மிக்க நன்றி கார்த்திக் சார்.. என்ன கொஞ்சம் பயம் தான்..இன்னும் இருக்கிறது..இங்குள்ள நண்பர்கள், உங்களைப் போல் எனக்கு நிறைய டீடெய்ல்ஸ் தெரியாது. நடிகர் திலகத்தின் வெகு சாதாரண ரசிகன் நான்.
இரவு மறுபடி வருகிறேன்..உஷார்..! :).
Printable View
Anandha Vikatan - Pokkisham Photo
http://i1234.photobucket.com/albums/...ps2b8a7bb8.jpg
டியர் கோபால் சார்,
நீதி படத்தைப் பற்றிய தங்கள் வித்தியாசமான ஆய்வு மிக நன்றாக இருந்தது. பல்வேறு கோணங்களில் அலசியிருக்கிறீர்கள். நடிகர்திலகத்துக்கு வில்லன் மனோகரை விட வில்லி சௌகார்தான் படம் முழுக்க பெரிய டார்ச்சர் என்பதை மிக அழகாக சொல்லி இருக்கிறீர்கள். இயக்குனர் தேர்வைப் பொருத்தவரை நான் ராகவேந்தர் சார் கட்சி. திருலோக் செய்திருந்தால் இந்த அளவுக்கு சோகமும் தமாஷும் சம அளவில் இருந்திருக்காது. சோகம் அதிகரித்து இன்னொரு பாபு ஆகியிருக்கும். சி.வி.ஆர்.தான் சரியான தேர்வு.
டியர் ராகவேந்தர் சார்,
நீதி பற்றிய என்னுடைய, மற்றும் வாசுவுடைய, சாரதாவுடைய முன் பதிவுகளையும் பம்மலார் அவர்களின் ஆவணங்களையும் மீள்பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.
ஐட்டம் நாயகியரில் 'ஆலம்' பற்றிய பதிவு வர இருந்தாலும், இடையில் துளிவிஷம், பட்டிக்காடா பட்டணமா இவற்றை அலசிவிடுவோமே......
நண்பர்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள்.
மூன்று நாட்கள் மிகவும் சிரமப்பட்டு 'துளிவிஷம்' பதிவை தயார் செய்துள்ளேன். இப்போது பதிவிடப் போகிறேன்.
தயவு செய்து நமது திரி அன்பர்கள் அல்லது மாற்றுத் திரி அன்பர்கள் நடுவில் வாக்குவாதப் பதிவுகளோ, அல்லது சண்டை சச்சரவுப் பதிவுகளோ, அல்லது சம்பந்தமில்லாத பதிவுகளையோ இந்த சமயம் பதிவிட வேண்டாம் என்று அன்பு வேண்டுகோள் விடுக்கிறேன். மூன்று நாட்கள் இரவு பகல் பாராமல், தூக்கம் கூட இல்லாமல் அபூர்வப் படமான இந்த 'துளி விஷம்' பட ஆய்வை ரெடி செய்துள்ளேன். ஒரு தாய் தன் குழந்தையை பெற்றெடுக்கும் பிரசவ வேதனை போல மிகுந்த சிரமப்பட்டு இப்பதிவை அளிக்கிறேன்.
அதிகம் பேசப்படாத இப்படம் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்ற அதீத ஆர்வத்தின் காரணமாக விவரமாகவே இப்படத்தை ஆய்வு செய்துள்ளேன். தவிரவும் பதிவின் நீளம் அதிகமாக இருப்பதால் இப்பதிவை 4 பாகங்களாகப் பிரித்துள்ளேன். இன்னொரு வேண்டுகோளும் வைக்கிறேன். இப்படத்தின் கதையை விரிவாக அளித்துள்ளேன். அருமையான திரைக்கதையை சுருக்க மனம் வரவில்லை. இப்படத்தின் கதைக்களம் பலர் அறியாதது. எனவே பதிவைப் படிப்பவர்கள் 'கதைதானே... தள்ளி விடலாம்...அல்லது பிறகு படித்துக் கொள்ளலாம்' என்று நினைக்க வேண்டாம். உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது படியுங்கள். ஆனால் கண்டிப்பாக முழுமையாகப் படியுங்கள். மறுபடியும் கேட்டுக் கொள்கிறேன். கதையை முழுமையாகப் படியுங்கள். பிறகு நடிகர் திலகத்தின் பங்களிப்பைப் பற்றி படித்து, மகிழ்ந்து மீதியுள்ள பாகங்களையும் படித்து உங்கள் feedback ஐ தெரிவியுங்கள்.
தாங்கள் அனைவரும் ஆதரவு தருவீர்கள் என்று நம்புகிறேன்.
வேறு பிரச்சனைக்குரிய பதிவுகள் அல்லது வேண்டாத பதிவுகள் நடுவில் வந்தால் இப்படத்தைப் பற்றி மற்றவர்கள் கூற முற்படும் கருத்துக்கள் திசை மாறிப் போகக் கூடும். என்னுடைய உழைப்பும் விழலுக்கிறைத்த நீராகப் போய் விடக் கூடும். இப்படம் அனைவராலும் பேசப்பட வேண்டும் என்ற தணியாத தாகம் எனக்கு.
எனவே இப்படம் தொடர்பான பதிவுகளை மட்டும் தற்சமயம் அளிக்கும்படி உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். என்னுடைய வேண்டுகோளில் தவறிருந்தால் பொறுத்துக் கொள்ளவும் வேண்டுகிறேன்.
தங்கள் ஆதரவையும், ஒத்துழைப்பையும் கோரும்
உங்கள் நெய்வேலி வாசுதேவன்.
துளி விஷம். (1954)
(one drop of poison)
http://images.parenthood.com/poison-bottle.jpg
பாகம் 1
கதை
http://i1087.photobucket.com/albums/..._002366736.jpg
நண்பர்களே!
இதுவரை நடிகர் திலகம் பின்னாட்களில் நடித்த 'கருடா சௌக்கியமா?', 'துணை', 'தாம்பத்யம்' போன்ற படங்களை ஆய்வுகள் செய்திருக்கிறேன். சமீபமாக நடிகர் திலகத்தின் 'ஆடைகளுக்கென்றே பிறந்த ஆணழகர்' தொடருக்காக 'துளி விஷம்' படங்களின் ஸ்டில்களை கிளிக் செய்யும் போதே முடிவு செய்து விட்டேன் இந்தப் படத்தைப் பற்றி விரிவாக எழுத வேண்டும் என்று. சிறு வயதிலிருந்தே இப்படத்தின் மீது அப்படி ஒரு கிரேஸ் எனக்கு. திரையரங்குகளில் மறு வெளியீடுகளில் அதிகம் வராத காரணத்தால் நான் ரொம்ப காலமாக பார்க்காமல் என் ஆவலைத் தூண்டிக் கொண்டிருந்த படம். வீடியோ டெக்குகள் சந்தைக்கு வந்த பிறகு கடலூரில் ஒரு தெரிந்த டாக்டர் நண்பரிடம் பெர்மிஷன் வாங்கிக் கொண்டு, (அப்போதெல்லாம் வீடியோ டெக் என்னிடம் இல்லை) ஒரு வீடியோ லைப்ரரியில் 'துளிவிஷத்'தை வாடகைக்கு எடுத்துக் கொண்டு அவர் வீட்டில் இருந்த 'அகாய்' டெக்கில் தன்னந்தனியாக போட்டு பார்த்தேன். பார்த்த முதல் மாத்திரத்திலேயே நம் தலைவரின் மகோன்னத நடிப்பாலும், அருமையான வசனங்களிளாலும் விஷம் அமுதமாக இனிக்கத் தொடங்கிற்று. டாக்டர் நண்பரும், அவர் குடும்பமும் என்னால் பலமுறை விஷத்தை சுவைத்து அருந்தியது. அதிலிருந்து பலமுறை பலருக்கு இந்த விஷம் தந்து நானும் விஷமருந்தி மகிழ்ந்தேன். இப்போது அந்த விஷத்திலிருந்து சில துளிகளை உங்களுக்கு எடுத்தளிக்கிறேன். இது ஆலகால விஷமல்ல. ஆளை அதிசயிக்க வைக்கும் ஆர்ப்பாட்ட நடிப்பெனும் விஷம். பயப்படாமல் பருகுங்கள். இன்னும் வேண்டுமென்று கேட்பீர்கள்.
சரி! கதை? சாண்டில்யனின் மூலக்கதை. அருமையான திரைக்கதை. பாசப் போராட்டங்களின் உணர்ச்சிப் பிழம்புக் கதை. வசனங்களால் மேலும் வளம் பெற்ற கதை. காதலும், அன்பும், பாசமும், தியாகமும், கயமைத்தனமும் கலந்த கதை.
மலை நாட்டு மன்னன் மலையமான் (முக்கமாலா). நாக நாட்டு மன்னன் வீரமார்த்தாண்டன் (எஸ்.வி.ரங்காராவ்) மலைநாட்டை அபகரிக்கிறான். தப்பிக்கும் மலையமான் தன் மனையாள் மகாராணி மகாதேவியோடும் ( எஸ்.டி.சுப்புலட்சுமி), ஆண் சிசுவோடும் மிக்க சிரமங்களுக்கிடையே எல்லோருக்கும் நல்லவரான ஒற்றுமைவிரும்பி ராஜகுரு ஜெயம் கொண்ட தேவர் பெருமானிடம் (D.V.நாராயணசாமி) அகதியாக தஞ்சமடைகிறான். தன் பட்டத்தரசியையும், பிஞ்சு மகனையும் தேவரிடம் ஒப்படைத்து விட்டு வீரமார்த்தாண்டனைப் பழி வாங்குவதே இனி தன் வாழ்வின் லட்சியம் என்று கூறி அவர்களை விட்டு நீங்குகிறான். காட்டில் மலைக்குகையில் ஒளிந்து வீர மார்த்தாண்டனுக்கு எதிராக படைகளைத் திரட்டுகிறான்.
காலம் கரைந்தோடுகிறது. மலையமான் மகன் சந்திரன் தான் யார், தன் தந்தை யார், தன் பின்னணி என்ன என்பது தெரியாமலேயே அவன் தாயாராலும்,தேவராலும் வீரனாக வளர்க்கப்படுகிறான். இப்போது அவன் பருவ வயது இளைஞன். (கே.ஆர்.ராமசாமி)
சந்திரனை அழைத்துக் கொண்டு வீரமார்த்தண்டனிடம் சென்று எந்த விவரமும் கூறாமல் தன் செல்வாக்கால் தேவர் பெருமான் அவனை நாக நாட்டின் படைத் தளபதி ஆக்குகிறார். தவிரவும் தன் மகனான சிறுவயது இளவரசனுக்கும் ஆசிரியராக அவனை மார்த்தாண்டன் நியமிக்கிறான். வீர மார்த்தாண்டன் மகள் குணவதி நாகவல்லிக்கும் (கிருஷ்ண குமாரி), சந்திரனுக்கும் காதல் அரும்புகிறது.
நாகவல்லி தந்தை வீரமார்த்தாண்டனிடம் தன் காதலைப் பற்றி தயங்காமல் சொல்லி காதலித்தவனைக் கைபிடிக்க சம்மதம் வேண்டுகிறாள் தன் காதலன் யாரென்று தந்தையிடம் சொல்லாமலேயே. மற்ற தந்தை போல் அல்லாது தன் செல்ல மகளின் ஆசைக்கு ஆனந்தமாக புரட்சி சம்மதமளிக்கிறான் மார்த்தாண்டன். அவள் காதலன் யாரென்று மார்த்தாண்டன் கேட்க. விரைவில் ஒரு சுபதினத்தில் தெரிவிப்பதாகக் கூறி மகிழ்ச்சியுடன் செல்கிறாள் நாகவல்லி.
சந்திரனும் தன் காதலை தன் தாயிடம் தெரிவிக்க, தங்கள் குடும்பத்தை சீரழித்த எதிரி மார்த்தாண்டனின் மகளை தன் மகன் விரும்புகிறானே என்று அதிர்ச்சியில் மயக்கமாகிறாள் தாய். தாயின் அதிர்ச்சிக்கு தேவரிடம் காரணம் கேட்கிறான் மகன். தேவர் அவனிடம் பின்னணிகள் எதுவும் சொல்லாமல் மழுப்புகிறார். தாய் மைந்தன் காதலுக்குத் தடை போடுகிறாள்.
இதற்கிடையில் மலையமான் மார்த்தாண்டனைப் பழிதீர்க்கும் வேலையின் ஒரு பகுதியாக தன் ஆட்களுடன் நாக நாட்டில் பல கலகங்களை விளைவிக்கிறான். தளபதி சந்திரன் யாரென்று தெரியாத தன் தந்தையை கைது செய்து மார்த்தாண்டனிடம் ஒப்படைக்கத் துடிக்கிறான்.
கற்பக நாட்டு மன்னன் சூரிய காந்தன் (சிங்கம்) நட்பு நாடான மலை நாட்டுக்கு விருந்தாளியாக வருகிறான். மார்த்தாண்டனிடம் நாகவல்லியை தனக்கு பெண் கேட்கிறான். மார்த்தாண்டன் தன் மகளின் காதலை அவனிடம் சொல்லி அவள் விரும்புபவனுக்கே அவளை மணமுடிக்க தான் உறுதியளித்து விட்டதாகக் கற்பக நாட்டு மன்னனிடம் நிலைமையை விளக்குகிறான்.
கற்பக நாட்டு மன்னனுக்கு ஏமாற்றம். அவன் ஒரு புரியாத புதிர். அவன் நல்லவனா கெட்டவனா? (பயமாய் இருக்கிறது சாமி) அதைப் பின்னால் அலசுவோம். ஆனால் அவன் மார்த்தண்டனின் விளக்கத்தை ஏற்றுக் கொள்கிறான். நாகவல்லி காதலிக்கும் காதலன் எந்த நாட்டு மன்னன் என்று மட்டும் வினவுகிறான். அது யாரென்று பின்னொரு சந்தர்ப்பத்தில் கூறுவதாக மார்த்தாண்டன் பதிலுரைக்கிறான்.
நாகவல்லி காதலிக்கும் காதலன் தளபதி சந்திரன் என்பதை தெரிந்து கொள்கிறான் கற்பக மன்னன். தன்னுடைய காரியங்கள் சில நிறைவேற அங்கேயே தங்க முடிவெடுக்கிறான் அந்த நல்ல மனம் கொண்ட கிராதகன்!
ராஜகுரு மூலமாக மகளின் காதலனை அறிந்து தளபதி சந்திரனை மணமகனாக தனக்கு மருமகன் ஆகப் போவதாக சபையில் மார்த்தாண்டன் அறிவிக்கிறான்
இதற்கிடையில் நாக நாட்டின் ராஜ நர்த்தகி அங்கயற்கண்ணி (பி.கே.சரஸ்வதி) சந்திரன் மேல் பித்தாகிறாள். அவனிடம் தன் காதலை கூறுகிறாள். அவன் அதை மறுத்து அவளுக்கு நற்புத்தி கூறுகிறான். அவளை சகோதரியாய்ப் பார்க்கிறான்.
நாகவல்லி தனக்குக் கிடைக்காமல் போனதால் "புள்ளிமான் கிடைக்க வில்லையே... ஆடும் மயிலை முயற்சி செய்து பார்க்கலாமே" என்று நர்த்தகி அங்கயற்கண்ணியைக் காதலிக்க முற்படுகிறான் கற்பக மன்னன் சூரிய காந்தன். அதிலும் அவனுக்குத் தோல்வியே. அங்கயற்கண்ணி சந்திரனை விரும்புவதை அறிந்து கொள்கிறான் கற்பக மன்னன். சந்திரன் மனதில் நாகவல்லி இருப்பதை அங்கயற்கண்ணியிடம் சமயம் பார்த்துக் கூறி, அவள் மனதில் சந்திரன் மீதான ஆத்திரத்தை அதிகமாக்குகிறான்.. உள்ளுக்குள் இயலாமைத்தீயும், பொறாமைத் தீயும் கொழுந்து விட்டெரிய, வாயில் பொய்ப்புன்னகை அரும்ப அரண்மனையை எப்போதும் வலம் வந்தபடி அனைவரையும் நோட்டம் விட்டுக் கொண்டிருக்கிறான் கற்பக நாட்டு மன்னன்.
ஆனால் அங்கயற்கண்ணியோ சந்திரனை விட்டாளில்லை. அவனை தன்னைக் காதலிக்கக் சொல்லி மீண்டும் மீண்டும் வற்புறுத்த, ஒரு கட்டத்தில் மிக்க கோபமுறும் சந்திரன் அவள் குலத்தை இழிவாகப் பேசி அவளை அவமானப்படுத்தி அனுப்பி விடுகிறான்.
சந்திரனால் ஏற்பட்ட காதல் தோல்வியும், அவனால் நேர்ந்த தேர்ந்த அவமானமும் அங்கயற்கண்ணியைப் பிடுங்கித் தின்ன அதுவே அவளை பழிவாங்கும் படலத்தில் கொண்டு வந்து நிறுத்துகிறது. சந்திரனை பதிலுக்கு மண்டியிடச் செய்ய அவள் தன் காதலுக்காகத் தவமிருக்கும் கற்பக மன்னனை தனக்கு துருப்புச் சீட்டாகப் பயன்படுத்த திட்டமிடுகிறாள். அவனை தான் காதலிக்க வேண்டுமென்றால் காதலுக்கு விலையாக சந்திரனை தன்னிடம் கற்பக நாட்டு மன்னன் கொண்டு வந்து மண்டியிடச் செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறாள். ஒப்புக் கொள்கிறான் ஓநாய்த்தனம் செய்யும் ஓங்கார நரி சூரியகாந்தன்.
மலையமானைப் பிடிக்க தானே கிளம்புகிறான் சந்திரன். தாயிடம் விடை பெற்றுப் போக தன் வீட்டிற்கு வந்தவன் அடிக்கடி ரகசியமாய் தன் மனைவியை சந்திக்கும் மலையமான் தன் தாயுடன் உரையாடிக் கொண்டிருப்பதை தற்செயலாகக் கவனித்து குமுறும் எரிமலையாகிறான். தன் தாயின் நடத்தையை சந்தேகித்து அவளை விபச்சாரி என்று இழித்துரைக்கிறான். அது கேட்டு பொறுக்க முடியாத அவள் வந்திருப்பது அவன் தந்தை மலையமான்தான் என்று சந்திரனிடம் கூற முற்படுகையில் மலையமான் அவளை ஒன்றும் சொல்ல விடாமல் கட்டாயமாகத் தடுத்து விடுகிறான். தந்தை என்று தெரியாமலேயே அவனுடம் மோதுகிறான் சந்திரன். ஆனால் மகனிடமிருந்து தப்பி விடுகிறான் மலையமான்.
நடப்பது அத்தனையையும் தன் ஆட்கள் மூலம் கண்கொத்திப் பாம்பாகக் கவனித்துக் கொண்டிருக்கும் கற்பக நாட்டு மன்னன் சந்திரன் மீதான தன் பழிப் படலத்தை ஆரம்பிக்கிறான். மலையமானுக்கும், சந்திரனுக்கும் ரகசிய உறவு இருப்பதாக குற்றம் சுமத்தி மார்த்தாண்டன் அரசவையிலே சந்திரனைக் குற்றவாளியாக, தேசத் துரோகியாக நிறுத்துகிறான் கற்பக மன்னன். தன் காதலுக்குக் குறுக்கே வந்த சந்திரனை சமயம் பார்த்து கருவறுக்கிறான் சூரியகாந்தன். சூழ்நிலைகள் தனக்கு எதிரியாகிப் போக தன்னை நிரபராதி என்று நிரூபிக்க போராடுகிறான் சந்திரன். தனக்கும், மலையமான் தன் வீட்டில் தன் தாயாரை சந்தித்ததற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று மறுக்கிறான். ஆனால் மார்த்தாண்டன் சூரிய காந்தனின் வற்புறுத்தலின் பேரிலும், சாகசமான சாதுர்யமான அவனுடைய குற்றச்சாட்டு வாதங்களின் பேரிலும் சந்திரனுக்கு அளிப்பதோ மரண தண்டனை.
அனைத்தையும் அமைதியாக கவனித்துக் கொண்டிருக்கிறார் ராஜகுருவும். ஆனால் அவர் எவ்வளவோ வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறார் எவரும் பாதிக்கப்பட்டு விடக் கூடாதென்று. ஒற்றுமை உணர்வு சீர் குலைந்து விடக் கூடாது என்று. இப்போது சந்திரன், நாகவல்லி காதல், அவர்களின் திருமணம் கேள்விக்குறியில் நிற்கிறது.
ஐந்து நாட்களில் மலையமானை கைதியாகப் பிடித்து இழுத்து வருவதாக மார்த்தாண்டனிடம் தவணை கேட்கிறான் சந்திரன். இல்லையென்றால் மரணத்தை ஏற்கிறேன் என்கிறான். ராஜகுருவின் சிபாரிசின் பேரிலும், அத்தனைக்கும் பொறுப்பு தான் ஏற்றுக் கொள்வதாக அவர் கூறியதன் பேரிலும் அதற்குச் சம்மதிக்கிறான் மார்த்தாண்டன்.
ராஜகுரு மலையமான் உயிருக்கு எந்த சேதமும் வராமல் அவனைப் பிடித்து வர வேண்டும் என்ற நிபந்தனையோடு மலையமானின் இருப்பிடத்தை சந்திரனிடம் தெரிவிப்பதோடு கையோடு கையாக சந்திரனுக்கும், நாகவல்லிக்கும் இரு வீட்டாரும் சம்மதம் தர மாட்டார்கள் என்று யாருக்கும் தெரியாமல் காந்தர்வ விவாகம் செய்து வைத்து விடுகிறார்.
மலையமானின் மறைவிடத்திற்கு சென்று அங்கு மலையமானிடம் மோதுகிறான் சந்திரன். வந்திருப்பது தன் செல்வப் புதல்வன் என்று அறிந்து அவனை எதிர்க்காமல் பாசம் காட்டுகிறான் மலையமான். ஆனால் நேருக்கு நேர் போர் செய்ய மலையமானை அழைக்கிறான் விவரமறியா சந்திரன். போரில் தனயனுக்காக வேண்டுமென்றே விட்டுக் கொடுத்து அவனிடமே கைதியாகிறான் தந்தை.
அந்நேரத்தில் அங்கு வரும் ராஜகுரு அப்போது உண்மையை உடைக்கிறார். மலையமான் சந்திரனின் தந்தை என்ற உண்மையை அவனுக்குக் கூறுகிறார். நடந்தவைகளை ஒன்று விடாமல் அவனிடம் கூறுகிறார். அத்தனையையும் கேட்டு துடிக்கிறான் மகன். தன் தாயை அறியாமல் புண்படுத்தி விட்டோமே என்று வேதனையடைகிறான். 'தன் தந்தை அநாதை போல் காட்டில் இவ்வளவு காலம் மனைவியையும், மகனையும் விட்டு நாட்டை மீண்டும் பிடிக்க சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்து அலைகிறானே' என்று துவள்கிறான். இவ்வளவுக்கும் காரணமான மார்த்தாண்டனை பழி கொள்ளத் துடிக்கிறான். தன் காதலியின் நிலை, மலையமானை ஐந்து நாட்களுக்குள் நிறுத்துவதாக தான் போட்ட சபதம் இவற்றை எண்ணி துன்புறுகிறான். தந்தை தடுத்தும் தனி ஆளாக மீண்டும் நாக நாடு வருகிறான்.
தன் மகள் காந்தர்வ விவாகம் செய்து கொண்டதை அவள் வாயாலேயே கேட்டு கோபமுறும் மார்த்தாண்டன் அந்தப்புரத்திலேயே அவளை சிறை வைக்கிறான்.
நாக நாட்டு நீதமன்றத்தில் மீண்டும் சந்திரன். கைதி. "மலையமான் எங்கே?" என்று ஏளனக் கணை தொடுக்கிறான் கற்பக மன்னன் சூரியகாந்தன். மலையமானை பிடித்துக் கொண்டு வந்திருப்பதாக, அவன் அங்கேயே இருப்பதாகக் கூறுகிறான் சந்திரன். அனைவரும் வியப்பு மேலிட கவனிக்கின்றனர். மலையமான் அங்கில்லை. பைத்தியம் பிடித்து விட்டதாக கற்பக மன்னன் சந்திரனை எள்ளி நகையாடுகிறான். ஆனால் அப்போது தான் தான் மலையமான் என்று தன்னை சின்ன மலையமானாக அடையாளம் காட்டுகிறான் சந்திரன். மார்த்தாண்டனுக்கு அவன் எதிரியின் மகன் என்று புரிய வைக்கிறான். கற்பக மன்னனுக்கும்,சந்திரனுக்கும் வாக்குவாதம் முற்றி அது வாட்போருக்கு வழிவகுக்க ராஜகுரு அங்கே வருகிறார்.
மலையமானைப் பிடிக்காமல் வந்ததால் மன்னனின் மரண தண்டனையை சந்திரன் ஏற்கத்தான் வேண்டும் என்றும் மனமுடைந்து கூறுகிறார்.ராஜகுரு. மறுக்கிறான் சந்திரன். அவன் மறுத்தால் அத்தனைக்கும் பொறுப்பேற்ற தனக்கு இழிவு நேர்ந்து விடும் என்று ராஜகுரு தன் நிலை கூற, நிலை குலைந்து போகிறான் சந்திரன்.. ராஜகுருவின் மானத்தைக் காக்க மரணத்தை ஏற்க சித்தமாகிறான். இதற்குள் பல உயிர்களின் நலன் வேண்டி மார்த்தாண்டனின் சிறு வயது இளவரசனைக் கடத்தி பிணையக் கைதியாய் யாருக்கும் தெரியாமல் மலையமான் வசம் அனுப்பி வைக்கிறார் ராஜகுரு.
சந்திரனுக்கு தரப்பட்ட தூக்கு தண்டனையால் தங்கள் உயிரை விடச் சித்தமாகின்றனர் அவன் தாயும், நாகவல்லியும்." தூக்கு தண்டனையை என்னால் ஆன எல்லா முயற்சிகளையும் செய்து நிறுத்துகிறேன்... முடியா விட்டால் நீங்கள் உங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளுங்கள்"........' என்று அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே ஒரு துளி விஷம் அடங்கிய குப்பிகளை பெருத்த மனவேதனையுடன் வேறு வழியின்றி கொடுக்கிறார் ராஜகுரு.
ராஜநர்த்தகி அங்கயற்கண்ணி தான் ஆசையுடன் காதலித்த காதலன் சந்திரன் தூக்கு மேடையை முத்தமிட சித்தமாகி விட்டானே என்று மனம் மாறுகிறாள். அவன் மேல் கொண்ட தீராக் காதல் அவன் மேல் அவளுக்கிருந்த பழி உணர்ச்சியைப் போக்கி விட்டது. சந்திரனைக் காப்பாற்ற கிளம்புகிறாள். அவள் மீண்டும் மனம் மாறி விட்டதை கண்டு கொண்ட கழுகுக் குணம் கொண்ட கற்பக மன்னன் 'இவளும் தனக்குக் கிடைக்க வில்லையே...தன்னைக் காதலிப்பது போலே நடித்து தன்னை வைத்தே காரியம் சாதிக்கத் துணிந்தாளே... தன் வைரி சந்திரனை இன்னும் நினைத்துக் கொண்டிருப்பதோடு தான் சிரமப்பட்டு சந்திரனுக்கு வாங்கித் தந்த மரண தண்டனையிலிருந்து அவனை காப்பாற்ற வேறு போகிறாளே' என்ற ஆத்திரத்திலும், கடும் கோபத்திலும் அவள் கழுத்தை நெரித்து.....
மறுநாள். தூக்கில் தொங்கத் தயாராக சந்திரன். மகனைக் காப்பாற்ற ஓடோடி வந்து தானே மார்த்தாண்டனிடம் சரணடைவதோடு தன்னைக் கொன்று மகனை விடுவிக்க அவனை மண்டியிடுகிறான் மலையமான். அது மட்டுமல்லாமல் ராஜகுரு மூலமாக அனுப்பி வைக்கப்பட்ட, பிணையக் கைதியாகத் தான் வைத்திருந்த மார்த்தாண்டன் மகனையும் அவன் வசம் ஒரு சிறு சேதாரமுமில்லாமல் ஒப்படைக்கிறான். தன் மகனை ஒப்படைத்த மலையமான் மீது மார்த்தாண்டனுக்கு இரக்கம் பிறந்தாலும் அவன் தேடப்பட்ட பலவருடப் பகைவன் என்ற காரணத்தால் அவனுக்கு மரண தண்டனை அளித்து சந்திரனை விடுதலை செய்கிறான் மார்த்தாண்டன்.
மார்த்தண்டனுக்கு தூக்கு போட இருக்கும் அந்த நேரம். அதிரச்சியாய் இரு செய்திகள். சந்திரனின் தாய் மற்றும் நாகவல்லி இருவரும் விஷம் குடித்து இறந்து விட்டார்கள் என்று. மார்த்தாண்டனின் மகள் மரித்தாள். மலையமான் மனைவி மகாராணி மாண்டு போனாள். இருவரும் ராஜகுரு தந்த ஆளுக்கொரு துளி விஷத்தை உண்டு மரணம் தழுவினார்கள்.
இரு மன்னவர்களும் தங்கள் சொந்தங்களை இழந்த சோகத்தில். மலையமான் தன் மனையாளின் முகத்தை இறுதியாய் பார்க்கட்டும் என்று மார்த்தாண்டனிடம் கருணை காட்டச் சொல்கிறார் ராஜகுரு. மரண தண்டனையை ஒத்தி வைக்கச் சொல்லுகிறார். சம்மதிக்கிறான் மன்னன். இரு சடலங்களுக்கு அருகில் கண்ணீருடன் இரு மன்னர்களும் நிற்க, ராஜகுரு இரு மன்னர்களின் பகையுணர்வால் வீணே இரு உயிர்கள் பலியான சோகத்தை தன் பிரசங்கம் மூலம் அவர்களுக்கு அறிவுறுத்துகிறார். இனியாவது இருவரும் ஒற்றுமையுணர்வுடன் பகையின்றி வாழ வேண்டும் என்று இரு மன்னர்களிடமும் அந்தந்த இழந்த உயிர்கள் சார்பாக சத்தியமும் வாங்கிக் கொள்கிறார். அன்பின் வலிமையைப் போதிக்கிறார். மன்னர்கள் தத்தம் பகைமையை உணர்ந்து நண்பர்களாகிறார்கள். ஆனால் முடிவு?!......
இதுதான் 'துளிவிஷ' த்தின் விரிவான கதை. இதை துளியாக சுருக்கியும் வரையலாம். ஆனால் அபூர்வமானதொரு படம். பலரும் பார்த்திருக்க முடியாத படம். நடிகர் திலகத்தின் ரசிகர்கள் அல்லாது பல பொது ரசிகர்களும் பழைய சினிமா ரசிகர்களும் விரும்பி எதிர் நோக்கும் படம். இந்தக் கதையை விரிவாகப் படித்து சந்தர்ப்பம் கிடைக்கையில் இப்படத்தைப் பார்த்தால் அவர்களுக்கு ஓரளவிற்கு உதவியாய் இருக்கும், சுவாரஸ்யமும் கூடும் என்ற எண்ணத்தில்தான் சற்று விரிவாகவே இந்தக் கதையைக் கொடுத்திருக்கிறேன்.
முழுவதுமாகப் படித்துப் பாருங்கள்.
பாகம் 2
இனி நம் இனியவனைப் பற்றி....
http://i1087.photobucket.com/albums/..._000663896.jpg
கற்பக நாட்டு மன்னன் சூரியகாந்தனாக நடிப்புலக சூரியன். நடிக்க வந்த இரண்டே ஆண்டுகளில் (1954-இல்) அதுவும் கதாநாயகனாக உச்சங்களில் பயணித்துக் கொண்டிருக்கும் போதே துணிந்து 'திரும்பிப்பார்', 'அந்தநாள்' என்ற புரட்சிகளுக்குப் பிறகு வில்லன் போன்ற வேடத்தில் அனைவரையும் மீண்டும் வீழ்த்திய படம். (நடிகர் திலகத்தின் 16 ஆவது பரவசம்)
மலை நாட்டுக்கு பெண் கேட்டு விருந்தாளியாக வரும் அவரின் முதல் காட்சியிலேயே வளைந்திருந்த நம் முதுகெலும்புகள் நேராகும். சேவகர்கள் புடை சூழ, பின் அங்கி தரையில் புரள, சற்றே ஆடி ஆடி அசைந்தவாறு அவர் ஆசனத்தில் வந்து அமரும் ஆர்ப்பாட்டம் ஆனந்தமான ஆனந்தம். அழகான ஜரிகைப் பூக்கள் வேலைப்பாடு கொண்ட கருப்பு வண்ண ராஜ உடையில் காந்தர்வனாக கம்பீரத்தில் ஜொலிப்பார். தலையில் சூட்டப்பட்டிருக்கும் பூஞ்சிறகுகள் கொண்ட தலைப்பாகை தலைவனின் அழகை தரணி எல்லாம் புகழ பாட வைக்கும்.
எஸ்.வி.ரங்காராவிடம் நடிகர் திலகம் தனிமையில் பெண் கேட்கும் போது பார்க்க வேண்டுமே! நாகவல்லி வேறு ஒருவனைக் காதலித்து விட்டாள் என்பதை ரங்காராவ் நடிகர் திலகம் மனம் கோணாதபடி சொல்லத் தயங்கியபடி இருக்க, நாகவல்லி தனக்குத்தான் என்ற முழு நம்பிக்கையில் இவர் இருக்க, "நாகவல்லியின் விருப்பப்படி அவள் திருமணத்தை விட்டு விட்டேன். இல்லையென்றால் நீங்களே என் மருமகனாகும் பாக்கியம் எனக்குக் கிடைத்திருக்கும்" என்று ரங்காராவ் பட்டும் படாமல் விஷயத்தை தொட, நடிகர் திலகம் சற்றே புரியாமல் கொஞ்சம் வெட்கப்பட்டவாறு தன் முன்னால் உள்ள டேபிளை கையால் தடவியபடி
"இன்னும் சிலேடையாகவே பேசுகிறீர்களே மாமா" என்றபடி
ஓரக்கண்ணால் ரங்காராவை நோக்கும் அந்தப் பார்வை நமக்கு பரவச பாயாசம்..பின் ராவ் உண்மையை உடைத்ததும் அதுவரை உற்சாகமாய் இருந்த நடிகர் திலகம் அதை சற்றும் எதிர்பாராமல் அதிர்ச்சிக்குள்ளாகி ஏமாற்ற உணர்வுகளை முகத்தில் பரவ விடுவார். ஏமாற்றம் மட்டுமல்ல அதில் அவமானக் குறுகல், எண்ணி வந்த நோக்கம் வீணாயிற்றே என்ற விரக்தி, மெலிதாய்ப் படர ஆரம்பிக்கும் கோபம், அடுத்து என்ன செய்வது என்ற சிந்தனை ரேகை போன்ற சங்கதிகள் முகத்தில் தெரிய ஆரம்பிக்கும். நாகவல்லி நன்றாக இருக்கட்டும் என்று சமாதானத்திற்கு என்று வாய் பேசினாலும் வஞ்சப் படல வலை நெஞ்சில் பின்ன ஆரம்பிக்கப்பட்டிருக்கும்.
தன் தோழனான 'காக்கா' ராதா கிருஷ்ணனை 'கரும்பு' என்று இழுத்தபடி அழைப்பது ஒரு தனி ஸ்டைல். 'கரும்பு' இளவரசியின் காதலனைப் பற்றி தெரிந்து கொண்டு வந்து, நடிகர் திலகம் மெச்ச வேண்டுமென்று "அவன் அவலட்சணமானவன், அறிவிலி" என்று அடுக்க, அதற்கு "தகுதியற்றவன் ஆயின் அவள் தந்தையிடம் சொல்லி தடுத்தே ஆக வேண்டும்" என்று நாகவல்லி மேல் ரொம்ப அக்கறை கொண்டவர் போல் பாசாங்கு செய்வது. ஆனால் உள்ளுக்குள்ளே அவள் காதலனை அவளுக்குக் கிடைக்கச் செய்ய விடக் கூடாது என்ற வஞ்சக எண்ணம். பார்க்கும் நாமே இத்தனை நல்ல குணமா! என்று வியந்து போவோம். ஆனால் அவ்விடத்தின் நோக்கமே வேறு. பார்வையாலும், சர்க்கரை தடவிய பேச்சாலும், ஏமாற்று கள்ளச் சிரிப்பாலும் அந்த கேரக்டரை நடிகர் திலகம் அப்படி கையாளுவார்.
தானே நேரிடையாக மறைந்திருந்து கே.ஆர்.ராமசாமியை கண்டதும் "நாகவல்லி தனக்கேற்ற அழகான, அறிவான, வீரமான துணையைத்தான் தேடிக் கொண்டிருக்கிறாள்" என்பதைப் புரிந்து கொள்வார். இனி நாம் ஒன்றும் செய்ய முடியாதோ என்ற சந்தேகக் கீறல் முகத்தில் விழும். இருந்தாலும் அங்கயற்கண்ணி சந்திரனை சந்திக்க விரும்புகிறாள் என்பதை தோழி சந்திரனிடம் கூறுவதை ஒளிந்து நின்று கேட்டவுடன் காக்கா "இவனுகென்ன அங்கயற்கண்ணி வீட்டில் வேலை? என்று இவருக்கு தூபம் போட, "கட்டழகியின் வாழ்வு ஒரு கயவனிடம் சிக்கி விடக் கூடாது" என்பார். எப்படியாவது சந்திரன் கயவனாக இருக்க வேண்டும் என்று மனம் விரும்பும். அதைக் கொண்டு அந்தக் காதலை முறித்து விடலாமே என்பதில் மனம் குறியாய் இருக்கும்.
சந்திரன் அங்கயற்கண்ணியின் காதலை மறுத்து வெளியேறியவுடன் "சந்திரன் நல்லவன்... இனி சந்திரன் நாகவல்லி காதலை பிரிக்க முடியாது... நமக்கு இனி கிளி கிட்டாது" என்பதை புரிந்து, சந்திரன் கிடைக்காத ஏமாற்றத்தின் விளிம்பில் நிற்கும் அங்கயற்கண்ணியிடம் சென்று "சந்திரன் மனதில் நாகவல்லி இருக்கிறாள்" என்று உண்மையை உடைப்பார். குழம்பி நிற்கும் அங்காவிடம் தன் காதலை வெளிப்படுத்த பேச விரும்புவார். ஆனால் அவள் "மற்றொரு சமயம்" என்றவுடன் "சரி! மற்றொரு சமயம்" ஒன்றும் தெரியாத பாப்பா போல முகத்தை வைத்துக் கொண்டு திரும்பி செல்வார். "சரி! விட்டுப் பிடிப்போம் இது சமயமல்ல..அவள் சந்திரன் மூடில் இருக்கிறாள்" என்பது போல.
காக்காவுடனும் நண்பர்களுடனும் பேசிக் கொண்டிருக்கையில்" நாக நாட்டிலேயே கொஞ்ச நாளைக்கு தங்க வேண்டும்" என்பார். "ஏன்? என்று நண்பர்கள் கேட்க "அங்கயற்கண்ணியின் மனதில் சந்திரன்... ஆனால் சந்திரன் நாகவல்லியின் மணாளன். அங்கயற்கண்ணியின் காதலுக்கு நான் அபேட்சகனாக (அதாவது வேட்பாளராக) ஏன் நிற்கக் கூடாது" என்று போட்டுத் தாக்குவாரே பார்க்கலாம். அது மட்டுமல்ல. நண்பன் ஒருவன் "அங்கயற்கண்ணிக்காக நாக நாட்டில் தங்குவது சரியல்ல" என்று எடுத்துரைப்பான்.
நண்பன்: கடமை இருந்தது... சொன்னோம்.
அதற்கு நடிகர் திலகத்தின் பதில்: காது இருந்தது ... கேட்டோம்.
எப்படி?! கொஞ்சம் கூட நண்பனை மதிக்காமல் படு அலட்சியமாக பதில் வரும். அப்படி கண்மூடிக் காதலும்,லேசான காமுமுற காணப்படுவார்.
வீர மார்த்தாண்டன் தன் அவையைக் கூட்டி தன் மகள் தளபதி சந்திரனைக் காதலிப்பதைக் கூறி அவளை அவனுக்கு மணமுடித்து வைப்பதாகவும் கூறுகிறான். அமைச்சர்கள் மறுப்புக் கருத்துக்களை வெளியிட மார்த்தாண்டனின் புதுமையான முடிவை வரவேற்று நடிகர் திலகம் முழங்குவது அவரின் சுயநலத்தை நன்கே பிரதிபலிக்கிறது. (மார்த்தாண்டன் அரசு அந்தஸ்தில்லாத சந்திரனை மருமகனாக்கி புரட்சி செய்ததைப் போல அவன் வழியே கற்பக மன்னனாகிய தான் அரசு அந்தஸ்தில்லாதா நர்த்தகி அங்காவை மணந்து பட்டத்து ராணியாக்குவாராம்...என்னே ஒரு ஜாக்கிரதையான சுயநலம்! எல்லாவற்றையும் தனக்கு சாதகமாக்கிக் கொள்ளும் கயமை கலந்த புத்திசாலித்தனம்.)
அடுத்து அங்காவை தனியாக சந்திக்கும் கட்டம். "சந்திரன் உனக்குக் கிடைக்க மாட்டான். என் காதலை ஏற்றுக் கொள்" என்று கழுத்தில் தொங்கும் டாலரைப் பிடித்துக் கொண்டே பேசிக் கொண்டிருப்பார்.
அங்கயற்கண்ணி :நாகவல்லி உங்களைக் காதலிக்கவில்லை
நடிகர் திலகம்: இல்லை.
அங்கயற்கண்ணி: அவளை மறந்து விட்டீர்கள்.
நடிகர் திலகம்: மறந்து விட்டேன்.
அங்கயற்கண்ணி: அங்கயற்கண்ணியும் உங்களைக் காதலிக்கவில்லை
அதுவரை தெளிவாகப் பேசிக் கொண்டிருந்தவர் கணத்தில் 'ஆங்' என்று முகத்தை சுருக்குவார் பாருங்கள். அள்ளிக் கொண்டு போகும். பின் அங்கயற்கண்ணி எவ்வளவோ மறுத்தும் "சம்மதிக்கும் வரை இடத்தை விட்டுப் போக மாட்டேன். உண்ணாவிரதம் இருப்பேன்" என்று பிடிவாதமாக சேரில் அமர்ந்து அடம் பிடிக்கும் அழகே அழகு! ('இருவர் உள்ளம்' போல) நகைச்சுவை இழையோட இந்த சீனில் பிரமாதப்படுத்துவார்.
https://www.youtube.com/watch?v=peD-...yer_detailpage
அங்கா சந்திரனைப் பழி வாங்க இவரை காதலிப்பதாக நடிக்கும் போது வரும் அந்த மறக்க முடியாத பாடல் ('என்னை அறியாமல் பெருகுது இன்பம்தான்') அங்கா நாட்டியமாட, ஒவ்வொரு வரிக்கும் தலைவர் சேரில் அமர்ந்து கனிகளை உண்டபடி தரும் முகபாவங்களுக்கு கோடி கோடியாய்க் கொட்டிக் கொடுத்தாலும் ஈடாகாது. இரு தோள்பட்டைகளையும் முன் பக்கம் வெட்டி, வெட்டி அசைத்து, 'பருவம் நல்ல உருவம்' வரிகளின் போது தலையை ஒருமாதிரி ஆட்டி ரசிக்கும் அழகை எப்படி வர்ணிக்க முடியும்? பாட்டில் வரும் வரிகள் இவர் புகழ் பாடும் போது முகத்தில் காட்டும் அந்த பெருமை கலந்த சிரிப்பு, கிட்டாத கனி கிட்டி விட்டதே என்ற பூரிப்பு, வந்த காரியம் நிறைவேறாமல் போனால் கூட இந்த காரியம் நிறைவேறி விட்டதே என்ற பூரண திருப்தி என்று அமுத விருந்தை அழகாய்ப் படைக்கும் நேர்த்தி.
அடுத்த முக்கியமான காட்சி. பத்திரிகைகள் வியந்து எழுதிய காட்சி. அழகு உடையலங்காரத்திலே ஆர்ப்பாட்ட வசன மழை பொழிந்து என் ஆண்டவன் சந்திரன் மேல் நீதி விசாரணையில் ராஜ துரோகக் குற்றம் சாட்டும் காட்சி. அடுக்கடுக்காக அழகுத் தமிழில் குற்றம் சுமத்தும் சாமர்த்தியம், தான் இருக்க வேண்டிய நாகவல்லியின் மனதில் சந்திரன் இடம் பிடித்து விட்டானே என்ற வெறியுணர்ச்சி, அதை வெளிக்காட்டாத புத்திசாலித்தன சாதுர்யம், ராஜ துரோகத்திற்கு விளக்கம் கூறும் அழகு, (எதிரே நிற்பது சீனியரான கே.ஆர். ராமசாமி என்ற பயம் கொஞ்சமாவது இந்த மனிதரிடம் இருக்கிறதா? "யாராய் இருந்தால்தான் என்ன! என்னை அடக்க ஒருவரும் இல்லை" என்பது போல சரியான ஏற்ற இறக்கங்களுடன் தெள்ளத் தெளிவாக நொடிக்கொருதரம் மாறுகின்ற முக பாவங்களுடன் கம்பீரக் களிநடம் புரியும் கர்ஜனை சிங்கமாக உலவும் இந்த மாமனிதரை அடைய நாம் செய்த தவம்தான் என்ன!)
அதே போல மலையமான் இல்லாமல் தனி ஆளாக சந்திரன் திரும்பி அரசவையிலே நிற்கும் போது "சொன்னபடி அவன் செய்ய வில்லை...மலையமானைப் பிடித்து வரவில்லை" என்று எள்ளி நகையாடுவார். இடைவிடாமல் பழி சுமத்துவார். நடுவில் ராமசாமி பேச முற்படும் போது "இடைச்செருகலுக்கு இடம் கேட்கப் போகிறாயா?" என்று முழங்குவார். "மலையமான் இதோ" என்று ராமசாமி தன்னைக் காட்டுகையில் "பிதற்றுகிறான் பித்தன் ...மண்டை குழம்பி விட்டது" என்று கொக்கரித்து சிரிப்பார்.
இறுதியில் அங்கயற்கண்ணி தன்னை பொய்யாகக் காதல் செய்து சந்திரனைக் காப்பாற்றக் கிளம்பி விட்டாள் என்று தெரிந்து கொந்தளித்து ஏமாற்றத்தின் எவரெஸ்ட்டை தொட்டுவிட்ட கோபத்தில்
அவள் கழுத்தை கொலை வெறி சிரிப்புடன் நெரித்துக் கொன்று பழி தீர்க்கும் வேகத்தில் அனைவரையும் பதைபதைக்க வைத்து விடுவார் இந்த விஷ(ம)க்காரர்.
மேற்சொன்ன காட்சியில் அங்காவைக் கொலை புரிந்து விட்டு அவர் கூறும் வசனங்கள்.
"கடலின் ஆழத்தை, காற்றின் வேகத்தை அறியலாம்...விண்மீன்களை எண்ணலாம்... ஆனால் பெண்ணின் மனது புரியாத புதிர் என்ற புதுப் பாடம் கற்றேன்"...
கொலை நடந்து விட்டதால் "யாருக்கும் தெரியாமல் ஓடி விடலாம்" என்று 'காக்கா' கூறியதும் "எதற்கு?... வீர மார்த்தாண்டனிடம் சொல்லி விட்டே போகலாம்" என்ற பயமேயில்லாத திமிர்த் தைரியம் காண்பிப்பார்.
"ஐயோ! இந்தக் கொலைக்கு நாம பதில் சொல்லணுமே!" என்று 'காக்கா' சொன்னதும் 'பதில்... ஆ" என்று ஒரு உறுமல் உறுமுவார் 'கர்ண'னில் ஓ.ஏ.கே தேவரிடம் உறுமுவதை போல.
மொத்தத்தில் படம் முழுக்க ஆங்காங்கே நிறைந்து, சொல்லில் ஒன்று செயலில் ஒன்று காட்டி, தன்னை நல்லவனாகவே அனைவரும் நம்பும்படி காட்டி, சிரித்தே சீர்குலைத்து, சுயநலம் கொண்ட குள்ளநரியாக, தன்காரியப் புலியாக, லேசான நகைச்சுவை இழையோட இந்த கற்பக நாட்டு மன்னன் சூரியகாந்தன் காந்தமாய் நம் அனைவரது மனதையும் சுண்டி இழுத்து கொள்ளையடிக்கிறான். அனைவரும் அவனுக்குப் பின்னால்தான். அவனை முந்த எவராலும் இயலாது அவன் ஒருவனைத் தவிர.
பாகம் 3
இனி மற்ற கலைஞர்களைப் பற்றி...
'நடிப்பிசைப் புலவர்' கே.ஆர். ராமசாமி
http://raretfm.mayyam.com/pow07/imag...livisham01.jpg
கதாநாயகன் சந்திரன் ரோலில் நன்றாகப் பரிமளிக்கிறார். உருவமும், ஒப்பனையும், அடுக்கு மொழிப் பேச்சுகளும் இவரின் திராவிட உணர்வை பறை சாற்றுகின்றன. 'சுகம் எங்கே?' 'வேலைக்காரி', 'செல்லப்பிள்ளை' போன்ற புகழ் பெற்ற படங்களில் நடித்து, பாடி பெருமை பெற்றவர். வசனங்களையும் நன்றாகப் பேசுகிறார். ஆனால் சில இடங்கள் உணர்ச்சிக் காட்சிகளில் வேகமாக வசனங்களை பேசுகையில் நா குழறுவதை தவிர்க்க முடியவில்லை. கிருஷ்ணகுமாரியுடன் இவருடனான காதல் காட்சிகள் ஒட்டவில்லை. அவருக்கும், இவருக்கும் எங்கோ நிற்கிறது. மற்றபடி எக்ஸ்பிரஷன்ஸ் பரவாயில்லை. நடிகர் திலகத்துடனான நீதி மன்றக் காட்சிகளில் ஓரளவிற்கு ஈடு கொடுக்கிறார். நிறைய பேச இல்லை கத்த வைத்து விட்டார்கள். சொல்லில் இருக்கும் வேகம் செயலில் இல்லை....விவேகமும் போதவில்லை. கேரக்டர் அப்படி. நடிகர் திலகத்துடன் நடிக்கையில் மிகுந்த ஜாக்கிரதை உணர்வுடன் ஆனால் அலட்சியமாக நடிப்பது போன்று நம்மகிட்டேயே வேடமிட்டு நடித்துக் காட்டுகிறார். ம்... நாமெல்லாம் யாரு? ஓ.கே. ஓ.கே
கிருஷ்ணகுமாரி
ஆஹா! தேவதை பூமியில் இறங்கி வந்ததைப் போல அவ்வளவு கியூட். பார்பி டால் மாதிரி. கண் பட்டுப் போகும் அழகு. உடல்வாகு கனகச்சிதம். நடிகர் திலகத்திற்கு ஜோடியாக படங்களில் நடித்திருக்கக் கூடாதா என்று ஏங்க வைக்கிறார். நடிகர் திலகமும் இவரும் சந்திப்பது மாதிரி ஒரு காட்சி கூட இல்லை. கட்டிப் பிடித்து அழ கோபால் இப்போது தேவை. (திரும்பிப் பார்த்து திருப்தி அடைய வேண்டியதுதான்) அதே போல நடிப்பும். நறுக்குத் தெரித்தாற் போல. தந்தையிடம் தன் காதலைச் சொல்லி சம்மதம் வாங்கி சந்தோஷம் கொள்ளும் அழகு ரோஜா. சந்திரன் குற்றவாளி அல்ல என்று தந்தையிடம் வாதாடுகையில் பிரமாதப்படுத்துகிறார். அழுது புரண்டு "ஐயோ! அப்பா அப்பா" என்று அரற்றி அலறாமல் இரண்டொரு வார்த்தைகளில் தந்தையை மடக்கி நச்சென்று முத்திரையைப் பதிக்கிறார். பார்த்தாலே பரவசம். சூப்பர் அழகு சுந்தரி.
பி.கே.சரஸ்வதி
இரண்டாவது கதாநாயகி. நர்த்தகி அங்கயற்கண்ணி. அலட்சியமான நடிப்பு. சந்திரன் மேல் உண்மைக் காதல், பின் வெறுப்பு, சூரியகாந்தன் மேல் வெறுப்பு, பின் அவன் மேல் சந்தர்ப்பப் பொய்க்காதல் என்று நிறைவான நடிப்பு. சற்றே குண்டு ஆனாலும் உறுத்தாத அழகு. 'என்னை அறியாமல்' பாடலில் நடிகர் திலகத்தைப் பல ஸ்டைல்கள் செய்ய வைப்பார். பொசுக்கென்று சூரியகாந்தனால் கொல்லப்படுவது என்னவோ போல் உள்ளது. இன்ட்ரெஸ்ட்டிங் கேரெக்டர்.
எஸ்.வி.ரங்காராவ்
எப்போதும் கிழத் தோற்றம். நடிப்பிலும் பழுத்த கிழம். ஆனால் வீரம் மிஸ்ஸிங். அலட்டிக் கொள்ளாத நடிப்பு. மகள் மேல் பாசம், அவள் சுதந்திரத்தில் தலையிடாத நேசம், கற்பக நாட்டு மன்னனுடன் சிநேகம், மலையமான் மீது ஆத்திரம், சந்திரன் மீது குற்றம் என்று நிறைய சான்ஸ். வழக்கம் போல ஒரே மாதிரி மாறா நடிப்பு.
முக்கமாலா கிருஷ்ணமூர்த்தி
(மூன்று சிறப்புகள் பெற்றவர். நடிகர் திலகத்திற்கு தெலுங்கில் டப்பிங் வாய்ஸ் தந்த அதிர்ஷ்டசாலி. நடிகர் திலகத்துடன் துளி விஷம், நீதி, தியாகம் என்று இணைந்து நடித்த அதிர்ஷ்டசாலி. 'நிரபராதி' திரைப்படத்தில் கதாநாயகனான இவருக்கு பின்னணியாக நடிகர் திலகம் குரல் கொடுக்கப் பெற்ற அதிர்ஷ்டசாலி)
மலையமானாக பரிதாபத்தை அள்ளும் கேரக்டர். நெடிதுயர்ந்த உருவம். (அப்படி! என்ன ஒரு உயரம்!) பின்னணிக் குரல் கொடுத்தவர் முன்னணிக்கு வந்து விட்டதால் இவருக்குப் பின்னணி ராம்சிங். வீரத்திற்கு தகுந்த வாட்ட சாட்டமான உடம்பு. மகனிடம் மனமில்லாது மோதும் போது டாப்கிளாஸ். மகனுக்காக மார்த்தாண்டனிடம் மண்டியிடும் போது கண்களில் நீரை வரவழைக்கும் உன்னதம். அருமை! முக்கமாலா மொக்கைமாலா அல்ல.
டி.வி.நாராயணசாமி
http://www.hindu.com/cp/2009/12/18/i...1850451601.jpg
ராஜகுரு ஜெயம் கொண்ட தேவர் பெருமான். பண்பட்ட உயர்ந்த நடிப்பு. ஒற்றுமையுணர்விற்கு குரல் கொடுக்கும் பாத்திரம். முள்ளை முள்ளால் எடுப்பது போல அதிரடிகளை அதிரடிகளாலேயே அடக்கும் சாந்த ஸ்வரூபி. சாது. படத்தின் முக்கியமான திருப்பங்களுக்குக் காரணமான பாத்திரம். ஒரு சில நேரங்களில் சாதுத்தனத்தையும் மீறி கோபத்தைக் காட்டுவது அழகு! கிளைமாக்ஸில் மகாராணி, இளவரசி சடலங்களை வைத்துக் கொண்டு மன்னர்களுக்கு ஆற்றும் அறிவுரைப் பிரசாங்கம் அற்புதம். கதைகேற்ற கண்ணியமான தேர்வு. சபாஷ்.
எஸ்.டி. சுப்புலஷ்மி
சந்திரனின் தாயார். அளவான தேவைப்படும் நடிப்பு. மகன் விபச்சாரி என்று கொல்ல வரும் போது அதை வாங்கிக் கொள்ளும் துணிவை வெளிப்படுத்தும் பழந்திறமை. ஓல்ட் ஈஸ் கோல்ட் அல்லவா! அழகு அம்மா! அழுகை வரவழைக்கும் அம்மாவும் கூட!
ஊறுகாய்கள்
'காக்கா' ராதாகிருஷ்ணன் கலக்கல். இவரை விடடால் வேறு ஆளை அந்த 'கரும்பு' பாத்திரத்தில் வைக்க முடியாது, வெகு இயல்பு ஜால்ரா. நாடகப் பட்டறை வாசம், நடிகர் திலகத்தினுடனான சிநேகித நேசம். இது ஒன்றே போதும் இவரை நமக்குப் பிடித்துப் போக. தேவரின் தம்பி கூட.
நடிகர் திலகத்தின் நண்பனாக நீண்ட ஒரு ஒல்லி உருவம். யார்... யார்...எங்கோ பார்த்த மாதிரி இருக்கே... அட... நம்ம பாலாஜி... அடையாளமே தெரியல்ல. பாவமாய் ஒரு ஓரமாய் நிக்குது. ஆனா பின்னாலே என்னென்ன சாதிச்சுது... எப்படியெல்லாம் சம்பாதிச்சுது நடிகர் திலகத்தை வச்சு. ராஜாவாச்சே!
முத்துலஷ்மி, கொட்டாப்புளி வழக்கம் போல.
பாகம் 4
திரை தோன்றா சிற்பிகள்.
சாண்டில்யன் மூலக் கதை. புகழ் பெற்ற சரித்திர நாவலாசிரியர். வித்தியாசமான சிந்தனைக் களம்.
கே.என். தண்டாயுதபாணிப் பிள்ளை சங்கீதத்தில் எம்.எல்.வி, லீலா, சூலமங்கலம், டி.வி.ரத்னம், ரத்னமாலா, வி.ஜே.வர்மா கர்நாடக கலக்கல்கள். ஆனால் பாடல்கள் பாப்புலர் ஆகவில்லை. 'என்னை அறியாமல்' பாடலை பாப்புலர் ஆக்காமல் நான் விடுவதில்லை. சபதமென்றால் சபதம். தண்டாயுதபாணிப் பிள்ளை இசையில் நம்மவருக்கு ஒரே ஒரு படம். இதுவும் ஒரு விசேஷ சிறப்பு.
எஸ்.நடராஜனின் கைவண்ணத்தில் தலைவருக்காக வடிவமைக்கப்பட்ட விசேஷ ராஜ உடைகள். வியக்க வைக்கும் எம்ப்ராய்டரி வேலைப்பாடுகள். சொல்லியே ஆக வேண்டும். என்னுடைய 'ஆடைகளுக்கேன்றே பிறந்த ஆணழகன்' தொடரை துளி விஷம் மூலம் சிறப்படையச் செய்ததற்கு நன்றிகள் சார்.
ராமசாமியும், ரங்கசாமியும் ஆணழகரை கம்பீரமாக ஒப்பனை செய்து காட்டியிருக்கிறார்கள். புருவங்களில் கூட புனித சேவை.
கத்திச்சண்டை சோமு ராமசாமியை அதிகமாக டிரில் வாங்கியிருக்கிறார். கூடவே முக்கமாலாவையும். தலைவரை ஓரிரு ஷாட்களில் ஸ்டைலாக மோத வைத்திருப்பார். இன்னும் கூட நன்றாகச் செய்திருக்கலாம்.
ராமமூர்த்தியின் கத்தரிக்கோல் கரெக்டாக வேலை செய்துள்ளது. விறுவிறு என்று அவர் புண்ணியத்தில் காட்சிகள் நகர்கின்றன. இரண்டாவது நீதிமன்றக் காட்சிகளில் கே.ஆர்.ராமசாமியை கொஞ்சம் வெட்டியிருக்கலாம் ஸாரி அவர் சீன்களை கொஞ்சம் நறுக்கியிருக்கலாம். டீ சாப்பிடப் போயிட்டீகளோ!
மஸ்தான் ஒளிப்பதிவில் பிஸ்தாதான். ஆனால் மாடர்ன் சினிமாதான் மங்கலாகவே டிவிடி ஐப் போட்டுள்ளதே!
வி.எல்.நரசு தயாரிப்பு. அபூர்வப் படைப்பு. ராமசாமியையும், கணேசனையும் சேர்த்து வைத்த பெருமைக்காரர். அக்காலத்தைப் பொருத்தவரை ஒரே உரையில் இரு கத்திகள் வைத்து அழகான பேலன்ஸ் செய்தவர். இன்றளவுக்கும் உமக்கு நல்ல பேரப்பா!
திரைக்கதை, வசனம், இயக்கம்: ஏ.எஸ்.ஏ.சாமி.
http://sangam.org/wp-content/uploads....S.A.-Sami.jpg
உங்களுக்கு ஸ்பெஷல் பாராட்டு தலைவா! வசனங்களை எழுதி கொன்னுட்டீங்க போங்க. ஒவ்வொன்றும் பொறி கலங்குது. ஜாடிக்கேத்த மூடியாய் கதைக்கேற்ற அம்சமான வசனங்கள். எங்கள் சிங்கம் அல்வா மாதிரி சாப்பிடுது. ராமசாமியும் ஓரளவு உங்க வசனம் பேசி தேறிடராரு. நீதிமன்ற ராஜ துரோக விசாரணைக் காட்சிகளில் கதாநாயகன், வில்லனுக்கிடையே நடக்கும் விவாதங்கள் சும்மா நெருப்பு கக்குதே. படத்தின் முதல் நாயகன் நடிகர் திலகம் என்றால் கண்டிப்பாக இரண்டாவது நீங்கள்தான். மூன்றாவதுதான் நடிப்பிசைப் புலவர். சில சவ சவ இடங்களை தவிர்த்து விட்டுப் பார்த்தால் உங்கள் இயக்கம் ஓ.கே மட்டுமல்ல. ஓகோதான்!
(ரங்காராவ், முக்கமாலா, கிருஷ்ணகுமாரி என்று தெலுங்கு நட்சத்திரங்கள் முக்கியமான பங்கு வகித்தும் தெலுங்கு வாடை வராமல் பார்த்துக் கொண்டது இயக்குனரின் சாமர்த்தியம்).
மிக மிக அழகாக படைத்து இருக்கிறீர்கள் வாசுதேவன் சார். நான் இதுவரை பார்க்காத படம் இது. வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக கண்டு மகிழ்வேன். மீண்டும் மிக்க நன்றி