Originally Posted by
parthasarathy
அன்புள்ள நண்பர்களே,
ஒரு படத்தைப் பற்றி விமர்சித்து எழுதும் போது, சில விஷயங்கள் தவிர்க்க முடியாது போய் விடுகிறது. ஆனால், அந்த தவிர்க்க முடியாத விஷயங்கள் மற்றும் விமர்சனங்கள் சம்பந்தப் பட்ட கலைஞரின் பெர்பார்மன்சைப் பற்றி மட்டுமே இருத்தல் நலம். அதுவும் ஒரு எல்லைக்குள் இருந்தால் மிக நலம்! ஒரு படத்தையோ அல்லது ஒரு பெர்பார்மன்சையோ ஆய்வு செய்யும் போது, அதிலுள்ள நிறை குறைகளை மட்டுமே அலசுதல் மட்டுமே நலம் பயக்கும். தனிப்பட்ட விஷயங்களையும், பின் புலத்தில் நடந்ததையும் (அது சர்ச்சையைத் தூண்டும் என்றால்) விமர்சிப்பதைத் தவிர்க்கலாமே!
என்னைப் பொறுத்தவரை, நடிகர் திலகத்தின் நடிப்பைக் கொஞ்சமும் விமர்சிக்கக் கூடாது என்று கூற மாட்டேன். (நடிகர் திலகமே தில்லானா மோகனாம்பாளில், "குறை இல்லாத மனிதன் ஏது ஜில்லு?" என்பார்) அதைத் தனிப்பட்ட முறையில் பேசிக் கொள்ளலாம் என்று தான் சொல்வேன். என்னதான் இது ஜனநாயக நாடு, சொந்தக் கருத்தைச் சொல்லக் கூடாதா என்று கேட்டாலும், எந்த இடத்தில் அந்தக் கருத்தைச் சொல்லலாம் என்று ஒன்று இருக்கிறதல்லவா? சரி, அப்படியே சொன்னாலும், அதைப் பெரிது படுத்தவும் வேண்டாம்.
அதே போல், சக நண்பர் மற்றும் ஹப்பரின் திறமையை பரிகசிப்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.
இந்தத் திரி, நடிகர் திலகத்தினுடைய அற்புதமான நூதனமான, வேறு எவர்க்கும் வாய்க்காத திறமையை உலகம் தெரிந்து கொள்வதற்காக துவங்கப்பட்ட திரி. இதில் பங்கு பெறும் அனைவரும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். வீட்டுக்குளே சண்டையிட்டுக் கொள்ளலாம் - நான்கு சுவர்களுக்குள் - ஆனால் அதை மற்றவர்கள் ஏன் தெரிந்து கொள்ள வேண்டும்?
இன்னொன்று, ஒருவர் பத்து அல்லது பதினாயிரம் பெயர்களில் தான் எழுதட்டுமே! எதற்குத் திரும்பத் திரும்ப அதையே எழுத வேண்டும்? அது உண்மையாகவே இருப்பின், அதனை சரி செய்ய வேண்டியவர்கள் மாடரேட்டர்கள் தானே!
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி