நண்பர் திரு. ஆர்.கே.எஸ். அவர்களுக்கு,
என் பதிவை நீங்கள் சரியாக படிக்கவில்லை என்று நினைக்கிறேன். திரு.சிவாஜி கணேசன் அவர்களுக்கு உயர்ந்த மனிதன் படத்துக்காக ரூ.2 லட்சம் கொடுக்க முடியாது ரூ.1.5 லட்சம்தான் கொடுக்க முடியும் என்று ஏவிஎம் செட்டியார் சொன்னதாக நானே என் கற்பனையில் இருந்து சொல்லவில்லை.
உயர்ந்த மனிதனுக்காக திரு.சிவாஜி கணேசன் அவர்களுக்கு ரூ.1.5 லட்சம்தான் கொடுக்க முடியும். அதற்கு மேல் கொடுப்பதற்கில்லை என்று திரு.செட்டியார் சொன்னதையும் அதே நேரம் அதற்கு 3 ஆண்டுகள் முன்பாகவே அன்பே வா படத்துக்கு மக்கள் திலகத்துக்கு திரு.செட்டியார் ரூ.3.25 லட்சம் கொடுத்தார் என்றும் திரு.ஆரூர்தாஸ் அவர்கள் சொல்லியிருக்கிறார். அவர் அன்பே வா படத்தின் வசனகர்த்தா.
அவர் இதை என்னிடம் தனிப்பட்ட முறையில் சொன்னார் என்றும் நான் சொல்லவில்லை. எப்படி உங்களால் இப்படி ஒரு பொய்யை ஜோடிக்க முடிகிறது என்று கேட்கிறீர்களே? இதையே நானும் எம்ஜிஆர் அவர்களை விட குறைவாக சம்பளம் வாங்கிய சிவாஜி கணேசன் அவர்களின் சம்பளத்தைப் பற்றி ஏன் பொய் சொல்கிறீர்கள்? என்று திருப்பி கேட்க முடியும்.
ஆனால், நான் கண்ணியமாக உங்கள் நேர்மை மீது நம்பிக்கை உள்ளது, உங்களுக்கு கிடைத்த தகவல் சரியாக இருந்திருக்காது என்றுதான் கூறியிருக்கிறேன்.
மீண்டும் சொல்கிறேன். இந்த தகவலை சொன்னவர் திரு.ஆரூர்தாஸ் அவர்கள். அதிலும் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக கூறவில்லை. பகிரங்கமாக கூறியுள்ளார். விகடன் பிரசுரத்தின் சார்பில் வெளியான ‘சிவாஜி வென்ற சினிமா ராஜ்ஜியம்’ என்ற புத்தகத்தில் 167, 168-ம் பக்கங்களில் இந்த தகவல் இருக்கிறது. இந்த புத்தகம் சிவாஜி ரசிகர்கள் பலரிடம் இருக்கும். அந்த புத்தகத்தில் இந்த தகவல் இல்லாவிட்டால் என்னை ஏன் என்று கேளுங்கள்.
இந்த விவகாரங்களில் சம்பந்தப்பட்ட ,அதாவது ஆரூர்தாஸ் பணப்பரிவர்த்தனை தொடர்பாக குறிப்பிட்ட நபர்களான ஏவிஎம். சரவணனும் திரு.ஆர்.எம்.வீ. அவர்களும் அந்தப் புத்தகம் வெளியானபோது மட்டுமல்ல, இப்போதும் இருக்கின்றனர் என்றுதான் குறிப்பிட்டுள்ளேன்.
விக்கிபீடியாவில் உள்ள தகவலின்படி எனக்குத் தெரிந்து அதில், ஏ.பி.நாகராஜன் படங்கள் பிரம்மாண்டமான கலர் படம். அதனால், சிவாஜி கணேசன் அவர்கள் ரூ.2 லட்சம் சம்பளம் பெற்றிருக்கிறார். ஆனால், உயர்ந்த மனிதன் குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட கறுப்பு வெள்ளை படம். எனவே, திரு.சிவாஜி கணேசன் அவர்களுக்கு ரூ.1.5 லட்சம் கொடுக்க சரவணன் முடிவு செய்தார் என்று உள்ளது. எனவே, இந்த இரண்டு கருத்துக்களையும் வைத்து பார்த்தால் உயர்ந்த மனிதன் படத்துக்கு திரு.சிவாஜி கணேசன் ரூ.1.5 லட்சம் சம்பளம் பெற்றார் என்பது உறுதியாகிறது.
இன்னொன்றும் சொல்கிறேன். பறக்கும் பாவை படத்துக்காக மக்கள் திலகம் அவர்கள், திரு.வீரப்பன் மூலம் தன்னிடம் ரூ.7 லட்சம் ரூபாய் கேட்டதாகவும் தான் கொடுத்ததாகவும் 25 ஆண்டுகளுக்கு முன் தேவி வார இதழில் எம்.ஜி.ஆர். கதை என்ற பெயரில் வெளியான தொடரில் திரு.ராமண்ணா அவர்கள் கூறியுள்ளார். பறக்கும் பாவை படத்தின் தயாரிப்பாளர் அவர்தான்.
அந்த பேட்டி எம்.ஜி.ஆர்.கதை என்ற புத்தகமாகவும் வந்துள்ளது. சமீபத்தில் அந்தப் புத்தகம் மறுவெளியீடாகவும் வந்துள்ளது. மறுவெளியீட்டு விழாவை 15 நாட்களுக்கு முன் மக்கள் திலகம் திரியில் திரு.லோகநாதன் பதிவிட்டுள்ளார்.
திரு.டி.ஆர்.ராமண்ணாவிடம் பேட்டி வாங்கிப் போட்டது யார் தெரியுமா? ராஜபாளையத்தில் எங்கள் சிவாஜி என்ற இதழை நடத்தி, பின்னர் நடத்த முடியாமல் மூடி இப்போது, மக்கள் திலகத்தின் புகழ் பரப்பும் இதயக்கனி என்ற இதழை நடத்தி வரும் சிவாஜி ரசிகரான திரு.எஸ்.விஜயன்.
நீங்கள் ஏற்காவிட்டால் பரவாயில்லை. நமது இருவரின் கருத்துக்களைப் படிப்பவர்களுக்கு எது சரியான தகவல் என்ற உண்மை புரியும். அதுபோதும்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்