Quote:
சினிமா-சின்னத்திரை இரண்டுமே ஒன்றுதான்! - அரவிந்த் பேட்டி
பாசமலர் தொடரில் பாரிவள்ளல் என்ற லீடு ரோலில் நடித்து வருபவர் அரவிந்த். அப்பா-அம்மா - இரண்டு தங்கைகள் என குடும்பத்துக்காக உழைக்கும் ஒரு பொறுப்புள்ள வேடத்தில் நடித்திருக்கிறார் அவர். அதன்காரணமாக ஏராளமான நேயர்களின் மனங்களிலும் இடம்பிடித்து பிரபலமாகி வருகிறார் அரவிந்த்.
தினமலர் இணையதளத்திற்காக அவர் அளித்த பேட்டி...
சின்னத்திரையில் வீடியோ ஜாக்கியாக எனது கேரியர் தொடங்கியது. 5 வருடங்களாக மியூக் சேனலில் தொகுப்பாளராக இருந்தேன். சினிமாவே எனது டார்கெட்டாக இருந்ததால் அதற்காக நிறைய ஹார்டு ஒர்க் பண்ணி, அதாவது பிசிக்கலாவும், மென்டலாவும் ரெடியாகி மதுரை டூ தேனி வழி ஆண்டிப்பட்டி படத்தில் நடித்தேன். அடுத்து பலம் என்ற படத்தில் நடித்தேன். அந்த இரண்டு படங்களுமே 2009-ல் ரிலீசானது. அதன்பிறகு அஸ்தினாபுரம், சூரத்தேங்காய் என இரண்டு படங்களில் கதையின் நாயகனாக நடித்திருக்கிறேன். இதில் சூரத்தேங்காய் படத்துக்காக நிறைய மெனக்கெட்டிருக்கிறேன். அடிக்கு அடி உதைக்கு உதை என்கிற ரீதியில் கதை உள்ளது. சில சிறுவர்கள் என்ன அண்ணா நீங்க, சண்டையே போடமாட்டேங்கிறீங்க -என்று பீல் பண்ணி வந்தனர். அவர்களின் குறைகளையெல்லாம் தீர்க்கும் வகையில் இந்த படத்தில் ஆக்சன் ரோலில் டிரை பண்ணியிருக்கிறேன். பள்ளிக்கூட பருவத்திலேயே சினிமாவில் நடிக்க வேண்டும் என்று மனதில் போட்ட ஒரு விதைதான் இன்றைக்கு மரமாக முளைத்து நிற்கிறது.
இந்த நேரத்தில் தற்போது குடும்ப சூழல், அதாவது பணத்தேவைகள் காரணமாக சின்னத்திரையில் பாசமலர் தொடரில் நடிக்கிறேன். எனது பார்வையில் சினிமா-சின்னத்திரை இரண்டுமே ஒன்றுதான். அங்கேயும் டைரக்டர் ஸ்டாட் கேமரா ஆக்சன் சொல்கிறார். இங்கேயும் அதைத்தான் சொல்கிறார். சினிமாவில் ஒரு நாளைககு 3 சீன் என்றால் சின்னத்திரையில் 6 சீன் எடுக்கிறார்கள். இது எனக்கு பெரிய அனுபவமாக உள்ளது. இங்கே வேலை அதிகமாக இருப்பதுபோல் தெரிந்தாலும் அதை ஆர்வத்துடன் செய்யும்போது கடினம் தெரியாது. அதோடு நாளுக்கு நாள் நம்மை வளர்த்துக்கொண்டிருப்பது போல்தான் சீரியலில் நடிப்பது இருக்கிறது. குறிப்பிட்ட டயத்திற்குள் ஒரு விசயத்தை பெஸ்ட்டா கொடுக்க வேண்டும் என்பது பெரிய சேலஞ்சிங்கான விசயம். இதை சின்னத்திரையில் செய்கிறோம். அதனால் என்னைப்பொறுத்தவரை சின்னத்திரை பெரிய பயிற்சிக்களமாகவும், ஆரோக்யமாகவும் உள்ளது. அனைவரும் ஒரு குடும்பம் போல் பழகுகிறார்கள். சந்தோசமாக உள்ளது.
மேலும், இந்த பாசமலர் சீரியலில் பாரிவள்ளல் என்ற ரோலில் நடிக்கிறேன். கோபக்காரன். ஆனால் கஞ்சப்பிசுனாரி. அதே சமயம் பொறுப்பானவன். அதாவது நிஜவாழ்க்கையில் எனக்கு எப்படி அம்மா, அப்பா, இரண்டு தங்கையோ அதேபோல்தான் இந்த சீரியலிலும் எனக்கு அம்மா-அப்பா இரண்டு தங்கைகள் உள்ளனர். அதனால் நடிப்பு என்று நினைக்காமல் நிஜவாழ்க்கை போன்றே இந்த சீரியலிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். மேலும், சீரியலில் ஒருநாள் நான் அடிவாங்கினாலே அடுத்த நாள் இரண்டு பாட்டிகள் வந்து, அடி வாங்காதேப்பா என்று அழுது கொண்டே சொல்கிறார்கள். சீரியல்கள் மூலம் தினமும் அவர்களது வீடடிற்கே செல்வதால் அவர்களது குடும்பத்தில் ஒருவர் போலவே சீரியல் நடிகர் நடிகைகளை நேயர்கள் நினைக்கிறர்கள்.
அதோடு, என்னைப்பொறுத்தவரை சின்னத்திரை, பெரிய திரை என்ற வேறுபாடெல்லாம் இல்லை. சினிமாவில் இருந்து சின்னத்திரைக்கு நான் வந்திருந்தாலும், சினிமாதான் எப்போதுமே எனது டார்கெட்டாக உள்ளது. அதனால் மீண்டும் சினிமாவுக்கு வருவேன். சின்னத்திரைக்கு வந்திருப்பது எனக்கு எந்தவகையிலும் வருத்தமளிக்கவில்லை. நான் ஓடிக்கொண்டேதான் இருக்கிறேன். சினிமாவில் சாதிக்க வேண்டும் என்பதுதான் எனது லட்சியம். கண்டிப்பாக ஒருநாள் அது நடக்கும் என்று உறுதியான நம்பிக்கையுடன் சொல்கிறார் அரவிந்த்.