பாடி'(1962) படத்தில் டி.ஆர்.ராஜகுமாரி நடித்துள்ளார்.
டி.ஆர்.ராஜகுமாரி நடித்தது மொத்தம் 32 படங்கள். இதில், 21 படங்களில் நாயகியாகவும், 11 படங்களில் துணை வேடங்களிலும் நடித்துள்ளார்.
1959 இல் தமிழக அரசு இவருக்கு "கலைமாமணி விருது' அளித்தது.
ராஜகுமாரியாக நடித்து, ராககுமாரியாக பாடி ரசிகர்களை மகிழ்வித்து, தம் குடும்பத்தாருக்காக திருமணம் செய்யாமலேயே தியாககுமாரியாக வாழ்ந்த டி.ஆர்.ராஜகுமாரி தமது வீட்டிற்கு "கன்யாகுமரி பவனம்' என்று பெயர் வைத்திருந்தார். எண்: 77, அபிபுல்லா ரோடு, மதறாஸ்- 17 என்ற முகவரியில் வசித்து வந்த ராஜகுமாரி, தனது 77 ஆவது வயதில் 20.09.1999 இல் மறைந்தார்.
- சிவ.குகன்
டி.ஆர்.ராஜகுமாரி நடித்த படங்கள்
மந்தாரவதி (1941) சூரியபுத்ரி (1941) கச்ச தேவயானி (1941) மனோன்மணி (1942) சதி சுகன்யா (1942) சிவகவி (1943) குபேர குசேலா (1943) பிரபாவதி (1944) ஹரிதாஸ் (1944) சாலிவாஹணன் (1945) வால்மீகி (1946) விகடயோகி (1946) பங்கஜவல்லி (1947) சந்திரலேகா (1948) கிருஷ்ண பக்தி (1949) பவளக்கொடி (1949) விஜயகுமாரி (1950) இதய கீதம் (1950) வனசுந்தரி (1951) அமரகவி (1952) வாழப் பிறந்தவள் (1952) பணக்காரி (1953) என் வீடு (1953) 24. அன்பு (1953) மனோகரா (1954) குலேபகாவலி (1955) புதுமைப்பித்தன் (1957) தங்கமலை ரகசியம் (1957) தங்கப் பதுமை (1959) பாசம் (1962) வானம்பாடி (1962) பெரிய இடத்துப் பெண் (1963)